குர்திஷ் மக்களின் உரிமைப் போராட்டம் வெற்றியடையுமா…?

(சாகரன்)
உலகம் தேசிய இனங்களாகவும் இனக்குழுக்களாகவும் பிரிந்து இருப்பதினால் தேசங்களாகவும் இதனை இணைந்த நாடுகளாகவும் பிரிந்தும் இணைந்தும் இருக்கின்றன. மனித குலம் இரு வர்க்கமாக பிரிந்து நின்று தமது உரிமைகளுக்காக ஐக்கியப்பட்டு போராடக் கூடாது என்பதற்காகவே நாடுகளுக்குள் தேசங்களை உருவாக்கும் முரண்பாடுகளை சுரண்டும் வர்க்கம் ஏற்படுத்தி வருகின்றது. இணைந்து உரிமைகளுக்காக போராட முடியாத சூழலில் முதலில் தேசங்களாகப் பிரிவது பின்பு வர்க்க முரண்பாட்டிற்காக போராடுவது பின்பு வர்க உடன்பாடுகளுடன் இணைவது என்ற மாக்சிச கோட்பாட்டுன் தேசிய விடுதலைப் போராட்டங்கள் முற்போக்கானதாக பார்க்கப்பட்டு இதற்கு இடதுசாரிகள் ஆதரவும் தெரிவும் வந்தனர்.

இந்தப் போக்கு 2ம் உலக மகா யுத்த காலத்துடன் அதிகம் கூர்மையடைந்து தேசங்கள் உருவானதும் பின்பு இவை இணைக்கப்பட்டு நாடுகள் உருவானதும் வரலாறு. சோசலிசத்தில் இருந்து கம்யூனிசத்திற்கான வளர்ச்சிப் போக்கு அவ்வளவு சீக்கிரத்தில் நடைபெற்று முற்றுப் பெற முடியாத சூழலில் மீண்டும் தேசிய இன முரண்பாட்டை மீண்டும் கூர்மையடைய வைத்து தமது கூறுபோட்டுப் பலவீனப்படுத்தும் யுத்தங்களை முதலாளித்துவம் தொடர்ந்தும் தமது சூழ்ச்சிகள் மூலம் நிறைவேற்றி வருகின்றது. அண்மைய காலத்து பிரிந்து போகும் போராட்டங்களின் வடிவங்களில் ஆதிக்கம் பெற்றவை இவைகளே.

இதனால்தான் ஒடுக்கு முறைக்க உள்ளான சிறுபான்மை இனங்களின் போராட்டங்கள் வெற்றியடையாமலும் அல்லது வெற்றியடைந்த தனித் தேசங்களான பின்பு மிகச் சிறிய காலத்திலேயே முன்பை விட மோசமான ஒடுக்கு முறைகளுக்குள் அவ் தேசம் தமக்குள்ளேயும் யுத்தம் போட்டுக் கொண்டது. இதற்கு (கிழக்கு) தீமோர், (தெற்கு) சூடான் என்பன அண்மைய உதாரணங்கள். தோல்வியுற்ற போராட்டங்களில் ஈழ விடுதலைப் போராட்டம் உதாரணம்.

இங்கெல்லாம் ஒரு ஒற்றுமையை பார்க்க முடியும்! இந்த போராட்டங்களின் தலமைப் பாத்திரத்தை வகித்தவை இடதுசாரி சிந்தனையாளர்கள் அல்ல. தலமை இடதுசாரிகளாக இருந்திருந்தால் போராட்டங்களும் வென்றிருக்கும் வென்று உருவான தேசங்களும் வாழ்ந்திருக்கும். குர்திஷ் சர்வ ஜன வாக்கெடுப்பு வெற்றியும் இதனைத் தொடரந்த வெற்றிகளையும் உறுதி செய்ய எமக்கு இன்று தேவையானது இடதுசாரித் தலமைத்துவமே!. இதனை குர்திஷ் மக்கள் உறுதி செய்வார்கள் என்று நம்புவோம்.