கொரனா கற்றுத் தரும் பாடம்….. தூய்மைத் தொழிலாளர்களை வாழ்த்தி பாராட்டி நிற்போம் !

‘வீட்டில் இரு! தனித்து இரு!! தள்ளி இரு!!!” என்பது இவர்களுக்கு பொருந்தாமல் இருக்கின்றது. ஆனாலும் தமது கடமைகளை செய்து கொண்டே இருக்கின்றனர். உலகம் இயங்கு நிலையில் இருப்பது மனித உயிர் வாழ்விற்கு அத்தியாவசியம் ஆகின்றது. இந்த இயக்கத்தை பேணுவதில் அவர்கள் யாவரது பணியும் ஏற்றத் தாழ்வுகள் இன்றி மிகவும் தேவையாகின்றது.

இதில் மருத்துவத் துறை ஊழியர்கள் சிறப்பாக வைத்தியர்கள், படைத்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள், அத்தியாவசிய நீர் மின்சாரம் போன்றவற்றின் பணிப்பாளர்கள், உணவு விநியோகத்தின் பொறுப்பாளர்கள், அடிப்படைப் போக்கு வரத்தின் பொறுப்பாளர்கள், ஊடகத் துறையில் முன்னிலையில் இருப்பவர்கள், அரசுப் பொறுப்பாளர்களான அமைச்சர்கள் பிரதம அமைச்சர்கள் என்று பலரும் சமூகத்தின் பொது வெளியில் கை தட்டிப் பாராட்டும் அளவிற்கு வெளிச்சத்தில் இருக்கின்றார்கள். இவர்களை பாராட்டித்தான் ஆக வேண்டும். இந்த வெளிச்சத்திற்கு பின்னால் இருக்கும் இத்துறை சார்ந்தவர்களையும் நாம் பாராட்டித்தான் ஆகவேண்டும்.

சிறப்பாக மருத்துவர்களின் சேவை இன்றைய காலகட்டத்தில் அளப்பரியது. இன்றைய காலகட்டத்தில் மட்டும் அல்ல உயிர்களை காப்பாற்றும் விடயத்தில் அவர்களின் வாழ் நாட்களில் ஆற்றும் சேவை மகத்தானது.

ஆனால் கவனிக்கப்படாது ‘வெளிச்சத்திற்கு வராமல் இருக்கும் ஒரு துறையை இங்கு முன்னிலக்கு கொண்டுவருவதே எனது இந்தப் பதிவின் நோக்கம்.
ஆமாம் அவர்கள் சுத்திகரிப்புத் தொழிலாளர்கள். அது வைத்தியசாலையில் ஆரம்பித்து உணவுச்சாலை ஈறாக கழிவு வாய்கால் வரை சுத்திகரிப்பில் தூய்மைப்படுத்துவதில் ஈடுபடுவர்களையே இங்கு குறிப்பிட்டு சொல்கின்றேன்.

மேற்குலக ‘வளர்சியடைந்த” நாடுகளில் தொழிலை வைத்து அதிகம் ஏற்றத்தாழ்வுகள் பார்க்கப்படாத இடத்தில் இந்த சுத்திகரிப்பு தொழிலாளர்களை அதிகம் பாகுபடுத்தி பார்ப்பது குறைவு.

இங்கு ஒருவரது பொருளாதார அளவுகளே அவரின் ஏற்றத் தாழ்வுகளை அதிகம் தீர்மானிக்கின்றது. வேலை முடிந்த பின்பு அந்த வேலைக்குரிய உடையை களைந்து கோட் சூட்டிற்குள் புகுந்து விட்டால் ஒருவரை அவரிடம் இருக்கும் காசே தீர்மானிக்கும் பெரும்பாலும்.

இதனால் தொழிலை வைத்து யாரையும் வேலை நேரத்திற்கு அப்பால் பாகுபடுத்துவது இல்லை. நிற மொழி மத சமூக வேறுபாடுகள் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்துகின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

பொதுவான முதலாளி தொழிலாளி என்ற வேறுபாடு சமத்துவம் அற்ற ஆட்சி அமைப்பில் இருப்பது போல் இங்கு பெரும்பாலான இடங்களில் கோலோச்சுவதை மறுப்பதற்கில்லை. வர்க்கப் புரட்சியே இதனை இல்லாமல் செய்யும்.

இந்தியா, இலங்கை போன்ற இடங்களில் சுத்திகரிப்பு தொழிலாளியை ஒரு கடைநிலை ஊழியராக மட்டும் அல்ல சமூகத்தில் கடைநிலை சமூகப் பிரிவாக பார்க்கும் சாதிய அமைப்பின் கொடுமைகளை நாம் பார்க்க முடியும். இவர்கள் பெரும்பாலும் வேலை இடங்களிலும்இ சமூகத்திலும் கூனிக்குறுகி நிற்பதற்குரிய (அவ)மரியாதைகளை இந்த சமூகம் வழங்கிவருகின்றது.

வேலை செய்து களைத்திருக்கும் போது ஒரு கோப்பை தண்ணீரை கூட கொடுக்காத தீட்டு எண்ணம் சாதி என்ற பாகுபாட்டினால் பூசப்படுகின்றது.

ஆனால் இன்று கொரனாவின் கொடூரம் கொழுந்து விட்டெரியும் காலத்தில் மருத்துவர்களுக்கு சமமாக (ஏன் ஒரு படி மேலாக என்று கூடச் சொல்லலாம்) வைத்திய சாலைகளிலும், தெருக்களிலும், கழிவு வாய்கால்களிலும், குப்பைத் தொட்டில்களிலும் ஏன் பாரிய அங்காடிகளிலும்(Mall) இவர்கள் துடைப்பத்துடனும், துடைக்கும் துணியுடனும், அதற்கான கிருமி அகற்றும் திரவப் போத்தலுடனும் பொது மக்களுக்கு இந்தக் கொரனாக் கிருமி பரவக் கூடாது என்பதற்காக முதல் நிலையில் களப்பணியாற்றுவது எமக்கு அவர்களை முதல் நிலையில் முன்பை விட வைத்துப்பார்க்க சொல்கின்றது.

எனவே இன்றைய கால கட்டத்தில் எனது முதல் கைத் தட்டல் இந்த வருமுன் காப்போனாக செயற்படும் சுத்திகரிப்பு தொழிலாளர்களையே சென்று அடைகின்றது. தூய்மை இல்லை என்றால் கொரானா வைரஸ் எமது கரங்களில், முகங்களில், உடைகளில், உடம்பின் நுரையீரலில் எங்கும் பரவும் சாத்தியங்களை ஏற்படுத்தும்.

எனவே கூறுகின்றேன் இங்கு ‘வருமுன் காப்போனா” செயற்படும் சுத்திகரிப்பு தொழிலாளிகள் ‘வந்த பின்பு காப்போன்” என்று சேவையாற்றுபவர்களை விட அதிக மரியாதைகுரியவர்கள்.

இன்றில் இருந்தாவது தூய்மைத் தொழிலாளரர்களை ‘முதன்மை”த் தொழிலாளர்களா இல்லாவிட்டாலும் சம… சக.. மனிதனாக மதித்து எம் சமூகத்தில் அவர்களுக்கான உயரிய இடத்தை கொடுக்க யாவரும் முன்வர வேண்டும். மீண்டும் ஒரு தரம் அவர்களின் களப் பணியை கை தட்டி நன்றியும் வாழ்த்தும் சொல்லுவோம்.

ஒரு இக்கட்டான கால கட்டம் எமக்கு கற்றுத் தரும் பாடமாக எல்லோரையும் சமமாக மதிக்கும்… ஏற்கும்…. மனநிலைக்கு எம்மை மாற்றிக் கொள்வோம். ஒரு கோப்பை தண்ணீர் இல் இருந்து எமது சமத்துவ சிந்தனை எற்பிற்கு சுழி போடுவோம்