சர்வேஸ்வரனின் வாதம் பிழையானது

அறுபது வருட கால நடைமுறைகளையே தான் பின்பற்றி தேசிய கொடியை ஏற்ற மறுத்ததாக தனது தவறுக்கு நியாயம் கற்பிக்கிறார்.அந்த அறுபது வருடகால நடைமுறைகளை இவர் மாற்றவேண்டும்.அந்த தவறுகளே எம்மை இந்த நிலைக்கு ஆளாக்கியுள்ளது.அதை இவரும் தொடரவேண்டுமா?

அது ஒரு பாடசாலை.அதுவும் சக இன மாணவர்களின் பாடசாலை.அவர்கள் மரியாதை நிமித்தமாக இவரை அழைத்துள்ளார்கள்.அந்த அழைப்புக்கு மரியாதை செய்ய வேண்டாமா?

சர்வேஸ்வர்னின் தவறுக்கு நியாயம் தேடும் அறிக்கை மிக ஏமாற்றமாகவே உள்ளது.தன்னுடைய குற்றங்களை நியாயப்படுத்த கடந்த கால வரலாறுகளையும் கூட இருப்பவர்களின் தவறுகளை இழுப்பதையும் ஏற்கமுடியாது.

நாட்டில் யுத்தம் நின்றுவிட்டபோதும் இனவாதம் குறையவில்லை.இந்த இனவாதத்துக்கு தீனிபோடும் நடவடிக்கையே இது.இதை ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யலாமா?தன் தவறுகளுக்காக நியாயம்தேட கடந்த கால வரலாறுகளை கிளறுவதாக தெரிகிறது.போதாதற்கு சம்பந்தனையும் இழுத்தே நியாயம் தேடுகிறார்.அந்த சம்பந்தன் கொடுத்த போலியான விளக்கத்தை தனக்காக தன்னை நியாயப்படுத்த போடுகிறார்.

காலால் அடித்துவிட்டு பாலால் அபிசேகம் என்பார்கள்.அதுபோலவே தேசிய கொடியை ஏற்ற மறுத்துவிட்டு அதைப் பிழை என்று ஒத்துக்கொள்ளாமல் பௌத்த விகாரைக்கு சென்ற கதையை முன்னிலைப்படுத்துகிறார்.

ஒரு மனிதன் அவனுடைய ஆடை என்பதற்காக பழைய கந்தலையே எப்போதும் அணியவேண்டும் என்பதில்லை.அவன் அதைத் திருத்தலாம்.ஏன் புது ஆடையையே அணியலாம்.அது தவறு அல்ல.அதுபோலவே அரசியல் அமைப்பு திருத்தமும்.அவை ஒரு தனிநபர் முடிவுகள் அல்ல.அதை வைத்தே இன்னொரு நியாயப்படுத்தலை செய்கிறார்.

இலங்கை அரசியலில் சிறுபான்மை இனங்களுக்கு பல குறைபாடுகள் உண்டு.அரசியல் அமைப்பில் சம நீதி இல்லை.அது உண்மை.ஆனால் இதை தேசியக் கொடியை ஏற்ற மறுப்பதால் பெற்றுவிடமுடியாது.

உரிமைகளைப் பற்றி குறைகளைப்பற்றி பொதுக்கூட்டம் நடாத்துங்கள்.மக்களுக்கு விளங்கப்படுத்துங்கள்.மாகாண சபை இருக்கிறது.பாராளுமன்றம் இருக்கிறது.அங்கே உங்கள் குரல்களை உயர்த்துங்கள்.ஊடகத்துறையை பாவியுங்கள்.இதுவரைக்கும் வெளிப்படையாக இவை பற்றி பேசியது இல்லை.

இந்த இனப்பிரச்சினைகள் தொடர்பாக மக்களுக்கு விளக்கம் கொடுக்கவில்லை.நமக்கு சாதகமான சக்திகளை இனம் கண்டு அவர்களோடு கைகோர்க்கவும் இல்லை.இதுவரைக்கும் தென்னிலங்கை அரசியல் தலைவர்களோடு உரையாடியதும் இல்லை.வடக்கே இருந்துகொண்டு வீராவேசம் நாடகம்.ஏன்? எதற்கு? அறுபது வருடங்களாக தமிழர்களே தமிழர்களை முட்டாள்களாக்கினார்கள். அந்த வரிசையில் சர்வேஸ்வரனும் வர விரும்புகிறாரா?

அது ஒரு பொதுவெளி. ஏதும் அறியாத மாணவர்கள் படிக்கும் பாடசாலை. அங்கே ஒரு கல்வி அமைச்சராக பொறுப்புள்ள மனிதராக நடந்துகொள்ளாமல் போனது தவறான விசயம். அங்கே பொதுவெளியில் நாகரீகமாக நடந்துகொள்ள மறுத்தது மகா தவறு. சர்வேஸ்வரன் இதை உணர்ந்துகொள்ளவேண்டும். தவறுக்கு நியாயம் தேடுவது மிகத் தவறு. ஆனால, அதை உணர்ந்து மன்னிப்பு கேட்பது பெருந்தன்மை.

(Vijay Baskaran)