உயர்ந்தது அடிப்படைச் சம்பளம் மட்டும் அல்ல… விலைவாசியும்… முதலாளிகளின் கரங்களும்தான்…

Lost jobs, cut hours, no paid breaks. Do minimum wage hikes hurt workers?

(நான் வாழும் கனடா ஒன்றாறியோ பற்றி பதிவு இது. ஆனால் முழு முதலாளித்துவ நாடுகளுக்கும் இது பொருந்தியே இருக்கின்றது. எனது நண்பர்கள் சம்பளத்தை உங்கள் நாட்டு நாணயத்திற்கு மாற்றி இந்த பதிவை வாசியாதீர்கள். இங்கும் ஏற்பட்டிருக்கும் வாழ்கைச் செலவு ஏற்றத்திற்கு ஏற்ப தாமதம் ஆனாலும் அடிப்படைச் சம்பளம் 14 டாலர் ஆக உயர்த்தப்பட்டது நியாயமானதே(போதுமான என்ற அர்த்தம் இல்லை)

ஆகக் குறைந்த சம்பளம் 14 டாலர் என்று அமுல்படுத்தப்பட்டிருக்கின்றது. இது 2019 ல் 15 டாலர் என அதிகரிகப்படும் என்ற அறிவித்தல் வேறு. இதற்கு எதிர்வினையாக தொழில் வழங்குவோர்(முதலாளிகள்), உடனடியாக செயற்பட ஆரம்பித்திருக்கின்றார்கள். ஏற்கனவே தொழிலாளர்களுக்கு வழங்கி வந்த பல சலுகைகளை குறைந்திருக்கின்றார்கள் அல்லது நிறுத்தியிருக்கின்றார்கள். உணவு விற்பனை நிலையங்களில் அங்கு வேலை செய்வோருக்கு வழங்கி வந்த சலுகை விலையிலான சாப்பாடு நிறுத்தப்பட்டிருக்கின்றது, கூடவே மருந்துகள் வாங்குவதற்கான காப்புறுதி அடிப்படையிலான சலுகை நிறுத்தப்படுகின்றது. இதில் முக்கியமானது வேலை நேரங்களில் சாப்பிடும் நேரத்திற்கு சம்பளத்தை வெட்டும் நிகழ்வுகள் ஆரம்பித்திருக்கின்றன. கூடவே பொருட்களின் விலைகளை அதிகரித்தும் விட்டனர்.

ஆக சம்பளத்தை கூட்டி சலுகைகளை வெட்டி விலைவாசியை ஏற்றும் விடயங்களை முதலாளித்துவம் தமக்குள் ஒற்றுமையாக செயற்படுத்தியிருக்கின்றது. இங்கு இறுதியில் முதலாளிக்கான நிகர லாபத்திற்கு சேதாரம் இல்லை. தொழிலாளர்களுக்கு..? இந்த சம்பள உயர்வு அறிவித்தலுக்குள் ஒரு வாக்கு அரசியல் இருந்தாலும் இது தொழிலாளர்களுக்கு வாழ்க்கை ‘அரிசி’யல். அடிப்படைச் சம்பள உயர்வு குடும்பத்தின் வருமான இலக்கத்தை உயர்த்தி அரசு வழங்கி வரும் குறைந்த வருமான மானியங்களையும் நிறுத்த ஏதுவாகவும் அமையப் போகின்றது.

இந்த தொழில் நிறுவனங்களின் உயர்பதவியில் இருப்பவர்கள் பெறும் மில்லியன் கணக்கில் சம்பளத்தை கட்டுப்பாட்டிற்குள் வைத்து சம்பள உயர்வால் ஏற்படும் ‘மேலதிக’ செலவீனங்களை கட்டுப்படுத்தாமல் வெறும் 14 டாலர் எடுக்கும் வேலையாட்களின் வாழ்கையில் விளையாடும் முதலாளிகளும் இதற்கு அனுசரணையாக இருக்கும் தொழிலாளர் சட்டங்களும் மனித வாழ்வு காலத்தை குறைப்பதில் வெற்றி கண்டுள்ளன. பிறகென்ன 65 வயதில் இல் தொடங்கும் ஓய்வூதியம் இன்னும் சிலகாலம் இறக்கும் வரையில் தானே அரசு வழங்க வேண்டும்.

(செய்தி: சுவீடன் நாட்டில் இனி மேல் 6 மணி நேர வேலை மட்டும்தான் ஆனால் முன்பு வழங்கிய அதே 8 மணி நேரத்திற்கான சம்பளத்துடன்)