ஏறத்தாழ பத்துநாளுக்கும் மேல் ஆயிற்று.

எங்கள் தெருவில் இருந்த அந்த நாய்
வாயில் அடிபட்டப் புண் புரையோடிப் போய்
மரணாவஸ்தையில் கிடந்து அரற்றிற்று.

தினமும் பிஸ்கெட் போட்டதால் பல்லாண்டு நண்பன்.

ஸ்கேன் பவுண்டேஷனுக்கு சொன்னேன்.
டாக்டர் வந்து பார்த்தார்.

அவரின் சங்கடம் முகத்தில் தெரிந்தது.

நாயின் உடம்பிலிருந்த அழுக்கையெல்லாம்
துடைத்துவிட்டு கொஞ்சம் கறிசோறு வைத்துவிட்டு…..

“எங்களுக்கு எடுத்துப் போய் வைத்தியம் செய்ய இடம் இல்லை. அரசு எங்கள் இடத்தை ஏர்போர்ட் விரிவுக்காக எடுத்துக்கொண்டுவிட்டது. ப்ளூ கிராஸுக்கு சொல்லிப் பாருங்களேன்…”

போன ஞாயிறுக்கு முந்தின ஞாயிறு .
ஸ்கேன் பவுண்டேஷன் டாக்டரை வைத்துக்கொண்டுதான்
ப்ளூ கிராஸுக்கு சொன்னேன். எதுவோ கம்பளைண்ட் நம்பர் என்று கொடுத்தார்கள். நான் மனதில் இருத்தவில்லை.

வரவேயில்லை. தொடர்ந்து நான்கு நாட்கள்
போன் போட்டு சலித்தேன்.

ஸ்கேன் பௌண்டேஷனுக்கே போன் போட்டு உதவி கேட்டேன். ரெண்டு மாத்திரை ப்ரிஸ்க்ரைப் பண்ணினார்கள்.
கொடுங்கள்… குணமாகவில்லை என்றால் வேறு டாக்டரைப் பார்ப்போம் என்றார்கள்.

தினமும் ராத்திரி மூன்று நாள்களாக அதற்கு
மருந்தும் சாப்பாடும் கொடுத்து ஆறுதலாக வருடிக்கொண்டிருந்தேன்.
வாய்ப்புண் பரவி காதுகளிலும்
ரத்தம் சொட்ட ஆரம்பித்திருந்தது.

தாளவில்லை. ஸ்கேனுக்கே சொன்னேன்.
போனை வேறொருவர் எடுத்தார்.
அந்த டாக்டர் மண்டேதான் வருவார். நீங்கள் இன்னொருமுறை
ப்ளூ கிராஸுக்கு சொல்லிப் பாருங்களேன் .
என்னதான் செய்வது என்றார்.

மீண்டும் ப்ளூ க்ராஸ்.
கம்பளைண்ட் நம்பர் என்றார்கள்.
நினைவில் இல்லை என்றேன்.
இந்தாங்க புது நம்பர் 11134 என்றார்கள்.
ரெண்டு நாளாயிற்று. எவரும் வரவேயில்லை.

நேற்று மருந்தும் சாப்பாடுமாக
அந்தக் காலபைரவனிடம் சென்றேன்.
கண்கள் வழியப் பார்த்தான்.
உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.
உணவை முகர்ந்தான். தொடவில்லை.
பார்வையால் எதோ சொன்னான்.
எனக்குப் புரிந்தது.

தலையில் கைவைத்து சொன்னேன்.
“இன்றிரவு எப்படியாவது இறந்துவிடு குழந்தையே…”

அரைமணி நின்றுவிட்டு தாளமுடியாமல் –
செய்வதறியாது வீடு திரும்பினேன்.
நேற்றைய இரவு அச்சமூட்டியது.

இருந்த சோகத்தில் முகநூலில் ஒருமணிக்கு
ஒருத்தருக்கு தப்பான பின்னூட்டம் இட்டு
வாங்கிக் கட்டிக்கொண்டேன்.

இன்று காலை வீட்டிலிருந்து அலுவலகம் புறப்படும்போது பைரவன் இருந்த திசைக்குப்
போகத் துணிவில்லை எனக்கு.
தினத்தந்தியில் ஒரு வேலை இருந்தது.
அங்கு பேசிக்கொண்டிருந்தபோது போன் வந்தது.
“ஹலோ ப்ளூ க்ராஸிலிருந்து பேசறோம்…”

பத்து நாள்களாய்யா என்று வைதேன்.
நான் வெளியிலிருப்பதை சொல்லிவிட்டு
முகவரி கொடுத்தேன்.

மதியம் மூன்று மணிக்கு அலுவலகம் வந்த கையோடு
அந்த ப்ளூ க்ராஸ் நம்பருக்குப் பேசினேன்.

“போனோம் ஸார்.
அந்த நாய் நைட்டே செத்துடுச்சாம் ஸார்…
ஸாரி சார் ”

AFTER ALL நாய்தானே?
சாகட்டும்.
வாழ்க ப்ளூ கிராஸ்கள்!
குவியட்டும் நிதி மூட்டைகள்!

இன்றிரவு எப்படி அந்த வழியை
நடந்து கடப்பது எனப் புரியவில்லை.

(Rathan Chandrasekar)