கம்பியா:து(ர்)ப்பாக்கி(ய) ஜனநாயகம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)

ஜனநாயகம் பல வழிகளில் நிறுவப்படுகிறது. வாக்குப் பெட்டி முதல் துப்பாக்கி முனை வரை பல்வேறு அந்தங்களில் அது நிலைநாட்டப்பட்டுள்ளது. அவ்வாறு நிலைநாட்டப்பட்ட ஜனநாயகத்தின் தன்மையானது, அது அடையப்பட்ட வழிமுறையில் தங்கியுள்ளது. முறை எவ்வாறானதாயினும் முடிவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறுகின்றன. ஜனநாயகம் என்றால் என்ன என்பதற்கான பொருட்கோடல் பரந்த தளத்தில் நடைபெறுவதால் எல்லாவற்றையும் ஜனநாயகம் என வசதியாக அழைத்துக் கொள்ளவியலுமாகிறது.

ஆபிரிக்காவில் மிகவும் சிறிய நாடான கம்பியாவில் அண்மைக்காலமாக நடந்தேறிய நிகழ்வுகள் ஜனநாயகத்தை நிலைநாட்டுவது தொடர்பிலான புதிய கேள்விகளுக்கு இட்டுச் சென்றுள்ளன.

கடந்த டிசெம்பர் மாதம், இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த ஜனாதிபதி யஹ்யா ஜம்மா பதவி விலக மறுத்ததையடுத்து, அண்டை நாடுகள் இராணுவத் தலையீட்டை மேற்கொண்டு, ஜனாதிபதி ஜம்மாவை பதவி விலக்கியுள்ளன.

தேர்தலில் வெற்றி பெற்ற அடமா பராவ் ஜனாதிபதியாகியுள்ளார். ஆனால், இதைச் சுற்றி நிகழ்ந்த நிகழ்வுகள் இன்னொரு சிக்கலான கதையை எமக்குச் சொல்கின்றன.

இப்போது, கம்பியா பற்றி எமக்குச் சொல்லப்படுவனவெல்லாம் சர்வதேச தலையீட்டுடன் கம்பியாவின் ஜனநாயகம் திரும்பியுள்ளது என்பதையாகும். இன்றைய நிலையில், ஏராளமான அரை உண்மைகளிடையே, உண்மைகளைக் கண்டறிவது, மேலும் மேலும் கடினமாகி வருகிறது.

ஓர் அரை உண்மையை நம்ப விரும்புகிறவர்கள். அதில் தமக்கு வசதியான பகுதிகளைத் தேர்ந்து பரப்புகிறார்கள். இதன் மூலம் பலரது சாட்சியமாக ஒரே பொய் சொல்லப்படுகிறது.

அதை நம்ப விரும்புகிறவர்கள் அதற்கப்பால் எதையுமே தேடப் போவதில்லை. மாறாக வருகின்ற எந்தத் தகவலையும் புறக்கணித்து விடுகிறார்கள். அவர்கட்கு வசதியாகவே அவர்கள் தேடி வாசிக்கின்ற நாளேடுகளும் விரும்பிக் கேட்கிற வானொலி நிலையங்களும் பார்க்கிற தொலைக்காட்சி நிலையங்களும் தேடுகிற இணையத் தளங்களும் அமைகின்றன.

மூன்று பக்கங்களும் செனகல் நாட்டால் சூழப்பட்டு, இன்னொரு புறத்தே அத்திலாந்திக் கடலைக் கொண்ட கம்பியாவானது கம்பிய நதியின் இருமருங்கிலும் அமைந்த 1.8 மில்லியன் சனத்தொகையை உடைய சிறிய நாடாகும்.

நீண்டகாலமாகப் போர்த்துகேயக் காலனியாக இருந்து, 1765 இல் பிரித்தானியக் காலனியாகியது. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டங்களின் விளைவால் 1965 இல் சுதந்திரமடைந்தது.

கம்பியாவின் முதல் ஜனாதிபதியாக டவ்டா ஜவாரா, விவசாய மையப் பொருளாதாரத்தை கம்பியாவில் கட்டியெழுப்பியவராவார்.

கம்பியாவின் விடுதலைப்போராட்டத்தின் தளகர்த்தாவாகிய ஜவாரா, 1994 ஆம் ஆண்டு இராணுவ வீரராக இருந்த 29 வயதுடைய யஹ்யா ஜம்மா தலைமையில் முன்னெடுக்கப்பட்ட சதிப்புரட்சியின் விளைவால் நாட்டை விட்டு ஓடினார்.

இதைத் தொடர்ந்து யஹ்யா ஜம்மா ஜனாதிபதியானார். கடந்த 22 ஆண்டுகளாக கம்பியாவின் ஜனாதிபதியாக ஜம்மா இருந்தார். இவரது ஆட்சிக்காலம் விமர்சனத்துக்கும் கண்டனத்துக்கும் ஆளாகியதோடு பூகோள அரசியலில் கம்பியாவின் இடம் முக்கியமடையவும் காரணமாகியது.

யஹ்யா ஜம்மா 2015 ஆம் ஆண்டு கம்பியாவை ஓர் இஸ்லாமிய நாடாகப் பிரகடனம் செய்தார். இதைத் தனது நாட்டின் பெரும்பான்மையான முஸ்லிம்களின் மதத்தின் அடிப்படையிலும், தமது, கடந்த காலனித்துவ காலத்தை ஒழிக்கும் நோக்கிலும் செய்ததாகக் கூறினார்.

சிறிய நாடாக இருந்த போதும் மேற்கு ஆபிரிக்க நாடுகளிடையே மிகுந்த செல்வாக்குடையதாக கம்பியா இருந்து வருகிறது. குறிப்பாக ஆபிரிக்கப் பிராந்தியத்தில் நடைபெறும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்கை கம்பியா ஆற்றி வந்திருக்கிறது.

பிராந்திய அலுவல்களில் முக்கிய அரங்காடியாகவும் போர்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் பயனுள்ள ஒரு சக்தியாகவும் கம்பியா விளங்கி வந்திருக்கிறது.

லைபீரியா மற்றும் சியோரோ லியோன் ஆகிய நாடுகளில் உள்நாட்டு யுத்தங்களை முடிவுக்குக் கொண்டுவருவதற்கும் அண்மையில் கினியா பீசோவில் நிகழ்ந்த உள்நாட்டு நெருக்கடியைத் தீர்ப்பதற்கும் கம்பியா ஆற்றிய பங்கு குறிப்பிடத்தக்கது.
2013இல் ஜனாதிபதி ஜம்மா, பொதுநலவாய அமைப்பை ‘நவீன காலனித்துவம்’ என்று வர்ணித்து, அதிலிருந்து கம்பியா விலகுவதாக அறிவித்தார். கடந்தாண்டு ஒக்டோபர் மாதம் தென்னாபிரிக்கா, புருண்டி ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக கம்பியாவும் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகியது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ஆபிரிக்க அரசியல் தலைவர்களைத் திட்டமிட்டுக் குறிவைக்கிறது என்று உறுப்புரிமையை விலக்கிக் கொண்ட நாடுகள் குற்றம்சாட்டின.

இவை மேற்குலகுக்கும் குறிப்பாக அமெரிக்காவுக்குப் பிடித்தமான செயல்களன்று. இந்தப் பின்புலத்திலேயே அண்மையில் கம்பியாவில் நிகழ்ந்தேறிய விடயங்களை விளங்கிக்கொள்ள இயலும்.

கடந்த டிசெம்பர் மாதம், கம்பியாவில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. ஜனாதிபதி யஹ்யா ஜம்மாவும் அவருக்கு எதிராக ஒன்றிணைந்த கூட்டணி வேட்பாளரான அடமா பராவ்வும் போட்டியிட்டனர்.

இதில் அடம் பராவ் வெற்றிபெற்றார். இவரது வெற்றி இலகுவில் பெறப்பட்ட வெற்றியல்ல. மாறாக, மிகுந்த நெருக்கடியின் கீழ் பல்வேறு தன்னார்வ நிறுவனங்களின் உதவியுடன் பெறப்பட்டதாகும்.

அடமா பராவ், இங்கிலாந்தில் கல்விகற்ற வர்த்தகர். 2006 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் இருந்து நாடுதிரும்பிய அடமா, சொந்தத் தொழிலைத் தொடங்கினார்.

அவர் இங்கிலாந்தில் இருந்தபோது, எவ்வகையான கற்கைகளை மேற்கொண்டார் என்பது பற்றி இதுவரை எதுவும் சொல்லப்படவில்லை. எதிர்க்கட்சிகளில் ஏராளமான அனுபவமுள்ள அரசியல்வாதிகள் இருந்தபோதும், பொது எதிர்க்கட்சி வேட்பாளராக அடமா முன்தள்ளப்பட்டார்.

இதன் பின்னாலான அரசியல் நகர்வுகள் ஊகிக்கக் கடினமானவையல்ல. அடமாவை முன்தள்ளுவதில் கம்பியத் தலைநகர் பஞ்சுலில் அமைந்துள்ள அமெரிக்கத் தூதரகத்தினதும் பிரித்தானிய இரகசிய சேவைகளினதும் பங்களிப்பு சான்றுகளுடன் நிறுவப்பட்டுள்ளது.

அடமாவின் தேர்தல் பிரசாரத்துக்கான நிதி மேற்குலக நாடுகளினால் நேரடியாகவும் சர்வதேச தன்னார்வத் தொண்டு நிறுவனங்களாலும் வழங்கப்பட்டது. இதன் பின்னணியிலேயே ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது.

தேர்தல் முடிவுகளை முதலில் ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி யஹ்யா, தேர்தல்களில் முறைகேடுகள் நடைபெற்றது எனச் சொல்லித் தேர்தல் முடிவுகளை ஏற்றுக் கொள்ள மறுத்துவிட்டார்.

இதையடுத்து, கம்பிய நாடாளுமன்றம் தேர்தல் நடைமுறைகளில் முறைகேடுகள் நடந்துள்ளதை ஏற்றுக் கொண்டு ஜனாதிபதி யஹ்யா, இன்னும் மூன்று மாதங்கள் ஜனாதிபதியாகத் தொடர்வதற்கு அனுமதியளித்தது. இதற்கிடையில் பிராந்தியக் கூட்டமைப்பான மேற்கு ஆபிரிக்க நாடுகளின் பொருளாதாரச் சமூகம் (எக்கோவாஸ்) தேர்தல் முடிவுகளை ஏற்று ஜனாதிபதி யஹ்யா உடனடியாகப் பதவி விலக வேண்டும் எனக் கோரியது.

அதன் பின்னர் எக்கோவாஸ் படைகளை அனுப்பி, ஜனாதிபதி யஹ்யாயைப் பதவி விலக்கும் என அச்சுறுத்தியது. சில காலத்தின் பின், எக்கோவாஸ் படைகள் கம்பிய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்தன. அதன் மூலம் யஹ்யாவை கைது செய்யப்போவது போன்ற தோரணையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதற்கிடையில் அண்டை நாடான செனகலின் தலைநகரான டக்காரில் அமைந்துள்ள கம்பியத் தூதரகத்தில் அடமா பராவ், ஜனாதிபதியாகச் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். இச்சம்பவம் உலகளாவிய கவனம் பெற்றது.

நாட்டுக்குள் வராமலேயே நாடுகடந்து ஜனாதியாகப் பதவியேற்ற நிகழ்வானது பல ​ஐயங்களை எழுப்புகிறது. அதேவேளை, படைகளைக் கம்பியாவுக்குள் அனுப்பிய செனகல், நைஜீரியா, கானா ஆகிய நாடுகள் ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்கான ஆக்கிரமிப்பு என தங்களது முற்றுகையை நியாயப்படுத்தின.

யஹ்யா தனது முடிவை மாற்றியதன் காரணங்கள் பல. அதில் பிரதானமானது, பதவியிலிருந்து அகற்றப்பட்ட தலைவர்கள், சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்படுகிறார்கள்; லைபீரிய ஜனாதிபதி சார்ள்ஸ் டெய்லர், பிரான்ஸ் படையினரால் பதவி நீக்கப்பட்ட ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி லோரண்ட கபோ ஆகியோர் குற்றவியல் நீதிமன்றின் முன் நிறுத்தப்பட்டுள்ளனர். தனக்கு இக்கதி நேரலாம் என அவர் அஞ்சியதும் ஒரு காரணமாகும்.

பாரம்பரிய ரீதியாக ஒரு நாட்டின் அலுவல்களில் இன்னொரு நாடு தலையிடுவது என்பது அந்நாட்டின் இறைமைக்குச் சவால் விடுக்கும் செயலாகக் கருதப்பட்டது. ஆனால், காலப்போக்கில் குறுக்கீடுகள், மனிதாபிமான ரீதியான தலையீடுகள் என்பதன் அடிப்படையில் நிகழ்ந்தன.

ஆனால், அமெரிக்காவின் ஆப்கன் மற்றும் ஈராக் போர்கள் மனிதாபிமானத் தலையீடு என்பதன் மதிப்பிறக்கம் செய்து அரசியல்ரீதியான பட்டவர்த்தனமாகத் தெரிகின்ற சர்வதேச சட்ட விதிகளை மீறும் செயலாகப் பார்க்கப்பட்டது.

இதனால் ‘மனிதாபிமானத் தலையீடு’ கெட்டவார்த்தையாகிப் போனது. அது சர்வதேச சட்டரீதியாக நியாயப்படுத்த முடியாமையும் மனிதாபிமானத் தலையீட்டின் மீதான பாரிய விமர்சனங்களை உருவாக்கியது.

இதனால் குறுக்கீடுகளுக்கு புதிய கோட்பாட்டுருவாக்கம் தேவைப்பட்டது. இதன் அடுத்த கோட்பாட்டுருவாக்கத்துக்கு அடிக்கோடிடும் வகையில் கம்பியாவின் நிகழ்வுகள் உருவெடுத்துள்ளன.

கம்பியாவின் அரசியல் சூழல், சற்று நெருக்கடியாக இருந்த நிலையில் எக்கோவாஸ் அமைப்பு ஜனாதிபதி யஹ்யாவை நாட்டைவிட்டு தப்பியோடும்படி அச்சுறுத்தியது.

ஒரு பிராந்திய அமைப்பு இராணுவ பலத்தைப் பயன்படுத்தி இவ்வாறு உள்அலுவல்களில் தலையிடுவது ஜனநாயகத்தை நிலைநாட்டுவதன் பெயரால் நியாயப்படுத்தப்படுகிறது.

இறுதியாக ஜனாதிபதி யஹ்யா நாட்டை விட்டு அகன்றார். பதவியேற்றுள்ள அடமா தனது பிரதானமான தோழமையுள்ள நாடாக பிரித்தானியாவை நோக்குவதாகவும் பிரித்தானியாவும் அமெரிக்காவும் கம்பியாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என அறிவித்தார். இவ்வாறு துப்பாக்கி முனையில் ஜனநாயகம் கம்பியாவில் நிலைநிறுத்தப்பட்டது.

இவற்றின் பின்னால், இரகசியமாகப் பல கரங்கள் இயங்கின. அக்கரங்களில் பிரதானமானது அமெரிக்காவின் ஆபிரிக்கக் கட்டளைத் தலைமையகத்தினுடையது.

கடந்த இரண்டு ஆண்டுகளான அமெரிக்கா, மேற்கு ஆபிரிக்க நாடுகளைத் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயல்கிறது. அம்முயற்சியின் முதற்கட்ட ஒத்திகையாக கம்பியாவில் நடைபெற்றதை விளங்கிக் கொள்ளவியலும்.

இப்போது மாறி வருகின்ற உலக அரசியல் ஒழுங்கில், பல்வேறு வகைகளில் ஆபிரிக்கா முக்கியமான கொதிநிலையில் உள்ளதை முரசறைகின்றன.

அமெரிக்காவின் ஆபிரிக்கக் கட்டளைத் தலைமையகமானது கடந்த இரண்டு ஆண்டுகளாக செனகலை மையப்படுத்திய ‘ஒபரேசன் ஃபிளின்டோவ் (Operation Flintlock) நடைபெற்று வருகிறது.

இது மேற்கு ஆபிரிக்காவில் அமெரிக்காவின் அடியாளாக செனகலைப் பயன்படுத்துவதற்கான அடிப்படைகளைக் கொண்டிருந்தது. தனக்கு வாய்ப்பான அரசாங்கங்களை ஆபிரிக்காவில் உருவாக்கவியலும் என அமெரிக்கா திட்டமிட்டு தனது காய்களை நகர்த்துகிறது. அதற்கு ஜனநாயகத்தை நிலைநிறுத்தல் முக்கியமான பற்றுக் கோடாகின்றது.

பூகோள அரசியலின் நகர்வில், மேற்கு ஆபிரிக்கா கவனம் பெறுவதற்கான இன்னொரு காரணம் சீனா இந்நாடுகளுடன் கொண்டிருக்கின்ற வர்த்தக உறவுகளாகும். அமெரிக்காவும் ஐரோப்பிய ஒன்றியமும் இப்பிராந்தியத்தில் தமது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதற்கு ஆள் மாற்றம் முதல் ஆட்சி மாற்றம் வரை அனைத்தையும் செய்ய விளைகின்றன.

‘இஸ்லாமியப் பயங்கரவாதம்’ ஆபிரிக்க நாடுகளுடன் உறவையும் கட்டுப்பாட்டையும் பேணுவதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது. கும்ரியாவின் அத்திலாந்திக் கடலுடனான பகுதி பூகோளரீதியில் இராணுவத்தளமொன்றை நிறுவுதற்கு மூலோபாய ரீதியில் முக்கியமானது. முன்னாள் ஜனாதிபதி யஹ்யா இதற்கு சாதகமான சமிக்ஞைகளைத் தர மறுத்துவிட்டார்.

பயங்கரவாதத்துக்கு எதிரான போர் தொடக்கப்பட்டு, ஒன்றரைத் தசாப்த காலத்துக்குப் பின்பு, இன்று அது காலவதியாகிவிட்ட போதும், கோட்பாட்டுருவாக்கம் பெற்ற இஸ்லாமிய எதிர்ப்பு இன்னமும் பயனுள்ள கருவியாயுள்ளது.

பொய்களை நம்பகமானவையாக்குவதற்கு எடுக்கப்பட்ட முயற்சிகள் கூடிய கவனத்துடன் எடுக்கப்படுகின்றன. ஆனாலும், இப்போது பொய்களின் நோக்கம் அவற்றை எல்லோரும் எப்போதும் நம்ப வேண்டும் என்பதல்ல. பல குறுகிய கால பாவனையின் பின் எறிவதற்கானவையாகும். அதேபோலவே, கம்பியாவில் ஜனநாயகம் என்ற கருவி இப்போது பயன்படுகிறது. அது என்றென்றைக்கும் ஆனதல்ல.

ஜனநாயகம் மீண்டுமொருமுறை பூகோள அரசியலின் பயனுள்ள கருவியாக உருவெடுத்துள்ளது. ஜனநாயகம் என்பது பார்வைக்கு பயனுள்ள ஒன்றாகப் பொருள் கொள்ளப்படுகிறது.

இதனால் கம்பியாவில் எல்லாம் ஜனநாயகத்தின் பெயரால் அரங்கேறியுள்ளது. இது ஜனநாயகத்துக்கு வாய்ப்பானதல்ல; மறுபுறத்தில் கம்பியாவுக்கும் வாய்ப்பானதல்ல.

இவை ஜனநாயகத்தின் மீது மூன்றாமுலக மக்கள் வைக்கக் கூடிய நம்பிக்கையை கேள்விக்குட்படுத்தியுள்ளது. இதை ஜனநாயகத்தின் துர்ப்பாக்கிய நிலை என்பதா அல்லது கம்பியாவின் துர்ப்பாக்கிய நிலை என்பதா என்பதைக் காலம் முடிவு செய்யும்.