தமிழரசுக் கட்சி எப்போதும் ஐ.தே.கவின் கூட்டாளியே! வடக்கு – கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள் பேட்டி

(வாசுகி சிவகுமார்)

ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாங்கிப்பிடித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், மாகாண சபையைப் பலப்படுத்தும் நோக்குடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய பாராளுமன்ற சட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்க வேண்டும் என்கின்றார் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாண முன்னாள் முதல்வர் அ. வரதராஜப்பெருமாள். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய நேர்காணலில், கூட்டமைப்பின் ஆதரவுக்கு பிரதியுபகாரமாக, ஐக்கிய தேசியக் கட்சி, அழகான வெற்று வாக்குறுதிகளைத் தவிர வேறெதனையும் தரவில்லை என்கிறார். அவரது நேர்காணலின் முழுவிபரம்.

கேள்வி: ஐ.தே. கட்சிக்கு தாம் ஆதரவளிக்கப்போவதில்லை எனக் கூறிவந்த கூட்டமைப்பு தற்போது நாட்டில் நிலவும் அரசியல் குழப்ப நிலைக்குத் தீர்வுகாணும் வகையிலேயே ஐக்கிய தேசிய முன்னணி மீண்டும் ஆட்சியமைப்பதற்கு ஆதரவு வழங்க முடிவெடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இதனை நீங்கள் எவ்வாறு பார்க்கின்றீர்கள்?

பதில்: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைப் பொறுத்த வரையில் குறிப்பாக தமிழரசுக் கட்சியைப் பொறுத்த வரையில் இது ஒன்றும் புதிரானதோ அல்லது ஆச்சரியத்துக்குரிய விடயமோ அல்ல. தமிழரசுக் கட்சியினர் எப்போதுமே ஐக்கிய தேசியக் கட்சியின் கூட்டாளிகளாகவே செயற்பட்டு வந்திருக்கிறார்கள். தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டம் நடந்த காலத்தில் அவர்களால் வெளிப்படையாக ஐக்கிய தேசியக் கட்சியை ஆதரிக்க முடியாமல் இருந்திருக்கலாம். ஆனால் 2009ல் யுத்தம் முடிவடைந்த நாள் தொட்டு அவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்குக் கொண்டு வருவதிலேயே அக்கறை காட்டி வந்திருக்கிறார்கள். யுத்தத்தை களத்தில் நேரடியாகத் தலைமை தாங்கி முள்ளிவாய்க்கால் கொடூரங்களையும் நடத்தி முடித்த இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதியாக்குவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் முயற்சித்ததே அவர் ஐக்கிய தேசியக் கட்சியினரின் வேட்பாளர் என்பதனாலேயே.

இன்னும் சொல்லப் போனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் அதே அரசியற் தத்துவங்களைக் கடைப்பிடிப்பவர்களே.

கேள்வி: தற்போதைய சூழ்நிலையில் கூட்டமைப்பு தந்திரோபாயமாகச் செயற்பட்டிருக்க வேண்டுமென்ற குற்றச்சாட்டு பலராலும் முன்வைக்கப்படுகின்றது. அவ்வாறாயின் தமிழ் மக்களின் அதிகளவிலான வாக்குகளைப் பெற்ற கட்சியென்ற வகையில் கூட்டமைப்பு எவ்வாறு செயற்பட்டிருக்க வேண்டும்?

பதில்:- 2015ம் ஆண்டு ஜனவரி தொடக்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை ஆதரித்து வந்திருக்கிறார்கள். தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வைப் பெறுவதற்காகவே ஆதரித்ததாகக் கூறினார்கள். அவ்வாறு நடக்க வேண்டுமென சாதாரண தமிழ் மக்கள் மட்டுமல்ல, தமிழ் மக்கள் மத்தியிலுள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள் அனைவரும் அவ்வாறான எதிர்பார்க்கையுடனேயே இருந்தனர். அதனாலேயே தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் அரசியற் கோட்பாடுகள் – கொள்கைகளோடு உடன்படாத பலரும் 2015ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலின் போது கூட்டமைப்பை எதிர்க்காதது மட்டுமல்ல, மறைமுகமாக ஆதரிக்கவும் செய்தனர்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பினர் 2015ம் ஆண்டின் ஆரம்பத்தில், 2016ம் ஆண்டுக்குள் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு கிடைப்பது உறுதி என்றனர். ஒரு சில மாதங்களுக்குள்ளேயே 19வது அரசியல் யாப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. பதவி பற்றிக்கப்பட்ட சரத் பொன்சேகா மீண்டும் முன்னாள் இராணுவத் தளபதி என்பது உறுதி செய்யப்பட்டது. அது மட்டுமல்லாது அவருக்கு பீல்ட் மார்ஷல் தகைமையும் வழங்கப்பட்டது. திவிநெகும சட்டம் அரசியல் யாப்புக்கு விரோதமானது என தீர்ப்பளித்ததால் நீதியரசர் சிராணி பண்டாரநாயக்கா பதவி இறக்கப்பட்டார். இந்த ஆட்சி வந்தவுடன் அவர் மீண்டும் நீதியரசராக்கப்பட்டார். இவ்வளவு வேகமாகவும் அக்கறையுடனும் தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான ஏதாவதொரு நடவடிக்கையையாயினும் மேற்கொள்ளப்பட்டதா என்றால் இல்லையென்பதே பதிலாக அமையும்.

அரச படைகளின் கட்டுப்பாட்டில் இருந்த தமிழ் மக்களின் நிலங்களில் பெரும்பாலானவை முன்னர் மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்திலேயே மக்களிடம் கையளிப்பது என தீர்மானிக்கப்பட்டிருந்தது. அவையே பின்னர் கூட்டாட்சியின் ஆட்சிக் காலத்தில் விடுவிக்கப்பட்டன. இப்போதும் ஜனாதிபதி மைத்திரியே மிகுதிக் காணிகளையும் விடுவிக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறார். ஐக்கிய தேசியக் கட்சியினர் தமிழ் மக்களுக்காக என்ன செய்தார்கள் என்றால் அழகான வெற்று வாக்குறுதிகளைத் தவிர வேறெதனையும் செய்யவில்லை என்பது அனைவரும் அறிந்ததே. ரணில் விக்கிரமசிங்க ஆட்சியை கடந்த மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக தாங்கிப்பிடித்து வந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மாகாண சபையைப் பலப்படுத்தும் நோக்குடன் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றக் கூடிய பாராளுமன்ற சட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றியிருக்க வேண்டும்.

13வது அரசியல் யாப்பின் ஊடாக மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்கள் அனைத்தையும் முறையாகவும் முழுமையாகவும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் நிர்வாக ரீதியில் மேற்கொண்டிருக்க வேண்டும்.

மாகாண சபைகளின் நிறைவேற்று அதிகாரங்களுக்கு உட்பட்ட விடயங்கள் எவை தொடர்பாகவும் மத்திய அரச அமைப்பில் அமைச்சுக்கள் எதுவும் இல்லாத நிலையை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

மாகாண சபைகள் சுயாதீனமாக பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை தீர்மானித்து செயற்படுத்துவதற்கான நிதி வளங்களை போதிய அளவு மத்திய அரசு ஒதுக்கிக் கொடுக்கும் ஏற்பாடுகளை மேற்கொண்டிருக்க வேண்டும்.

புதிய அரசியல் யாப்பு எனக் காலத்தைக் கடத்தாமல் சர்வசன வாக்கெடுப்புக்கு அவசியமில்லாத அளவுக்கு 13வது அரசியல் யாப்பு திருத்தத்துக்கு பதிலான ஒரு அரசியல் யாப்பு திருத்தத்தை மூன்றில் இரண்டு பெரும்பான்மை இருக்கும் போதே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தானாக பாராளுமன்றத்தில் முன்வைத்து நிறைவேற்ற முயன்றிருக்க வேண்டும்.

மேற்கூறியவற்றிற்கு சர்வதேச ஆதரவும் நிச்சயமாக இருந்திருக்கும். நடைமுறையில் சாத்தியமாகியும் இருக்கும். அதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைக்காவிட்டால் தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் உண்மையான ரூபம் தெரிய வந்திருக்கும்.

அதற்குப் பின்னரே சமஷ்டிக்குள் ஒற்றையாட்சியா? அல்லது ஒற்றையாட்சிக்குள் சமஷ்டியா என்ற தேடலுக்கு முயற்சித்திருக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஐக்கிய தேசியக் கட்சிக்கு முட்டுக் கொடுத்ததைத் தவிர 2009க்குப் பிந்திய இலங்கையின் அரசியற் சூழ்நிலைகளுக்கு ஏற்ற வகையில் செயற்படவில்லை. ஐக்கிய தேசியக் கட்சி தமிழர்களை ஏமாற்றுவதற்கு தமிழரசுக் கட்சியும் கூட்டுச் சேர்ந்து செயற்பட்டு வந்திருக்கிறது.

கேள்வி: தமிழர் அரசியல் பரப்பில் மாற்று அரசியல் செயற்பாடுகளுக்கான முயற்சிகள் சமீபகாலமாகத் தீவிரமடைந்துள்ளன. முன்னாள் வடக்கு முதல்வரும் அவ்வாறானதொரு அணியில் இணையுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அது தவிரவும் வேறும் பல முயற்சிகளும் இடம்பெற்று வருகின்றன. இவ்வாறான முயற்சிகள் எல்லாம் வெறுமனே தமிழ் தேசியக்கூட்டமைப்புக்கு எதிரான ஒரு அணியினை உருவாக்குவதோடு நின்று விடுமா? அல்லது சாத்தியமானதொரு தீர்வை நோக்கி தமிழர்களை வழிநடத்தக்கூடியவையாக அமையுமா?

பதில்:- விக்கினேஸ்வரனின் அரசியற் கூட்டு என்பது கற்பனைத் தனமான நடைமுறையில் சாத்தியமாக்க முடியாத, அதிதீவிர அரசியற் சுலோகங்களை முன்னெடுத்து தமிழர்களை ஆத்திரமும் பேராசையும் கொண்ட உணர்ச்சியில் ஏற்றி தேர்தல்களை வெல்லுவதே நோக்கமாக உள்ளது. சம்பந்தரும், சுமந்திரனும் இல்லாவிட்டால் அவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இணைந்து செயற்படத் தயாராக இருப்பதாகக் கூறுகிறார்கள். அவர்களின் பிரச்சினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியற் கோட்பாடோ கொள்கையோ அல்லது ஐக்கிய தேசியக் கட்சியுடனான கூட்டோ அல்ல. மாறாக இரு நபர்கள் தொடர்பான பிரச்சினையே. எனவே விக்னேஸ்வரனின் கூட்டணியினர் இன்றைக்கு முன்வைத்திருக்கும் அரசியற் சுலோகங்கள் இப்போதைய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் வேறுபட்டதாக தோற்றமளிப்பினும் இருபகுதியினரும் ஒரே குட்டைக்குள் ஊறிக் கொண்டிருக்கும் மட்டைகளே!

அதைவிட தமிழர் அரசியலில் ஆங்காங்கே ஒற்றுமை முயற்சிகள் நடைபெற்றாலும் அவை எதுவும் முறையான ஐக்கிய முன்னணிக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு காத்திரமாக இடம்பெறவில்லை. நடைமுறையில் உள்ள தேர்தல் முறையானது கட்சிகளிடையே தேர்தலை மட்டுமாயினும் இலக்காகக் கொண்ட கூட்டணிகள் ஏற்படுவதற்கு பெரும் தடையாக உள்ளது.

தேர்தலுக்கு அப்பாற்பட்டு மக்களின் அடிப்படையான ஜனநாயக மற்றும் சமூக உரிமைகளுக்கான பகிரங்க இயக்கங்களை முன்னெடுக்கும் வகையான ஐக்கிய முன்னணிகள் சாத்தியமே. அதனை நோக்கிய செயற்பாடுகளை முற்போக்கு ஜனநாயக சக்திகள் யதார்த்தமான அகப்புற நிலைமைகள் பற்றிய புரிந்துணர்வோடு மேற்கொள்ளல் வேண்டும்.

கேள்வி: தெற்கில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்ப நிலை வடக்கின் அரசியலில் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளதாககக் கருதுகின்றீர்கள்?

பதில்:- ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற மட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பங்கள் இலங்கையின் பொருளாதாரத்தில் பல நெருக்கடிகளை அதிகப்படுத்தியிருக்கிறது என்பது உண்மையாயினும், வடக்கின் அரசியலில் எந்தவகையிலும் பாதகமான விளைவெதனையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பதற்கில்லை.

இன்னோர் கண்ணோட்டத்தில் பார்த்தால் வடக்கின் பெரும்பாலான அரசியற் சக்திகள் தெற்கின் குழப்பமானது வடக்கின் அரசியற் சூழ்நிலைகளை தமக்குச் சாதகமாக கோணம் நோக்கி நகர்த்துவதாகவே கருதுகின்றன எனலாம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மட்டுமே இதனாற் கலங்கிப் போயிருக்கின்றனர் எனலாம். ஏற்கனவே கடந்த உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகளின் போது தலைசுற்றிப்போன தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் இப்போது விக்னேஸ்வரனும் தேர்தற் போட்டிக் களத்துக்கு தயாராகி இருக்கின்ற நிலையில் தேர்தல் விரைவாக வந்து விட்டால் தமது அரசியல் எதிர்காலம் அம்போவாகி விடுமோ என்ற பதட்டத்தில் உள்ளனர் என்றே கூறலாம்.

கேள்வி: தேர்தல்களுக்கான முயற்சிகளில் கட்சிகள் தற்போது மும்முரமாக ஈடுபட்டு வருகின்றன. தமிழர் சமூக ஜனநாயக் கட்சியும் அவ்வாறான கூட்டணியொன்றில் இறங்கவுள்ளதாக அரசல் புரசலாக செய்திகள் வெளிவருகின்றனவே?

பதில்:- அரசியல் என்பது அரசியல் அதிகாரம் தொடர்பான உறவுகளின் சாத்தியப்பாடுகளை வாய்ப்புகளாக ஆக்கிக் கொள்வதற்காக அணுகுதல் கையாளுதல் என்பதேயாகும். அந்த சமூக அறிவியல் அடிப்படைக் கோட்பாட்டை தமிழர் சமூக ஜனநாயகக் கட்சியின் செயற்பாடுகளோடு பொருத்திப் பார்க்க முடியாவிட்டால் தான் ஆச்சரியமானதாகும். மக்கள் மத்தியில் பெரும் செல்வாக்கு உடையவையாகக் கருதப்படுகிற கட்சிகளே யார் யாருடன் தாங்கள் அணி சேரலாம் – யார் யாரையெல்லாம் தங்களோடு அணி சேர்க்கலாம் என்று தேடல்களில் தீவிரமாக முயற்சிக்கின்ற போது தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி மட்டும் விதிவிலக்காக இருக்க முடியாது. சூழல்களுக்கும் தேவைகளுக்கும் பொருத்தமில்லாத உயிரினங்கள் மட்டுமல்ல, உடலின் உறுப்புகள் கூட காலத்தின் ஓட்டத்தில் காணாமற் போய்விடும் எனும் இயற்கை விதி சமூக இருப்புகளுக்கும் பொருந்தும்.