“என்று தணியும் எங்கள் சுதந்திர தாகம்”

1983 ஜூலை இனக்கலவரத்தின் பின்னர்
‘அருண் – செல்லப்பா” தம்பதிகள் தாயகம் திரும்புகின்றனர்.

கர்த்தரும் முருகரும் கைவிட்ட காலமது!
மனிதருள் மாணிக்கம் சிங்களத்தினுள்ளும் உள்ளதென்று நிறுவிய காலமும் அதுவே!

அன்று திறைசேரியில் (Behind Old Parliament) பண பட்டுவாடாக்கள் முடிவுறாதநிலையில், நாரஹேன்பிட்டியில் தமிழர் கடைகள் எரிகிறதாம், என்று அறிந்து, , மோட்டார் சைக்கிள் காலி வீதியில், பட்டும் படாமல் பறக்கிறது, வெள்ளவத்தையை நோக்கி…… மணம் முடித்து, வெறும் 4 மாதத்தினுள், தனிக் குடித்தனம் கொழும்பில் எப்படியிருக்கும் என்று உணர்ந்திராத அந்த பெண்மை, வெளிர் முகத்துடன் வாடி நின்றது, வீட்டு வாசலில்…..

வெள்ளவத்தை, தயா வீதி குறுக்கொழுங்கையில், அயலவர் றிச்சர்ட்டின் அந்த வாழைத் தோட்ட வழவைத் தாண்டியே நான் செல்ல வேண்டும். ரிச்சார்ட் கமெர்ஷல் வங்கியில் ஒரு சிற்றூளியர். ஏதோ கலவரம் அயலில் நடப்பதாக சமிக்கைகள் உணர்த்தின. என்னை நோக்கி ஓடிவந்த ரிச்சார்ட், “மாத்தையா, அப்பி இன்னாவா, பய வெண்ட எப்பா” [මාත්තයා, අප්පි ඉන්නවා, බය වෙන්ඩ එපා] நானிருக்கிறேன், பயப்படாதீர்கள், என்று கூறிச் சென்றார்.

முன்னை நாள் கமெர்ஷல் வங்கியின் பங்குதாரரான, காலம் சென்ற தமிழர் ஒருவர் ரிச்சார்ட்டுக்கு இந்த வாழைத் தோட்டத்தை நன்கொடையாகக் கொடுத்திருந்தார். அந்த நிலத்தின் ஒரு பகுதியில் தனது சிறு வருவாயைக் கொண்டு, சிறு வீடு போன்ற ஒன்றை கட்டி, மனைவியும் பிள்ளைகளுமாக வாழ்ந்து வந்தார். அந்த அரை குறை கட்டுமான வீட்டிற்கு நீர், மின்சாரம் வழங்கப் பட்டிருக்கவில்லை.

கடந்த 3 வருடங்களாக நாமே அவர்களுக்கு, மின்சார, நீர் வசதியை இலவசமாக கொடுத்தோம். எமது வீட்டின் அருகில் ஒரு தொட்டி கட்டி, அதில் நீரை நிரப்பி ரிச்சர்ட்குடும்ப (மொத்தம் 2+ 6 Kids) பாவனைக்காக கொடுத்திருந்தோம். மின்னிணைப்பும் அவ்வாறே எமது வீட்டிலிருந்து பின் வாசல் வழியாக. மேலும் எங்கள் வருடாந்த சமய நிகழ்வுகளின் போது, ரிச்சர்ட் குடும்பத்துக்கும் சேர்த்து பொங்கல், வடை செய்வது உண்டு. அவர் எமக்கு நன்றிக் கடன் செலுத்த ஒரு சந்தர்ப்பத்தை பார்திருந்திருக்கலாம்.

அன்று, மாலை 7 மணி கடந்து, இருள் சூழும் வேளை, எம் வீட்டின் பின் உள்ள வீடுகளில் இருந்து புகை மேலே கிளம்பியமை எமக்கு நடுக்கத்தைத் தந்தது. நாம் எதுவித தயார் நிலையிலும் இல்லை. எனது வீட்டில், நாம் இருவர், இன்னொரு இளம் குடும்பம் கைக் குழந்தையுடன், மொத்தம் 4+1 பேர், பதட்டத்துடன் ஆளை ஆள் பார்த்த படி.. திடீரென மின்சாரம் நின்று விட்டது. இருந்தும், எம் வீட்டின் பின் புறமாய் உள்ள மூன்று வீடுகளும் சுவாலை விட்டு எரிவதால் எமது முற்றம் தெளிவாக ஆளை ஆள் பார்க்கக் கூடியதாக இருந்தது. பின் வீட்டு ஓடு வெப்பத்தால் வெடித்து எமது வளவினுள் விழுவது எமக்குத் திகிலாகவிருந்தது.

திடீரென எம்மை அழைத்துச் சென்ற றிச்சர்ட், தமக்கு என்று இருந்த அந்த ஒரே அறையினுள் எம்மை ஒரு நீண்ட வாங்கு ஒன்றின் கீளே நீளப் போருக்கு, ஒருவர் முதுகை ஒருவர் பார்த்தவாறு படுக்கச் செய்து, முன் கதவை பூட்டி, வெளிப் புறமாக தாள்பாள் போட்டு, கதவுக்கு வெளியே ஒரு மேசையை வைத்து, அதன் மீது தான் ஏறி அமர்ந்து (நீண்ட வாள் ஒன்றுடன்) இருந்தார். இறுதியாக அவர் கூறிய வார்த்தை, “எங்கள் மீது யாராவது கை வைக்க முற்படின், அது, தான் இறந்த பின்னாராகத்தான் இருக்கும்” என்றமை எம்மை மெய் சிலிர்க்க வைத்தது.

பூட்டிய இருட்டு அறையினுள்ளே, குழந்தையின் அழுகையை அடக்க எடுத்த முயற்சியும், அடுத்து என்ன நடக்கும் என்று தெரியாத திகிலும் எம்மை வாட்டி வதைத்தது. ரிச்சர்ட்டின் மனைவி எமது வீட்டின் முன்னால் கூடிய இளைஞர்களுக்கு எதோ காட்டமாக கூறுவது காதில் கேட்டது. நள்ளிரவைத் தாண்டிய வேளையில், ரிச்சர்ட்டின் வீட்டு முன்றலில் கூடி நின்ற இளைஞர்கள், தமது கைங்கரியங்களையம் வீரப் பிரதாபங்களையும் கூறி, தாம் கொண்டு வந்திருந்த வாள்கள், கோடரிகள், கத்திகள் என்பவற்றில் இருந்த இரத்தக் கறைகளை எமது வீட்டில் ரிச்சர்ட்டுக்கென்று நாம் கட்டிக் கொடுத்த தொட்டியில் இருந்த நீரில் கழுவுவது நன்றாகவே புலப்பட்டது.

2ஆம் நாள் காலை, எமது வீட்டுத் திறப்பைக் கொடுத்து தேவையானவற்றை எடுத்துக் கொள்ளுமாறு ரிச்சட்டைப் பணித்தோம். ஆனால் அவர் மறுத்து விட்ட போதிலும், குழந்தையின் உணவை மட்டும் எடுப்பித்தோம். வெள்ளவத்தை தமிழர் வீடுகளில், ஒரு போலீஸ் அதிகாரியின் வீடும் எமது வீடுமே பாதிப்பில்லாமல் தப்பியதாக பின்னர் அறிந்தோம்.

இரண்டு நாட்களின் பின்னர், மேலும் இரண்டு அடியாட்களின் உதவியுடன் எம்மை பாதுகாப்பாக, பம்பலப்பிட்டி இந்து கல்லூரியில் அகதியாக சேர்த்து விட்டார்.

ரிச்சர்டிடம் நாம் கூறிய ஒரே வார்த்தை: எமது வீடு, மோட்டார் வாகனம், நகை, பாத்திரம், தளபாடங்கள் அனைத்தும் உம்முடையது என்று எண்ணி எமது வீட்டிலேயே தங்கும் படியும் கூறினோம்.
நாம் எடுத்து வந்தது இரண்டு பொருட்கள் மட்டுமே: 1) ஒரு சின்ன 2 in 1 Radio, 2) அரைவாசி படம் எடுத்த நிலையில் ஒரு Yashica கமெரா .
(இதை வைத்து தான் Lanka Rani கப்பலின் மேல் தளத்தின் இருந்து Photo ஷூட்டிங் செய்திருந்தோம்)

5 நாட்கள் மாற்று உடுப்பின்றி, குளிக்க, முகம் கழுவ, 1க்கு, 2க்கு தகுந்த வசதியின்றி பிறந்த நாட்டில் முதன் முறையாக அகதி வாழ்க்கை. வயோதிபர்கள், குழந்தைகைகள், காயப் பட்டவர்களினதும் நிலைமை சொல்லிலடங்காது. இயன்றளவு தொண்டர் சேவை செய்து கொண்டோம். இரவு 9 மணிக்கு எனது 2 in 1 ரேடியோவை சூழவும் நூற்றுக்கும் மேற்பட்ட செய்திப் பிரியர்கள். கடந்த 24 மணி நேரத்தில் நடந்த (தணிக்கை செய்யப்ப்பட்ட) சம்பவங்களை அறிந்து கொள்வோம்.

ஜூலை 25 இரவு, எனது சின்ன ரேடியோ அலறியது: விசேட ஒலிபரப்பு, “சிறைச் சாலையில் இருந்த 52 கைதிகள் மரணம்(உண்மையில் கொலை)”. தூக்கி வாரிப் போட்டது அனைவருக்கும். சில பெண்கள் தரையில் விழுந்து உருண்டு கதறினர். 10 மணியளவில் இறந்தவர்களின் பெயர்கள் வாசிக்கப்பட்டது. குட்டிமணி, தங்கத்துரை, மற்றும் பலர் >>> அவர்களில் ஒருவர் “சத்தியசீலன்” எனது உறவினர். பக்கத்து வீடு. ஒரே வயது, ஒன்றாகவே பாடசாலை, விளையாட்டு என்று. இன்று அவன் இல்லை. “குதறப் பட்டு விட்டான்” என்பது அடி வயிற்றில் ஈயம் காய்ச்சி வார்த்தது போலிருந்தது. அந்த 52 பேரினதும் உறவுகளைத் தேடிச் சென்று துக்கம் கொண்டாடினர் முகாமினுள்ளே..

தொண்டர் என்ற வகையில், 800 அகதிகளை 13 பஸ்களில் அழைத்துச் சென்று, கோட்டை துறைமுகத்தில் நிற்கும் “லங்கா ராணி” கப்பலில் அமர்த்தும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப் பட்டது. ஒலிவாங்கியில் ஒவ்வொருவராக அழைத்து, கழுத்தில் Label கட்டி இராணுவத்தின் பாதுகாப்புடன் கப்பலில் ஏற்றினோம்.

“லங்கா ராணி” ஒரு சரக்கு கப்பல். பங்கரினுள் இறங்குவதற்கு கயிற்றேணி கட்டப் பட்டிருந்தது. 3 நாள் கடல் பயணம். பங்கரினுள் இருந்தவர்கள் ஒரே வாந்தி, தலைச்சுற்று, மயக்கம். மேலும் மல சல வசதியில்லை. ஒரு கொள்கலம் ஒன்றின் மறைவில், பிளாஸ்டிக் வாளியை வைத்து, அண்ணளவாக 500 பேரினதும் மல சலத்தை, பங்கரில் இருந்து, வாளிக்கு கயிறு கட்டி மேலே இழுத்து கடலினுள் கொட்டினோம். வாந்தி வந்தவர்களுக்கு கப்பல் கப்டனிடம் பிரிட்டோன் வாங்கிக் கொடுத்தோம்.

ஒருவாறாக 3ஆம் நாள் KKS துறைமுகம் தென்பட்டது. ஒரு காலத்தில் பல்லக்கில் ஏற்றிக் காவிச் செல்லப்பட்ட தமிழன், இன்று பிச்சைக் காரனை விடவும் குறைந்த தோற்றத்தில், சவரம் செய்யாத முகமும், அழுக்குப் படிந்த உடையும், விளக்காத பல்லும், வெற்றுக் காலும், வறண்ட வயிறுமாக ஒரு பரதேசிக் கோலத்தில் பிறந்த மண்ணிலேயே மீண்டும் ஒரு அகதிப் படிவம், விதானையார் முன்னிலையில்.

ஒவ்வொருவர் மனதிலும் இனம் புரியாத எண்ணங்கள் பல. சிலர் மனதில் விகாரமான திட்டங்கள். இன்னும் சிலர் மனதில் வாழ்க்கை அஸ்தமித்து விட்டதான நிலைப் பாடு. அடுத்தது என்ன என்று புரியாத சூனியத்தில் சிலர்.

எமக்கோ, கவலை வேறு விதத்தில் உருவெடுத்தது. துறைமுகத்தில் இருந்து எங்கே செல்வது?. பிறந்தவிடமா? இல்லை புகுந்தவிடமா? எங்கு சென்றாலும் எத்தனை நாள் அவர்களுடன் வாழ முடியும்?? இதற்கு நிரந்தர முடிவுதான் என்ன. இந்தக் கேள்விக்கு “கிருஷ்ணோபதேசத்திலும்” பதில் இல்லை.

எமக்கென்று குந்த ஒரு குடில் இல்லையே என்ற எண்ணம் என் மனதை பெரிதும் பாதித்தது. சிங்களத்தின் மத்தியில் பட்ட வேதனையை விடவும், தூங்கி எழும்ப ஒரு குடிசை இல்லையே என்ற வேதனை, உக்கிரமாக இருந்தது. என் எதிர் காலக் கனவுகள் சிதைந்து போயினவே. இனியும் மீண்டெழ முடியுமா? பதில் தெரியாத கேள்விகள் பல உருண்டு புரண்டன. பல்லைக் கடித்துக் கொண்டு பல மாதங்களைக் கடத்திவிட்டோம்.

6 மாதங்களின் பின்னர் கொழும்பு சென்ற போது, ரிச்சர்ட் எமது பொருள் அனைத்தையும் பத்திரமாக வைத்திருந்தார். சிங்களத்தின் மத்தியில் இருந்த அந்த “மாணிக்கத்துக்கு” உரிய வணக்கம் செய்தோம். நன்றி கூறினோம். அவரது குடும்பம் பாவிக்கக் கூடிய, எமது வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் ரிச்சர்ட் க்கு கையளித்தோம். Motor Cycle + ஒரு சில முக்கிய ஆவணங்களுடன் கொழும்புக்கு “Good Bye” சொன்னோம்.

கடந்த 5 தடவைகள் இலங்கை சென்ற போதும் ரிச்சர்ட் குடும்பத்தை சந்திக்க மறக்கவில்லை. றிச்சர்ட் தற்போது வயோதிபராகி விட்டார். பிள்ளைகள் பலரும் திருமணம் செய்து விட்டனர். இன்றும் அவர்கள் எம்மை ஞாபகத்தில் வைத்துள்ளனர் என்பதில் பெருமிதம் கொள்கின்றோம்.

“தர்மம் தலை காக்கும்” என்பது, இங்கு மெய்தது என்றுணர்ந்தோம்

இனம், மதம், மொழி தாண்டி அன்புக்கு உள்ள வலிமையை நான் அங்கு கண்டேன்.

அன்புதான் இன்ப ஜோதி – அன்புதான் இன்ப ஊற்று – அன்புதான் உலக மஹா சக்தி.

இது கதையல்ல – நிஜம் !!

Arun Chellappah.