உருக்குலைந்துள்ள மாகாணசபை நிமிர்ந்திட உருப்படியான சிந்தனையும் செயல்களும் வேண்டும்

தமிழர் தரப்போ அதற்கான தேர்தல்களில் அக்கறை காட்டி பதவிகளை பெறுவார்கள். ஆனால் அதனை “பயனற்றது”, “இரண்டு லட்சம் பேரை பலி கொடுத்ததற்கு இதுதானா தீர்வு” என்று முணுமுணுப்பார்கள்” – ஒரு படி மேலே போய் “ஏற்றுக் கொள்ள முடியாது”, “அனுமதிக்க முடியாது”, “சமஷ்டியே ஒரே தீர்வு” என முழங்குவார்கள் – தமிழர் தரப்பிலுள்ள இவ்வாறானவர்களே மாகாணசபைக்கான தேர்தல்களிலும் வெல்லுவார்கள் – ஆனால் அதனை காத்திரமானதாக ஆக்குவதற்கு அவசியமான எதனையும் சரியான வழிமுறைகளைக் கடைப்பிடித்து முயற்சிக்க மாட்டார்கள் என்பதே கடந்தகால அநுபவம்.

அரசுடன் இணைந்திராத தமிழர் பிரதிநிதிகளினுடைய அனைத்து நடவடிக்கைகளும் தமிழர்களின் அரசியல் சமூக நலன்களை முன்னெடுப்பதற்கான தேவைகளோடும் சாத்தியங்களோடும் பொருந்தாதவைகளாகவே எப்போதும் இருந்து வந்திருக்கின்றன – இனியும் அதுதான் தொடர்கதையா க இருக்கக்கூடாது. – மாற்றங்களுக்கான சாத்தியங்களைக் காண்பதுதான் தமிழர்தரப்பின் ஆதிக்கம் மிக்க அரசியற் செயற்பாட்டாளர்களின் முதன்மையான கடமை என்பதை கவனத்தில் எடுத்தல் வேண்டும்.
அன்றிருந்த உலக உறவுகள் இன்று மாறிவிட்டன அதற்குத் தகவே இந்தியாவின் பிராந்திய அரசியலும்

1980களைப் போல இந்தியா எவ்வகையிலும் இனிமேல் இலங்கை அரசுக்கு நேரடி அழுத்தங்களைக் கொடுக்க மாட்டாது. மாகாணசபை முறையை முழுமையாக நிறைவேற்றும்படி இந்திய அரச தரப்பினர் கூறும் வாக்கியங்களை தமிழ்த் தரப்பினர் “இதோ இந்தியா புறப்பட்டு விட்டது” என்பது போல விளக்கமளிக்க முனைகின்றனர். அவ்வாறானவர்கள் “இந்தியா கைவிட்டு விட்டது – துரோகம் இழைத்து விட்டது என முன்னர் போல் மீண்டும் கூக்குரல் எழுப்புவதற்கு நீண்ட காலம் எடுக்காது. இவர்களின் நினைப்பு வேறு இந்தியாவின் நிலை வேறு. கடந்த காலங்களில் தமிழர்களின் சேவகனாக இந்தியாவை எதிர்பார்த்த படியால்த்தான் இந்தியாவின் நலன்களோடு தமிழர்கள் தமது நலன்களுக்கான சமன்பாட்டைக் கண்டு பிடிக்கத் தவறினர்.

இவ்விடயத்தில் மேற்கத்தைய நாடுகளும் இந்தியாவின் பாதையிலேயே பயணிக்கும். அவர்களுக்கு மாகாண சபை விடயத்தில் பெரிய அக்கறை எதுவும் இல்லை – இந்தியா சொன்னதாலேயே 13வதை ஜெனீவா தீர்மானத்தில் இணைத்துக் கொண்டார்கள்.

மாகாண சபையை வலுவுள்ளதாக்குவதற்கு உரிய வகையில் அரசியல் யாப்பிலும், தொடர்பான சட்டங்களிலு ம் நிர்வாக நடைமுறைகளிலும் அவசியமான மாற்றங்களை, முன்னேற்றங்களை இலங்கை அரசுக்கு வரும் எந்தத் தலைமையும் தானாக ஏற்படுத்த மாட்டாது.

இந்த நிலையில் மாகாணசபை முறைமை தொடர்பான சிக்கல்களை அவிழ்ப்பது யார்? எப்படி? 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று சொல்வதன் – கோரப்படுவதன் அர்த்தம் என்ன? அதை யார் வெளிப்படுத்துவது? 13வது திருத்தத்திலுள்ள ஒவ்வொரு விடயம் தொடர்பாகவும் உள்ள குறைபாடுகள் – குழப்பம் பற்றி யார் யாருக்குப் புரிய வைப்பது?


தமிழர்கள் தொடர்பாக இந்தியாவின் நிலைப்பாடு

இந்தியாவோ மேற்கத்தைய நாடுகளோ அவ்வாறான ஒவ்வொரு விடயம் பற்றியும் தெளிவாக, விரிவாக, உறுதியாக தமது நிலைப்பாட்டை வெளிப்படுத்துவார்களா? அவ்வளவுக்கு தமது காலத்தையும் வளங்களையும் ஈடுபடுத்துவார்களா? அல்லது “ முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என்று அவ்வப்போது சொல்வதோடு நிறுத்திக் கொள்வார்களா?

அரசியல் யாப்பில் 13வது திருத்தம் மூலமான அதிகாரப் பகிர்வை முழுமையாக நிறைவேற்ற வைக்கும் பொறுப்பை இந்தியா பார்த்துக் கொள்ளும் என்று தமிழர் தரப்பு எதிர்பார்த்திருப்பது சரியாகுமா? அவ்வளவுக்கு இந்தியா அக்கறை கொண்டிருக்கும் என்று கருதுவதற்கு ஏதேனும் அடிப்படையான கட்டாயங்கள் உண்டா? இலங்கையின் அரசியல் யாப்பின் 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்படாவிட்டால் இந்தியாவின் இறைமை, ஒருமைப்பாடு மற்றும் இந்தியாவின் தேசிய நலன்களில் ஏதேனும் பாதிக்கப்பட்டு விடுமா? இந்தியா அதிகாரப் பகிர்வை வலியுறுத்துவதன் மூலம் இலங்கை அரசை சீனா பக்கம் சாய்வதிலிருந்து தடுக்க முடியுமா?

மாகாண சபைகள் காத்திரமானதொரு அரச கட்டமைப்பாக செயற்படுவது ஜனநாயகத்தின் முன்னேற்றத்துக்கும், நாட்டின் தேசிய நலன்களுக்கும், இனங்களுக்கிடையே சமத்துவம் பேணும் நல்லுறவுகள் ஏற்படுவதற்கும் அவசியமென இலங்கையின் சிங்கள பௌத்தர்களிடையே உள்ள அரசியல் சமூக பிரமுகர்களில் பெரும்பான்மையினர் உணராத வரை இலங்கையில் மாகாண சபைகள் ஒரு சிக்கலான விடயமாகவே இருக்கும் என்றே தெரிகிறது.

இந்தியா ஒரு எல்லைக்கு மேலே இலங்கை அரசோடு கருத்துரீதியாகக் கூட முட்டிக் கொள்ளப் போவதில்லை. இந்திய செயற்பாடுகள் அனைத்தும் மென்மையான ராஜதந்திர அணுகுமுறைகள் கொண்டவையாகவும் அதன் பொருளாதார வல்லமைகளோடு தொடர்பு பட்டவைகளாகவுமே இருக்கும். அமெரிக்க, ஐரோப்பிய மேலைத் தேய நாடுகளும் ஏறத்தாழ அவ்வாறே.

தமிழர்களின் பிரதிநிதிகள் எவ்வாறு இவ்விடயத்தை அணுகப் போகிறார்கள் ? என்பதே பிரதானமான கேள்வியாகும்.

இவ்வாறானதொரு நிலையில் இலங்கை வாழ் தமிழர்களின் பிரதிநிதிகள் எவ்வாறு இவ்விடயத்தை அணுகப் போகிறார்கள் – அணுக வேண்டும் என்பதே இங்குள்ள பிரதானமான கேள்வியாகும்.

முதலில், தமிழர்கள் மத்தியில் – வெளிநாடுகளிலும் சரி, உள்நாட்டிலும் சரி – உள்ள அரசியற் பிரதிநிதிகள், சமூக மற்றும் சமயப் பிரமுகர்கள், பல்கலைக் கழகத்தவர்கள், அரசியல் சமூக விஞ்ஞான ஆசிரியப் பெருந்தகைகள், ஊடக எழுத்தாளர்கள் எனும் அறிவார்ந்தோர் மாகாண சபை பற்றி நேர்மையாக சிந்திப்பதற்கு தயாராக வேண்டும் – உணர்வுபூர்வமாக கூட்டிணைந்து செயற்பட வேண்டும். மாகாண சபை முறையை நிராகரித்து வேறொரு அரசியற் பாதையில் சமஷ்டி அடிப்படையிலான தீர்வை நோக்கியே பயணிக்க வேண்டும் என்று சொல்வது இருக்கின்ற மாகாண சபைக்கும் 13வது திருத்தத்துக்கும் அப்பாற்பட்ட விடயமாகும். அதனை விவாதிப்பது இங்கு நோக்கமுமல்ல – பொருத்தமுமல்ல.
தமிழர்கள் புரிந்து கொள்ள வேண்டியது

இலங்கையில் இன்னுமொரு புதிய அரசியல் யாப்பு என்பது இருக்கின்ற மாகாண சபை முறைமையை இல்லாதொழிப்பதற்காக – அல்லது எழுத்தளவிலாயினும் இருக்கும் அதிகாரங்களை கரைத்து விடுவதற்காக ஆக்கப்படலாம். மாறாக, சமஷ்டி முறையையோ அல்லது “ஒற்றையாட்சிக்குள் சமஷ்டி” என்பதையோ அறிமுகப்படுத்துகிற ஒரு புதிய அரசியல் யாப்பை எந்தக் கட்சிக்காரர் ஆட்சிக்கு வந்தாலும் ஆக்க மாட்டார்கள் – ஆக்கவும் முடியாது.

2015 ஜனவரி தொடக்கம் 2019 இறுதிவரையான ஐந்தாண்டு கால “நல்லாட்சி”யின் போது தமிழர் பிரதிநிதிகளின் கைகளிலேதான் ஆட்சியின் பிடிமானமே இருந்தது. அப்போது “இந்தா வானத்தில் கோட்டை கட்டுகிறோம் – தமிழர்களே குடியேறத் தயாராகுங்கள்” என்று ஏமாற்றப்பட்ட அநுபவம் தமிழர்களுக்கு உண்டு. சந்திரிகாவென்ன, ரணிலென்ன, மைத்திரியானாலும் சரி மஹிந்தவானாலும் சரி, கோத்தபாயா வென்றாலென்ன சஜித் பிரேமதாசா வென்றாலென்ன – நேரடியாகவோ மறைமுகமாகவோ சமஷ்டி என்பதற்கு அவர்கள் தயாராக இருக்க மாட்டார்கள் – ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் – இன்றைக்கு இலங்கையிலுள்ள அரசியல் பொருளாதார கட்டமைப்பில் சிங்களமக்கள் மத்தியில் வளர்த்து விடப்பட்டுள்ள அரசியல் சமூக மனோநிலையில் அதற்கு சாத்தியங்களே இல்லை.

சிங்கள மக்களிற் பெரும்பான்மையினர் எப்போது அதிகாரப் பகிர்வ என்பது நாட்டின் பிரிவினைக்கு வழி வகுக்காது என்றும் நாட்டின் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும் முன்னேற்றவும் மாகாணங்களை நோக்கி சமூக பொருளாதார அபிவிருத்தி தொடர்பான அரச அதிகாரங்களை முடிந்த அளவு உயர்ந்த பட்சமாக பகிர வேண்டும் என்றும் உணருகிறார்களோ அப்போதுதான் நாட்டின் அரச அதிகாரக் கட்டமைப்பு சமஷ்டியை நோக்கிப் பயணிக்க ஆரம்பிக்கும்.

அந்தக் கட்டத்தை நோக்கி தமிழர்களின் அரசியல் பொறுமையோடும் நிதானமாகவும் நம்பிக்கையோடும் பயணிக்க வேண்டும். சிங்கள மக்களை அச்சுறுத்தி அடிபணிய வைக்கலாம் என நம்புவது மிகத் தவறு என்பதை வரலாறு கற்றுத் தந்திருக்கின்றது. அந்த நினைப்பில் பயணித்துத்தான் இன்று தமிழ்ச் சமூகம் சிதைந்து சீரழிந்து சிதறிப் போய்க் கிடக்கிறது.

இந்திய வெளிவிவகார அமைச்சின் கருத்தை தமிழர்கள் தாம் விரும்பியபடி விளங்கிக் கொள்ளக் கூடாது!

இவ்வாண்டு தை மாத ஆரம்பத்தில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய வெளியுறவு அமைச்சர், தான் கூற விழைந்த விடயத்தை வலியுறுத்திச் சொல்வதற்காக, இலங்கையின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் இலங்கை வாழ் தமிழர்களின் சமத்துவம் கௌரவம்;, நீதி அமைதியான வாழ்வு அகியவற்றை ஒன்றுபட்ட இலங்கைக்குள் உறுதி செய்வது இலங்கையின் நலன்களுக்கு அவசியமாகும் எனவும் அதே போலவே 13வது திருத்தம் உட்பட அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை இலங்கை உறுதியளித்தபடி நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் நிலைப்பாடு எனவும் கூறினார்.

அதனை இங்கு சில பிரமுகர்கள்; “தமிழர்களுக்கு இதனையெல்லாம் உறுதிப் படுத்தவில்லையென்றால் இந்தியா இலங்கையின் இறைமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் பங்கம் விளைவிக்கும் வகையாக நடவடிக்கை எடுத்துவிடும்” என்ற அர்த்தத்திலேதான் சொன்னது போல நம்ப வைக்கப் பார்க்கிறார்கள். இப்படியான விளக்கம் அபத்தமானது மட்டுமல்ல ஆபத்தானதானதுமாகும்.

இப்படித்தான் தமிழரசுத் தலைவர்கள் 1972க்கும் – 77ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட ஆண்டுகளில் தமிழ் இளைஞர்களுக்கு வங்காள தேசத்தைக் காட்டி “இப்படி ஒரு நாள் எங்களுக்கும் வரும் – இந்தியா தனிநாடு எடுத்துத் தரும்”, “பழம் பழுத்தால் வெளவால் தானாக வரும்” என்றார்கள். அதுவே இன்னொரு வடிவத்தில் இப்போது உள்ள தமிழரசுத் தலைவர்களால் வேறொரு வகையாக சொல்லப்படுகிறது. அப்போது அந்தத் தலைவர்கள்; அரசுக்கெதிரான போராட்டத்தின் மீதான ஆர்வத்தை இளைஞர்களுக்கு ஊட்டும் நோக்கோடு சொல்லியிருக்கலாம்.

ஆனால் அதன் விளைவாக, முப்பது ஆண்டுகால அழிவை – இழப்புக்களை அநுபவித்து விட்டு தமிழ்ச் சமூகம் தலை நிமிர முடியாமல் தத்தளித்துக் கொண்டிருக்கின்றது என்பதை தமிழ் மக்களின் இன்றைய அரசியல் சமூகப் பிரமுகர்கள் கவனத்திற் கொள்ளுதல் வேண்டும்.

மாகாண சபையை இல்லாது செய்ய சிங்களமும் தமிழும் இரண்டு சமாந்திரக் கோடுகளில் ஒரே திசையில் பயணிக்கின்றன

சிங்கள பௌத்த தேசிய வாதிகள் மாகாண சபை ஒரு வெள்ளை யானை – அது தேவையற்றது – அது மிகப் பெரிய அளவில் நாட்டிற்கு தேவையில்லாத செலவீனத்தை உண்டு பண்ணுகிறது எனக் கூறி, ஆகவே அதனை இல்லாது ஒழித்து விட வேண்டும் என செயற்பட்டு வந்திருந்திருக்கின்றனர். இப்போது அது மேலும் உக்கிரமாகியுள்ளது.

மறுபக்கம், தமிழ்த் தேசியர்கள் என தம்மை அடையாளப்படுத்துவோரில் மிகப் பெரும்பான்மையானோர், இருக்கின்ற மாகாண சபைக்கு எந்தவித அதிகாரமும் இல்லை – இலங்கையின் ஒற்றையாட்சி அரச கட்டமைப்புக்குள் சுயாதீனமாக செயற்படக் கூடிய மாகாண சபைகளை உருவாக்க முடியாது. ஆகவே இருக்கின்ற மாகாண சபை அமைப்பு முறையால் தமிழர்களுக்கு எந்தவித பிரயோசனமும் இல்லை என்றே கூறி வந்துள்ளனர்.

ஆக மொத்தத்தில் இரண்டு பக்க தீவிர தேசியங்களும் 13வது திருத்தத்தின் மூலமான அதிகாரப் பகிர்வையும் அதன் அடிப்படையிலான மாகாணசபையையும் நிராகரிப்பவையாகவே உள்ளன.

இப்போது தமிழரிடையே தோன்றியுள்ள சிறு மாற்றம் முன்னேற்றகரமான பாதையில் பயணிக்குமா?

இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கைக்கு விஜயம் செய்த வேளை இலங்கை அரச பிரதிநிதிகளை மட்டுமல்ல தமிழர்களால் தெரிவு செய்யப்பட்ட அனைத்து பிரதிநிதிகளையும் ஆர்வமுடன் சந்தித்தார். அதைத் தொடர்ந்து அவர் கொழும்பில் வெளியிட்ட கருத்தையும், கடந்த மாதம் ஜெனீவா கூட்டத் தொடர் தொடர்பாக இந்திய அரசாங்கம் வெளியிட்ட கருத்தையும் தொடர்ந்து சமஷ்டிதான் ஒரே தீர்வு என்றவர்களில் ஒரு பகுதியினரிடையே மாகாண சபை மற்றும் அதிகாரப் பகிர்வு தொடர்பான கவனங்கள் சற்றுத் திரும்பியிருக்கின்றன என கருத முடிகிறது.

அவ்வானவர்கள் மத்தியில் மாகாண சபைக்கான அதிகாரங்களை முழுமையாகப் பெற்றுத் தருவதற்கான வேலைத் திட்டத்தில் இந்தியா இறங்கி விட்டது போன்ற எண்ணம் ஏற்பட்டிருப்பதாகவே உணர முடிகின்றது. அது சரியா என்ற கேள்வி ஒருபுறமிருக்க, இவ்விடயம் தொடர்பில் தமிழர்களின் அரசியல் சமூகப் பிரமுகர்கள் மேற்கொள்கின்ற ஆக்கபூர்வமான செயற்பாடுகள் என்ன? 13வதை முழுமையாக நிறைவேற்றுதல் என்றால் என்ன என்பது பற்றி அவர்களிடமிருந்து திட்டவட்டமான கருத்தெதுவும் வெளிப்பட்டதாகத் தெரியவில்லை.

அவர்கள், மாகாண சபைக்கு முழுமையான அதிகாரங்களை பெற்றுத் தருவது பற்றி சிந்திப்பதுவும் செயற்படுவதுவும் இந்தியாவினுடைய பொறுப்பும் கடமையுமே என விட்டு விட்டு இலவு காத்த கிளி போல் அண்ணாந்து இருக்கிறார்கள் என்றே கொள்ள வேண்டியுள்ளது.

இலங்கையின் ஒற்றையாட்சி முறையை மாற்றாத வகையிலான அதிகாரப் பகிர்வை எற்க முடியாது என்றால் அது இந்தியாவினது நிலைப்பாட்டோடு எந்த வகையிலும் பொருந்த முடியாது அவ்வாறான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் மாகாண சபை தொடர்பாக இந்தியா கொண்டிருக்கும் நிலைப்பாட்டை ஏற்காதவர்கள் என்றே கொள்ள வேண்டும்.

அதே போலவே, “இந்தியாவே தமிழர்களை அழித்தது”, “இந்தியாவை நம்ப முடியாது – நம்பக் கூடாது” என்பவர்கள் இந்தியா இவ்விடயத்தில் எவ்வகையிலும் தலையிடக் கூடாது என்ற கொள்கையைக் கொண்டிருக்கிறார்கள் என்றே முடிவு செய்ய வேண்டும் – அவர்களோடு இந்தியா பொருந்தாது.

ஒன்றுபட்ட இலங்கைக்குள், இன்றைக்குள்ள ஒற்றையாட்சி அரசியலமைப்புக்குள், இருக்கின்ற மாகாண சபைகளுக்கு அரசியல் யாப்பின் 13வது திருத்தத்தின் மூலமாக வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் பற்றி அக்கறை கொண்டிருக்கும் தமிழர் பிரதிநிதிகள் மட்டுமே இந்திய அரசாங்கத்தோடு உரையாட முடியும் என்பதே தெளிவாகும்.

அவ்வாறானவர்கள் 13வது திருத்தம் முழுமையாக நிறைவேற்றப்பட வேண்டும் என்ற ஒற்றை வாக்கியத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் அது தொடர்பாக விரிவான தெளிவான கருத்துக்களை வெளிப்படுத்த வேண்டும். 13வது திருத்தம் மூலமான அதிகாரப் பகிர்வு எங்கெங்கெல்லாம் எவ்வாறெல்லாம் குறைகளை, குறைபாடுகளை, குழப்பங்களைக் கொண்டிருக்கின்றது என்பதை அவர்கள் அடையாளம் காட்ட வேண்டும்.

அத்துடன் அவை தொடர்பான சட்டங்கள் மற்றும் நிர்வாக நடைமுறைகளால் எப்படி அதிகாரப் பகிர்வு அர்த்தமற்றதாக ஆக்கப்பட்டிருக்கின்றது என்பதை அறிவுபூர்வமாக வெளியுலகுக்கு விளக்க வேண்டும். அதுமட்டுமல்லாது, 13வதினூடாக அர்த்தமுள்ள வகையில் அதிகாரப் பகிர்வு வழங்கப்படவும், மாகாண சபையானது அரசியல் யாப்புக்கு உட்பட்ட வகையில் சுயாதீனமாகவும் காத்திரமானதானதாகவும் செயற்பட என்னென்ன சட்ட மற்றும் நிர்வாக ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்பதையும் எழுத்து வடிவில் விரிவாக வெளிப்படுத்த வேண்டும். இது தமிழர் தரப்பிலுள்ள அரசியற் பிரதிநிதிகளினதும் சமூகப் பிரமுகர்களாக உள்ள பத்திஜீவிகளினதும் பொறுப்பும் கடமையுமாகும்.

தங்களுடைய உண்மையான மனச்சாட்சி பூர்வமான நிலைப்பாட்டை வெளிப்படுத்தினால் அதீத அரசியற் தீர்வைப் பற்றிப் பேசுகிற அரசியல் கட்சிக்காரர்கள் தங்களைத் துரோகிகளாக்கி விடுவார்களோ என்றும் அதனால் தமது சமூக அந்தஸ்த்து – வாக்கு வங்கி சரிந்து விடுமோ என்றும் அஞ்சுபவர்களால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனும் ஏற்பட மாட்டாது. இவ்வாறான நிலையில் இந்தியாவின் நிலைப்பாட்டாலோ – ஜெனீவாத் தீர்மானத்தாலோ எந்த நன்மையும் தமிழர்களுக்கு கிடைக்கப் போவதில்லை.

தமிழ் மக்களிடம் வாக்குகளைப் பெற்றுக் கொண்டவர்கள் மக்களின் நலன்களை பிரதானமாக்கி, “கேளுங்கள் தரப்படும்! தட்டுங்கள் திறக்கப்படும்! தேடுங்கள் கிடைக்கும்!” என்ற பாடல் வரிகளை வழிகாட்டியாகக் கொண்டு செயற்பட வேண்டும். இது போதனையல்ல. தமிழ் மக்களிற் பெரும்பான்மையினரின் நம்பிக்கையைப் பெற்றவர்கள் முன்னாலுள்ள பொறுப்பும் கடமையுமாகும்.