தமிழக தலித் அமைப்புகளும் ஜிக்னேஷ் மேவானியும்..

மிகக் குறைந்த காலகட்டத்தில் இந்தியத் துணைக்கண்டம் முழுமையிலும் உள்ள ஒடுக்கப்பட்ட, சிறுபான்மை மற்றும் இடதுசாரிகளின் ஆதரவைப் பெற்ற ஒரு இளம் தலித் தலைவராக ஜிக்னேஷ் மேவானி உருப்பெற்றுள்ளார். அந்த வகையில் கன்ஷிராமுக்குப் பின் ஒரு நம்பிக்கை நட்சத்திரமாக இன்று அவர் வெளிப்படுகிறார்.

ஏன் கன்ஷிராமை இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது?

கன்ஷிராமின் தலித் அரசியலில் நான்கு அம்சங்கள் முக்கியமானவை.
1. அவர் தலித்களிடையே இருந்த உட்சாதி வேறுபாடுகளைத் தாண்டித் தன் அரசியலைக் கட்டமைத்தார். இன்றளவும் கன்ஷிராம் எந்த உட்சாதியைச் சேந்தவர் என்பது கூடப் பொதுப்புலத்தில் யாருக்கும் தெரியாது.
2. “பகுஜன்” – என்கிற பௌத்தக் கருத்தாக்கத்தின் அடிப்படையில் அவர் தலித்கள் + சிறுபான்மையினர்+ ஒடுக்கப்பட்ட மிகப் பிற்படுத்தப்பட்டவர்கள் என ஒன்றிணைத்தார். பா ர்ப்பனர், சத்திரியர் முதலான ஆதிக்க சாதியினரை தவிர்த்தார். அவர் உயிருடன் இருந்த வரையிலும், மாயாவதியின் முதற்கட்டத் தலைமையின்போதும் இந்த ஒற்றுமை காப்பாற்றப்பட்டது. முன்னதாக இப்படியான ஒடுக்கப்பட்ட ஊழியர்களை ஓரணியில் திரட்டிப் போராடிய அனுபவம் மிக்கவராகவும் கன்ஷிராம் இருந்தது குறிப்பிடத் தக்கது.
3.கன்ஷிராம் இறுதிவரை மிக உறுதியாக பார்ப்பனர் மற்றும் உயர்சாதி ஆதிக்கத்திற்கு எதிராக இருந்தார். எந்நாளும் அவர்களுடன் அவர் சமரசமானது இல்லை.
4.இந்துத்துவ அர்சியலுக்கு அவர் எந்நாளும் துணைபோனதில்லை. எனவே பகுஜன் கூட்டணியின் நம்பிக்கையை அவரால் தக்க வைக்க முடிந்தது.

இன்றளவும் உ.பி யில் பகுஜன் சமாஜ் கட்சி ஆட்சியில் இல்லாவிடாலும் ஒரு காத்திரமான அரசியல் சக்தியாகத் தொடர்வதன் பின்னணி இதுதான். பகுஜன்சமாஜ் இன்று ஆட்சிக்கு வர இயலாமல் போன நிலை கன்ஷிராமுக்குப் பின் மாயாவதியின் தலைமை செய்த தவறுகளால் ஏற்பட்டதுதான். குறிப்பாக இந்தப் பரந்துபட்ட அடித்தள மக்களின் ஒற்றுமையை அவர் சிதைத்தார். பார்ப்பனர்களை நம்பி ‘சர்வஜன்’ எனும் கருத்தாக்கத்தை முன்வைத்து ‘பகுஜன்’ எனும் கருத்தாக்கத்தைப் பலவீனப்படுத்திச் சிறுபான்மை, இதர தலித்கள் மற்றும் மிகப் பிற்படுத்தப்படோரிடமிருந்து விலகியதுதான் பகுஜன் சமாஜ் கட்சியின்இன்றைய வீழ்ச்சிக்குக் காரணம்..

பொதுவாழ்க்கையில் கன்ஷிராம் எந்நாளும் ஊழலுக்கு இடம் கொடுத்ததில்லை. அதிலும் மாயாவதி தவறினார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
கன்ஷிராமின் இந்தத் தொடர்ச்சியை நீண்ட இடைவெளிக்குப் பின் ஜிக்னேஷ் மேவானியிடம்தான் பார்க்கிறோம். அவர் இன்று சிறுபான்மை மக்களால் மட்டுமல்ல இடதுசாரிகளாலும் நேசிக்கப்படுபவராக உருப்பெற்றுள்ளார்.
+++++++++++++++++++++++++++++++++++++++++++++++++
தமிழகத்தையும் பெரியாரையும் முன்மாதிரி என ஜிக்னேஷ் மேவானி சொல்லிச் சென்றதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும்.

அவர் பெரியாரை முன்மாதிரி எனச் சொன்னது பெரியார்முன்வைத்த ஒரு பார்ப்பன எதிர்ப்பு அரசியலைத்தானே ஒழிய பிந்திய திராவிட அரசியலை அல்ல. இங்குள்ள தலித் அரசியலையும் அவர் முன் மாதிரியாகச் சொல்லவில்லை.

ஏன்?

இங்கே கால் நூற்றாண்டுக்கு முன் எழுச்சி பெற்ற தலித் அரசியல் பெரிய அளவில் நம்பிக்கை நட்சத்திரமாக எதிர் பார்க்கப்பட்ட போதிலும் தொடர்ந்து என்ன நடந்தது?

மிக விரைவில் அது அந்த நம்பிக்கையை இழந்து பலவீனமாகிப் போனது. காரணங்கள் வெளிப்படையானவை.

1.தலித் எழுச்சி இங்கு உட்சாதி ஒற்றுமை பற்றிக் கவலைப்படவே இல்லை. அருந்ததியர்களின் இட ஒதுக்கீட்டைப் பிற தலித் அமைப்புகள் இன்றளவும் ஏற்கவில்லை. தலித் அமைப்புகளில் ஒரு பிரிவு தாங்கள் தலித்களே இல்லை என்கிறது.

2. திராவிட இயக்கத்தின் மிக முக்கியமான பங்களிப்பான பார்ப்பன ஆதிக்க எதிர்ப்பு என்பதை தலித் அரசியல் இங்கு கைவிட்டது. ஜிக்னேஷ் இன்று ஆதர்சமாகக் குறிப்பிடும் பெரியார் இங்கு வில்லனாகச் சித்திரிக்கப்பட்டார்.

3. இடதுசாரிகளையும் எதிரிகளாகத்தான் இன்றளவும் தலித் இயக்கங்கள் எதிர்கொள்கின்றன. அவர்களின் தீண்டாமை ஒழிப்பு இயக்க முயர்சிகளை எல்லாமும் கூட ஒரு போட்டிச் செயல்பாடாகக் கருதும் நிலையே இங்குள்ளது.

4. தலித் அறிவுஜீவிகளாக மேல் எழுந்தோர் அப்பட்டமாகப் பார்ப்பனீயத்தை ஆதரித்தனர். சில சுய லாபங்களை முன்னிட்டு அவர்கள் மேற்கொண்ட அரசியல் நகர்வுகளும் பெரியாருக்கு எதிராக மேற்கொண்ட அவதூறுகளும் பெரியார் வழி வந்த சாதி எதிர்ப்பாளர்கள், அறிவுஜீவிகள் ஆகியோரை அந்நியப்படுத்தின. இன்று தலித் அரசியல் செயல்படும் அளவிற்குக்கூட தலித் இலக்கிய அமைப்பு என்பதெல்லாம் செயல்பாடு இல்லாமல் அர்த்தமற்றுப் போனதில் இந்த அறிவுஜீவிகளின் பங்கு முக்கியமானது. இன்று தமிழில் தலித் இலக்கியத்திற்கு ஒரு பங்கு உள்ளது என்றால் இமயம், அழகிய பெரியவன் முதலான தனிப்பட்ட தலித் படைப்பாளிகளின் பங்களிப்புதான் அதன் அடிப்படை.

5.தலித் அரசியலுக்கு மிக உறுதியான, நம்பிக்கையான ஆதரவு சக்திகளாக இருப்போர் சிறுபான்மையினர். ஒரு உறுதியான இந்துத்துவ எதிர்ப்பை ஜிக்னேஷ் மேவானி இன்று மேற்கொள்வதைப்போல இங்குள்ள தலித் இயக்கங்கள் மேற்கொள்ளவில்லை. சிறுபான்மை ஆதரவைப் பெறுவதில் அது பெரிய இழப்பு என்பதை அவர்கள் உணர வேண்டு

6. கன்ஷிராம் மட்டுமல்ல டாக்டர் அம்பேத்கரும் எந்நாளும் தேசியவாதத்திற்குள் முடங்கியதுமில்லை. அம்பேத்கர் அகில இந்தியத் தேசியத்தை மட்டுமல்ல, மராட்டிய தேசியத்தையும் எதிர்த்தார். ஆனல் இங்கே நம் தலித் அமைப்புகள் சில நேரங்களில் அவை தலித் அமைப்புகளா இல்லை தமிழ்த் தேசிய மைப்புகளா என வித்தியாசம் தெரியாத அளவிற்கு நடந்து கொள்கின்றன. தேசியவாதம் எப்போதுமே பெரும்பான்மைச் சமூகத்தை எதிர்த்துக்கொள்ளாது என்பதை மறந்துவிடக் கூடாது.

ஒரு முப்பதாண்டுகளாக தலித் அரசியலைக் கவனித்து வரும் அடிப்படையிலும் தலித் இயக்கங்களுடன் இணைந்து ‘தலித் அரசியல்’ ஆவணம் ஒன்றை வெளியிட்ட அனுபவத்தின் அடிப்படையிலும் தலித் இலக்கியத்தின் தொடக்க நிலையில் அப்படியான முயற்சிகளுடன் இணைத்துக் கொண்டவன் என்கிற முறையிலும் இவற்றை இங்கே முன்வைக்கிறேன்.

(Marx Anthonisamy)