ஜக்கி:விலைபொருளாக்கும் வித்தை கூடியவர்.

தேசத்தின் பொருளாதாரத்தில் சுற்றுலாப் பொருளாதாரம் எப்போதும் முக்கியமான பங்கு வகிக்கின்றது. அதிலும் பன்னாட்டு மூலதனப் பெருக்கத்திற்குப் பின் அதிக முக்கியத்துவம் பெற்றுள்ளது. அதனால் ஒவ்வொரு நாடும் சுற்றுலாத் தலங்களை உருவாக்கி விளம்பரப்படுத்தி விற்கின்றன. பல நாடுகளின் சுற்றுலாக் கையேடுகளைக் கண்டும் வாசித்தும் பார்த்தால், அந்நாடுகளில் விற்பனைக் கருத்தியல் என்ன என்பதை உணர முடியும்.


இதேபோல் ஐரோப்பாவின் ஒவ்வொரு நாடும் அவற்றின் விற்பனைக் கருத்தியலை உருவாக்கி இடங்களோடு இணைத்துவிட்டுள்ளன. இரண்டாண்டுகள் வார்சாவில் இருந்தபோது போலந்தின் விற்பனைக் கருத்தாக அழிவும் அழிவிலிருந்தும் மீள்தலும் என உணர்ந்துகொண்டேன். இரண்டு உலகப்போர்களோடு சுற்றுலாத் தலங்களை இணைத்துச் சொல்லும் காணொளிகளையும் கேட்பொலிகளையும் திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டே இருந்தேன். கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்குப் போரும் அழிவும் மீளலும் விற்பனைப்பண்டங்கள். எனது நேரடி அனுபவம் இது.

வேறுசில அனுபவங்களும் எனக்குண்டு. அமெரிக்காவின் விற்பனைக் கருத்தியல் சுதந்திரம். கனடாவின் விற்பனைக்கருத்தியல் இயற்கை, அண்மையில் 3 மாதங்கள் அங்கே இருந்தபோது உணர்ந்தது. சிங்கப்பூரின் விற்பனைக் கருத்தியல் செயற்கை உருவாக்கமும் அதன்வழிக் கிடைக்கும் கொண்டாட்டங்களும். மலேசியாவில் பரவிக்கிடக்கும் பெருந்தோட்டங்களே சுற்றுலாவில் விற்கக்கூடியவை.. சௌதி அரேபியாவில் இசுலாமியப் புனிதத் தலங்களான மெக்காவும் மதினாவும் சுற்றுலாவின் விற்பனைக் கருத்துகள் அல்லது பண்டங்கள். இலங்கையின் சுற்றுலாப் பண்டங்கள் சிதைந்து கிடக்கின்றன என்ற வருத்தத்தை அண்மையப் பயணத்தில் கேட்டேன். கொஞ்சம் பார்த்தேன்.

இப்போது இந்தியாவுக்கு வருவோம். இந்தியாவின் சுற்றுலாப் பொருளாதாரத்தில் எவையெல்லாம் விற்பனைப் பொருளாக ஆகமுடியும் என்று யோசித்துப் பாருங்கள். இந்தியாவைப் பல இனங்களும் மொழிகளும் பண்பாடுகளும் கொண்ட துணைக்கண்டம் என நினைப்பவர்கள் அவரவர் விருப்பப்படி அல்லது புரிதல்படி வெவ்வேறு கருத்துகளைச் சொல்லக்கூடும். மலையாளிகள் ஆறுகளையும் மலைகளையும் காட்டிக் கடவுளின் செல்லக் குழந்தையாக ஆகிவிட்டார்கள். அத்தோடு கதகளியென்னும் வண்ணக்கலவையை விற்பனைப் பண்டமாக்கி விற்க முடிகிறது அவர்களால்.

ஒவ்வொரு மாநிலத்திற்கும் இப்படி ஒன்றை முன்னிலைப்படுத்திய காலத்தை முடிவுக்குக் கொண்டுவர நினைக்கிறது இப்போதைய மைய அரசு. ஒட்டுமொத்த இந்தியாவின் ஒரே சுற்றுலாப் பொருளாக – கருத்தாக ஒன்றைக் கட்டமைக்க விரும்புகிறது. அதைப் புத்தம் புதிதாக உருவாக்காமல், இருப்பதிலிருந்தே உருவாக்குவதுதான் அதன் அடிப்படை இயங்கியல்.

இந்தியாவின் இயற்கை வளமும் உழைப்பும் ஐரோப்பியர்களின் கவனித்ததால் வியாபாரத்திற்காக வந்தபின், அதன் பழைமையும் தொன்மையும் இருண்மையும் சடங்குகளும் விற்பனைக்குரிய கருத்தாக இருக்கும் என நம்பினர். அந்த நம்பிக்கையின் அடிப்படையில் தான் இந்தியவியல் என்ற கல்விப்புலத்தை உருவாக்கினார்கள் என்றுகூடச் சொல்லலாம். உலகமெங்கும் இருக்கும் இந்தியவியல் துறைகளின் கற்கைப்பொருளாக இருப்பது இந்திய ஆன்மீகம் என்பதை மறுத்துவிட முடியாது.
கீழ்த்திசை நாடுகளின் ரகசியங்களுக்கும் சடங்குகளுக்குமான ஆன்மீகக்கருத்தியலின் தோற்ற நிலமாக இந்தியாவை முன்மொழிவதில் இந்தியவியல் துறைகள் முக்கியமான பங்காற்றியுள்ளன.

அதனோடு சீனமும் ஜப்பானும் போட்டியிடுகின்றன. இந்தப் போட்டியில் இந்தியாவை முதன்மைப்படுத்த ஆன்மீகமென்னும் கருத்தைக் கவன ஈர்ப்புக் கொண்டதாக ஆக்கவேண்டும். கருத்தியலை, கருத்தியலாக மட்டுமே வைத்துக்கொண்டிருப்பதைவிடக் காட்சிப் பொருளாக ஆக்குவது கூடுதல் கவன ஈர்ப்பை உருவாக்கும்.அத்தகைய கவன ஈர்ப்புதான் 122 அடி உயர ஆதியோகி.

இயற்கைச் சூழலில் நடனமிட்டும் பேசியும் வாழ்க்கை முறையை மாற்றியும் இந்திய ஆன்மீகத்தை உற்பத்திசெய்யும் இடமாக அவரது ஜமீன்( இது அவரது சொல்) நீண்டகாலமாக இருக்கிறது. அதனை விளம்பரப்படுத்தும் முக்கிய நிகழ்வு அண்மையில் நடந்த ஆதியோகியைக் காட்சிப்பொருளாகவும் அதன் முன்னே இருக்கும் லிங்க உருவத்தை வழிபாட்டு மையமாகவும் ஆக்கி முன்னிறுத்துவது.

இதை திரு. ஜக்கிவாசுதேவின் இரண்டு நேர்காணல்களும் உறுதிசெய்கின்றன. இந்தியச் சுற்றுலாப் பொருளாதாரத்தில் இனி ஆதியோகி முக்கிய இடம்பெறும். அதன்மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்குக் கொஞ்சம் அந்நியச் செலாவணி கிடைக்கும். உடன்விளைவாக இப்போதைய ஆட்சியாளர்களின் பிம்ப உருவாக்கத்திற்கும் பயன்படும்.

எல்லாம் அரசியல் வினைகளே.
எல்லாம் விற்பனைப்பண்டங்களே
எல்லாம் பேசுபொருள்களே
பேசிப்பேசிக் களிக்கலாம்.

(அ. ராமசாமி)