ஒரு வாய் கஞ்சி ! (பகுதி 2)

நானும் ஸ்ரீயும் பம்பலபிட்டியில் இருந்து ஓடி வரும்போது அங்காங்கே எரிந்துகொண்டிருக்கும் கடைகளும் வீடுகளும் என எல்லாம் ஒரு படம் போல வந்து போய்க்கொண்டு இருந்தது. அந்த முஸ்லீம் பெரியவர் அந்த வீட்டில் தலைமை அதிகாரி போல இருந்தார்.தனதும் தன் குடும்பத்தின் இறப்புக்கு பின்பே உங்களை யாரும் அணுக முடியும் என சொன்னார். தங்கள் மூதாதையர் ஆப்கானிஸ்தானில் இருந்து வியாபாரத்துக்காக வந்ததாகவும் சொன்னார். தமிழ், சிஙகளம் இரண்டு மொழிகளிலும் சரளமாக பேசினார். வெளியே சத்தமும் கூக்குரல்களும் அதிகரித்துக்கொண்டு இருந்தது. கனரக வாகனங்களின் சத்தங்களும் அதிகரிக்க தொடங்கியது. நாம் பயத்துடன் இருந்தோம். அந்த முஸ்லீம் பெரியவர் ஒரு ரேடியோ ஒன்றினை கொண்டுவந்து தந்து அமைதியாக வைத்து கேட்கும் படி கேட்டுக்கொண்டார் .

பெரும்பாலனவர்கள் அதனை தொடாதிருந்தனர். 6 மணிக்கு என அறிவிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு 4 மணிக்கு மாற்றப்படுவதாக இலங்கை ஒளிபரப்புக்கூட்டுத்தாபனம் அறிவித்தது. நான் ரேடியோவுடன் இருந்தேன். இந்த வீடும் எவ்வளவு பாதுகாப்பானது என்பதே பெரும் கேள்வியாக இருந்தது. நான் ரேடியோவை காதருகில் வைத்து கேட்பதில் கவனம் செலுத்த தொடங்கினேன்.
நான் பல்கலைக்கழக்தில் ஹாஸ்டலில் தான் தங்கி இருந்தேன் அநேகமான தமிழ் மாணவர்களும் ஹாஸ்டலிலும் அயலில் உள்ள வீடுகளிலும் அறை எடுத்து தங்கி இருந்தனர், அப்போ பெண் மாணவர்களுக்கு விடுதி கிடையாது அவர்கள் பெருபாலும் அயலிலும் பம்பலப்பிட்டி வெள்ளவத்தை தெஹிவளை போன்ற இடங்களில் இருந்தே வந்து போனார்கள். கொழும்பு, மொறட்டுவையிலும் பாதுகாப்பானது என நினைத்தது எவ்வளவு முட்டாள்தனம் என நினைக்க தோன்றியது. அண்ணரும் அவரின் மனைவியும் நினைவுக்கு வந்தனர். அவர்களுக்கு அப்போதான் திருமணமாகி இருந்தது . யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் இருந்து மேற் படிப்புக்கு கனடாவுக்கு போவதற்கு அனுமதிகிடைத்து அந்த பயண ஒழுங்குகளுக்காக அண்ணர் தனது மனைவியை அனுப்புவதற்கு என கொழும்புக்கு வந்திருந்தார் . அவர்களுக்கு என்ன ஆகியிருக்கும் என்பது இப்பொது புதிய தலைவலியாக இருந்தது எனக்கு. அவர்கள் இருவரும் கொழும்பு வரும் போது மெய்கண்டான் காலண்டர் உரிமையாளரின் மகளின் வீட்டில் தங்குவது வழக்கம். அந்த வீடு கொட்டஹேனவில் இருப்பது மட்டுமே எனக்கு தெரியும்.

முதலில் நான் இருக்கும் இந்த வீடு எவ்வளவு பாதுகாப்பானது எது வரை தாக்குபிடிக்கப்போகின்றது என்பதே பெரிய கேள்வியாக இருந்தது. அப்போ ஒரு அதிசயம் நிகழ்ந்த்து வீதியில் ஒலிபெருக்கி மூலம் சிங்களத்தில் எதோ அறிவித்துக்கொண்டிருந்தார்கள் எல்லோரும் காதை கூர்மையைக்கொண்டனர் அந்த அறிவிப்பில் “பெந்தோட்ட” என்ற ஒரு சொல் என் காதிலும் விழுந்தது. அறிவிப்பின் ஒலி மிக அண்மையாக கேட்க தொடங்க சிஙகளம் நன்கு தெரிந்த ஒருவர் பெந்தோட்ட ஸ்டோரில் வேலை செய்தவர்கள் அனைவரும் எங்கிருந்தாலும் வெளியில் வரவும் என அறிவிப்பதாக கூறினார் அப்போ தான் ஜெயானந்தனும் அந்த வீட்டில் இருப்பதை கண்டேன். வீட்டு முதியவர் வந்து யாராவது இருக்கிறீர்களா என கேட்டார். யாரும் துணிந்து வெளியில் வர தயங்குவது தெரிந்தது. நான் ஜெயானந்தனை சைகையில் கேட்டேன். இங்கிருந்து போவது நல்லதாக பட்டது எனக்கு. ஜெயனந்தன் ஒருவாறு தயங்கி தயங்கி எழுந்தான். நானும் அவன் கூட எழுந்தேன் என்னும் மூவர் அந்த கூடத்தில் இருந்து எழுந்தனர். நாம் மெதுவாக கைகளை தூக்கியவாறு வெளியே வந்தோம். எங்கள் முன் ஒரு ஆமி டிரக் நின்றது. அதிலிருந்தே அந்த அறிவிப்பை செய்தனர்.அப்போ ஒரு ஆமிக்காரன் ஜெயானந்தனின் பெயரை கூறினான். நாங்கள் அனைவரும் ஆமி டிரக்கில் ஏற்றப்படடோம். டிரக் பெந்தோட்ட ஸ்டோர் இருந்த திசையை நோக்கி நகர தொடங்கியது. எங்கும் புகைமண்டலமாக காட்சியளித்தது
கொழும்பு மாநகரம். வீதியெங்கும் கடைகள் எரிந்துகொண்டிருந்தன. ஸ்ரீ தங்கியிருந்த கடையும் எரிந்துகொண்டிருந்தது . ஆமி டிரக் பெந்தோட்ட ஸ்டோரின் முன் நிறுத்தப்பட்டது . பெந்தோட்ட ஸ்டோர் கதவு மட்டும் எரிந்த நிலையில் இருந்தது . நாம் டிரக்கில் இருந்து இறக்கப்பட்டோம். ஜெயானந்தன் பாதுகாப்பு பெட்டக்த்தில் இருந்து பணத்தை எடுப்பதட்கு முயன்றான் தூரத்தில் துப்பாக்கி சூட்டு சத்தங்களும் கேட்டபடி இருந்தன. இரண்டு மூடை அரிசி மற்றும் ஒரு மூடை பருப்பு இவற்றை ஏற்றிக்கொண்டு அந்த டிரக் எங்களுடன் கொழும்பின் வீதிகளூடு கொட்டஹேனவை நோக்கி பயணித்தது . டிரக் இல் இருந்த ஆமிக்காரர்கள் சிநேகமான முக பாவத்தில் இருந்தனர். வீதி எங்கும் மனித நடமாற்றமற்று புகைமண்டலமாக இருந்தது நாம் பொன்னம்பலவனேஸ்வர் கோவிலில் கொண்டுவந்த அரிசியையும் பருப்பையும் இறக்கினோம் அந்த கூட்டத்தில் நான் என் அண்ணனையும் அவரின் மனைவியையும் தேடினேன் அங்கு அவர்களை காணவில்லை. நான் திரும்பவும் ஆமி டிரக்கில் ஏறி ஜெயானந்தனின் அக்காவின் வீட்டுக்கு போய் சேர்ந்தோம் அப்போ இரவு 7 மணியாகி இருந்தது. வீட்டின் முன் ஒரு போலீஸ் ஜீப்பும் நின்றிந்தது ஜெயானந்தனின் அக்காவின் கணவர் அரச அதிகாரவர்கத்தில் செல்வாக்கான மனிதர் என்பதை உணரக்கூடியதாக இருந்தது அவர் பிரேமதாசாவின் தனிப்பட்ட நட்பு வட்டத்தில் உள்ளவர் என்பதை பின்பு அறிந்துகொண்டேன்.

வீடு எந்த பதட்டமும் இன்றி இருந்தது சிங்களம் பேசும் மனிதர்களும் அங்கு நின்றார்கள் வீடு விவேகானந்த மேடும் ஜெம்பட்டா வீதியும் சந்திக்கும் இடத்தில் இருந்தது அந்த இடம் தமிழர்கள் மிகவும் செறிந்து வாழும் இடமாக இருந்தது அங்கு பெரிய பாதிப்புக்கள் எதுவும் நிகழ்ந்தது போல தெரியவில்லை. நான் மாடியில் போய் நின்றுகொண்டேன் கொஞ்சம் இருட்ட தொடங்க பதட்டம் அதிகரிப்பதாக இருந்தது. சிங்களம் பேசுபவர்களில் தமிழர்களும் இருந்தனர் அவர்கள் சிங்களத்தை தங்கள் தாய் மொழி போலவே பேசினார்கள். அவர்கள் வெளியில் போவதும் வருவதுமாக இருந்தனர். அவர்களின் முகத்திலும் பதட்டமிருந்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது. அன்று இரவு ஜெம்பட்டா வீதி காடையர்களால் தாக்கப்படும் என அவர்கள் எண்ணியதாலோ என்னவோ மாடியில் பெட்ரோல் நிரப்பபட போத்தல்கள் வாள் பொல்லுகள் என்பன தடற்காப்புக்கு என அடுக்கிவைக்கப்பட்டது. காவலுக்கு சிங்கள பேசுபவர்கள் பலர் நின்றிருந்தனர்.
நாங்கள் பெந்தோட்ட ஸ்டோரில் மூட்டைகளை படி போல அடுக்கி கொண்டிருக்கும் போது ஸ்ரீ தனது கடையில் இருந்து போன் பண்ணி தாங்கள் விமானம் மூலம் யாழ்ப்பாணம் போக போவதாகவும் என்னை வாவெனவும் கேட்டான். நான் அண்ணரின் நினைவு வர இல்லை நீ போடா என சொல்லி இருந்தேன். வெளியே பதட்டம் நிலவும் போது எவ்வாறு விமான நிலையத்துக்கு போக முடியும் என்பது அப்போ எனக்கு ஒரு பெரிய ஆச்சரியமான விடயமாக இருந்தது இப்போ எதுவும் சாத்தியமென்பதை நடக்கும் நிகழ்வுகள் சாட்சிப்படுத்திக்கொண்டிருந்தன. யூலை 25ம் திகதி இரவு நித்திரை இன்றி கரைந்தது.

(Nanda Kandasamy)

25 July 2018
10 PM