என் சுயநலப் பயண அனுபவப் பகிர்வு ! 3

(சஞ்சயன் மாதவன்)

வடக்கில் சேவையில் ஈடுபடும் அரச மற்றும் தனியார் பேருந்துகளுக்கு இடையில் எப்போதும் பகையாளி சண்டை நடக்கும். அதே நேரம் தனியார் பேரூந்து தமக்குள் சக்களத்தி சண்டை நடத்தும். எல்லாம் கலக்சன் பிரச்சனை. நெடுந்தூர பயணத்தில் இந்த நான் முந்தி நீ முந்தி ஓட்டப் போட்டி தினம் தினம் நடக்கும். காப்பற் வீதி போடப்பட்ட பின் பேரூந்துகள் ஓடுவதில்லை, பறக்கின்றன. நேர அட்டவணை சீர் செய்யப் படாததால் ஒரே நேரத்தில் புறப்படும் அரச, தனியார் பேரூந்துகள் போட்டி போட்டு அடுத்தவன் முந்தக் கூடாதென நடு வீதியில் நிறுத்தி ஆட்களை ஏற்றுவர். பஸ்ஸில் ஏற நாம் காலை முதல் படியில் வைத்தால் போதும், மதில் பாயும் காதலியை தாங்குவது போல் நடத்துனர் எம்மை இழுத்து அரவணைத்து உள்ளே தள்ளி விடுவார்.

பின்னால சிவப்பன் (அரச பேரூந்து) வாறன் இழுத்து போ என நடத்துனர் சொல்ல, ஓட்டுனர் அரை கிளச் அமத்தி என்ஜின் உறும மாத்துவார் கியர். மிகை ஒலியில் போவோமா ஊர்கோலம், பூலோகம் எங்கெங்கும் என்று ஒலிக்கும் சின்னத்தம்மி பாட்டு, நாம் வீடு போய் சேர்வோமா இல்லை விபத்து ஏற்பட்டு சுடலை போய் சேர்வோமா என்று வயற்றில் புளி கரைக்கும். அந்த பாட்டை பாடிய பெடிச்சி இப்ப உயிரோட இல்லை என்ற பயமும் கூடவே மனதை அரிக்கும். பஸ்ஸில் முன் பக்கத்தில் எழுதி இருக்கும் மரியாள் துணை என்ற வாசகம் எம்முள் நம்பிக்கை தந்தாலும், தஞ்சம் என வந்தவரை விமான குண்டு வீச்சில் தன் பரலோகம் வரச்செய்த நாவாலி சென் பீற்றர் தேவாலய சம்பவம், எம்மை போருக்கு தப்பி பேரூந்து விபத்திலா மேலே போவது என அச்சப்படுத்தும்.

பரந்தன் சந்தியில் சக்களத்தி சண்டை தொடங்கும். யாழ்- வவுனியா தனியார் பேரூந்தை, முல்லை- வவுனியா பேரூந்து முந்த முற்பட , ஓட்டுனர் காட்டு யானைக்கு அடிக்கும் எயர் கோணை விட்டு விட்டு அடித்து முட்டுவது போல கிட்டப்போய் அழுத்தும் திடீர் பிரேக்கால், நித்திரை கொண்டவர் நிலை தடுமாறி முன் சீற் கம்பியில் மூக்கு இடி பட்டு முளுசிப்பாப்பார். ஓட்டப் போட்டியில் முருகண்டி பிள்ளையார் புறக்கணிக்கப்பட்டு கனகராயன்குளம் தேநீர் கடையில் பேரூந்து நிற்கும். அப்போது இரு பேரூந்து நடதினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் தொடங்கும். அஜித், விஜய் போல ஏய் ஏய் என இவர்கள் கத்தும் போது அரச பேரூந்து கடந்து போகும். வழியில் நின்றவர் அதில் ஏற, இவர்கள் சக்களத்தி சண்டையில் பகையாளியிடம் தோற்று வவுனியா வரை பயணிகள் ஏறாமல் கலக்சனை பறிகொடுப்பர்.

வடக்கில் 30 வருடம் சட்டம் ஒழுங்கு கெட்ட இந்த நிலை போல தெற்கில் இந்தளவு இல்லை. அங்கங்கே போக்குவரத்து போலீசார் கைநீட்டுவதால் அவர்களுக்கு பணம் கொடுக்க விரும்பாதவர், தூரத்தில் வெள்ளை ஹெல்மெட்டை கண்டால் வீதி ஒழுங்கை கடைப்பிடித்து, அந்த இடத்தில் பொலிஸ் நிற்கும் செய்தியை எதிரில் வரும் வாகனங்களுக்கு லைற் அடித்து எச்சரிப்பர். அதை புரிந்து கொண்டு முயல் வேகத்தில் வந்தவர் ஆமை வேகத்துக்கு மாறுவர். இந்த ஒற்றுமை எம்மவரிடம் இல்லை. மச்சான் மாட்டுப்படட்டும் என்ற மனப்பாங்கே, வடக்கு பொலிசாருக்கு நல்ல வருமானம் கொடுக்கிறது. அதற்காக வடக்கில் வீதி ஒழுங்கு கட்டுப்பாட்டில் என எண்ணக்கூடாது. பெடியளுக்கு போட்டியாக எங்கட குமருகள் குறுக்க மறுக்கா ஓடும் ஸ்கூட்டி போற வேகம் 60-70 kmph.

எம்மவரை எப்போதும் நான் மட்டம் தட்டுவதாக நீங்கள் எண்ணக்கூடும். ஆனால் அன்று சிங்களவரை மோடையா என நக்கலடித்த நாம், படுமுட்டாள்கள் ஆகியதே அண்மைக்காலம் வரையான வரலாறு என்ற வருத்தம் தான் என் எழுத்து. எம் பிரதி நிதிகளாய் அன்று பாராளுமன்றம் சென்ற அப்புக்காத்துகள் முதல் விடுதலைக்காய் வீறு கொண்டதாக கூறி பின் வக்கற்று ஜனநாய அரசியலுக்கு வந்த, கா பொ த கூட சித்தி எய்தாதவரும், புலி பரணி பாடியதால் சென்ற பாராளுமன்றதில் இருந்த சிங்கள தலலைவர்கள் தம் இனத்துக்காய், தம் மொழிக்காக்க செய்த பங்களிப்பில் கணிசமான அளவு கூட நிறை வேற்ற முடியாமல், இந்திய-சர்வதேச உதவியை நாடும் இவர்களை நான் எப்படி தூக்கி வைத்து எழுதமுடியும். யதார்த்தம் எழுதும் நான் என்றுமே துரோகி தான்.

தன் மனையாள் விருப்பை நிறைவேற்ற வேகமாய் கொழும்பை ஓட்டுனர் அடையும் போது மாலை 6 மணி. நேரடி பயணம் என்றால் யாழ்-கொழும்பு பேரூந்தில் பயணிக்க 8 மணித்தியாலம். நான் புத்தரை பார்த்த சுற்றுலா என்பதால் 12 மணித்தியாலம் எடுத்தது கொழும்பை அடைய. அடிக்கடி கொழும்பு வருவதால் புதிய மாற்றம் எதுவும் பதிவதற்கு இல்லை. வானுயர்ந்த தொடர் மாடியில் தான் என் கூடு. தலை குளித்து நெற்றியில் பட்டை அடித்து மொட்டை மாடிக்கு காத்து வாங்க போனேன். கண்கொள்ளா காட்சி. குண்டானவர் முதல் குமரிகள் வரை தளக்கு புளக்கு என நடைப் பயிற்சி. உடலில் சேர்த்த கொழுப்பை (வாய்க்கொழுப்பை அல்ல) கரைக்க அவர்களால் முடிந்த முயற்சி. கடைத் தீனீ, சர்லைற் ரிவி என வாழ்ந்தால் கொழுப்பு வராதா ?

இந்த தொடர் மாடி கலாச்சாரம் கூட எம் புலம்பெயர் உறவுகள் புண்ணியத்தில் தான் பல்கி பெருகியது. நான் கொழும்பு வந்த காலத்தில் அரச தொடர் மாடிகளே இருந்தன. பம்பலபிட்டி, நாரஹென்பிட்டி, பஞ்சிகாவத்தை என இரண்டு அல்லது மூன்று மாடிகள் மட்டுமே. இப்போது வானுயரம். அப்போது கம்யூனிஸ்ட் கட்சி வி. பொன்னம்பலம் அவர்களுடன் ஓட்டித்திரிந்த காலம். அவருக்கு மொரட்டுவை டி சொய்சா புரவில் தொடர் மாடி வீடு கிடைக்க அவர் அதனை இலவசமாக பயன் படுத்தும் படி எமக்கு அருளினார். அப்போது ஒரு அறையை 100 ரூபா வாடையில் நால்வர் பங்கு போட்ட எமக்கு மட்டற்ற மகிழ்ச்சி மாதம் 25 ரூபா மிச்சம் என்று. அப்போது அது பெரிய தொகை. ஒரு இடியப்பம் 5 சதம். 50 சதத்துடன் காலை உணவை முடிக்கலாம்.

வலிய வந்த சீதேவியை அரவணைக்க மொறட்டுவை சென்று பால்காச்சி, சாமிப் படம் மாட்டி, காலையில் வெள்ளவத்தையில் இருந்து புறப்படும் போதே ரோயல் பேக்கரியில் வாங்கி வந்த மொறு மொறு பாணுடன் மதியம் மாட்டு இறைச்சிகறி சமைத்து, பல நாள் கெடு அடங்க உண்ட களிப்பில் நன்கு தூங்கி எழுந்த போது மாலை 6 மணி. தேநீர் குடித்த பின் இரவு உணவு என்ன என்ற கேள்வி எழுந்தது. அண்மையில்த் தான் கட்டப்பட்ட தொடர் மாடி என்பதால் அருகில் உணவகங்கள் இல்லை. மா வாங்கினால் புட்டு அவிக்கலாம் என நண்பன் சொல்ல மொக்கன் கடை புட்டு நாவூற வாங்கிவா என அனுப்பினோம். 10 நிமிடங்களில் பதறியடித்து ஓடிவந்து, மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி முக்கி முனகியவனிடம், என்ன நடந்தது என கேட்க, மச்சான் நரி எடா என்றான். -நீட்சி 4ல்-