குர்திஷ் பொதுசன வாக்கெடுப்பு: தனிநாடு என்ற சூதாட்டம்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
ஒடுக்குமுறைக்காளாகிய சமூகங்கள் போராடுகின்றபோது, அதன் இறுதி இலக்காகத் தனிநாட்டைக் கொள்வது இயல்பு. இரண்டாம் உலகப்போரைத் தொடர்ந்த, கொலனியாதிக்க விடுதலைப் போராட்டங்கள், பலநாடுகள் விடுதலையடையவும் புதிய நாடுகள் தோற்றம் பெறவும் உதவின. கெடுபிடிப்போரின் முடிவு, நாடுகள் பிரிக்கப்பட்டு, புதிய நாடுகள் பலவற்றின் தோற்றத்துக்கும் வழிவகுத்தது. புதிய நாடு இவ்வாறுதான் தோற்றம் பெறவேண்டுமென்ற சூத்திரமெதுவும் இல்லை.

கடந்த சில தசாப்தங்களாகப் பல்வேறு காரணங்களினால் நாடுகளில் இருந்து, பிரிந்து சென்று, புதிய நாடுகள் தோற்றம் பெற்றிருக்கின்றன. அதேவேளை, சில நியாயமான விடுதலைப் போராட்டங்கள், கண்டுகொள்ளப்படாமலும் போயிருக்கின்றன. உருவாகிய புதிய நாடுகள், ஆதிக்க சக்திகளின் கைப்பொம்மைகளாகவும் உள்நாட்டு யுத்தத்தால் சீரழிவனவாயும் இருந்துள்ளன என்பதை, கடந்த மூன்று தசாப்தகால வரலாறு, எமக்குக் காட்டி நிற்கிறது. சுதந்திரம் என்பது, குத்தகைக்காரர்கள் பெற்றுத் தருவதல்ல.

ஈராக்கின் குர்திஷ்கள் வாழ்கிற பகுதியில், கடந்தவாரம் நிகழ்த்தப்பட்ட பொதுசன வாக்கெடுப்பும் அதன் முடிவுகளும், தனிநாட்டை நோக்கி நகர்வதும், ஈழத்தமிழ் அரசியல் ஆய்வாளர்களின் கவனத்தை எட்டியுள்ளது.

இது தமிழ் மக்களுக்கு நம்பிக்கை தருவதாக அமைவதாகப் பலர் பேசியும் எழுதியும் வருகிறார்கள். இப்பின்புலத்தில், குர்திஷ்களையும் அவர்தம் தனிநாட்டுக் கனவையும் அதன் சிக்கல் தன்மையையும் இக்கட்டுரை ஆராய விளைகிறது.

குர்திஷ்கள் எனப்படுபவர்கள், மத்திய கிழக்கில் வாழ்ந்து வருகின்ற இனக்குழுவினராவர். இவர்கள் துருக்கி, ஈரான், ஈராக், சிரியா ஆகிய நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர்.

இன்று உலகளாவிய ரீதியில், 28 மில்லியன் குர்திஷ்கள் வாழ்வதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில் கணிசமானவர்கள் குர்திஷ்களின் வாழ்விடங்களில் இன்றி, உலகின் பலநாடுகளில் புலம்பெயர்ந்து வாழ்ந்து வருகிறார்கள்.

மேற்கு ஆசியாவில், நான்காவது மிகப்பெரிய இனக்குழுவாக குர்திஷ்கள் இருக்கிறார்கள். இவர்கள் அரேபியர்கள், பெர்சியர்கள், துருக்கியர்களுக்கு அடுத்தபடியாக, சனத்தொகை கூடிய இனக்குழுவாகும்.

கணிசமான குர்திஷ்கள், சுன்னி முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்களாக இருந்தபோதும், அவர்கள் ஷாவிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். பெரும்பாலான சுன்னி அராபியர்கள், ஹனாவிப் பள்ளியைச் சேர்ந்தவர்கள். இதைவிட ஷியா முஸ்லிம் பிரிவைச் சேர்ந்தவர்கள், பல்வேறுபட்ட சிறுபிரிவு இஸ்லாத்தைச் சேர்ந்தவர்கள், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்தவர்கள், யூதமதத்தைச் சேர்ந்தவர்கள் எனப் பல்வேறுபட்ட மதங்களைப் பின்பற்றுபவர்களாக குர்திஷ்கள் இருந்து வருகிறார்கள்.

குர்திஷ்கள் பேசுகின்ற மொழி, குர்திஷ் மொழி எனப் பொதுவில் அழைக்கப்பட்டாலும், இவர்கள் பல்வேறுபட்ட மொழி வழக்குகளை உடைய மொழிகளைப் பேசுகிறார்கள். இதில் குறிப்பாக, வடக்கு குர்திஷ் என அறியப்படும் ‘குர்மன்சி’, மத்திய குர்திஷ் என அறியப்படும் ‘சொரானி’, தெற்கு குர்திஷ் என அறியப்படும் ‘பலேவானி’ என்பன முக்கியமானவை.

குர்திஷ்கள் தங்களது நாடாகக் கொண்டாடும் குர்திஷ்தான் தென்கிழக்குத் துருக்கி (வடக்கு குர்திஷ்தான்), வடக்கு ஈராக் (தெற்கு குர்திஷ்தான்), வடமேற்கு ஈரான் (கிழக்கு குர்திஷ்தான்) மற்றும் வடக்கு சிரியா (ரொஜாவா அல்லது மேற்கு குர்திஷ்தான்) ஆகிய பகுதிகளை உள்ளடக்கியது.

இந்நான்கு நாடுகளில் வாழ்கின்ற குர்திஷ்களுக்கு இடையே, வேறுபாடுகளும் உள்ளன. ஈராக்கியக் குர்திஷ்தான் பகுதியானது, 1970 இல் குர்திஷ்களுக்கும் ஈராக்கிய அரசாங்கத்துக்கும் இடையே, எட்டப்பட்ட உடன்படிக்கையின்படி, சுயாட்சிப் பிரதேசமாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

குர்திஷ் தேசியவாதத்தின் தொடக்கம், ஒட்டோமன் பேரரசிலேயே தொடங்கியது. ஒட்டோமன் பேரரசில், முக்கியமான இனக்குழுவாகக் குர்திஷ்கள் திகழ்ந்தார்கள்.

முதலாம் உலக யுத்தத்தில், இப்பேரரசின் தோல்வியானது, பேரரசு கலைக்கப்பட்டு, பல்வேறு நாடுகளாகப் பிரிக்கப்பட்டது; வெற்றிபெற்றவர்களால் பகிரப்பட்டது. இதன் விளைவால் குர்திஷ்கள் வாழ்ந்து வந்த பகுதிகள் ஈரான், ஈராக், சிரியா, துருக்கி என்ற நான்கு நாடுகளுக்குள் பிரிபட்டது.

பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் இருந்த ஈராக்கில், குர்திஷ்களின் சுயாட்சிக் கோரிக்கையை, பிரித்தானியர்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

1921இல் ஏற்படுத்தப்பட்ட, ஈராக்கிய அரசியல்யாப்பு, ஈராக் அராபியர்கள், குர்திஷ்கள் ஆகிய இரண்டு இனக்குழுக்களுக்கு சமஅந்தஸ்தை உறுதி செய்தது. துருக்கி, குர்திஷ்களை அங்கிகரிக்க மறுத்தது.

இதன் விளைவால், 1925இல் துருக்கிக்கு எதிராக, 1925 இல் ஷேக் சயீட் தலைமையில், குர்திஷ்கள் புரட்சி செய்தார்கள். இப்புரட்சி, இரண்டு குர்திஷ் உபஇனக்குழுக்களான ஷாசபா (Zaza) மற்றும் குர்மன்ச் (Kurmanj) ஆகியவற்றால் தலைமை தாங்கப்பட்டது. துருக்கிய அரசால், இப்புரட்சி தோற்கடிக்கப்பட்டது.

இது, இரண்டு பிரதான விளைவுகளைக் கொண்டிருந்தது. முதலாவது, துருக்கிய அரசு, குர்திஷ்களின் குடியுரிமையைப் பறித்தது. குர்திஷ்கள் மோசமான அடக்குமுறைக்கு ஆளானார்கள்.

இரண்டாவது, பல்லாயிரக்கணக்கான குர்திஷ்கள், துருக்கியில் இருந்து வெளியேறி, பிரான்சின் கட்டுப்பாட்டில் இருந்த, சிரியாவில் தஞ்சமடைந்தனர்.

பிரெஞ்சு ஆட்சியாளர்கள், தங்கள் பிரித்தாளும் தந்திரத்தின் பகுதியாக, குர்திஷ்களுக்கு ஏராளமான உரிமைகளை வழங்கி, குர்திஷ்களுக்கும் ஏனையோருக்கும் இடையில் முரண்பாட்டை உருவாக்கினார்கள்.

பிரெஞ்சுக்காரர்கள் வெளியேறிய பின்னர், குர்திஷ்களுக்கும் சிரியர்களுக்கும் இடையில் மோதல்கள் உருவாகின. குர்திஷ்கள் அரசாங்கத்தில் பிரதான அங்கம் வகிக்க விரும்பினர். இதன் விளைவால், 1962இல் 120,000 குர்திஷ்களின் (சிரியாவில் வாழ்ந்த குர்திஷ்களில் 40சதவீதம்) குடியுரிமை பறிக்கப்பட்டது.

இவர்கள், துருக்கியிலிருந்தும் ஈராக்கிலிருந்தும் வந்து, சட்டவிரோதமாகக் குடியேறியவர்கள் என்று காரணம் காட்டப்பட்டது. இருந்தபோதும், சிரியாவில் நிகழ்ந்த ஆட்சி மாற்றங்கள், 1970களின் நடுப்பகுதியில் இருந்து, குர்திஷ்களை நியாயமாக நடாத்தத் தொடங்கியது.

மொழி, பண்பாட்டு அடிப்படையில், பாரசீகத்துக்கும் குர்திஷ்க்கும் இடையிலான நெருக்கமான தொடர்பு, ஈரானில் குர்திஷ்கள் சமத்துவத்துடனும் குடியுரிமையுடனும் வாழக்கூடிய நிலையை உருவாக்கியது.

ஆனால், ஈரானியப் புரட்சியைத் தொடர்ந்து, 1979இல் ஈரானிய அரசுக்கெதிராக, ஈரானிய குர்திஷ்கள் கிளர்ச்சி செய்தனர். இக்கிளர்ச்சி தோற்கடிக்கப்பட்டதோடு, குர்திஷ்களுக்கு எதிரான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. ஆயினும், 1990களின் இறுதிப்பகுதிகளில் குர்திஷ்களின் உரிமைகள் அங்கிகரிக்கப்பட்டன.

1970இல் ஈராக்கிய, குர்திஷ்தானுக்கு வழங்கப்பட்ட சுயாட்சியை, குர்திஷ்கள் கேள்விக்குட்படுத்தினர். தங்களுக்கு வழங்கப்பட்ட கட்டுப்பாட்டுடன் கூடிய சுயாட்சியை ஏற்க மறுப்பதாகவும், அவர்களுக்கு அண்மையில் உள்ள எண்ணெய் வளம்மிக்க பகுதியாகிய கிர்குக் பகுதியையும், தங்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதியாக அறிவிக்கக் கோரினர்.

இதை, ஈராக்கிய அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. இருந்தபோதும், ஏர்பில் பகுதியில் சுயாட்சிக்கான அதிகார அரசையும் சட்டவாக்க மன்றையும் உருவாக்கி, குர்திஷ்கள் தங்களைத் தாங்களே ஆட்சிசெய்யும் முறையை ஈராக்கிய அரசு நடைமுறைப்படுத்தியது.
இப்பின்னணியில், 1991இல் ஈராக்கில் நிகழ்ந்த கிளர்ச்சியின் விளைவாக, அரசுக்கெதிரான போரை குர்திஷ்கள் தொடங்கினர். “இது சதாம் ஹுசைனைப் பதவியிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை” என, அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தெரிவித்தார். எனினும், இந்நடவடிக்கை முழுமையான வெற்றியை அளிக்கவில்லை.

ஈராக்கில், குர்திஷ்களுக்காகப் போரிட்டவர்கள் இரண்டு தரப்பினர். ஒரு தரப்பினர், மசவ்ட் பர்சானி தலைமையிலான குர்திஷ் ஜனநாயகக் கட்சி; மற்றைய தரப்பினர், ஜலால் தலபானி தலைமையிலான குர்திஷ்தான் தேசப்பற்று ஒன்றியம்.

1994இல் குர்திஷ்களின் கட்டுப்பாட்டில் உள்ள ஈராக்கிய குர்திஷ்தானை ஆட்சிசெய்வது தொடர்பில், இவ்விரு தரப்புக்கும் இடையில் உள்நாட்டு யுத்தம் மூண்டது. 1997வரை தொடர்ந்த குர்திஷ்களுக்கிடையிலான யுத்தத்தில் 5,000 போர்வீரர்களும் 8,000 பொதுமக்களும் கொல்லப்பட்டார்கள்.

இவ்யுத்தத்தின் போது, சதாம் ஹுசைன், மசவ்ட் பர்சானியின் குர்திஷ் ஜனநாயகக் கட்சிக்கு தனது ஆதரவை வழங்கினார். ஜலால் தலபானியின் குர்திஷ்தான் தேசப்பற்று ஒன்றியத்துக்கு அப்துல்லா ஒச்சலான் தலைமையேற்ற குர்திஷ்தான் தொழிலாளர் கட்சி (பி.கே.கே) ஆதரவு வழங்கியது. இவ்விடத்தில் பி.கே.கே குறித்து நிச்சயம் சொல்ல வேண்டும்.

பி.கே.கே 1978 ஆம் ஆண்டு அப்துல்லா ஒச்சலானால் உருவாக்கப்பட்டது. மாக்சிய-லெனினிசத்தை, தன் கோட்பாட்டுத்தளமாகக் கொண்டிருந்த பி.கே.கே துருக்கிய அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டது. தொழிலாளர்களின் உரிமைகளை மையப்படுத்திய, குர்திஷ்தானை உருவாக்குவதே இவ்வமைப்பின் குறிக்கோளாக இருந்தது. 1980களில் பலம் வாய்ந்த புரட்சிகர அமைப்பாக தன்னை வளர்த்தெடுத்த பி.கே.கே, 1990களில் மெதுமெதுவாகச் சரிவைச் சந்திக்கத் தொடங்கியது.

ஒச்சலான், 1999ஆம் ஆண்டு, அமெரிக்க சி.ஜ.ஏயின் உதவியுடன், கென்யாவின் தலைநகர் நைரோபியில் கைதுசெய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, சில காலம் நெருக்கடியை எதிர்நோக்கியது. பி.கே.கே உலகளாவிய ரீதியில் பயங்கரவாத அமைப்பாக பிரகடனப்படுத்தப்பட்டு, அதற்கெதிரான தடைகள் விதிக்கப்பட்டன. இன்று குர்திஷ் உரிமைகளுக்காகப் போராடும் பிரதானமான அமைப்பாக பி.கே.கே. மீளுருவாகியிருக்கிறது.

இன்றைய குர்திஷ்களின் நிலைவரத்தை நோக்குவோமானால், பல்வேறு சிதறுண்ட குழுக்களாக, பல்வேறுபட்ட அரசியல் கட்சிகளாக, குர்திஷ்கள் பிளவுண்டிருக்கிறார்கள். ஈராக்கிய குர்திஷ்தானைப் பொறுத்தவரை, குர்திஷ் ஜனநாயகக் கட்சியும் குர்திஷ்தான் தேசப்பற்று ஒன்றியமும் கோரன்: மாற்றத்துக்கான இயக்கம் ஆகியவையும் முக்கிய அரங்காடிகள்.

இதில், குர்திஷ் ஜனநாயகக் கட்சியின் தலைவர் மசவ்ட் பர்சானி, 2005ஆம் ஆண்டு முதல், ஈராக்கிய குர்திஷ்தானின் தலைவராக இருக்கிறார். இவரின் எதிரியான குர்திஷ்தான் தேசப்பற்று ஒன்றியத்தின் தலைவர் ஜலால் தலபானி, 2005 முதல் 2014வரை ஈராக்கின் ஜனாதிபதியாக இருந்தவர். தலபானி கடந்த மூன்றாம் திகதி காலமானார். மசவ்ட் பர்சானி தான், தனிநாட்டுக்கான பொதுசன வாக்கெடுப்பை நடாத்தியவர்.

பி.கே.கே, இன்னமும் துருக்கிய குர்திஷ்தானில் வலுவான போராட்ட அமைப்பாக உள்ளது. இது ஈரானில் உள்ள குர்திஷ்தானின் சுதந்திர வேட்கைக்கான கட்சி, சிரியாவில் உள்ள ஜனநாயக ஒன்றியக் கட்சி ஆகியவற்றுடன் கூட்டணி அமைத்துள்ளது.

இம்மூன்றும் அரசியல் கட்சிகள் அல்ல; துருக்கிய குர்திஷ்தானில் மக்கள் ஜனநாயகக் கட்சி, குடாபார்: சுதந்திரக் கட்சி ஆகியன இயங்குகின்றன. இவ்வாறு மிகவும் சிக்கலான நிலையில், குர்திஷ்களின் விடுதலைப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையிலேயே, ஈராக்கிய குர்திஷ்தான் பகுதியில், பொதுசன வாக்கெடுப்பை நிகழ்த்தி, தனிக் குர்திஷ்தானை அறிவிக்கப்போவதாக மசவ்ட் பர்சானி கூறியிருக்கிறார்.

இது, தமிழ் மக்கள் மத்தியிலும் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இச்செயலின் பின்புலத்தை இனி நோக்கலாம். பர்சானியின் பதவிக்காலம், 2015 ஆம் ஆண்டுடன் முடிவடைந்துவிட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகத் தேர்தலை நடத்தாமல் சட்டவிரோதமாக, மசவ்ட் பர்சானி பதவியில் இருக்கிறார்.

இவருக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையிலேயே, அவர் இப்பொதுசன வாக்கெடுப்பை நடாத்துவதாக அறிவித்தார். தன்னைத் தொடர்ந்தும் பதவியில் வைத்திருக்கவே, எதுவித தயாரிப்புமில்லாமல் இவ்வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளதாக, பல முற்போக்கான குர்திஷ்கள் கருதுகின்றனர்.

2003இல் ஈராக்குக்கு எதிரான யுத்தம் தொடங்கிய நாட்தொட்டு, குர்திஷ்கள் அமெரிக்கப் படைகளுக்கு ஆதரவாகச் செயற்பட்டு வந்திருக்கிறார்கள். குர்திஷ் தேசியவாதம், அமெரிக்காவின் படையெடுப்பானது சதாமை பதவியிலிருந்து அகற்றுவதோடு, குர்திஷ்களுக்கான தனித்தேசம் அமையும் என எதிர்பார்த்தது.

பலர், அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ்ஸை விடுதலை வீரராகக் கொண்டாடினர். ஆனால், இது நிகழவில்லை. இருந்தபோதும், ஈராக்கில் ஏற்பட்ட அதிகார வெற்றிடம், அமெரிக்காவின் கைப்பாவைகளாகச் செயற்பட்ட, ஈராக்கின் பிரதான இரண்டு குர்திஷ் இனக்குழுமங்களின் தலைவர்களான பர்சானிக்கும் தலபானிக்கும் உயர் பதவிகளை அளித்தது.

இருந்தபோதும், ஈராக்கின் உள்நாட்டு யுத்தம் தொடர்ந்த நிலையில், பர்சானியால் தனது கட்டுப்பாட்டில் உள்ள, ஈராக்கிய குர்திஷ்தானின் எண்ணெய் வயல்களில் இருந்து பயனை அடைய இயலவில்லை.

இந்நிலையில் ஐ.எஸ்.ஐ.எஸ்ஸின் உருவாக்கமும் சிரியாவில் கிளறிவிடப்பட்ட உள்நாட்டு யுத்தமும் குர்திஷ்க்களுக்கு புதிய வாய்ப்புகளையும் சவால்களையும் ஏற்படுத்தின. ஒருபுறம், மத அடிப்படையில் ஒருதொகை குர்திஷ்கள் ஐ.எஸ்.ஐ.எஸில் இணைந்து போரிட்டனர்.

இன்னொருபுறம், அமெரிக்காவினால் சிரியாவில் ஆட்சிமாற்றத்தை உருவாக்குவதற்காக அமைக்கப்பட்ட, சிரிய விடுதலை இராணுவத்தில் இன்னொரு தொகை குர்திஷ்கள் சேர்ந்து, சிரிய அரசாங்கத்துக்கு எதிராகப் போரிடுகின்றனர்.

இன்னொருபுறம், அமெரிக்க ஆதரவுடன் ஐ.எஸ்.ஐ.எஸிற்கு எதிராகப் போரிடுவோராக, இன்னொரு தொகுதி குர்திஷ்கள் செயற்பட்டனர். பி.கே.கேயும் அதனது கூட்டாளிகளும் அமெரிக்க ஆதரவு இன்றி, ஐ.எஸ்.ஐ.எஸ்ஸை வீழ்த்துவதற்கு வீரத்துடன் போராடுகின்றனர். அவர்கள் ஐ.எஸ்.ஐ.எஸின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் பலவற்றை விடுவித்துள்ளனர்.

இவ்விடத்தில, குர்திஷ் விடுதலையையும் அமெரிக்க அக்கறையையும் நோக்குதல் வேண்டும். குர்திஷ் மக்களின் விடுதலை, அமெரிக்கா வேண்டுகின்ற ஒன்றல்ல. ஈராக் யுத்தத்தின் போது, அமெரிக்காவின் தேவைகளுக்காக, ஈராக்கியக் குர்திஷ்கள் பயன்படுத்தப்பட்டார்கள். அதன் பலாபலன்கள் இதை வசதிப்படுத்திய ஈராக்கியக் குர்திஷ் தலைவர்களுக்கு கிடைத்தது.

இதன் பின்னர், சதாமை அகற்றியது போலவே, சிரிய யுத்தத்தில் இலகுவாக, சிரிய ஜனாதிபதி அசாத்தை அகற்றவியலும் என அமெரிக்க நம்பியது. ஆனால், அது சுலபமல்ல எனத் தெரிந்த நிலையில், ஐ.எஸ்.ஐ.எஸ் மூலம் சிரியாவைக் கவிழ்க்க முயன்றது.

இதன் சாத்தியத்தை, ரஷ்யாவின் வருகை இல்லாமல் செய்தது. பின்னர், சிரியாவில் குர்திஷ்களுக்கான தனிப்பகுதி என்ற கருத்தை முன்வைத்தது. இதன் மூலம் குர்திஷ்களை சிரிய யுத்தத்தில் பங்காளிகளாக்கி ஆயுதபாணியாக்கியது. இன்று மத்திய கிழக்கில், அமெரிக்க நலன்களுக்கு குர்திஷ்கள் பகடைகளாக உருட்டப்படுகிறார்கள்.

ஈராக்கிய குர்திஷ்தான், பொதுசன வாக்கெடுப்பை அறிவித்தபோது, அதற்கு ஆதரவு தெரிவித்த ஒரே நாடு இஸ் ரேல். சில குர்திஷ் தேசியவாதிகள், “குர்திஷ்தான் இரண்டாவது இஸ் ரேல்” எனப் பெருமையுடன் அறிவிக்கிறார்கள்.

இஸ் ரேல் இதை ஆதரிப்பதற்கான காரணங்கள் பல. முதலாவது, மத்திய கிழக்கில் இஸ் ரேல் தனக்கொரு தகுந்த அடியாளைத் தேடுகிறது. இரண்டாவது குர்திஷ்களைப் பயன்படுத்தி, மத்திய கிழக்கில் அமைதியின்மைத் தொடர இயலும். மூன்றாவது சுயாட்சியுடைய ஈராக்கிய குர்திஷ்தான், கடந்த சில ஆண்டுகளாக ஈராக்கிய அரசாங்கத்தின் அனுமதியின்றி, எண்ணெய்யை துருக்கிய குழாய்களின் ஊடாக இஸ்ரேலுக்கு மலிவு விலையில் விற்றுள்ளது.

தனிநாடாக ஈராக்கிய குர்திஷ்தான் உருவானால், ஈராக்கிய கட்டுப்பாடின்றி மலிவு விலையில் எண்ணெய் பெறவியலும். ஈராக்கிய குர்திஷ்தான் நாளொன்றுக்கு 900,000 பரல்கள் எண்ணெய்யைத் தனது பகுதியில் உள்ள வயல்களில் இருந்து பெற்றுக் கொள்கிறது. இதில், 600,000 பரல்கள் நாள்தோறும், துருக்கிய குழாய்களின் ஊடாக விற்கப்படுறது. இதுதொடர்பான வருமான அறிக்கை எதுவும் ஈராக்கிய மத்திய அரசாங்கத்துக்கு வழங்கப்படவில்லை.

இதேவேளை, பல பில்லியன் அமெரிக்க டொலர்களை, ஈராக்கிய குர்திஷ்தான் மத்திய அரசாங்கத்துக்கு வழங்கவேண்டியுள்ளது. இன்றும் சுயாட்சிப் பிரதேசமாக இருந்தபோதும், ஈராக்கிய மத்திய அரசாங்கத்தின் பொருளாதாரத் தயவிலேயே இன்னமும் ஈராக்கிய குர்திஷ்தான் இருக்கிறது.

இருந்தபோதும் பர்சானியும் அவரது குடும்பமும் இவ்வெண்ணெய் வியாபாரத்தால் கோடிக்கணக்கில் இலாபமீட்டியுள்ளன. எண்ணெய் விற்பனையில் இருந்து பெறப்பட்ட வருமானம் கணக்கில் காட்டப்படவில்லை.

இந்த வியாபாரத்தில், இவர்களது கூட்டாளி, துருக்கிய ஜனாதிபதி ஏட்டோகனின் குடும்பமும் அவரது கம்பெனியுமாகும். ஆண்டொன்றுக்கு எட்டு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியாக உணவுப்பொருட்களையும் ஏனையவற்றையும் துருக்கி, ஈராக்கிய குர்திஷ்தானுக்கு அனுப்புகிறது. இவை பர்சானிக்கும் ஏட்டோகனுக்கும் உள்ள வியாபார உறவின் விளைவிலானவை.

பொதுசன வாக்கெடுப்பைத் தொடர்ந்து நடைபெற்ற சில விடயங்களை நோக்க வேண்டும். முடிவுகளை ஏற்க மறுத்த ஈராக்கிய அரசாங்கம் ஈராக்கிய குர்திஷ்தானின் விமானநிலையமான ஏர்பில் விமானநிலையத்தை மூடியுள்ளது. சர்வதேச விமானங்கள், இவ்விமான நிலையத்தைப் பயன்படுத்துவதைத் தடைசெய்தன.

இதை அறிந்த வாக்களிக்க வந்திருந்த புலம்பெயர்ந்து வாழும் குர்திஷ்கள் உடனடியாக வெளியேறிவிட்டனர். இது புலம்பெயர்ந்த சமூகங்களின் சுதந்திர வேட்கைக்கு ஒரு எடுத்துக்காட்டு மட்டுமே. இப்போது ஈராக்கிய குர்திஷ்தானின் எல்லைப்பகுதிகளில், ஈராக் இராணுவத்தை நிறுத்துவதன் மூலம், பொருட்களின் வரவைத் தடைசெய்கிறது. ஏனைய அண்டை நாடுகளையும் ஈராக்கிய குர்திஷ்தானைத் தனிமைப்படுத்துமாறு கேட்டுள்ளது.

இது குறித்து கருத்துரைத்த ஈரானிய வெளியுறவுத்துறை அமைச்சர், “குர்திஷ் மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்கும் அவர்களது அரசியல்வாதிகளின் தவறான முடிவுகளுக்குமிடையிலான வேறுபாட்டை நாமறிவோம். இக்கணத்தில் ஈராக்கிய தேசிய ஒருமைப்பாட்டை ஈரான் மதிக்கிறது” என்றார்.

சிரியாவும் ஈராக்கிய அரசின் கோரிக்கையை ஏற்றுள்ளது. பர்சானியுடன் வியாபார நெருக்கம் இருந்தாலும், ஈராக்கைப் போல, துருக்கியில் நிகழ்வதை ஏட்டோகனால் ஏற்கவியலாது. இவையனைத்தும் ஈராக்கிய குர்திஷ்தானைத் தனிமைப்படுத்துகின்றன.

அதேவேளை குர்திஷ்களின் உரிமைகளுக்காகப் போராடுகின்ற இயக்கங்கள், தனிநாட்டுக்கான வாக்களிப்பை எதிர்க்கிறார்கள். மூலோபாய ரீதியிலும் தந்திரோபாய ரீதியிலும் மிகவும் தவறான முடிவு என்கிறார்கள்.

பர்சானி தான் ஆட்சியைத் தக்கவைக்கவும் அமெரிக்க – இஸ்ரேலிய நலன்களுக்குமாகவே தனிநாட்டுக்கான பொதுசனவாக்கெடுப்பு நடாத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க நலன்களுக்காக எவ்வாறு கொசோவோ, தென்சூடான் என்பன உருவாக்கப்பட்டனவோ அதேதிசையிலேயே ஈராக்கிய குர்திஷ்தானும் நகர்கிறது.

அதேவேளை இது ஏனைய குர்திஷ்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளதோடு குர்திஷ்களின் வாழ்விடங்களை உள்ளடக்கிய குர்திஷ்தானை உருவாக்குவதற்கான வாய்ப்பைக் கிட்டத்தட்ட இல்லாமல் செய்துவிட்டது.

இன்று, குர்திஷ் மக்களின் பேரால் மாபெரும் சூதாட்டம் அரங்கேறுகிறது. அதன் பிரதான பாத்திரத்தை குர்திஷ் தேசியவாதத் தலைவர்கள் வகிக்கிறார்கள். தனிநாட்டின் பெயரால் மக்கள் தொடர்ந்தும் ஏமாற்றப்படுவார்கள். தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். சூதே மறுபடியும் வெல்லும். இது நாம் கற்கவேண்டிய பாடம்.