தண்ணீர்ப் பஞ்சமே மிகப்பெரிய பிசாசு

உலகிலேயே தண்ணீரில்லாத முதல் நகரமாக தென்னாபிரிக்காவின் கேப்டவுண் மாறிக் கொண்டிருக்கிறது என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். கேப் டவுண் கடுமையான வறட்சியில் – நீர்ப்பஞ்சத்தில் – சிக்கித்தவிக்கிறது. இங்கே மூன்று ஆண்டுகளாக மழை வீழ்ச்சியில்லை. இதனால் தண்ணீருக்கான கலவரங்கள் எந்த நேரத்திலும் வெடிக்கலாம் என்ற அச்சம் உருவாகியுள்ளது. தற்போது தண்ணீரைப் பெறுவதற்காக நீர் விநியோக அட்டை அமூல்படுத்தப்படுகிறது. இதில் ஒரு குடும்பத்துக்கு 50 லீற்றர் தண்ணீரே கிடைக்கும். அதற்குள்தான் குளியல், குடிநீர்த்தேவை, சுத்தமாக்கல், ஆடை கழுவுதல் உள்ளிட்ட அனைத்தும். (இதைப்படிக்கும்போது யாழ்ப்பாணத்திலுள்ள மெலிஞ்சிமுனை உள்ளிட்ட பல தீவுப்பகுதிக் கிராமங்களின் காட்சி உங்களுக்கு மனதில் விரியலாம்).கேப்டவுண் மக்களுக்கு இந்த நீரைக்கூட அயல் பிரதேச – அயல் நகர மக்களே வழங்குகிறார்கள். ஒவ்வொரு குடும்பமும் ஐந்து லீற்றரிலிருந்து தங்களால் முடியுமான அளவுக்குக் கொடுக்கிறார்கள். அருகிலுள்ள விவசாயப் பிரதேசத்திலிருந்தும் குறிப்பிட்டளவு நீரை விவசாயிகள் கேப்டவுணுக்குக் கொடுக்கிறார்கள். இதற்காக சமூக வலைத்தளங்களில் ஒருங்கிணைப்புப் பணிகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், இது தொடர்ந்து நடக்கும் என்று சொல்ல முடியாது. ஏனென்றால் அவர்களுக்கும் தண்ணீர்ப்பிரச்சினை உண்டு.

தண்ணீரைப் பெறுவதற்காக நிற்கும் நீண்ட வரிசைகளை கேப்டவுணில் எப்போதும் காணலாம். நள்ளீரவிலும் அதிகாலையிலும் கூட மக்கள் தண்ணீருக்காக விழித்திருக்கிறார்கள். சிறுவர்கள், பெண்கள், முதியோர், கறுப்பர், வெள்ளையர் எந்தப் பேதங்களுமில்லாமல் க்யூ நீள்கிறது. ஆம், நாற்பது இலட்சம் பேரும் தெருவில் நிற்கிறார்கள்.

இது இப்பொழுதுள்ள நடைமுறை.

நாளை – எதிர்காலத்தில் – இந்த நீரையும் வழங்க முடியாத நிலை அரசுக்கும் – இந்தளவு நீரைக்கூடப் பெற முடியாத நிலை மக்களுக்கும் ஏற்படலாம். அப்படியான நிலை உருவாகும்போது கேப்டவுனிலிருக்கும் 40 லட்சத்துக்கும் கூடுதலான மக்களும் (அப்பொழுது சனத்தொகை இன்னும் அதிகரித்திருக்குமல்லவா) வேறிடங்களை நோக்கிப் பெயர வேண்டியதுதான். வேறு வழியில்லை. ஆழ்துளைக் கிணறுகள் அத்தனையும் இரக்கமேயில்லாமல், ஈரமில்லாமல் கைவிட்டு விட்டன.

எனவே யுத்தமில்லாமல், குண்டுகளோ தாக்குதலோ நிகழாமல் ஒரு நகரம் – கேப் டவுண் வீழ்ச்சியடைந்து விடும். அங்கிருக்கும் பெருந்திரள் மக்கள் இடம்பெயர்ந்து செல்ல வேண்டியேற்படும். இயற்கை தொடக்கும் போரை எளிதில் வெல்ல முடியாது.

இது ஏதோ தூரத்திலுள்ள ஆபிரிக்கக் கண்டத்தில்தானே நடக்கிறது. இதற்கும் நமக்கும் என்ன சம்பந்தமிருக்கு என்று யாரும் யோசிக்கக் கூடும். நீர்ப்பிரச்சினை எங்கோ, யாருக்கோதான் உள்ளது என்றில்லை. அது எல்லோரையும் சுற்றிப் பிடிக்கப்போகிறது. ஏன் நம்மை நோக்கியே வந்து கொண்டிருக்கிறது. ஒரு பெரிய பிசாசைப்போல, பேயைப்போல நம்மைத் தேடி வருகிறது.

பாருங்கள், நமக்கெல்லாம் கனவுலகமாகக் காட்சியளிக்கும் சிங்கப்பூரின் கதியை – கதையை. “தண்ணீர்ப்பற்றாக்குறையைச் சமாளிப்பதற்கு உளவியல் ரீதியாகத் தயாராக இருக்க வேண்டும்” என்று சொல்லியிருக்கிறார் சிங்கப்பூரின் துணைப் பிரதமர் தியோ சீ ஹியென்.

அவர் சிங்கப்பூரின் தண்ணீர்ப்பிரச்சினையைப் பற்றி விளக்குகிறார், “சிங்கப்பூரின் நீர்த்தேங்கங்களில் தண்ணீர் வற்றிப் போகும் நிலை வரலாம். அப்படியான சூழலில், அதைச் சமாளிக்கத் தயாராயிருக்க வேண்டும்” என்று கேட்டிருக்கிறார் தியோ. “மலேசியாவிலிருந்து தற்போது இறக்குமதி செய்யப்படும் தண்ணீர், சிங்கப்பூரின் தண்ணீர்த் தேவையில் பாதியைப் பூர்த்தி செய்கிறது. சிங்கப்பூரின் பெரிய நீர்மையமான லிங்கியூ நீர்த்தேக்கத்தில் தண்ணீரின் அளவு குறைந்து வருகிறது. இதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும். சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்து தண்ணீர் விநியோகத்தில் சிங்கப்பூர் சிறந்த உத்திகளுடன் கூடிய அணுகுமுறையைக் கடைப்பிடித்து வருகிறது. உள்நாட்டில் தண்ணீர் உற்பத்தியைப் பெருக்க அரசாங்கம் பெருமளவு முதலீடு செய்துள்ளது. நீர்ப் பிடிப்புப் பகுதிகள் பல விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளன. புதிய தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்காக 2000 ஆண்டு தொடக்கம் தண்ணீர்க் கட்டமைப்புக்காக ஆண்டுதோறும் 430 மில்லியன் வெள்ளியைச் செலவிடுகிறது. அடுத்த ஐந்து ஆண்டுகளில் இந்தத் தொகை ஆண்டுக்கு 800 மில்லியன் வெள்ளியாக உயர்த்தப்படும்…” என.

மலேசியாவிலிருந்து வருநீர் மூலமாகவும், கடல்நீரைக் குடிநீராக்குவதில் அதிநவீன வடிகட்டித் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் மூலமாகவும் சிங்கப்பூரின் நீர்த்தேவைகள் பூர்த்திசெய்யப்படுகின்றன. ஆனாலும் அங்கே நீருக்கான நெருக்கடிகள் ஏற்படக்கூடிய அபாயச் சாத்தியங்களே அதிகளவில் காணப்படுகின்றன.

இதனால், “மாற்றுத் தண்ணீர் வளம் என்பது மழை பொழியும் தன்மையைப் பொறுத்து மட்டும் அமைவதல்ல. பாரம்பரியமான நம்முடைய தண்ணீர் சேகரிப்பு, பயன்பாடு, விநியோக முறைக்கு ஏற்ற வகையிலும் அது அமைந்துள்ளது” என்று விளக்கியிருக்கிறார் தியோ.

இதையே நாமும் கவனத்திற் கொள்ள வேண்டியுள்ளது.

இப்பொழுது வன்னி உட்பட நாட்டின் பல இடங்களும் கடுமையான வரட்சியினால் பாதிக்கப்பட்டுள்ளன. இலங்கையின் காலநிலைப் பிறழ்வு கடுமையான வறட்சியையும் பெரு வெள்ளத்தையும் உண்டாக்குகின்றன. இரண்டுமே தீங்கானவை. ஒன்று கடுமையான வரட்சிப் பாதிப்புகள். மற்றது பெருவெள்ளப் பாதிப்புகள். இரண்டிற்குமாக அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பெருமளவு நிதியைச் செலவளித்து ஏராளமான சிரமங்களை எதிர்கொள்கிறது. இதை விட மக்கள் சந்திக்கின்ற இடர்கள் அதிகம்.

இந்த நிலை எதனால் ஏற்படுகிறது?

நமது பொறுப்பற்ற செயற்பாடுகளினால்தான். ஆகவே இதற்கு நாமே பொறுப்பாளிகள்.

“நாமா?” எனப் பலரும் பதறியடித்து ஆச்சரியப்படலாம். சிலரோ பலரோ இதை மறுதலிக்கவும் கூடும். ஆனால், இதில் யாரும் தப்பவே முடியாது. சூழலிற் பாதிப்பை ஏற்படுத்துவோரே இதில் முக்கியமான பாத்திரவாளிகள், சூத்திரதாரிகள் என்றாலும் கூட சூழல் ஏற்படுத்தும் பாதிப்பென்பதும், இயற்கையின் சீற்றமும் எல்லோரையும் பாதிக்கும். அது தன்னைச் சிதைத்தவர்களை மட்டும் தேர்ந்தெடுத்துத் தாக்கத்தையோ பாதிப்பையோ உண்டாக்காது. ஆகவேதான் எல்லோருக்குமே பொறுப்புண்டு என்று சொல்ல வேண்டியுள்ளது. சூழலில் சிதைவுகளை உண்டாக்குவோரை நாம் கண்டு கொண்டே பேசாதிருக்கிறோம் அல்லவா. அதுவே பெரிய தவறு. அதைச் செய்கின்றவர்கள் அதிகார அடுக்குகளில் இருப்போராக இருந்தால் என்ன? பணமுதலைகளாக இருந்தாலென்ன? படித்தவர்களாக இருந்தால் என்ன அவர்கள் அனைவரையும் நாம் எதிர்த்தேயாக வேண்டும். இல்லையென்றால் அழிவுதான்.

வன்னிக் கிணறுகள் பலவற்றில் இப்பொழுது – இந்த அருங்கோடையில்- நீரில்லை. அந்தளவுக்குக் கடுமையான நீர்ப்பற்றாக்குறையும் வறட்சியும். வான்பயிர்களே வாடுகின்றன. இதற்குக் காரணம், நிலத்தடி நீர்ச்சேகரிப்பில்லை. யாழ்ப்பாணத்தைப்போல நீரை ஏந்தி வைத்திருக்கக் கூடிய சுண்ணக்கற்பாறையைக் கொண்ட நிலம் வன்னியில் இல்லை. அல்லது மட்டக்களப்பைப் போல களப்புகளைக் கொண்ட நீர்ப்பிரதேசம் வன்னிக்குக் கிடையாது. வன்னியில் மட்டுமல்ல, நன்னீரைப் பெறக்கூடியமாதிரி யாழ்ப்பாணத்தின் தீவுப் பிரதேசங்களும் இல்லை.

ஆகவே நிலத்தடி நீரைச் சேகரிப்பது, முடிந்தளவுக்கு சீரான மழை வீழ்ச்சியைப் பெறுவது போன்றவையே இதற்கான தீர்வாகும். இதற்கு சூழலியல் தொடர்பான விழிப்புணர்வும் நெகிழ்ச்சயற்ற சூழலியல் நடைமுறைகளும் சட்டங்களும் அவசியம். அரசு மற்றும் சமூக மட்டத்திலான பாதுகாப்பு ஏற்பாடுகளே இதற்குத் தீர்வாகும்.

முக்கியமாக காடழிப்பு, மரம் வெட்டுதல் போன்றவற்றினாலும் நாட்டில் மலைகளைச் சிதைப்பதினாலும் மழை சீரற்றுப்போகிறது. மறுவளத்தில் பெய்யும் மழையின்போது பெருகியோடும் வெள்ளத்தை வடிகாலமைப்புகளின் மூலம் தேக்குவதற்கான ஏற்பாடுகளும் நம்மிடம் பெரிய அளவில் இல்லை. 1500 வருடங்களுக்கு முற்பட்டே நீர்சேகரிப்புத் தொழில் நுட்பத்தையும் பாரம்பரியத்தையும் கொண்டுள்ள இலங்கையர்கள் இப்போது அதில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.

நிலத்தடி நீரைச் சேகரிக்க முடியாமைக்குக் காரணம் அதற்கான பொறிமுறைகள் இல்லை என்பதுவே. சனத்தொகை அதிகரிக்கும்போது குடிப்பரம்பல் விரிவடையும். குடிப்பரம்பல் விரிவடைய விரிவடைய நீர்ச்சேகரிப்பு மையங்களும் அதிகரிக்க வேணும். ஆனால் அப்படியான ஏற்பாடுகள் எதையும் காணவில்லை. புதிய குளங்களின் உருவாக்கம் பற்றித் தேடினால் விடை எதுவும் இல்லை என்றே கிடைக்கிறது.

மட்டுமல்ல, இன்னொரு ஆபத்தும் இங்கே உள்ளது. என்னவென்றால், வரவரக் குளங்களின் தொகை குறைந்து கொண்டிருக்கிறது. புதிய குளங்களை உருவாக்குவதற்குப் பதிலாக இருக்கின்ற – இருந்த குளங்களையே மண் நிரப்பி குடியிருப்புகளாக்கி விட்டார்கள் இன்றையை இலங்கையின் குடிமக்கள். இதைச் செய்தவர்களில் பலரும் படித்தவர்கள். செல்வாக்குள்ளவர்கள். இதைப்பற்றிக் கதைத்தபோது வவுனியாவில் கடந்த 10 ஆண்டுகளில் 89 குளங்கள் இப்படிக் காணாமல் போய் விட்டன என்று கூறுகிறார் பசுமை இயக்கமொன்றைச் சேர்ந்த களச் செயற்பாட்டாளர்.

இது மன்னிக்கவே முடியாத பெருந்தவறு. இதனால் நீர்ச் சேகரிப்பு மட்டுமல்ல, ஒவ்வொரு பெருமழையின்போதும் வெள்ளம் வாரடித்துப் பாய்கிறது. அப்படிப் பாயும் வெள்ளத்தினால் வீதிகள் பாழாகின்றன. குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்குகின்றன. தொற்றுநோய்கள் பரவுகின்றன. பல இடங்களில் வெள்ளம் பாய முடியாமல் கடைகள், குடியிருப்புகளுக்குள்ளேயே தேங்குகின்றன. அப்போது அனர்த்த முகாமைத்துவ பிரிவும் பிரதேச சபை, நகரசபை போன்றனவும் பிரதேச செயலகங்களும் செய்வதறியாவது கைகளைப் பிசைந்து கொண்டு நிற்கின்றன.

இந்தத் தவறுகளுக்கெல்லாம் உடந்தையாக இருப்பதும் இதே நிர்வாகங்கள்தான். இது ஆகப் பெரிய தவறு.

குளங்களைத் தூர்வாரிய காலம்போய், அவற்றை மூடிக் குடியிருக்கும் காலம் வந்திருக்கிறது இன்று. அதனோடு வந்ததே இந்த வறட்சி. வன்னியின் வளமான ஆதரமே நீர்தான். நீரேந்தும் குளங்கள்தான். இரணைமடு இதில் பெரிய நீர்த்தேக்கம். வடக்கிலேயே பெரிய நீர்த்தேக்கம் என்ற பேரெடுத்தது. கிளிநொச்சியின் மையத்தில் உள்ள இரணைமடுவைச் சுற்றி வறட்சி கொடிகட்டிப் பறக்கிறது. அக்கராயனிலும் இதுதான் கதை. குளத்திலிருந்து ஒரு கிலோ மீற்றர் தொலைவில் உள்ள கெங்காதரன் குடியிருப்பில் தண்ணீருக்காக அலைகிறார்கள் மக்கள்.

மக்களை மட்டும் வறட்சி பாதிக்கவில்லை. மாடுகள், ஆடுகள் போன்ற கால்நடைகளையும் பாதிக்கின்றது. அதற்கப்பால் காட்டிலுள்ள மரங்கள் பட்டழிகின்றன. பறவைகள், விலங்குகள், நீர்ப்பூண்டுகள், நீர்ப்பிராணிகள் என எல்லாமே அழிகின்றன. இப்படி ஒட்டு மொத்தமாகவே சூழல் கெட்டழிந்தால் முடிவு?

2025ஆம் ஆண்டுவாக்கில் உலக நாடுகளில் இரண்டில் மூன்று பங்கு நாடுகளில் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஐ.நா போன்ற உலக அமைப்புகளே நீரைக்குறித்தும் சூழல் பாதுகாப்பைக் குறித்தும் எச்சரிக்கை மணிகளைத் தொடர்ந்து அடித்துக் கொண்டிருக்கின்றன.

”2025ஆம் ஆண்டில் தண்ணீரின் தேவைக்கேற்ப இருப்பு இல்லாமல் போகும், அல்லது தண்ணீரின் தரம் குறைந்து அதனை பயன்படுத்த இயலாது போகும். ஆசியாவில் இது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தும்” என்று தெற்காசிய நாடுகளுக்கான அமெரிக்க உதவிச் செயலர் ராபர்ட் பிளேக் எச்சரித்துள்ளார்.

தண்ணீர்ப்பஞ்சம் வந்தால் பொருளாதாரப் பாதிப்பிலிருந்து எல்லாமே நிகழும். அது ஆபத்துகளை விளைவிப்பதிலேயே ஆகப் பெரிய பிசாசு ஆகும்.

இதற்குள்ளேதான் மகாவலியைப் பற்றிய கதைகளும் வடக்கிலே எதிரும் புதிருமாக நடந்து கொண்டிருக்கின்றன. எழுத்தாளர் ப.தயாளன் குறிப்பிட்டிருப்பதைப்போல, “….என்னதான் கதைத்தாலும் கடைசியில் மகாவலி நீரைக் கொண்டு வரும்படி போராடும் நிலை வடக்குக்கு ஏற்படவே செய்யும். இப்போதுள்ள காலநிலை மாற்றம், இயற்கையின் சீர்குலைவு என்பன அவற்றுக்கு வழிவகுக்கும். அப்போது சிங்களவர்கள் வடக்குக்கு மகாவலியை அனுப்ப வேண்டாம் என்று போர்க்கொடி தூக்குவார்கள்.

(கருணாகரன்)