ஜெயலலிதாவின் மரணம் உண்மை வெளிவருமா……?

திண்டுக்கல் சீனிவாசன் கூறுகின்றார் ‘ஜெயலலிதா இட்லி சாப்பிடவுமில்லை. சட்னி சாப்பிடவுமில்லை. எல்லாம் பொய்’. இவர்களெல்லாரும் எவ்வளவு தூரம் மக்களை முட்டாளாக்கி விட்டார்கள். கோடிக்கணக்கான மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலமைச்சரின் உடல் நிலையை மறைத்து வைத்ததல்லாமல், வாய் கூசாமல் பொய்களைகூட கட்டவிழ்த்திருக்கின்றார்கள். இதற்குத் தற்காலிகத் தமிழக அரசு, மோடியின் மத்திய அரசு எல்லாமே உடந்தையாகவிருந்திருக்கின்றன. சட்டத்தைத் தம்போக்குக்கு வளைத்திருக்கின்றன. இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தின் உண்மை நிலை கண்டறிய இந்திய மத்திய அரசின் புலனாய்வுத்துறை மூலம் விசாரணை செய்யப்பட்டு , உண்மை வெளிக்கொணரப்பட்டுக் குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும்.

இவ்விசாரணையின் முடிவுகள் மூலம் நிச்சயம் பல முக்கிய புள்ளிகள் தண்டிக்கப்படுவார்கள். தமிழக அரசியற் தலைவர்கள் பலரும் இவ்விசாரணைக்கு மத்திய அரசைக் கோரியிருக்கின்றார்கள். நியாயமான கோரிக்கை. மத்திய அரசும் பாதிக்கப்படும் நிலை இருப்பதால் மோடி அரசின் காலத்தில் சுயாதீன விசாரணைக்கு வாய்ப்பு இருக்குமா என்பது சந்தேகமே. ஆனால் என்றோ ஒருநாள் இதற்கான விசாரணை நடைபெற்றுக் குற்றவாளிகள் அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வொன்று மீண்டும் நடைபெறாதிருக்கு இவ்விசாரணை மிகவும் அவசியம்.

ஜெயலலிதா இருந்தவரையில் மத்திய அரசால் அவரது குற்றங்களைக்காட்டி அவரைப்பணிய வைக்க முடியவில்லை. ஜெயலலிதாவும் தமிழக நலன்களை மத்திய அரசுக்கு விட்டுக்கொடுக்காது உறுதியாக நின்றார். ஆனால் இன்றைய தமிழக அரசோ மோடியின் மகுடிக்கு ஆடும் சர்ப்பமாகவே மாறி விட்டது. ஆட்சி மாற்றம் தவிர்க்க முடியாதது.