ஒரு மனிதர்: பன்முக பக்கங்கள்/பார்வைகள்

வாழ்வின் காரணங்களையும் விடைகளையும் தேடி…..

இன்று முக்கியமான நாள்.
இந்தப் பதிவின் முதற் பக்கத்தில் நீங்கள் வாசித்த ஒரு மனிதரின் கடைசிக் கணங்கள் பற்றிய ஒரு பதிவு. இந்த சம்பவம் முள்ளிவாய்காலில் நடந்ததுடன் ஒப்பிடும் பொழுது மிகச் சாதாரணமான ஒரு நிகழ்வே. ஆனாலும் தனிமனித உயிர் என்றளவில் முக்கியமானது என்றால் மறுப்பதற்கில்லை.

இக் கதையில் கொல்லப்பட்டு இறந்தவர் கரவை ஏ.சி. கந்தசாமி (Karavai A.C.Kandasamy).
இன்று அவரது இறந்த நாள் (31.12.1994).
இந்த நாளில் அவரைப் பற்றிய வாழ்க்கை குறிப்பை எழுதுவதற்கான முயற்சியை இங்கு அறிமுகப்படுத்தி ஆரம்பிக்கின்றேன்.

இவரைப்பற்றி பல பார்வைகள் எனக்கு உண்டு.
ஒரு மகனாக நான் பார்க்கின்ற பார்வை.
இது அவருக்கு மிகவும் அருகிலிருந்து வாழ்வதற்கு கிடைத்த சந்தர்ப்பத்தால் எனக்கு உருவான பார்வை.
எனது சொந்த அனுபவத்தில் கிடைத்த பார்வை.
இரண்டாவது பார்வை அரசியலை அடிப்படையாகக் கொண்டது.
அவருக்கு ஒரு அரசியல் இருந்தது.
நான் பிறப்பதற்கு முன்பும் மற்றும் நான் அறியாத பருவத்தில் இருந்தபோதும் நடைபெற்ற சம்பவங்களை பலரிடம் கேட்டு வாசித்து அறிந்ததால் ஏற்பட்ட ஒரு பார்வை.
பின்பு எனக்கு புரிகின்ற (?) பருவம் வந்தபோது நேரடியாக நான் கண்டவையும் மற்றும் அனுபவித்ததையும் அடிப்படையாக கொண்ட ஒரு பார்வை.
இவற்றைவிட நான் ஒரு அரசியல் செயற்பாட்டாளனாக இருப்பதனால் எனது அரசியலை அடிப்படையாகக் கொண்ட ஒரு பார்வை.
இறுதியாக இந்த உறவுகள் மற்றும் அரசியல் ஈடுபாடுகளுக்கு அப்பால் நின்று மூன்றாவது நபராக பார்க்கின்ற ஒரு பார்வையும் உள்ளது. இது ஒரு சிக்கலான பார்வையே. ஆனால் முழுமையாக ஒரு பார்வையை தர முயற்சிக்கின்ற பார்வை.

இந்தப் பார்வைகளின் அடிப்படையில் இவரது வாழ்க்கையை உங்கள் முன்வைக்கின்றேன்.
இதன் மூலம் மனிதர்களின் வாழ்க்கையில் தத்துவம் கோட்பாடுகள் அரசியல் மற்றும் கட்சியும் அதன் நடவடிக்ககைளும் எவ்வாறான தாக்கத்தை நிகழ்த்துகின்றது என்பதையும்

இதேபோல் மனிதர்கள் எவ்வாறு மேற்குறிப்பிட்டவற்றின் மீது தாக்கத்தை நிகழ்த்துகின்றனர்
என்பதையும்

மற்றும் கட்சிக்குள்ளும் மனிதர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட முரண்பாடுகளையும்
ஒரு ஆய்வாக செய்ய முயற்சிக்கின்றேன்.

father’s funrel 234இவரது வாழ்க்கையை எழுதும் பொழுது ஒரு பெண்ணைப் பற்றி எழுதுவதும் தவிர்க்கமுடியாது.
அது அவரது துணைவியாரான வசந்தாதேவி ஆகும்.
பல சந்தர்ப்பங்களின் ஆண்களின் அரசியல் செயற்பாடுகளுக்கும் அதன் விளைவுகளுக்கும் பக்கபலமாக மட்டுமல்ல அதன் ஆன்மாவாக, உயிராக அவர்களுனையே வாழ்ந்து பல்வேறு துன்பங்களை அனுபவிக்கும் இவரைப் போன்ற பெண்கள் பற்றியும் அவர்களது தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் கனவுகள் ஆசைகள் விருப்பங்கள் பற்றியும் யாரும் கண்டு கொள்வதுமில்லை அதைப் பற்றிய அக்கறையும் இருப்பதில்லை.

father’s funrel 237எனது பார்வையில், ஒரு மகனாக, இவர்கள் இருவரும் எல்லோரைப் போலவும் சதாரணமான மனிதர்களே. பெற்றோர்களே.
இவர்கள் ஒன்றும் உதாரணமாக காண்பிக்கக்கூடிய இலட்சியதனமான அடையாளங்கள் கொண்ட
அப்பாவோ அம்மாவோ இல்லை.
மனிதர்களுக்கு இருக்கின்ற சகல குணங்களும் உணர்வுகளும் உணர்ச்சிகளும் ஆசைகளும் பாசங்களும் கொண்ட சாதாரண மனிதர்கள்.
ஆனால் சமூகத்தில் மாற்றம் ஒன்றை உருவாக்குவதற்கான அரசியல் செயற்பாட்டிற்காக தமது வாழ்வை அர்ப்பணித்தவாகள்.

கரவை அல்லது ஏ.சி. அல்லது கந்தா அல்லது கந்தசாமி என அவரது தோழர்களாலும் நண்பர்களாலும் உறவினர்களாலும் அழைக்கப்பட்ட இவர் கட்சியின் சதாரண அங்கத்தவர். சில அக்கத்தவர்களைப் போல கட்சித் தலைமை மீது அபாரமான மதிப்பும் நம்பிக்கையும் விசுவாசமும் கொண்டவராக இருந்தார்.
இவரைப்பற்றி பலர் பலவாறு கூறுவார்கள்.
ஒரு சிறந்த பேச்சாளர், பிறவி மார்ச்சியவாதி, கம்யூனிஸ்ட், புரட்சியாளர், தொழிற்சங்கவாதி, மொழிபெயர்ப்பாளர், அரசியல்வாதி, மனிதாபிமானவாதி, சிறந்த மனிதர், செயற்பாட்டாளர் எனவும்,

சிலருக்கு இவர் குடிகாரர் மட்டுமல்ல ஒரு துரோகியும் கூட.
இலங்கையின் அரசியல் சூழலில் ஒரு மனிதருக்கு இப்படி பல அடையாளங்கள் கிடைப்பது ஒன்றும் ஆச்சரியமானதல்ல…
இப்படி பல அடையாளங்களைக் கொண்ட இந்த மனிதர்…
சிலரின் பார்வையில், வாழ்க்கையில் தோற்றுப்போனவர்…
வேறு சிலரின் பார்வையிலோ, வாழ்கையில் வென்றவர்….
அல்லது தன்னால் முடிந்ததை சமூகத்திற்காக தொடர்ந்தும் செய்தவர்…

இவரைப் பற்றி நான் ஏன் எழுதவேண்டும்?
தமிழ் காங்கிரஸ் பின் தமிழரசு கட்சி ஆகியவற்றின் ஆதிக்கம் நிறைந்ததும் தமிழ் உணர்வும் சைவ சமய வாழ்வுமுறையும் சாதிப்பற்றும் கொண்டதுமான உறவினர்களைக் கொண்ட குடும்ப சுழலில் பிறந்து வளர்ந்த இவருக்கு எவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சியின் மீது ஈர்ப்பு ஏற்பட்டது?
மும் மொழிகளின் ஆற்றல்களுடன் கல்வியிலும் சிறந்து விளங்கிய இவர் வருமானம் ஈட்டுகின்ற முழு நேர வேலையில் ஈடுபடாது கட்சியின் முழுநேர ஊழியராக மாறக் காரணமாக இருந்தது ஏது?
கட்சிக்குள்ளும் மற்றும் தலைமையுடனும் ஏற்பட்ட முரண்பாடுகள் என்ன?
கட்சியை விட்டு விலகியதற்கான அல்லது விலக்கப்பட்டதற்கான காரணம் என்ன?
கட்சி, சிறை மற்றும் குடும்ப வாழ்க்கைகளை எப்படி எதிர் கொண்டார்?
தமிழ் தேசிய விடுதலையில் ஆரம்பத்தில் பங்குபற்றாமல் இருந்ததற்கு காரணம் என்ன?
இறுதிக் காலங்களில் பங்குபற்றியமைக்கான காரணம் என்ன?
ஒருவரின் வாழ்க்கையின் தோல்வி எது? வெற்றி எது?

இவ்வாறு பல கேள்விகள் உள்ளன. இந்தக் கேள்விகளுக்கு எல்லாம் கிடைக்கின்ற விடைகள் பல மனிதர்களின் அனுபவங்கள் மற்றும் பார்வைகளாகும்.

ஆனால் இந்த அனுபவங்கள் முக்கியமானவை.
அப்பாவின் அரசியல் ஈடுபாட்டினால் அம்மா மற்றும் அப்பா இருவரும் பெற்ற அனுபவங்கள் பல.அப்பாவிற்கு இந்த அனுபவங்கள் 50களிலையே ஆரம்பிக்கின்றது.
அம்மாவிற்கு ஒரு பெண்ணாக சிறு வயதிலையே பல அனுபவங்கள் கிடைத்தபோதும் அரசியலுடனான அனுபவம் என்பது அப்பாவை திருமணம் செய்த 60கிளின் பிற்பகுதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றது.
இந்த அனுபவங்கள் நமக்கும் எதிர்கால மனிதர்களுக்கும் படிப்பினைகள்.
ஆகவே பதிவு செய்யப்படவேண்டியவை என உணர்கின்றேன்.

ஏனனில் நாம் வாழ்கின்ற சமூகமானது இன்றும் பல்வேறு விதமான இன, மத, பிரதேச, சாதிய, பால் அடக்குமுறைகளையும் ஒடுக்குமுறைகளையும் முகம் கொடுத்தே வருகின்றது.
இந்த அடக்குமுறைகளை தொடர்ந்தும் பொறுக்க முடியாத கணங்கள் மீண்டும் மீண்டும் மனித வாழ்வில் வந்து கொண்டே இருக்கின்றன. இவ்வாறான கணங்களில் இந்த அடக்குமுறைகளுக்கு எதிரான போராட்டங்களானது பல வடிவங்களில் முன்னெடுக்கப்படுகின்றது.
சில சமயங்களில் இவை வெற்றிகளையும் பல சமயங்களில் தோல்விகளையும் தருகின்றது.
இந்த வெற்றிகளும் தோல்விகளும் நாம் கற்பனையோ கனவோ காண முடியாதளவு துன்பங்களையும் துயரங்களையும் மனிதர்களுக்கு ஏற்படுத்திச் செல்கின்றது.
தமிழர்களைப் பொறுத்தவரை அண்மையில் நடைபெற்ற முள்ளிவாய்க்கால் சம்பவம் என்பது பெரும் மனித அவலம். அழிவு. ஒரு இனப் படுகொலை.
ஆனால் உலகத்தின் பார்வையிலோ இது கடந்த காலங்களில் பல நாடுகளில் நடைபெற்றது போன்ற அல்லது இப்பொழுதும் பல இடங்களில் நடைபெறுகின்றது போன்ற பல சம்பவங்களில் ஒன்று.
முள்ளிவாய்க்காளை விடவும் பெரும் மனித அவலங்களையும் அழிவுகளையும் மனித வரலாறு கடந்து வந்திருக்கின்றது.
ஆனால் மனிதர்களின் தூரதிர்ஸ்டம் இதிலிருந்து நாம் ஏதையும் கற்றுக்கொள்வதில்லை.
விரைவில் அந்த அனுபவங்களையே மறந்தும் போய்விடுகின்றோம்.
அதனால்தான் என்னவோ…அடக்குமுறைகள் தொடர்ந்த வண்ணம் இருந்தபோதும் அதற்கு எதிரான போராட்டங்கள் பல நடைபெற்றபோதும் மீண்டும் மீண்டும் அதே அழிவுகளை எதிர்கொண்டு ஆரம்பித்த புள்ளிகளிலையே வந்து நிற்கின்றோம்.
இதனால் மனிதர்களுக்கான விடுதலை என்பதும் சுந்திரமான வாழ்வு என்பதும் தொடர்ந்தும் கனவாகவே இன்றும் இருக்கின்றது என்பது தூரதிர்ஸ்டமானது. அவலமானது. அவநம்பிக்கையானது..

இக் கனவை நனவாக்கவே முடியாத என்ற ஏக்கத்தின் விளைவே இத் தொகுப்பு.
இதைத் தொகுப்பு எனக் கூறக் காரணம் உண்டு.
எனது சொந்த அனுபவங்களுக்கு ஊடாக எனது பார்வையை முன்வைக்கும் அதேவேளை,
நான் ஒரு மூன்றாம் நபராகவும் இருந்தே இதை எழுதப் போகின்றேன்.
மேலும் கரவை. ஏ.சி. கந்தசாமியின் கட்சித் தோழர்கள், நண்பர்கள், உறவுகள் மற்றும் தமிழ் இயக்க நண்பர்களின் பங்களிப்புடனும் இதை முழுமையாக நிறைவு செய்வதே எனது நோக்கம்.
ஆகவே இதைத் தொகுப்பு எனக் கூறுவதே பொருத்தமானது.

தோழர்களின் பார்வையில்

இது தொடர்பான ஒரு முயற்சியை 2006ம் ஆண்டில் செய்தேன். அப்பொழுது கனடாவில் வசித்த காலம் சென்ற கம்யூனிஸ்ட் சிவம் அல்லது நெல்லியடி சிவம் மற்றும் நீண்ட கால சமூக செயற்பாட்டாளரும் தேடக உறுப்பினருமான சண்முகலிங்கம் ஆகியோர்களிடம் எனது முயற்சியைக் கூறிய பொழுது மிகவும் மகிழ்ந்தனர். தமது முழுமையான ஆதரவை தருவதாகக் கூறி பயனுள்ள பல தொடர்புகளைத் தந்தனர். ஆனால் அன்று இந்த முயற்சியை என்னால் தொடர முடியாது போய்விட்டது. இன்று அவர்களது ஆதரவை பங்களிப்பை பெற முடியாது இருக்கின்றேன். எனது தொடர்ச்சியான செயற்பாடின்மையால் தொடர்ந்தும் பலரை இழந்துவிட்டேன். இருப்பினும் அவர்களின் ஆர்வத்தையும் அக்கறையையும் உள்வாங்கிக் கொண்டதனாலும் அதேபோல் “இன்று முக்கியமான நாள்” என்ற எனது நினைவுப் பதிவை வாசித்த நண்பர்கள் தந்த ஊக்கத்தினாலும் மீண்டும் எழுத/தொகுக்க முயற்சிக்கின்றேன்.

இதற்கு உங்களின் ஆதரவும் பங்களிப்பும் தேவைப்படுகின்றன.
கரவை. ஏ.சி. கந்தசாமியுடன் செயற்பட்ட கட்சித் தோழர்கள், குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சி, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அட்டனில் செயற்பட்ட புதிய செங்கொடி சங்க தோழர்கள் மற்றும் தமிழ் சிங்கள நண்பர்கள், உறவுகள் மற்றும் தமிழ் இயக்க நண்பர்கள் (ஈ.பி.ஆர். எல்.எவ், புலிகள், புளொட், ஈபிடிபி) மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் பணியாற்றியவர்களும் இந்திய தமிழக நண்பர்களும் என அக்கறை உள்ளவர்கள் அனைவரும் இவருடனான உங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்ள அழைக்கப்படுகின்றீர்கள்.
இந்தப் பகிர்தல் என்பது விமர்சனப் பார்வையாகக் கூட இருக்கலாம்.
அவ்வாறு இருக்க வேண்டும் என்றே விரும்புகின்றேன்.
ஏனனில் அதுவே ஆரோக்கியமான ஒரு பார்வையாக இருக்கும்.

இவரது கடந்த கால தோழர்கள் நண்பர்கள் இன்று முதுமையடைந்தவர்களாக மட்டுமல்ல இணைய வசதியும் அற்றவர்களாக அல்லது அதனைப் பயன்படுத்த தெரியாதவர்களாகவும் இருக்கலாம். ஆகவே ஆர்வமுள்ளவர்கள் அவர்களுடன் இந்தத் தகவல்களை பகிர்ந்து அவர்களது தொடர்புகளை மற்றும் பங்களிப்புகளையும் கருத்துக்களையும் பெற்றுத் தருவீர்களாயின் நன்றி உடையவனாக இருப்பேன்.

உங்களது பங்களிப்புகளை தங்களது பெயர் விபரங்களுடன் பின்வரும் மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள். அதேவேளை தங்களது படைப்பு தங்களது பெயரில் வெளியீடப் படவேண்டுமா அல்லது வேண்டாமா அல்லது புனைப் பெயருடன் பதிவு செய்யப் போகின்றீர்களா என்பதையும் தயவு செய்து குறிப்பிட்டு எழுதுங்கள்.

இறுதியாக, ஏற்கனவே ஒவ்வொரு ஆண்டுகளையும் குறிப்பிட்டு வெற்றுத் தளங்களை உருவாக்கி உள்ளேன். உங்களது பங்களிப்புகளுடனும் எனது தேடலினாலும் பெறும் தகவல்களின் அடிப்படையிலும் இந்த வெற்றிடங்கள் நிரப்பப்பட்டு இறுதியாக நூல் வடிவம் பெறும்.

வெற்றுத் தளங்கள் ஒவ்வொன்றும் “இன்று” என்றே ஆரம்பிக்கின்றன. ஏனனில் ஒவ்வொரு மனிதர்களின் வாழ்க்கையிலும் “இன்று முக்கியமான நாள்” ஆகும். கடந்த கால செயற்பாட்டுகளின் விளைவுகளுக்கு எதிர்வினையாற்றுவதும் எதிர்கால விளைவுகளை உருவாக்குவதும் நாம் “இன்று” செய்கின்ற நமது செயற்பாடுகளே. ஆகவே இவர்களது வாழ்வில் அன்றைய ஒவ்வொரு நாளும் “இன்று முக்கியமான நாள்” தான் என்பது ஐயமில்லாதது. இதுபோல நம் ஒவ்வொருவருக்கும் “இன்று முக்கியமான நாள்” என்றால் மிகையல்ல….

தாயும் தந்தையும்: தனையனின் தேடலும் பார்வைகளும்.

நன்றி
நட்புடன்
மீராபாரதி.
தொடர்புகளுக்கு…meerabharathy@yahoo.co.in