ஜி-20 மாநாடு: குழப்பத்தில் கதைபேசல்

(தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ)
குழுக்கள் ஒற்றுமையாலும் பொதுமைப்பட்ட பண்புகளினாலும் கட்டியெழுப்பப்படுபவை. அவற்றின் அடிப்படையே குழு உறுப்பினர்களுக்கிடையிலான பொதுநோக்கு, இணங்கிப் போகும் தன்மை, விட்டுக்கொடுப்பு ஆகியன. அவை சாத்தியமாகாதபோது, அக்குழுக்கள் நெருக்கடியை எதிர்நோக்கும். ஒன்றுக்கொன்று வேறுபட்ட, ஒருவரை ஒருவர் விஞ்ச விளைகின்ற நிலையில் குழுவுக்குள் குழப்பம் விளைவது தவிர்க்கவியலாதது. ஆனாலும் குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முயல்வது போல், எதையாவது செய்யலாம் என்ற நோக்கில், குழப்பத்தில் உள்ள குழு கூடுவதுண்டு; கதைப்பதுவுமுண்டு. ஆனால், இறுதியில் விளைவதேதும் இல்லை.

கடந்த வாரம், ஜேர்மனியின் ஹம்பேர்க் நகரில் ஜி-20 நாடுகளின் தலைவர்கள் பங்குகொண்ட மாநாடு நடந்து முடிந்தது.

என்ன பேசினார்கள்? என்ன முடிவெடுத்தார்கள்? எதைச் சாதித்தார்கள் போன்ற வினாக்கள் அர்த்தமற்றவை.

இவ்வாறான மாநாடுகளால் விளைவது ஏதுமில்லை. பேச வேண்டுமென்பதாகப் பேசுதல்; சந்திக்க வேண்டுமென்பதற்காகச் சந்தித்தல்; கலந்து கொள்ளவேண்டும் என்பதற்காகக் கலந்து கொள்ளல், அவ்வளவுதான்.

இருந்தபோதிலும், முன்னைய ஜி-20 மாநாடு போலன்றி, இவ்வாண்டு மாநாடு உலகளாவிய நாடுகளிடையே நிலவும் பாரிய வேறுபாடுகளையும் அவை பூகோள அரசியலில் செலுத்தும் தாக்கத்தையும் தெளிவாகக் காட்டியது எனலாம்.

அதேவேளை, இம்மாநாட்டுக்கு எதிராக நிகழ்த்தப்பட்ட மாபெரும் ஆர்ப்பாட்டங்களும் பேரணிகளும் இன்னொரு வகையில் மாற்றரசியல் தளத்தில் நம்பிக்கையூட்டுவனவாக உள்ளன.

ஜி-20 என்பது உலகின் முதன்மையான 20 பொருளாதாரங்களை உள்ளடக்கிய ஒரு குழுவாகும். இதில் 19 நாடுகளும் ஐரோப்பிய ஒன்றியமும் உறுப்பு நாடுகளாக உள்ளன. இவ்விருபது பொருளாதாரங்களும் கூட்டாக மொத்த உலக உற்பத்தியில் 85 சதவீதத்தையும் உலக வர்த்தகத்தில் 80 சதவீதத்தையும் உலக சனத்தொகையில் மூன்றில் இரண்டையும் கொண்டன. இவ்வகையில் இது பலம் வாய்ந்த ஒரு குழுவாகக் கருதப்படுகிறது.

2008 ஆம் ஆண்டு தொடங்கிய உலகப் பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், உலகப் பொருளாதாரத்தை ஒழுங்குபடுத்தும் நோக்கத்துடன், அமெரிக்காவின் முன்மொழிவில் தோற்றம் பெற்ற அமைப்பாகும்.

இதை, இன்னொரு வழியில் சொல்வதானால், இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய நவதாராளவாதப் பொருளாதார அமைப்பைக் கட்டுவதற்கு, அடிப்படையான ‘பிரட்டன்வூட்ஸ் உடன்படிக்கை’யின் பின்னர், உலகப் பொருளாதாரத்தை திசைவழிப்படுத்த, உலகப் பொருளாதார நெருக்கடியின் நிழலில் உருவானதே இந்த ஜி-20 ஆகும்.

2008 ஆம் ஆண்டு முதல், தொடர்ச்சியாக இம்மாநாடு நடாத்தப்பட்டு வருகிறது. இம்முறை மாநாடு, பல்வேறு காரணங்களுக்காக முக்கியமானது. அதிலும், குறிப்பாக ஏழு முக்கிய விடயங்களை இங்கு கவனத்தில் எடுக்க முடியும்.

முதலாவது, அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையிலான முரண்பாடு தொடர்ந்தும் வலுத்து வருகிறது.

இரண்டாவது, புதிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், புதிய வகையிலான அமெரிக்காவின் பொருளாதார, அயலுறவுக் கொள்கைகளைக் கையாள்தல்.

மூன்றாவது, ‘அமெரிக்க முதல்’ கொள்கையை முன்மொழிவதன் ஊடு, அமெரிக்கா உலகமயமாக்கலின் பிரதான உந்துவிசை நிலையிலிருந்து பின்வாங்குதல்.

நான்காவது, பிரிக்ஸிட் நெருக்கடியை சந்தித்திருக்கும் நிலையில், பிரித்தானியா மற்றும் பிரித்தானிய-ஐரோப்பிய ஒன்றிய உறவு என்பவற்றின் எதிர்காலம் நிச்சயமற்றதாயுள்ளது.

ஐந்தாவது, எண்ணெய் விலைகள் தொடர்ந்தும் குறைவாக உள்ளமை, எண்ணெய் ஏற்றுமதி நாடுகளில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.

ஆறாவது, தீராது தொடரும் கட்டார் நெருக்கடியும் முடிவுறாத சிரிய யுத்தமும் மத்திய கிழக்கில் ஏற்படுத்தியுள்ள தாக்கம்.

ஏழாவது, வடகொரியாவை மையப்படுத்தி சீனாவை வலிந்த யுத்தமொன்றில் தள்ளிவிட அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் எடுக்கும் முயற்சிகளும் அதற்கான சீன எதிர்வினையும்.

இந்த ஏழு காரணிகளுக்கும் காரணமான, தொடர்புபட்ட, செல்வாக்குச் செலுத்தும் அனைத்து அங்காடிகளும் இந்த ஜி-20இன் உறுப்பு நாடுகளாகும். இதுவே, இம்முறை ஜி-20 மாநாட்டை சர்வதேச அரசியல் நோக்கில் சுவையுள்ளதாக்கியது.

அமெரிக்கா – ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்கிடையிலான முரண்பாடு முன்னெப்போதுமில்லாதளவு அதிகரித்திருக்கிறது.

இதனது அடிப்படையாக, பொருளாதாரமும் வர்த்தகமுமே இருந்த போதும், இவற்றின் அரசியல் முக்கியத்துவம் முன்னிலைப்படுத்தப்படுகிறது. இம்மாநாட்டில் பங்குபற்ற வரும் வழியில் ட்ரம்ப், போலந்துக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

போலந்தும் ஜேர்மனியும் ஒன்றுடன்ஒன்று மோதல் போக்கில் பயணிக்கின்ற நிலையில், அமெரிக்க ஜனாதிபதியின் இவ்விஜயம் முக்கியமானது. ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதான பாத்திரத்தை ஜேர்மன் வகிக்கும் நிலையில், போலந்தின் தலைநகர் வார்சோவில் பேசிய ட்ரம்ப், “மேற்குலக நாகரிகங்கள் உயர்ந்தவை.

அவை கடின உழைப்பால், புதிய கண்டுபிடிப்புகளால், அழகிய சிம்பொனிகளால் உலகை நல்ல நிலைக்குக் கொண்டு செல்பவை. அவையே இவ்வுலகின் உந்து சக்தி” எனத் தனது வெள்ளைநிற இனவெறிப் பேச்சை, எவ்வித ஒளிவுமறைவுமின்றி வெளிப்படுத்தினார்.

அத்துடன், மேன்மையான மேற்குலக வெள்ளையர்களின் நாகரிகம் தெற்கினாலும் கிழக்கினாலும் தாக்குதலுக்கு உள்ளாவதாகவும் தெரிவித்தார். இன்னொருவகையில் ‘நாகரிகங்களுக்கிடையிலான மோதலுக்கு’ அழைப்பு விடுத்தார்.

அகதிகளின் ஆதரவாளராகவும் குடியேற்றவாசிகளைப் பரிவுடன் நோக்கும் ஒருவராகவும் கருதப்படும் ஜேர்மன் சான்சலர் அங்கெலா மேக்கல் மீதான நேரடித் தாக்குதலாகவும் இவ்வுரை அமைந்தது.

ட்ரம்ப் போலந்தின் தலைநகர் வார்சோவில் பேசிக்கொண்டிருக்கையில், சீன அதிபர்
ஜி ஜின்பிங், ஜேர்மன் தலைநகர் பேர்லினில் வரவேற்கப்பட்டார். மேக்கலும் ஜின்பிங்கும் அமெரிக்காவின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளை விமர்சனத்துக்குள் உள்ளாக்கினர். இது உலகநிதி மூலதனத்தின் மையம் பிரிவுகளாகச் சிதைவுண்டு கிடப்பதை கோடுகாட்டியது.

இதேவேளை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் ரஷ்யத் தலைநகர், மொஸ்கோவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பை அடுத்தே பேர்லின் வந்தார்.

மொஸ்கோவில் வடகொரியா விடயத்தில் அமெரிக்காவின் மிரட்டல்களுக்குப் பணிவதில்லை என்றும் வடகொரியா விடயத்தில் இருநாடுகளும் ஒரே கொள்கையையே கொண்டுள்ளன என இருவரும் தெரிவித்தனர்.

இது அமெரிக்கா, சீனாவை சீண்டும் வகையில் வடகொரியா விடயத்திலும் தென்சீனக் கடற்பரப்பிலும் செய்துவரும் செயல்களுக்கு எதிரான, வலுவான கூட்டணியை சீனா இராஜதந்திர ரீதியில் உருவாக்குவதை எடுத்துக் காட்டுகிறது.

மேக்கலுடனான சந்திப்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமைப் பதவியை வகிக்கின்ற ஜேர்மனியுடனான ‘மூலோபாயக் கூட்டுறவுக்கான வாய்ப்பு’ குறித்து ஜின்பிங் முன்மொழிந்தார்.

அதை வரவேற்ற மேக்கல், யுரேசியாவை இணைப்பதற்காக சீன முன்னெடுக்கும் ‘ஒருவார் ஒருவழி’ பாதையை வரவேற்று, அதற்கான ஒப்புதலை வழங்கியதோடு, கூட்டுறவுக்கான சாத்தியங்களை எதிர்நோக்கியிருப்பதாகத் தெரிவித்தார்.

இவை அமெரிக்காவுக்கு எதிரான ஜேர்மன் சீனக் ஒத்துழைப்பைக் காட்டுகின்றன. இம்முறை ஜி-20 மாநாட்டில் எடுக்கப்பட்ட படத்தைப் பார்த்தாலே இது புலப்படும். இதுவரை காலமும் எடுக்கப்பட்ட ஜி-20 அரசுத் தலைவர்களின் படத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் நடுவில் நடுநாயகமாக நின்றிருப்பர்.

ஆனால் இம்முறை அவ்வாறு நிகழவில்லை. மேக்கல், ஜின்பிங், புட்டின் ஆகியோர் நடுவில் நின்றிருக்க ட்ரம்ப் ஒரு மூலையில் நின்று கொண்டார். மாறுகின்ற நிலைவரங்களை இது சில வழிகளில் எடுத்துக் காட்டுகிறது.

முதலாவது, ட்ரம்பின் ‘அமெரிக்கா முதல்’ கொள்கையின் கீழ், உலகப் பொருளாதாரம் குறித்த முதன்மையான இடத்தை அமெரிக்கா விரும்பவில்லை. உலக அலுவல்களில் ஏனைய நாடுகளுடன் ஒத்துழையாமல் தனக்கே உரிய பாணியில் அமெரிக்கா செல்ல நினைக்கிறது.

இரண்டாம் உலகப் போரைத் தொடர்ந்த ஆறு தசாப்தகாலமாக அமெரிக்கா முன்மொழிந்து, முன்னெடுத்த ‘உலகமயமாக்கலை’ இப்போதைய அமெரிக்க நிர்வாகம்; வேறு வகைகளில் நோக்குகிறது.

இவ்விடத்தில் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் நிலை தொடர்பில் அமெரிக்க நண்பர் ஒருவர் சொன்ன கருத்தை இங்கு பகர்தல் பொருத்தம். “2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியில் இருந்து அமெரிக்கப் பொருளாதாரம் மீண்டுவிட்டது, ஆனால், மக்களோ, உழைப்பாளிகளோ மீளவில்லை.

அமெரிக்கா அரசாங்கம் பெருமுதலாளிகளைப் பிணையெடுத்தது. அவர்கள் வருமானத்திலும் இலாபத்திலும் எதுவித பாதிப்பும் வராமல் அரசாங்கம் பார்த்துக் கொண்டது. வேலையிழந்த சமூக நலன்கள் வெட்டப்பட்ட மக்கள் இன்னமும் மீளமுடியாமல் தவிக்கிறார்கள்”.

ட்ரம்பின் தெரிவின் பின்னால் உள்ள இக்காரணிகளும் கவனிக்கத்தக்கன. 2008 ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியின் பின்னர், அமெரிக்க அரசாங்கமும் அங்கு செயற்படும் நிர்வாகமும் முதலாளிகளுக்கு சார்பாகவே இயங்குகின்றன.

எனவே, இதிலிருந்து வேறுபட்ட வெளிநபரான ட்ரம்பை அமெரிக்கர்கள் தெரிய இதுவுமொரு காரணம். இதனாலேயே அமெரிக்கா பொருளாதார நெருக்கடியை தாக்குப்பிடிக்கவும் அமெரிக்க மையப் பொருளாதாரத்தை வளர்க்கவும் திறந்த சந்தைக்கும் உலகமயமாக்கலுக்கும் எதிராகப் போர்க் கொடி பிடிக்கிறது.

எந்த அமெரிக்கா, திறந்த சந்தையும் உலகமயமாக்கலும் தான் உலகில் உய்வதற்கான வழி என்றும் நவதாராளவாதமே எதிர்காலம் என்றும் சொல்லியதோ, இன்று அதே அமெரிக்கா எதிர்த்திசையில் பயணிப்பதுதான் முரண்நகை.

இம்முறை நடந்துமுடிந்த ஜி-20 மாநாடு, அமெரிக்கா முன்னெடுக்கும் ‘பாதுகாப்புவாத’ பொருளாதார முறைக்கும் ஏனையவை முன்னெடுக்கும் ‘சுதந்திர வர்த்தக’ பொருளாதார முறைக்கும் இடையிலான நேரடி மோதலாக இருந்தன.

மொத்தத்தில் இரண்டுமே நவதாராளவாத பொருளாதாரத்தின் அடிப்படைகளை மையமாகக் கொண்டே முன்னெடுக்கப்படுகின்றன என்பதை நாம் மறக்கலாகாது. சுதந்திர வர்த்கத்துக்கு எதிரான, அமெரிக்காவின் போரும் பாதுகாப்பு வாதத்துக்கெதிரான ஏனைய நாடுகளின் விமர்சனங்களும் முதலாளித்துவம் தன்னுள் உட்பொதிந்து வைத்திருந்த நெருக்கடிகள் வெளித்தள்ளப்படுவதை கோடு காட்டின.

பொருளாதாரத்துக்கு வெளியே பாதுகாப்பு, இராணுவக் கூட்டுழைப்பு ஆகிய விடயங்களில் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், ஐரோப்பிய நாடுகள், ஜப்பான் ஆகிய நாடுகள் ஒரே அணியில் உள்ளன. இவை வலுவான நேட்டோவை வழிமொழிகின்றன.

அதில் முதன்மையான அமெரிக்கப் பாத்திரத்தை வேண்டி நிற்கின்றன. மறுமுனையில் ரஷ்யா, சீனா ஆகியன இதற்கெதிரான தங்களது கூட்டிணைவை உருவாக்குகின்றன. இராணுவ, பாதுகாப்பு ரீதியில் ஒருவரையொருவர் நம்புவதற்கு தயாராக இல்லை. இது முன்குறிப்பிட்ட மத்திய கிழக்கு நிலவரம், வடகொரிய நெருக்கடி, தென்சீனக்கடல் பிரச்சினை ஆகியவற்றில் எதிரொலிக்கின்றன.

ஒருபுறம் பொருளாதார ரீதியான கூட்டாளிகள் இராணுவ, பாதுகாப்பு ரீதியான எதிரிகளாகவும் இராணுவ, பாதுகாப்பு ரீதியான கூட்டாளிகள் பொருளாதார ரீதியான எதிரிகளாகவும் உள்ளனர். இத்தகைய குழப்பங்களுடனேயே இம்முறை ஜி-20 மாநாடு நடந்தேறியுள்ளது.

வெளிப்பார்வைக்கு பொருளாதாரமும் இராணுவவாதமும் வேறுபட்டது போல் தெரிந்தாலும் அடிப்படையில் இரண்டும் ஒன்றுதான்.

ஈராக் மீதான ஆக்கிரமிப்போ, லிபியா மீதான போரோ வெறும் பாதுகாப்புக் காரணிகளுக்காக நிகழ்த்தப்பட்டவையல்ல. அதன் பின்னே அங்குள்ள எண்ணெய் வளம் என்கிற பொருளாதாரமே அடிப்படையாக இருந்தது.

இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதலைத் தொடர்ந்து நடாத்தப்பட்ட அமெரிக்காவின் பாதுகாப்புச் சபைக் கூட்டத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கேட்ட முதலாவது கேள்வி, “இந்த அனர்த்தத்தை நாம் எவ்வாறு வாய்ப்பாக மாற்றுவது?” என்பதே. அதன் வழியே ஈராக் மீதான போருக்கான ஆயத்தங்களும் காரணப்படுத்தல்களும் தொடங்கின.

ஜி-20 மாநாட்டில் முதன்முறையாக அமெரிக்காவை தவிர்த்துவிட்டு, ஏனைய 19 உறுப்பினர்களாலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட காலநிலை மாற்றத்துக்கு எதிராகப் போராடுவதற்காகவும் பாரீசில் எட்டப்பட்ட உடன்படிக்கையை முன்நகர்த்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்ட பாரீஸ் உடன்படிக்கையில் இருந்து அண்மையில் விலகியிருந்தது. இவ்வாறு வேறுவேறுபட்ட நிகழ்ச்சி நிரல்கள், முதன்மைப்படுத்தல்கள், நெருக்கடிகளுடன் ஜி-20 மாநாடு குழப்பத்தில் கதைபேசி முடிந்திருக்கிறது.

இம்மாநாட்டுக்கு எதிரான ஆயிரக்கணக்காணவர்கள் வீதியில் இறங்கி பல நாட்களாகப் போராடியிருக்கிறார்கள்.

அதிகார வர்க்கத்துக்கு எதிராகவும் முதலாளித்துவத்துக்கு எதிராகவும் மக்களது சமூக நலன்களைப் பேண வலியுறுத்தியும் ஹம்பேர்க் நகரில் பாரிய போராட்டங்களும் அதற்கெதிரான பொலிஸ் வன்முறையும் நடந்தன.

அப்போராட்டங்களில் ஒரு வினோதமான போராட்டம் பலரது கவனத்தையும் ஈர்த்தது. முதலாளித்துவம், பூகோளம் பற்றிய அக்கறையின்றியும் மக்கள் நலநோக்கின்றியும் செய்யும் வேலைகள் இறந்த மனிதர்களையே உருவாக்கி உலாவச் செய்யும் என்பதை குறியீட்டால் உணர்த்தும் வகையில் பலர் இறந்த மனிதர்கள் (ஸொம்பி) போல வேடமிட்டு நடந்து சென்றனர்.

இது உலகம் எத்திசையில் நகர்கிறது என்பதைக் குறிப்பால் உணர்த்தியது.
தலைவர்கள் கதைபேசினார்கள், தொடர்ந்தும் கதைப்பார்கள். குழப்பங்கள் தெளியலாம்; இன்னமும் குழம்பலாம்.

ஆனால், முதலாளித்துவத்தால் மக்களுக்கான விடிவைத் தரமுடியாது என்பதை இது இன்னொரு முறை உணர்த்துகிறது.

போராடுவதே வழி என்பதை ஹம்பேர்க் நகரில் தொடர்ந்து போராடிய ஆயிரக்கணக்கானவர்கள் உணர்த்தியிருக்கிறார்கள்.

அவர்கள் உலக மக்களுக்காகத்தான் போராடினார்கள். உலகை மீட்டெடுக்கத்தான் போராடினார்கள். இப்போராட்டங்கள் சொல்லும் செய்தி வலியது.

ஜி-20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உரையில் எழுப்பிய ஒரு வினா பிரதானமானது. அவர் கேட்ட கேள்வி இதுதான். “இன்றைய காலத்தின் அடிப்படையான கேள்வி பிழைத்திருப்பதற்கான மனஓர்மம், மேற்குலகிடம் இருக்கிறதா”?
இக்கேள்வியே இம்மாநாட்டுக்கான முடிவுரையை ஒருவரியில் சொல்லிவிட்டது.

ஆனால், உலகில் உள்ள மக்கள் தங்களிடமே கேட்க வேண்டிய கேள்வி ஒன்று உண்டு. “இலாபவெறி கொண்ட நிதிமூலதனத்தை காத்து வளர்க்கும் அரசுகளுக்கு எதிராக போராடுவதற்கான மனஓர்மம் எங்கள் எல்லோரிடமும் இருக்கிறதா?”

இக்கேள்விக்கான விடையே எமது குழந்தைகளின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும்.