செல்வம் அங்கே நாயகம் இங்கே!

பல வருடங்களுக்கு முன்னர் நாங்கள் சிலபேர் அவரைச் சந்தித்த பொழுது (1977 செப்ரெம்பரில் அவர் காலமானார்), “செல்வம் அங்கே, நாயகம் இங்கே, செல்வநாயகம் எங்கே?” என ஒரு புன்சிரிபபுடன் கூறினார். நாங்கள் இதன் அர்த்தம் என்ன என்பது குறித்து அவரிடமிருந்து விளக்கத்தை எதிர்பார்த்து நின்றோம்.
அவர் சொன்னவற்றையும் பிறவற்றையும் கீழே தருகின்றேன்.
பொதுவாக தமிழரசு கட்சித் தலைவர் செல்வநாயகமும், தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ.பொன்னம்பலமும் கொழும்பு கறுவாக்காட்டுவாசிகள். ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறும் நேரத்தில் மட்டும் யாழ்ப்பாணத்தில் தலைகாட்டுவார்கள். அப்பொழுது பிரச்சினைகளும் குறைவு. பின்னர் மக்களும் இவர்களைத் தேடுவதில்லை. பின்னர் ஐந்து வருடம் கழித்து இவர்கள் வரும்போதுதான் இவர்களது ஞாபகம் மக்களுக்கு வரும்.

இவர்கள் கொழும்பில் வாழ்வது மட்டுமின்றி, அங்கு வீடுவாசல்கள் காணி பூமி என்று சொத்துகளும் வாங்கி வைத்திருக்கிறார்கள். உதாரணமாக, செல்வநாயகத்துக்கு சப்பிகமுவ மாகாணத்தின் இரத்தினபுரி மாவட்டத்தின் பலாங்கொட (இது சிறீமாவோ பண்டாரநாயக்கவின் சொந்த ஊர்) பிரதேசத்தில் பெற்றியாகல என்ற இடத்தில் பெரியதொரு தேயிலைத் தோட்டம் இருந்தது. 1880இல் ஒரு பிரிட்டிஸ்காரர் ஆரம்பித்த இந்தத் தோட்டத்தைப் பின்னர் செல்வநாயகமும், சிற்றம்பலம் என்பவரும் பங்காக வாங்கி நடத்தி வந்தனர்.

பெருந்தோட்டங்களில் பல்வேறு பிரச்சினைகளுக்காக அடிக்கடி வேலை நிறுத்தங்கள் நடைபெறுவது வழமை. செல்வநாயகத்தின் தோட்டத்திலும் அவ்வாறான வேலை நிறுத்தங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் மற்றைய தோட்டங்களில் நடைபெறாத ஒரு விசித்திரமான போராட்டம் செல்வநாயகத்தின் தோட்டத்தில் 1960களில் நடந்திருக்கிறது. அது என்னவென்றால், அந்த தோட்டத்தில் ஆங்கில மொழியில் நடைபெற்று வந்த நிர்வாகத்தை தமிழ் மொழியில் நடத்தும்படி கோரி தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருந்திருக்கின்றனர்! தமிழ் கட்சித் தலைவரின் தோட்டத்தில் தமிழுக்காக உண்ணா விரதம்!!

செல்வநாயகத்துக்கு மட்டுமின்றி தமிழ் காங்கிரஸ் தவைர் பொன்னம்பலத்துக்கும் லப்புகம என்ற இடத்தில் ‘ஸ்ரீநிவாச எஸ்டேட்’ என்ற பெயரில் இறப்பர் தோட்டம் ஒன்று இருந்திருக்கிறது. அதுமட்டுமின்றி, பொன்னம்பலத்துக்கு கொழும்பு – 7இல் (கறுவாக்காடு) ‘கீதாஞ்சலி’ என்ற பெயரில் மிகப்பெரிய மாளிகை வீடு ஒன்று இருக்கிறது. (இறப்பதற்கு சற்று முன்னர் அவரது சொந்த ஊரான அல்வாயிலும் ஒருபெரிய வீடு கட்டி வந்ததாகக் கேள்வி) இதுதவிர, மலேசியா, இங்கிலாந்து போன்ற நாடுகளிலும் அவருக்கு சொத்துக்கள் இருந்தன.

பொன்னம்பலத்தின் மகன் காலஞ்சென்ற குமார் பொன்னம்பலமே பின்னர் தகப்பனாரின் சொத்துகளை ஆண்டு அனுபவித்து வந்தார். (இப்பொழுது வழிவழியாக இந்தச் சொத்துகள் குமாரின் அருமைப் புதல்வாரன கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தைச் சென்றடைந்திருக்கும்) குமார் பொன்னம்பலம் உயிருடன் இருந்த காலத்தில் கொழும்பில் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் கார் கண்காட்சி ஒன்று நடந்தது. அதில் குமார் பொன்னம்பலம் விலையுயர்ந்த 10 கார்கள் வரை காட்சிக்கு வைத்ததைப் பார்த்து கொழும்ப பணக்காரர்களே திகைத்துப் போய்விட்டனர்.
சரி, இனி விடயத்துக்கு வருவோம்.

‘செல்வம் அங்கே, நாயகம் இங்கே’ என்று கார்த்திகேசன் சொன்னதின் அர்த்தம் இதுதான். செல்வநாயகம் போன்றவர்கள் தென்னிலங்கையில் செல்வங்களைக் குவித்து வைத்துக்கொண்டு, நாயகத்துக்காக (தலைமைக்காக மட்டும்) வடக்கே வருகிறார்கள் என்பதையே கார்த்திகேசன் நையாண்டியாக இவ்வாறு குறிப்பிட்டார்.