சோழமுத்தன் உம் பாம்புக் காய்சலும்

திருப்பள்ளி எழுச்சியாக கோவில் மணியோசை கேட்கின்றதோ இல்லையோ இந்த வண்டில் சத்தம் மட்டும் தினமும் கேட்காத நாட்கள் இல்லை. இந்த வண்டில் சத்தம் எமது ஒழுங்கையிற்குள் வருவதற்குள் கிணற்றில் வாளி ஒன்றில் தண்ணீர் அள்ளி கச்கூசுக்கு அருகில் நாம் வைத்தும் விடுவோம்.

இதில் கூட ஒரு ‘குறைந்தவன்’ எமது துலாக் கொடியில் கை வைப்பதா என்ற ‘கள்ள” நோக்கம் இருந்து கொண்டுதான் இருந்தது. சந்தியில் நிறுத்தப்பட்ட வண்டியிற்குள் மூடி போட்ட வாளிகள் பல இருக்கும். இதில் மனித மலம் நிரம்பாத ஒன்றை எடுத்து எமது வளவிற்குள் வந்து வாளிக் கச்கூசில் உள்ள மலத்தை எடுத்து தான் கொண்டு வந்த வாளியிற்குள் நிரப்பி கச்கூஸ் வாளியை துப்பரவு செய்து விட்டு தன்பாட்டில் போய் விடுவான் சோழமுத்தன்.

ஊரின் எல்லையில் சோழமுத்தின் கச்கூஸ் வண்டி இறங்கியதும் அங்கிருக்கும் நாய்கள் தமது (வரவேற்பை) எதிர்பை காட்டத் தொடங்கி விடுவர். முதல் நாய் தனது எல்லையில் இந்த வரவேற்பை நிறுத்த அடுத்த நாய் தனது எசமானின் வளவின் எல்லையில் இருந்து ஆரம்பித்து அடுத்த வளவு வரை இதனைத் தொடரும். வளவிற்குள் புகும் சோழமுத்தனுக்கு இன்னும் அதிக வரவேற்பு வளவிற்குள் இருக்கும் ‘கூழன்’ நாயும் இணைந்து கொடுக்கும்.

இந்த வரைவேற்பு அவன் போட்டிருக்கும் மண்ணிற காச்சட்டையைப் பிய்த்து அதே கலரில் உள்ள அரைக் கைச்சட்டையையும் இல்லாமல் புடுங்கி பாரதியார் பாணியில் கட்டியிருக்கும் தலைபாகையை சங்கை கடிக்காமல் புடுங்கும் வரை உச்சமாக இருக்கும். ஆனால் நாய்கள் ஒரு நாளும் சோழமுத்தனைக் கடித்தது இல்லை. ஆனாலும் இவ் வரவேற்பு நிகழ்வு தினமும் வளவின் படலைக்கு அப்பால் சோழமுத்தனை துரத்தும் வரையில் இருக்கும். வீட்டில் இருக்கும் யாரும் இந்த நாயை அதட்டி நிறுத்துவதும் இல்லை கண்டு கொள்வதும் இல்லை.
எமது மலக் கழிவை தினமும் அகற்றி சுத்தமாக்கும் சோழமுத்தனிடம் அப்படி ஒரு ‘அன்பு’ ஒரு நாள் சோழமுத்தன் வரவில்லை என்றால் வளவு மட்டும் அல்ல ஊரே நாறிப் போய்விடும்.

சரி சோழமுத்தனை விடுத்து காய்ச்சலுக்கு தாவுவோம்…

பிளேக் நோயில் ஆரம்பித்து பன்றிக் காய்ச்சல், பறவைக் காய்ச்சல் என்றும் சாஸ், எபோலா என்றும் மலேரியாவில் ஆரம்பித்து டெங்கு வரை மனித குலத்தை விரட்டிய உயிர்க் கொல்லி நோய்கள். அலெஸ்சான்ரே கண்டு பிடித்த மருந்து தொடக்கம் எலிகளால் பரவும் நோயை அழிக்க எலிகளை அழிக்க வேண்டும் இதற்கு பூனைகளை வளர்க்க வேண்டும் என்ற அணுகு முறை உயிர்க் கொல்லிகளைத் தடுத்து நிறுத்த உதவின.

அந்த காலத்தில் பெண்கள் அதிகம் விரும்பும் செல்லப் பிராணியான பூனைகளை வளர்க்க ஊக்கிவித்த பிரச்சாரங்கள் இயற்கை வழியில் எலியைக் கடடுப்படுத்தியது என்ற செய்திகளும் ஒருபுறம் இயற்கையை சார்ந்திருந்து செயற்படுத்தப்பட்டன.

வேட்டையாடும் பிராணியாக பூனை அன்று இருந்தமையினால் அவை எலியை வேட்டையாடி பீளெக்கை கட்டுப்படுத்தின என்ற நம்பிக்கைகளும் பறவைக் காய்சலை ஒழிக்க பாதிக்கப்பட்ட பறவைகளை முற்றாக அழித்தல் என்பதுவும் பன்றிக் காய்சலையும் அவ்வாறே செய்து இல்லாமல் ஒழித்த அழித்தல்கள் நடைபெற்றன.

இவைகளிடையே நுளம்பால் பரவும் மலேரியா பாதிப்பில் இல்லாத இலங்கையின் குடியேற்றத்திட்ட விவசாயிகள் இல்லை. இது வந்தால் குலம்பன் காய்சல் ஆளை வாட்டிவிடும். அடுத்த வருடமும் என திரும்ப திரும்ப வரும் என்று குடியேற்றத்திட்ட பயிற்ச் செய்கையை விட்டுவிட்டு ஓடிய காலங்கள், கால்கள் உண்டு. ஆனால் இதே மலேரியா நுளம்மை முற்று முழுதாக துடைத்தெறிந்த பெருமையை இலங்கை இன்று கொண்டிருப்பதும் வரலாறு ஆகி இருக்கின்றது.
மேற்கு ஆபிரிக்க நாடுகளில் ஏற்பட்ட எபோலாவை கட்டுப்படுத்த முடியாமல் செஞ்சிலுவைகளும், உலக சுகாதார நிறுவனங்களும் பிச்சை வேண்டாம் நாயைப் படி என்று ஓடிய போது கியூபாவின் மருத்துவக் குழு இறுதியில் மேற்கு ஆபிரிக்க நாட்டிற்கு சென்று எபோலாவை மெல்லச் சாகச் செய்ய அண்மைய வரலாற்றை மேற்குலக ஊடகங்கள் மறைத்தாலும் வரலாறு கியூப மருத்துவ மேம்பாட்டை விடுதலை செய்திருக்கின்றது.

இதற்கு முன்பு கெயிட்டியில் ஏற்பட்ட புயல் மழை அனர்த்தங்களினால் ஏற்பட்ட அழிவு வாந்தி பேதியை (கொலரா) ஏற்படுத்தி வகை தொகையில்லாமல் மக்களைக் கொல்ல முதலில் முந்திச் சென்ற செஞ்சிலுவைகளும், உலக சுகாதார நிறுவன்களும் தமது மருத்துவர்கள், தாதிகளின் உயிர் இழப்பின் பின்பு கைவிரித்து தப்பி ஓட இதே கியூபாதான் அங்கும் இதனைக் கட்டிற்குள் கொண்டு வந்தது.
சீனாவில் இன்று பாம்பு காய்ச்சலை கட்டுப்படுத்த 7 நாட்களில் 1000 படுக்கையறைகள் கொண்ட நவீன வைத்தியசாலை அமைத்தல் நோயின் அதிகரிப்பு அதிகம் உள்ள மகாணத்தில் மக்கள் நகர்வுகளை மட்டுப்படுத்திய நகர்விற்குள் மடக்கி மேலும் பரவாமல் தடுக்க எடுக்கும் முயற்சிகள் கை மீறிப் போவதாக எண்ணிக்கைகள் காட்டினாலும் உலக சுகாதார நிறுவனம் எல்லாவற்றையும் மீறி சீனா எடுத்திருக்கும் இந்த காப்பு செயற்பாட்டை பாராட்டி இருப்பது இங்கு கவனத்தில் உலக மக்களால் எடுக்கப்பட்டிருக்கின்றது.

இங்கும் சீனா, கியூபா இடையிலான இணைந்த அணுகுமுறை பாம்புக் காய்சலை மெல்ல விரட்டும் என்பதே என் கருத்து.
கண்டதையும் சாப்பிட்டார்கள், பாம்பையும் சாப்பிட்டார்கள் இதனாலேயே சீனர்கள் இந்த வருத்தத்திற்குள் உள்ளானார்கள் என்பதற்கு பின்னால் இருக்கும் சமூகக் காரணிகளை நாம் ஆராய வேண்டும் உலகின் சனத் தொகையின் அரைபாதியை தன்னகத்தே கொண்ட நாடு 1957 இல் மாவோ இன் புரட்சிக்கு முன்பு ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் பிடியிற்கு மன்னர் ஆட்சிக்குள் வறுமையில் வாடிய மக்கள் முன்னிலையில் இருந்த பசி பலதையும் சாப்பிடத் தூண்டியிருக்கின்றது.

இதுவே பழக்கமாகி… பின்பு விருப்பமுமாகியும் இருக்கின்றது. இதற்குள் இவர்கள் பழகப்பட்ட நோயெதிர்ப்பு சக்திகளை கொண்டிருந்த போதும் நாகரீகத்தின் வளர்ச்சி உலக பொருளாதார வல்லரசாகிய சீனாவில் நிலவும் பொருளாதார சமநிலையற்ற தன்மை பசியுடன் இருந்த போது கிடைத்ததை சாப்பிட்ட நிலையில் இருந்து ஒரு பகுதி மக்கள் தம்மை விடுவித்துக் கொள்ள முடியவில்லை.

எல்லாம் சமப்படுத்தப்படாத நிலமையில் உணவுப் பழக்க வழக்கங்களில் நிலவும் ஏற்ற இறக்கங்கள் இருப்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஊடகங்களில் பரப்பப்படும் வகையில் ‘வேண்டாதது’ எல்லாவற்றையும் உண்ணுபவர்கள் என்ற பொய்பிரச்சாரம் மிகைப்படுதப்பட்டவை. இதற்குள் பொருளாதார வல்லரசை என்ன செய்தும் தடுத்த முடியாத பொருளாதார வளர்சியை தடுத்து நிறுத்த ஊடகங்கள் ஏவும் ஏவுகணை அரசியலாகவும் இங்கு நாம் பார்த்தேயாக வேண்டும்.

குழந்தைகளின் விளையபாட்டுப் பொருட்கள், பிளாஸ்ரிக் அரிசி, தொலைபேசி தொழிநுட்பத்தில் ஜி5 வரை சீனாவிற்கு எதிராக மேற்குலக பிரச்சாரங்களை நாம் புறந்தள்ளி சென்று விட முடியாது.
இதுவரை உறுதியான நிரூபிக்கப்பட்ட பாம்புக்கறி சாப்பிட்டதனால் இந்த நோய் உருவானது அல்லது பாம்பு கடித்த வெளவால் கடித்ததினால் இது உருவானது என்பது உறுதிபடுத்தாத நிலையில் ஆளுக்கு ஆள் வைத்தியக் கலாநிதிகளாக மாறி வசைபாடுதல் ஒரு மக்கள் குழாத்திற்கு எதிரான வெறுப்பு அரசியலாகவே பார்க்க வைக்கின்றது.

மீண்டும் சோழமுத்தனிடம்……

காலையில் ஆரம்பித்த சோழமுத்தனின் மனிதக் கழிவு அகற்றும் வேலை மதியம் கடந்து சென்று 2 மணிவரை நிகழும். அதுவரை யாரும் அவனுக்கு எந்த ஆகாரமும் கொடுப்பதில்லை என்றால் அது பழியாகிப் போய்விடும்.

கொடுப்பார்கள் ஆகாரம். ஆக்காத ஆகாரம் கொடுப்பார்கள். இரண்டு மூன்று தினங்களாக தூங்கியபடி பகலில் ஒரு முலையில் நிற்கும் கொள்ளை நோய் பிடித்த கோழி தனது மண்டையைப் போட்டதும் இதனைப் பத்திரப்படுத்தி அவனுக்கு கொடுப்பார்கள் ‘இறைச்சியாக’.சோழமுத்தனும் இதனை எடுத்துச் சென்று தனது வீட்டில் சமைத்து சாப்பிடுவான்.

மறு நாள் வேலைக்கு வருவான் மழை என்ன வெள்ளம் என்ன எந்த காலநிலையிலும் கொள்ளை நோயினால் தூங்கி செத்த கோழியைக் கறியை சாப்பிட்டு விட்டு ‘தெம்பா” தன் பாட்டிற்கு வேலையை கவனிப்பான்.

இங்கு தினமும் மனித மலங்களுடன் தனது வாழ்வை கழித்த சோழமுத்தனின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அளவுக்கு அதிகமாக இருந்ததினால் இந்தக் கோழி கொள்ளை நோயினால் பாதிக்கப்பட்ட இறைச்சி அவனுக்கு ஏதும் செய்யவில்லை.

இதனை அவனுக்கு கொடுப்பவர்களும் அவனுக்கு இந்த நோய்க் கோழியினால் ஏதாவது நோய் ஏற்படலாம் என்று யோசித்ததும் இல்லை…. கவனத்தில் எடுத்ததும் இல்லை. காலையில் ஆரம்பித்து மதியம் கடந்த நிலையில் எமது மனிதக் கழிவை அகற்றுபவனுக்கு அட்டவணை வைத்து நாமே சோறு கொடுத்ததும் இல்லை.
இங்கு எங்கே போனது மனிதாபிமானம். வறுமையும் பசியும் சோழமுத்தனை கண்டதையும் சாப்பிட வைத்தது. இதுவே பழக்கமாகி தொழிலும் நோய் எதிர்புச்சக்தியை தன்னக்தே உருவாக்குவதாக அமைந்தபடியால் சோழமுத்தன் உயிர் தப்பி வாழ்ந்தான்.

நாய் இற்கு சாதியத்தை ஊட்டி வண்டில் வரும் போது குலைப்பதும் வளவிற்குள் வந்து வெளியேறி ஊர் எல்லை தாண்டும் வரை துரத்திச் சென்று குலைப்பதையும் ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள். ஏய்….. குலைக்காதே இவன் எங்களில் ஒருவன்… தினமும் எங்கள் வீட்டிற்கு வந்து எமது மலங்களை அகற்றி சுத்தமாக இருக்க உதவுபவன் என்று நாயை பழக்கியதும் இல்லை.

இந்த மனிதர்களிடம் பாம்பை சாப்பிட்டான்…. கண்டதை திண்டான் ‘சாப்பாடாக’…. பேரூந்தின் பின் வளத்தினால் சீனன் ஏற முன் வளத்தினால் இறங்கி ஓடியதும்….. எங்கும் மூக்கு வாய் முடிகளை எல்லாவற்றிற்கும் அணிவித்து இதற்கு பின்னால் சீன அடையாள முகங்களை… சீன அடையாளங்களை போடுவதும் எதிர்பார்க்கப்பட்ட ‘மனிதாபிமானங்கள்’ தான்.

தொற்றாமல் இருக்கு முன் எச்சரிகையாக இருத்தல் என்பது அவசியம்தான். இதற்காக ‘சப்பட்டை” மூக்கிருப்பவன் எல்லாம் பாம்பை சாப்பிட்ட பாம்பு காய்சல்காரன் என்று நோயை அழிக்க பன்றியையும், பறவையையும் எலியையும் கொன்றது போல் கொல்ல முடியுமா. முடியுமாயின் எபோலாவை மெல்லச் சாகச் செய்த கியூபாவிற்கும் 7 நாட்களில் 1000 கட்டில்கள் உள்ள வைத்தியசாலை கண்ட சீனர்களுடன் கை கோர்த்து இந்த உயிர் கொல்லியை ஒழிப்போம்.
நமது உடலில் நோய் எதிர்ப்பு சக்திகளை உருவாக்குவோம். நோய்கள் பரவாதிருப்பதற்குரிய முன் முயற்சிகளிளை எம்மில் இருந்தே ஆரம்பிப்போம். எம்மிட்டம் இருந்தும் பிறருக்கு இது பரவலாம் என்பதை கவனத்தில் எடுப்போம். தற்போது உலகில் நடைபெறும்

பாம்புக்காய்ச்சல் விவகாரத்தில் மேலூங்கி நிற்பது சோழமுத்தனுக்கு கொடுத்த செத்த நோய்க் கோழி மனிதாபிமானமும்…. பாம்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சீன மக்களுக்கு ஆதரவாக இருப்பது போல் பாசாங்கு செய்யும் மனிதாபிமானமும்.

இவை இரண்டும் ஒரு ஒற்றைப் புள்ளிக்கான ஓட்டமாகவே எனக்குத் தோன்றுகின்றது.