கூட்டமைப்பிற்கூடாகவே மாற்றுத் தலைமை வரவேண்டும் கட்சியை நடத்துவோர் தவறை உணர வேண்டும்

(வாசுகி சிவகுமார்)

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடாகவே தமிழர் அரசியலின் மாற்றுத்தலைமையொன்று எதிர்பார்க்கப்படுவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தினகரன் வாரமஞ்சரிக்குத் தெரிவித்தார். அதற்குக் கூட்டமைப்பைத் தவறாக வழிநடத்திச் செல்பவர்கள் தமது தவறை உணரவேண்டும் என்றும் அவர் வாரமஞ்சரிக்கு வழங்கிய சிறப்பு நேர்காணலில் தெரிவித்தார்.

கூட்டமைப்பிலிருந்து தம்மை விலகச் செய்து, அதன் மூலம் தான் கூட்டமைப்பைப் பிளவுபடச் செய்துவிட்டதாகப் பிரசாரம் செய்வதற்குக் கூட்டமைப்பு தருணம் பார்த்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வட மாகாண சபையின் காலம் முடிவடைய இன்னமும் சிலநாட்களே உள்ள நிலையில் நீங்கள் அண்மையில் உங்கள் முன்னுள்ள நான்கு தெரிவுகள் குறித்துப் பேசியிருந்தீர்கள்? அவற்றில் உங்களுக்கு உகந்த தேர்வு எது?

மக்களுக்குகந்தது மூன்றாவது. எனக்குகந்தது நான்காவது. மக்கள் புதிய கட்சியொன்றை உருவாக்குவதையே எதிர்பார்க்கின்றார்கள். இருக்கும் மக்கள் இயக்கத்தைப் பலப்படுத்தி முன்செல்லவே நான் விரும்புகின்றேன்.

நீங்கள் முன்வைத்தவற்றில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்புடனேயே இணைந்திருப்பது பற்றிய எந்தவொரு தேர்வும் இருக்கவில்லை. ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக உங்களை நியமிக்க பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டனவே? என்று கேட்டற்கு,

-தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளராக உங்களை நிறுத்தாதபோது நீங்கள் என்னசெய்வீர்கள் என்று பத்திரிகையாளர் கேட்டபோதுதான் மேற்படி பதில்களை வழங்கினேன். உட்கட்சிப் பேச்சுக்கள் பற்றி எனக்குத்தெரியாது. அவை எனக்குத் தெரியப்படுத்தப்படுவதும் இல்லை என்று பதில் அளித்தார்.

கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் இந்தியாவில் இருந்து திரும்பியவுடன் கூட்டமைப்பில் இருந்து நீங்கள் வெளியேறுவது குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என்ற பேச்சு அடிபடுகின்றதே?

அவர்களாக என்னை வெளியேற்றினால் கூட்டமைப்பை நானே உடைத்ததாக மக்கள் முன்னிலையில் கூறமுடியாமல் போய்விடும்!

யுத்தத்தின் போது மனித உரிமை மீறல்களுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் விசாரணை செய்யவேண்டும் என்ற தீர்மானத்தை வடமாகாண சபை அண்மையில் நிறைவேற்றியிருக்கின்றது. அதற்கான முயற்சிகள் கடந்த ஒன்பதாண்டுகளாகப் பல்வேறு வழிகளில் மேற்கொள்ளப்பட்டபோதும் அவையெவையும் கைகூடவில்லை. இந்நிலையில் சர்வதேச நீதிமன்றொன்றில் இலங்கையை விசாரணை செய்வதன் மூலம் தமிழர்களின் அபிலாஷைகளை அடைந்துவிடலாம் என்பது சாத்தியப்பாடுடையதுதானா? அல்லது அதன் சாத்தியப்பாடின்மை தெரிந்தேதான் அரசியல் தலைமைகளால் மக்கள் வழிநடத்தப்படுகின்றார்களா?

– சர்வதேச குற்றவியல் நீதிமன்றங்களால் நாட்டு அரசாங்கங்களுக்கு எதிராகச் சில நடவடிக்கைகள் எடுக்கலாம். அவற்றை அடையாளங்கண்டு நடைமுறைப்படுத்தவே நாங்கள் முனைகின்றோம். என்று பதிலளித்த முதலமைச்சர் விக்கினேஸ்வரன், வட மாகாணபையின் அமைச்சர் டெனீஸ்வரனின் பதவி நீக்கம் செல்லுபடியற்றது என்ற நீதிமன்றத் தீர்ப்பின் பின்னரான நடவடிக்ைகயை ஆளுநரே மேற்கொண்டிருக்க வேண்டும்.

சட்டப்படி நியமிக்கப்பட்டு உறுதிமொழி கொடுத்த வடமாகாண அமைச்சர்கள் ஐவரும் தமது கடமைகளைச்செய்து கொண்டு போகின்றார்கள். அந்த ஐவரில் ஒருவரின் இடத்தை டெனீஸ்வரனுக்கு ஆளுநர் ஏற்படுத்திக் கொடுத்தால்தான் அவரால் கடமையாற்ற முடியும். அவ்வாறு இதுவரையில் ஆளுநர் ஒருவரையும் பதவி நீக்கம் செய்யவுமில்லை, டெனீஸ்வரன் அமைச்சர் கடமைகள் எவற்றிலும் ஈடுபடவுமில்லை.

ஆளுநர் எடுக்க வேண்டிய நடவடிக்கைகளை அவர் எடுக்காததை மறந்து என்னை நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக மன்றில் நிறுத்தியுள்ளார்கள்.