எழுக தமிழ் கனடாவில் எழுமா.???

நான் எனது சமுத்துவமற்ற, சகோதரத்துவமற்ற, சமுதாயத்திற்கு என்னென்னவோ சொல்ல முயல்கிறேன். அவை புத்திமதிகள் அல்ல, அவை எச்சரிக்கையுமல்ல, அவற்றால் எந்தப்பயனுமில்லை என்பதை நான் நன்கு அறிவேன். ஆனாலும் நமது மக்கள் நம்மைப் பற்றி அறியவேண்டிய பல உண்மைகள் நிறைய உள்ளன என்பதை ஆணித்தரமாக அடித்துச்சொல்ல ஆசைப்படுகிறேன்..

கடந்த ஏழு வருடங்களின் பின் அடங்கிக்கிடந்த விடுதலை உணர்வு தன்னெழுச்சியாக எழுந்து சுட்டெரிக்கும் வெய்யிலையும் பாராது பல தடைகளையும்தாண்டி எமது மக்கள் ஒருசெய்தியை ஜனநாயக வழியில் சொல்லியுள்ளார்கள் என்பது உண்மைதான்.

பொதுவாகவே தமிழர்களை பொறுத்தவரை காலம் காலமாக உணர்ச்சிக்கொப்பளிக்குள் மூழ்கியவர்கள் இதை இல்லையென்று சொல்பவர்கள் பலர் இன்னும் இருக்கிறார்கள்.

வீட்டில் ஒரு முடிவுஎடுப்பதாக இருந்தாலும் உணர்ச்சிவசப்பட்டே எடுப்பார்கள். இதில் ஒரு வித கீரோசமும், தற்காலிக புத்துணர்வும் வருவது உண்மைதான்.

அந்த வகையில் அண்மையில் யாழ்ப்பாணத்தில் நடந்த எழுக தமிழ் நிகழ்ச்சியும் இதே அடிப்படையில் தான் நடந்து முடிந்தது.
இங்கே கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால் இந்த போராட்டத்தால் சாதித்த விடயங்கள் என்ன.

இராணுவம் மண்ணை விட்டு அகன்றதா.???இல்லை கைதிகள் விடுதலை செய்யப்பட்டனரா.???அல்லது ஒரு அரசியல் தீர்வு கிடைத்து விட்டதா இல்லை.

வேறு எந்த ஊடகமாவது இதை உலக நாடுளிலுள்ள பத்திரிகைகள் ஏதாவது பிரசுரித்தனவா இல்லையே. மாறாக கடந்த தேர்தலில் மக்களால் தூக்கி சாக்கடையில் போட்டவர்கள் அதாவது கட்டுக்காசை இழந்து தோற்றவர்கள் இந்த வாய்ப்பை நன்கு பயன் படுத்தி நாங்கள் தான் தமிழர்களுக்கு அடுத்த தலைவர்கள் என்ற உணர்ச்சிப்போதையை மக்களுக்கு அதிர்ச்சி தகவலாக சொல்லி உள்ளார்கள்.

அன்று திரு.டக்ளஸ் தேவானந்தாவை துரோகி என்று சொன்னவர்கள் இன்று தலைவர் என்கிறார்கள், மண்டையன் குழு சுரேஸ், ரணிலின் எடுபிடிகளான மண்ணெண்ணெய் குப்பல்தான் புலிகளின் வரி வசூலை கண்டித்து ஐநாவிற்கு அறிக்கையாக கொடுத்து அவர்களை உலக பயங்கரவாதிகளாக காண்பித்து தடையும் செய்யப்பட்டார்கள் அத்தோடு திருமதி. விஜயகலா தேர்தலுக்கு முன் புலிகளின் தலைவர் வே.பிரபாகரனுக்கு சிலை வைப்பதாக சொல்லி வாக்கு கேட்டார் செய்தாரா.

முதலமைச்சர் திரு. விக்னேஸ்வரன் அன்று நீதிபதியாக இருந்த போது மறைந்த குட்டிமணி,தங்கத்துரை போன்றவர்களுக்கு மரணதண்டனை கொடுத்தது மட்டுமல்லாது தமிழ்தேசியத்திற்காக போராடியவர்களை பிடித்து சிறையில் போட்டு வதைத்தவர் இன்று பலருக்கு அவர் தேசியத்தலைவர் இதை யாரிடம் சொல்லி அழுவது என்று எனக்கு தெரியவில்லை.

கனடாவில் நடக்கும் எழுக தமிழ் நிகழ்ச்சியை முனின்று செய்பவர்கள் எதிர்வரும் மாவீரர் நிகழ்ச்சி நடத்தவேண்டுமென்று சொல்லி மக்களிடம் இருந்து பணத்தை பறித்து தங்கள் காய்ந்த வயிறை நிரப்பவும், தாங்கள் தான் புலிகளின் அடுத்த வாரிசுகள் என்று காண்பிக்கவும், இந்த பணத்தின் மூலம் தென்னிந்திய சினிமா நடிகர்களை கனடாவிற்கு கொண்டு சென்று குடித்து கும்மாளம் அடித்து உங்கள் பணத்தை பறிக்கும் இந்த படு பாதகமான இந்த செயலை ஆதரிக்க வேண்டுமா என்று சிந்தித்துப்பாருங்கள்..

புலத்தில் வசிக்கும் சருகுப்புலிகளுக்குத்தான் தனி ஈழம் வேண்டுமாம் ஆனால் இவர்களோ அல்லது இவர்களின் பிழைகளோ தாய் மண்ணிற்கு வரப்போவதில்லை வந்தாலும் கொக்கக்கோலா குடிப்பார்களே தவிர போராட மாட்டார்கள்.

இவர்களின் இந்த பொறுப்பற்ற வஞ்சகப் புரட்சியினால் பெரிதும் பாதிக்கப்படப்போவது எமது ஏழை எளிய தமிழ் பிள்ளைகளே.

எனவே எமது சமூகத்தில் இடிந்துபோய்யுள்ள கல்வி, பொருளாதாரத்தை கட்டியெழுப்ப வேண்டுமே தவிர இந்தமாதிரியான பொறுப்பற்றவர்களின் உணர்ச்சிகரமான ஆபாசங்களை சாக்கடையில் போடுவதே நல்லது நமது எதிர்கால சமுதாய சமத்துவ வளர்ச்சிக்கு.

புலிகளுக்கு உலக நாடுகள் தடை விதித்திருக்கும் இந்தநிலையில் எம்மவர்களில் சில மகா அறிவாளிகள் வெள்ளைக்காரனின் நாட்டில் வசித்துக்கொண்டும், அவன் கொடுக்கும் அகதிப்பணத்தில் உண்டு கொண்டும், அவன் கொடுத்த விசாவை வைத்துக்கொண்டும் பலர் ஆர்ப்பாட்டம் என்ற பெயரில் புலிக்கொடியை தலையில் உச்சிக்குடுமியாக சுற்றிக்கொண்டும் குடித்துவிட்டு கோமாளித்தனமாக நடுத்தெருவில் ஆடிக்கொண்டும் எங்களுக்கு வேண்டும் தமிழீழமென்றால் வெள்ளையர்கள் எம்மை பார்த்து எங்கள் அறிவை பார்த்து சிரிக்கமாட்டார்களா என்ன.

இதை தர்ம நியாயம் கற்பிக்க பல அறிவுக்குருடர்கள் முன் வரலாம் இவர்களின் குருட்டுத்தனமான கருத்துகளுக்கு மக்கள் ஒருபோதும் செவி சாய்க்க மாட்டார்கள் என்பதே என் தாழ்மையான அபிப்பிராயமாகும்.

(Siva Erambu< Jaffna)