எந்தையும் தாயும் கூடி மகிழ்ந்த…… (Part 1)

எனது தமிழ்நாட்டுப் பயணத்தை முடித்து சென்னை விமான நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட நடுச்சாமம் கட்டுநாயக்கா விமாநிலையத்தை சென்றடைந்தேன். சென்னை விமான நிலையத்திலிருக்கும் போது என் நீண்டநாள் சகாவின் புதல்வி இலங்கை அரசு, புலிகள் என்ற இரு தரப்பு பாதுகாப்பு பிரச்சனைகளால் அகதிகளாக இந்தியாவிற்கு இடம் பெயர்ந்து வளர்ந்து படித்து தற்போது இந்தியாவின் விமானப் போக்குவரத்தில் விமானியாக (இவர்தான் இலங்கையின் முதல் தமிழ் பெண் விமான ஓட்டியென்றே எண்ணுகின்றேன்) வேலை செய்வது இடையிடையே வந்து போனது.

கை குழந்தையாக நாம் காவித்திரிந்த இந்த குழந்தை தற்போது என்னைப் போன்ற பலரை பாதுகாப்பாக காவித்திரியும் விமானத்தின் விமானி. காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடிவிட்டது. முன்போலல்லாது தற்போது மீனம்பாக்கம் விமான நிலையம் தற்போது அண்ணா விமான நிலையம் (எனக்கென்னவோ அண்ணா விமான நிலையம் என்ற பெயரை விட மீனப்பாக்கம் விமானநிலையம் என்ற பெயர் கவித்துவமாக தோன்றுகின்றது) மிகவும் துப்பரவாகவும், வேலை செய்யும் அதிகாரிகளின் கைகாசு வாங்கும் இடையூறுகள் அற்றும் இருப்பதையும் உணர முடிந்தது.

1987களில் இதே விமான நிலையத்தில் நான் பாதுகாப்பு கெடுபிடிகளின் மத்தியில் வந்திறங்கிய போது இருந்த கெடுபிடிகள் ஏதும் இல்லை. பயணப் பொதிகளை சோதனையிடும் போது பொதியிலுள்ள பொருட்களின் நடுவே கையை வைத்து யாரும் காணாத வகையில் பிச்சை கேட்பது போல் தா…தா என்ற சைகையால் காசு கேட்கும் செயற்பாடுகள் எதும் இல்லை இப்போது. இதனை நிறுத்திய பெருமை ஜெயலலிதாவின் கண்டிப்பான ஆட்சி அதிகாரத்தால் எற்பட்டது.

ஜெயலலிதா கையூடு வாங்கினார் சொத்துக்களை சேர்த்தார் என்பதற்கு அப்பால் 2005ம் ஆண்டளவில் இவரால் உருவாக்கப்பட்ட அரசு விமான நிலையங்களில் சதாரண பயணிகளிடம் பிச்சை கேட்பது போன்ற கையூடுவாங்கும் அதிகாரிகள் சிப்பந்திகளின் செயற்பாட்டிற்கு முற்றுப்பள்ளி வைத்ததை நான் அப்போதே அனுபவத்தில் கண்டு வியந்திருக்கின்றேன். ஒரு தடவை என்னை வரவேற்க வரவிருந்த நண்பரை காணத இடத்து அவருக்கு தொலைபேசி அழைப்பதற்கு இந்திய நாணயக் குத்தி இல்லாத போது காவலில் நின்றிருந்து ஏட்டிடம் காசு வாங்கி போன் போட்டதும் இதற்கு பதிலாக அவருக்கு ரூபாய் இற்கு பதில் டாலர் வழங்க முற்பட்டபோதும் அவர் வாங்க மறுத்ததை பின்பு என் அனுபவப் பகிர்வாக பலருக்கு கூறிய போது பலரும் நம்ப மறுத்த விடயமாக எனது அனுபவம் இருந்தது.

விமான நிலையத்தில பயணத்திற்கான அனுமதிப் அட்டைகளைப் பெற்று பொதிகளை கையளித்த பின்பு விமானத்திற்காக காத்திருக்கும் இடத்தில் இருப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் அதுவும் விமான நிலையத்திற்குள் அதிகவிலையில் தேனீர் சிறு கடி உணவுகள் இருந்தாலும் இதனை வாங்கிச் சுவைப்பது இன்னும் இனிமை நான் அவ்வளவாக சாப்பாட்டுப் பிரியன் என்று இல்லாவிட்டாலும் இந்தக் கடியும் குடியும் எனக்கு எப்போதும் இனித்தே இருந்தது. இதே விமானநிலையத்திற்குள்தான் பலமான பாதுகாப்பு கெடுபிடிகளின் மத்தியல் ஈழவிடுதலை அமைப்பின் போராளி தம்பாபிள்ளை மகேஸ்வரன் வைத்த குண்டு வெடித்ததும் ஞாபகத்தில் வந்து சென்றனது. இந்தக் குண்டு இலங்கை விமாத்தில் ஏற்றி அதற்குள் வெடிக்க வைக்க முயற்சி செய்ததாகவும் இதில் ஏற்பட்ட திட்மிடல் கோளாறினால் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வெடித்துவிட்டதாவும் தகவல்கள் இருக்கின்றன.

இச்சம்பவத்திற்கு பிறகு மீனம்பாக்கம் விமான நிலையத்தில் ஈழத் தமிழர்கள் பாகிஸ்தானகாரர் போல் நடாத்தப்பட்ட அனுபவங்கள் பலவற்றை நாம் பெற்றிருக்கின்றோம் தற்போது சில அதிகாரிகள் மட்டத்தில் இதே பார்வை இருந்தாலும் அரசு மட்டத்தில் அவ்வாறு இல்லை என்பது சற்று ஆறுதலான விடயம். ஆனால் இந்திய விசா எடுக்கும் போது நாம் பாகிஸ்தான், பங்களாதேஷ் நாட்டவர் என்ற வகைக்குள் அடக்கப்படுவது இன்னும் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றது. நாம் விசா எடுக்கும் போது ஒருவகை விஷேட விண்ணப்ப பத்திரத்தையும் கூடவே நிரப்ப வேண்டும். இப்படியான தடைகளை எல்லாம் தாண்டித்தான் நானும் தமிழ்நாட்டுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கையிற்கு பயணமானேன்.
(பயணம் தொடரும்…….)