எண்ணெய் தேடும் பேராசையினால் புவிக்கு வரப் போகின்ற பேராபத்து!

வளைகுடா நாடுகளே எண்ணெய் அகழ்விற்கு மிகவும் உகந்தவையாகத் திகழுகின்றன. இலங்கையின் கடல் எல்லைக்குள் உள்ள மன்னார் வளைகுடாவில் எண்ணெய் வளம் தென்பட்டதாக அறிந்த நாம் பெரும் உவகை அடைந்தோம். முன்னர் பதவிக்கு வந்த அரசுகள் எண்ணெய் அகழ்வுக்கென்று பூர்வாங்க நடவடிக்கையில் ஈடுபட்டதையும் நாமறிவோம். சில வெளிநாட்டு எண்ணெய் நிறுவனங்களுடன் உடன்படிக்கைகள் கூட கைச்சாத்திடப்பட்டன.

காலஞ்சென்ற திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்கா இலங்கையின் பிரதம மந்திரியாக பதவி வகித்த போது இப்பணி தொடங்கப்பட்டு துரதிர்ஷ்டவசமாக அத்திட்டம் வெற்றியளிக்கவில்லை. இதனைத் தொடர்ந்து எண்ணெய் வளம் தென் பகுதியில் காணப்படுவதாகவும் வெளிநாட்டு எண்ணெய் நிறுவனமொன்றினால் தெரிவிக்கப்பட்டது. இதற்கும் அதே கதிதான் ஏற்பட்டது.

இப்போது எரிபொருட்களின் பாவ​ைன பன்மடங்காக அதிகரித்துள்ளது. எண்​ெணயின் தேவை பல மடங்காகியுள்ளது எனலாம். முன்னைய அரசாங்கம் உலக சந்தையில் எண்ணெயின் விலை ஏற்றத்தைக் காரணம் காட்டி வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழ்ந்த மக்களை சொல்லொணாத் துன்பத்திற்கு உள்ளாக்கியது. ஆனால் ஜனவரி எட்டாம் திகதி உருவான நல்லாட்சி இடைக்கால வரவு செலவுத்திட்டத்தின் மூலம் எண்ணெய் விலையை கணிசமான அளவு குறைத்து அவர்களது சுமையைக் குறைத்தது.

தற்சமயம் வளைகுடா நாடுகளிலிருந்து இலங்கைக்கு கப்பல் மூலம் மசகு எண்ணெய் தருவிக்கப்படுகின்றது. அதேவேளை இந்தியன் ஒயில் நிறுவனம் திருகோணமலை துறைமுகமூடாகவும் எண்ணெய் வாணிபத்தை மேற்கொண்டு வருகின்றது. கொழும்பு துறைமுகத்தை வந்தடையும் மசகு எண்​ெணய் சப்புகஸ்கந்தையில் உள்ள மசகு எண்ணெய் சுத்திகரிக்கும் மையத்தில் சுத்தரிக்கப்பட்டு நாடெங்கிலும் விநியோகிக்கப்படுகின்றது. இதனை இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமே மேற்கொண்டு வருகிறது.

வளைகுடா நாடுகள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் எண்ணெய் அகழ்ந்து எடுப்பதில் பல்வேறு சிக்கல்கள் தோன்றுகின்றன எனலாம். குறிப்பாக ஆர்க்டிக் வட்டத்திற்கு அண்மையில் அமைந்துள்ள சோவியத் நாடுகளிலே தான் பிரச்சினையே உருவாகின்றது.

அண்மையில் சோவியத் நாடுகள் சிலவற்றிற்கு எண்ணெய் அகழும் பணிக்குத் தேவைப்படும் கருவிகள், கனரக வாகனங்கள், ஜெனரேட்டர்கள் சென்று அடைந்து உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனை அவதானித்த விஞ்ஞானிகள் அனைவரும் பெரும் பதற்றத்திற்குள்ளாகிய நிலையில் உள்ளனர் .

மேற்குறிப்பிட்ட நாடுகளிலிருந்து எண்ணெய் அகழ்வு இடம்பெறும் வேளையில் தொழில்நுட்ப ரீதியில் வெப்பம் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் உண்டாகலாம் என்பது அவர்களது எண்ணம். இதன் காரணமாக ஆர்க்டிக் மற்றும் கிரீன்லாந்து பணிப்பாறைகள் உருகத் தொடங்கி விடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர்.

இதனால் கிரீன்லாந்து உட்பட பல ஆர்க்டிக் நாடுகளைச் சேர்ந்த மக்கள் பல்வேறு வகையான அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்கவேண்டிய இக்கட்டான நிலைக்கு தள்ளப்படுகின்றனர் என்பது நிதர்சனமாகும். பூமி வெப்பமடைதலால் ஏற்படுகின்ற மாறுபட்ட வானிலையின் காரணமாக பாதிக்கப்படப் போவது வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் நாடுகளைச் சேர்ந்த மக்களஆவர். பச்சை வீட்டு வாயுக்களை வெளியேற்றாத சாதாரண வறிய நாடுகளே புவி வெப்பமடைவதன் தாக்கத்தை உணர வேண்டிய நிலை ஏற்படுமாம்.

சோவியத்நாடு, கிரீன்லாந்து போன்றவற்றின் எண்ணெய் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் இரண்டாயிரத்து பதினேழாம் ஆண்டு வரைக்கும் நூறு மில்லியன் மெற்றிக்தொன் எண்ணெயை அகழ்ந்தெடுக்கத் திட்டமிட்டுள்ளனராம். ஆர்க்டிக் மற்றும் கிரீன்லாந்து பனிப்படலங்களை உற்ற நண்பர்கள் எனவும் கொள்ளலாம். இப்பனிப்பாறைகள் தான் பூமியின் மிதமிஞ்சிய வெப்பநிலையை ஓரளவுக்கேனும் குறைத்து வருகின்றன எனலாம். மேலும் இப்பனிப்பாறைகள் திடீரென உருகி திரவ நிலைக்கு மாறும் பட்சத்தில் மக்களில் பெரும்பாலானோர் பாதிக்கப்படலாம்.

உறைபனி கடல்கள் உருகுவதனால் வெளிவரும் திறந்த நீர் (Open Sea) வர்த்தக கப்பல்கள் பயணிக்க ஏதுவாகின்றது. இதனால் அந்நாடுகளில் வதியும் வர்த்தகர்கள் பெரும் உவகையடைகின்றனர். வர்த்தக சமூகமே இதனால் நன்மை அடைகின்றது.

இதனால் வளை குடாவே எண்ணெய் அகழ்விற்கு மிகச் சிறந்த நாடாக மிளிருவதை எம்மால் உணரக்கூடியதாக உள்ளது.

(அருணா தருமலிங்கம்)
வந்தாறுமூலை