என்றும் ஆறாத துயர வடுவை பதித்துச் சென்ற சுனாமிப் பேரலை

சோக நினைவின் 11ம் வருட நிறைவு

உலகில் மனிதனினால் வெல்ல முடியாதது அடைய முடியாதது என்று கூறத்தக்கவை எவையும் இல்லை என்பதை காலத்திற்கு ஏற்றால் போல் விஞ்ஞான சமுதாயம் எடுத்துக்கூறி வருகின்றது. விஞ்ஞானத்தையும் உடைத்தெறிக்கூடிய சக்தி பஞ்சபூதங்களுக்கு உண்டு என்பதை அவ்வப்போது இயற்கை எமக்கு காட்டிக்கொண்டுதான் உள்ளது.

இதற்கு அண்மைய உதாரணம் இந்தியாவின் தமிழ் நாட்டையே உலுக்கிய பாரிய மழை வெள்ளப்பெருக்கும் ஆகும். இதனை விடப் பயங்கரமானது கடந்த 2004 டிசம்பர் 26ம் திகதியன்று தென்கிழக்காசிய நாடுகளை தாக்கி அழித்த ஆழிப் பேரலை அனர்த்தம் எனலாம்.

இயற்கையின் சீற்றத்தை முன்கூட்டியே அறிந்துகொளும் சக்தியை மனிதன் தனது அறிவியல் மூலம் பெற்றுக்கொண்டுள்ளான். ஆனாலும் மனித சமுதாயத்தை காப்பாற்றும் வல்லமையைக் கொண்டிருக்கவில்லை.

இன்றைக்கு 11 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோன்றதொரு நாளில் மக்கள் தமது நாளாந்த நடவடிக்கையில் இரண்டறக் கலந்து வாழ்வின் பல இலட்சிய கனவுகளோடு நடமாடிக் கொண்டிருந்தார்கள். காலநிலையிலும் எவ்விதமான மாற்றமும் ஏற்படாது நன்றாகவே இருந்தது.

2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் திகதி இந்து சமுத்திரத்தின் தீவுக்கூட்டங்களில் ஒன்றான ( இந்தோனேசியா) சுமத்திரா தீவின் வடக்கே கடலின் அழியில் 9.0 ரிச்சர் அடிவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூகம்பம் காலை 6.58 மணிக்கு ஏற்பட்டது. இதை அமெரிக்க பூகோள மத்திய நிலையமும் உறுதி செய்துள்ள போதிலும் கிழக்கு ஆசிய நாடுகள் இதில் கவனம் செலுத்தவில்லை. இதனால் பாரிய உயிர் உடைமை அழிவுகள் ஏற்பட்டன.

சுனாமி என்ற சொல்லையே இப் பிரதேச மக்கள் அறிந்திருக்கவில்லை. இதற்கு சந்தர்ப்பம் கூட ஏற்படவில்லை என்பதே உண்மை.

கடற் பேரலையின் அழிவுகள் ஆசிய நாடுகளை அவ்வப்போது தாக்கி அழிந்து கண்டங்களை நகரச் செய்து தீவுகளை அழித்து வேறு ஒரு இடத்தில் புதிய மண்திட்டுக்களை உருவாக்கியும் வந்துள்ளதாக தமிழிலக்கியங்களில் காணக்கூடியதாக உள்ளது.

இந்து சமுத்திரத்தின் மிகப் பெரிய நாடான இந்தியாவை சுனாமி தாக்கியது. இது முதல் முறையல்ல. சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்பே 2004 போன்றதொரு பாரிய அழிவு அல்லது இதற்கும் மேலான அழிவுகள் ஏற்பட்டிருக்கின்றது. கி.பி. இரண்டாம நூற்றாண்டில் ஏற்பட்ட கடற்கோள் அழிவினால் பூம்புகார் பட்டினம் முழுமையாக காவுகொள்ளப்பட்டிருக்கின்றது.

அந்தக் காலகட்டங்களில் சுனாமி கடல் கோள் என்றே கூறப்பட்டிருக்கின்றது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழகத்தின் தென்பகுதி பெரியதொரு நிலப்பரப்பாகவே இருந்துள்ளது.

இன்றுள்ள இலங்கை, மாலைதீவு தென்னாபிரிக்கா அவுஸ்திரேலியா ஆகிய நாடுகள் எல்லாம் ஒன்றினணந்த நிலத்தட்டுகளின் அமைப்பாகவே இருந்துள்ளன. இதை வெளிநாட்டு வானவியலாளர்கள் அன்று ‘லெமூரியா’ கண்டம் என்றே தமது வரைபடத்தில் தெளிவாகக் கூறியுள்ளனர்.

தமிழர்களின் பண்டைய இலக்கியம் இதை குமரிக்கண்டம் என்று குறிப்பிடுகின்றது. கண்டங்களின் நகர்வுகள், நிலத்தட்டுக்களின் உரசல்கள் காரணமாக நில அமைப்புக்களிலும் கடல்களின் நீரோட்டங்களும் மாறுபடுவதுடன் இயற்கை சமநிலையும் மாற்றத்திற்குள்ளாகின்றது.

ஒரே நிலத்தட்டுக்களின் அசைவுகளாலேயே 2004ம் ஆண்டு பூகம்பம் ஏற்பட்டு சுனாமி தாக்கிய போதே மேற்கூறப்பட்ட நாடுகளில் தாக்கம் உணரப்பட்டதாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

சுனாமி என்னும் கடற்பேரலைகள் உருவாவதற்கு பல காரணங்கள் இருந்து வருகின்றன. கடலுக்கடியில் ஏற்படும் ஒரு புவிய திர்வு, கடலால் சூழப்பட்ட ஒரு தீவில் ஏற்படும் எரிமலைக் குமுறல் கடலில் ஏற்படுகின்ற அணு குண்டுப் பரிசோதனை போன்ற வெடிப்பதிர்வுகள் போன்றவற்றுடன் பல்வேறு காரணங்கள் உள்ளன. ஒவ்வொரு புவியதிர்வும் சுனாமியை ஏற்படுத்தாத போதிலும் புவியதிர்வின் சக்தி விசாலிப்பு இயல்புகளைப் பொறுத்து அமையும் எனச் சொல்லப்பட்டிருக்கின்றது.

2004ம் ஆண்டு சுனாமித் தாக்கமானது இலங்கையின் கிழக்குப் பகுதியான கல்முனை பிரதேசத்தை 8.27 மணிக்கு முதலில் தாக்கியதாக பதிவுகள் சான்று பகர்கின்றன. இதன் பின்னரான இரண்டு மணித்தியாலயங்களில் யாழ்ப்பாணம் முதல் மாத்தறை வரையான கரையோரப் பகுதிகளை கண்ணிமைக்கும் நேரத்தில் புரட்டிப் போட்டுச் சென்றுள்ளது. இன, மத பிரதேச வேறுபாடுகள் ஒரு நொடிப் பொழுதில் மறைந்து அனைவரும் ஒரே மனித குலம் என்ற நிலை எல்லோருடைய மனங்களிலும் நிழலாடியது.

கடற்கரையை அண்டிய பிரதேசங்களில் பார்த்த இடமெல்லாம் மனித உடல்கள் இதுவரை கண்டிருக்காத மனிதப் பேரவலம்… இதை நேரில் பார்த்தவர்களை விட அனுபவித்தவர்கள் ஏராளம். இவர்கள் இன்று தமது பிள்ளைகளுக்கும் பேரன் பேத்திகளுக்கு கதை கதையாகச் சொல்லி நினைவலைகளை மீட்டுக்கொள்கின்றனர்.

இலங்கையில் கடந்த 2004 சுனாமி தாக்கத்தினால் 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகிப் போனார்கள், இரண்டு இலட்சத்து 50 ஆயிரம் பேர் வரை வறுமைக்கோட்டின் கீழ் வந்துள்ளனர் என ஆசிய அபிவிருத்தி வங்கி கூறியது. இந்தோனேசிய சிறு தீவுக்கட்டங்களில் ஒரு இலட்சம் பேர் வரை இறந்தும் ஆறு இலட்சம் பேர் இடம்பெயர்ந்தும் உள்ளனர். இந்தியாவில் 9000 பேர் உயிரிழந்ததுடன் 645000 பேர் தொழிலிழந்து அகதிகளாகினர்.

இந்து சமுத்திரத்தைச் சுற்றியுள்ள 12 ஆசிய நாடுகளை தாக்கிய சுனாமி பேரழிவு சுமார் 160000 பேரின் உயிர்களைக் காவுகொண்டிருப்பதாக ஆசிய அபி்விருத்தி வங்கியின் அறிக்கை கூறியுள்ளது.

2004 டிசம்பர் 26 ஆம் திகதியை யாரும் இலகுவில் மறந்திருக்க வாய்ப்பே இல்லை. இதில் கொல்லப்பட்டவர்கள் பெரும்பாலும் சிறுவர்களும் பெண்களுமேயாவார். இதற்கு பெருமளவு காரணம் அன்று ஆண்கள் வழமைபோன்று வேலைக்கு சென்றதே ஆகும். குழந்தைகளும் பெண்களும் வீடுகளை விட்டு வெளியேறும் முன்பே கடல் அலை தாக்கி அழிந்துவிட்டது. இவை தவிர கடலலையை பார்ப்பதற்கு கடற்கரைக்கு சென்றவர்களும் பலியாகியுள்ளனர்.

இவற்றுடன் அன்று நந்தார் நள்ளிரவு ஆராதனைக்குச் சென்றுவிட்டு பண்டிகை மகிழ்ச்சியில் புதிய ஆடை அலங்காரங்களுடன் உறவினர் நண்பர்களின் வீடுகளுக்கு சென்றவர்களும் மாண்டுபோனவர்களில் அடங்குவர்.

மனித உடல்களை இயந்திரங்களின் உதவியுடன் ஒன்றாக தூக்கி ஒரே கிடங்கில் இட்டு இயந்திரத்தாலேயே மண்போட்டு மூடிய சம்பவம் உள்ளத்தை நெகிழவைத்தது. சுமார் இரு வாரங்கள் கடந்த நிலையிலும தமது பிள்ளைகள் பெற்றோர் உறவுகள் உயிருடன் உள்ளனரா அல்லது இறந்து விட்டனரா என்பதை அறியமுடியாத மனவேதனையுடன் பலர் காலம் கடத்திய சம்பவங்கள் ஏராளம்.

சுனாமி தாக்கத்திற்கு தப்பியவர்களில் பெரும்பாலான வர்கள் மரங்களைப் பிடித்து கொண்டிருந்ததே காரணம் என அறிய முடிகின்றது. பாரிய கட்டடங்களை சின்னா பின்னமாக்கிய அழிந்த பேரலை மரங்களை (பனை தென்னை உயர்ந்த மரங்கள்) வேருடன் சாய்ந்தது மிகக் குறைவு என்றே சொல்லவேண்டும்.

இயற்கை எமக்கு அளித்த கடற்கரைத் தாவரங்களை நாம் அழித்ததே பேரழிவுக்குக் காரணம் என்பதை இப்போது உணர்கின்றோம். இதனால் தான் கடற்கரை தாவர மீள் நடுகை 2004 க்குப் பின்னரான கால கட்டத்தில் ஏற்படுத்தப்பட்டு இன்று வரை பராமரிக்கப்பட்டு வருகின்றன.

இந்த கடல் பேரலையினால் மீனவ சமுதாயமே மிக மோசமான பேரழிவுக்கு உள்ளாகியுள்ளது. கடற்தாயின் மடி மீது சவாரி போட்டு அவள் போடுகின்றவற்றையே மன நிறைவுடன் எடுத்து வந்து பெருவாழ்வு வாழ்ந்த மீனவர்கள் மீது ஏனோ தெரியவில்லை . திடீர் சோகச் பஞ்சபூதங்கள் கோபம் கொண்டால் அதன் விளைவு மிகக் கொடுமையானது என்பதை எமது கடல் தாய் நிருபித்துள்ளார். அள்ள அள்ள குறையாத செல்வ வளம் கொண்டதே கடல். கடலின் செல்வம் விலை மதிக்க முடியாது எனலாம்.

இது இவ்வாறு இருக்க கடந்த 2004ம் ஆண்டு 26ம் திகதியின்று கிழக்கின் கடற்கரைப் பகுதியை கடல் அலை அழிந்துவிட்டது. மக்கள் செல்வதற்கு இடமின்றி உயரமான பகுதிகளுக்கு ஓடிக்கொண்டிருக்கின்றார்கள். யாரை யார் காப்பாற்றுவது என்று தெரியவில்லை. தொலைத் தொடர்புகள் செயலிழந்த நிலையில் உள்ளன. அங்கு மக்களின் நிலை என்ன என்பன போன்ற பல தரப்பட்ட தகவல்களுடன் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு செல்லும் ரயில் வண்டியில் மிக அதிகமான மக்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.

பெரலிய என்ற இடத்தினை அண்மித்த புகை வண்டியை பேரலை ஒன்று மிக கடுமையாகத் தாக்க ரயில் கவிழ்ந்து போனது. கடல் அலை நகரை நோக்கிப் பாய்ந்துள்ளது. காலி கோட்டைப் பகுதியில் அமைந்துள்ள பல கடைகள் நிர்மூலமானதோடு அங்கு நான்கு அடிக்கு மேல் கடல் நீர் வந்ததாக பதிவுகள் கூறுகின்றன.

கடல் அலையானது மீண்டும் கடலை நோக்கி செல்லும் வேகம் மிக அதிகமாக இருந்ததால் தடம்புரண்ட ரயில் பெட்டிகளை சின்னாபின்னமாக்கி அழித்துவிட்டுச் சென்றது. இந்த ரயிலில் பயணித்த சுமார் இரண்டாயிரம் பேரில் சுமார் 900 பேரின் உடல்கள் மட்டுமே கண்டெடுக்கப்பட்டன. இதில் சிலர் உயிர்தப்பியும் உள்ளனர்.

மனிதனின் அசுர வளர்ச்சி அவனது அறிவு ஆற்றல் தொழில் நுட்பம் போன்றவை எல்லாம் நிலையானது அல்ல என்பதை இயற்கை சீற்றம் ஏற்படும் போதுதான் நாம் உணர்ந்து கொள்கின்றோம்.

எது எவ்வாறு இருப்பினும், நாம் எவ்வாறான இயற்கை சீற்றத்தையும் தாக்குப்பிடிக்க கூடிய சூழ்நிலையை ஏற்படுத்தி வாழப் பழகிக்கொள்ள வேண்டும். உலக காலநிலை மாற்ற தரவுகளை நாம் கவனத்தில்கொண்டு அதற்கு இசைவாக வாழும் வாழ்வு சிறப்பானதாக அமையும்.சுனாமியில் பலியானோரை நினைவு கூர்ந்து இன்று மத அனுஷ்டானங்கள் நடைபெறுகின்றன. இறந்த உறவுகளின் ஆத்ம ஈடேற்றத்துக்காக அனைவரும் இன்று பிரார்த்திப்போம்.
(ஆர். நடராஜன்)