கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஏன் புனரமைக்கப்படவேண்டும்?

யாழ் தீபகற்பத்தின் பிரதான வீதிகளில் ஒன்றாக அமைந்துள்ளது கொடிகாமம் பருத்தித்துறை வீதி. AB31 எனத் தரப்படுத்தப்பட்டுள்ள இந்த வீதி வடமராட்சியின் மந்திகையிலிருந்து முள்ளிவெளி, வரணி ஊடாக கொடிகாமம் வரை நீள்கின்றது. வடமராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – மந்திகையிலிருந்து பருத்தித்துறை வரை யாழ் – பருத்தித்துறை வீதியும் (AB20), தென்மராட்சியில் இந்த வீதியின் தொடர்ச்சியாக – கொடிகாமத்திலிருந்து கச்சாய் (B68) வீதியும் அமைந்துள்ளன. அதாவது முன்னர் யாழின் துறைமுகங்களாக விளங்கிய பருத்தித்துறை மற்றும் கச்சாய் துறைமுகங்களை இணைக்கின்றது இந்த வீதி.

கச்சாய்:
கச்சாய் என்னும் பண்டைய சிறிய துறைமுகம் முன்னர் உள்ளூர் உற்பத்தியாக மரக்கறி வகைகள், மீன்பிடித் தொழில் பொருட்கள் மற்றும் வடகீழ் பருவப் பெயர்சிக் காலநிலையின் போது வள்ளங்களை பாதுகாப்பாகத் கட்டி வைக்க கூடிய இடமாகத் (Protected shelter) இருந்தமையால் முக்கியத்துவம் பெற்றிருந்தது. இதர யாழின் பண்டைய துறைமுகங்களான பருத்தித்துறை, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு, காங்கேசன்துறை மற்றும் ஊர்கவர்துறைகளுக்கு இருந்த அதே முகையத்துவத்தைப் கச்சாய்யும் பெற்றிருந்தது.

AB31 – மந்திகை – கொடிகாமம் வீதி:
பருத்தித்துறை தொடக்கம் கச்சாய் வரையான வீதியின் மொத்த நீளம் 18.91 கிலோ மீட்டர் ஆகும். இலங்கையில் உள்ள AB தர வீதிகளில் 10 ஆவது நீளமான வீதி இதுவாகும். இலங்கையில் மொத்தம் 45 AB தர வீதிகள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான வீதிகள் ஏற்கனவே திருத்தப்பட்டு விட்டன. இந்த AB31 வீதியின் பராமிப்பு பருத்தித்துறை வீதி அபிவிருத்தி அதிகார சபையின் (RDA) கீழ் உள்ளது.

AB31 தென்மராட்சியையும் வடமராட்சியையும் இணைக்கும் பிரதான பாதையாக விளங்குகின்றது. வடமராட்சியின் தொண்டைமானாறு, வல்வெட்டித்துறை, உடுப்பிட்டி, பருத்தித்துறை மற்றும் நெல்லியடி, கற்கோவளம் ஆகிய பிரதான ஊர்களினது மக்களினது தென்மராட்சிக்கான அதிலும் குறிப்பாக கொடிகாமம் அல்லது A9 நெடுஞ்சாலைக்கான பிரதான போக்குவரத்துப் பாதையாக இது அமைந்துள்ளது.

இந்த வீதியை பயன் படுத்துபவர்களை இவ்வாறு சிலவாறு வகைப்படுத்தலாம்:
1) யாழின் குறிப்பிடக்கூடிய மரக்கறிச் சந்தைகளில் ஒன்றான கொடிகாமத்திற்கு வியாபார நோக்கில் செல்வோர் 2) தலைநகர் செல்வதற்காக கொடிகாமம் புகையிரத நிலையம் செல்வோர் அல்லது கொழும்பிலிருந்து புகையிரதத்தில் வந்து – வடமராட்சி மற்றும் தென்மராட்சியின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்குச் செல்வோர் 3) வன்னி – வடமராட்சி – ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் போக்குவரத்து மற்றும் பண்டமாற்று 4) வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் அரச உத்தியோகங்கள் நிமித்தமான அன்றாடப் போக்குவரத்து 5) வடமராட்சி மற்றும் ஒரு பகுதி தென்மராட்சி மக்களின் தலைநகர் உட்பட்ட இலங்கையின் பிரதான நிலப்பரப்பின் பகுதிகளுக்கான போக்குவரத்து

வீதியின் இன்றையநிலை:
இவ்வளவு முக்கியத்துவம் பெற்றுள்ள இந்த வீதி இன்று யாழில் அதிகம் பேசப்படும் ஒரு வீதியாகவும் அமைந்துள்ளது – காரணம் பல வருடங்களாக திருத்தப்படாமலும் இன்றைய தேவைக்கேற்ப அகலப்படுத்தப்படாமல் உள்ள அவலத்தால்.

குறைபாடுகள் சில:
குன்றும் குழியுமாக உள்ளமை. பாதையின் ஓரங்கள் வெட்டுக்கள் உடைவுகளுடன் உள்ளமை. மிகவும் ஒடுக்கமாக உள்ளமை. சில இடங்களில், வீதி ஒரு அலையின் வடிவை ஒத்து அமைந்துள்ளமை (Bumping). உரிய வீதி சமிக்ககைகள் இன்மை. உரிய வீதித் தரவுகள் இன்மை …. இவ்வாறாக நீள்கின்றது

திருத்தப்படாமையால் உள்ள பிரதிகூலங்கள்:
விபத்துக்கள். நேரம் விரயம். அசெளகரியங்கள் . மாற்றுப்பாதைக்குச் செல்லுதல் (புத்தூர் சந்தி – புத்தூர் வழியாக தென்மராட்சியிலிருந்து வலிகாமக் சென்று பின்னர் வடமராட்சிக்கு வருதல்) . சந்தைப்படுத்தலில் இடைஞ்சல். தலைக்கு மேல் உள்ள மரங்களால் (Over head trees) உள்ள ஆபத்துக்கள். உடல் உபாதைகள்………. இவ்வாறாக நீள்கின்றது.

அரசியல் தலையீடு:
குறித்த இந்த வீதியை திருத்துவதற்கென ஒதுக்கப்பட்ட நிதி முன்னைய ஆட்சி காலாத்தில் அரசியல் தலையீட்டால் வேறு பகுதிக்குச் சென்றதாக சொல்லப்படுகின்றது. ஆனாலும் இது உறுதிப்படுத்தபடாத செய்தி. வீதி புனரமைக்கப்படாமைக்கு பிரதான காரணங்களில் ஒன்று இந்த வீதியில் உள்ள ‘மக்கள் பாவனை’ (Traffic vollume) குறைவு என்று ஒரு வாதம் உள்ளதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. ஏனெனில் மக்கள் பாவனை வெறும் சொற்பமே உள்ள முல்லைத்தீவு கொக்கிளாய் வீதி ‘காப்பற் வீதியாக’ மாற்றப்பட்டுள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும்.

கோரிக்கைகள்:
இப்பாதைப் புனரமைப்பின் அவசியத்தை வலியுறித்தி பொதுமக்கள், ஸ்தாபனங்கள், பார ஊர்திச் சங்கங்கள் போன்றவற்றால் அவ்வப்போது கோரிக்கை விடுக்கப்பட்டுவந்துள்ளதுதான். ஆனாலும் இவை உரியவர்களின் கவனத்தைப் பெற்றதாகத் தெரியவில்லை. எவ்வாறாயினும் இந்தப் பாதை உடனடியாக் புனரமைக்கப்படவேண்டும்.

அடுத்த நடவடிக்கை:
இதற்கு எல்லா தென்மராட்சி/வடமராட்சியில் உள்ள மக்கள் அமைப்புக்கள் ஒவ்வொன்றும் எமது மக்கள் படும் கஷ்டங்களை கடிதம் மூலம் letterhead ல் பதிந்து உரியவர்களுக்கு அனுப்பவும் செயலால் எம் உறவுகள் தான் பலாபலனை அனுபவிப்பார்கள்!

(குடாநாட்டான்)