தமிழ்க் கட்சிகளின் பிளவுகள் தேசியக் கட்சிகளின் நிலைபேற்றுக்கு வழிசமைக்கும்

(க. அகரன்)

கரணம் தப்பினால் மரணம் என்ற நிலைப்பாட்டில் இன்றைய தமிழ் அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசார வியூகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.  ஒற்றுமை என்ற நிலைப்பாட்டில் இருந்து தமிழர் அரசியல் பலம் சிதைந்து, பல கூறுகளாகியுள்ள நிலையில், உள்ளூராட்சி தேர்தல் மக்கள் மத்தியில் வந்திருக்கின்றது.

அரசியல் தீர்வை நோக்கி நகரவேண்டிய கட்டாயம் தமிழர் மத்தியில் ஏற்பட்டிருந்தபோது, இதற்கான நம்பிக்கை கொண்ட தரப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர்களின் ஏக கட்சியாக கொள்ளப்பட்டிருந்தது.

எனினும், கால ஓட்டங்களில் ஏற்பட்ட அரசியல் பிறழ்வுகள் பல்வேறான மாற்றங்களைத் தமிழர் அரசியல் பரப்பில் விதைத்திருந்தது.

குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் உள்வாங்கப்பட்ட சிலரின் செய்ற்பாடுகள் அரசியல் தளத்தை வேறு திசையில் நகர்த்தியதாக தமிழ் மக்கள் எண்ணத்தொடங்கயிருந்தனர்.

இதன் வெளிப்பாடாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்குள் ஏற்பட்ட முரணான நிலைப்பாடுகள் தற்போது பாரிய அரசியல் ஸ்திரமற்ற தன்மையைத் தமிழர் அரசியல் தரப்பில் ஏற்படுத்தியுள்ளது.

வெறுமனே அரசியல் தீர்வு நோக்கிய பயணத்தில் அரசியல் தலைமைகள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஒத்துப்போகும் இனமாக தமிழர்களை பார்ப்பதும் அதன் ஆழத்தைப் தெளிவுபடுத்த விரும்பாமையும் மக்கள் மத்தியில் குழப்பதை ஏற்படுத்தத் தொடங்கியது.

இதன் வெளிப்பாடே புதிய தலைமை மாற்றம் என்ற கோசத்தோடு புதிய அரசியல் கூட்டுகள் தமிழர் அரசியல் தளத்தில் உருவாக்கம் பெற்றுள்ளன.

இற்றைவரையான அரசியல் வரலாற்றில் பல கூட்டுகள் ஏற்பட்டிருந்தபோதிலும், அவை கால நீட்சியில் மாயமாகிப்போன தன்மையை மறுப்பதற்கில்லை.

இந்நிலையில் புதிய அரசமைப்புக்கான வழிகாட்டல் குழுவின் இடைக்கால அறிக்கையை முன்னிறுத்திய பேச்சுகள் மிகத்தீவிரமாக எடுத்துச்செல்லப்படும் நிலையில், தற்போதைய தேசிய அரசாங்கம், இலங்கை தேசத்தில் உள்ள இனரீதியான பிரச்சினைக்குத் திர்வைத் தந்துவிடும் என்ற நம்பிக்கை சற்று ஆழமாகவே உள்ளது.

இவ்வாறான சூழலில் உள்ளூராட்சி மன்றத் தேர்தல்க் களத்தில் இடைக்கால அறிக்கை நிராகரிப்பு, புதிய தலைமை மாற்றம் என்ற கோசத்தை முன்வைத்து நகரும் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் கூட்டுக்கொண்டுள்ள கட்சிகள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் எவ்வாறு இடைக்கால அறிக்கையை நிராகரிக்க முடியும் என்ற கேள்வியைப் பலமாகத் தன் முன் நிறுத்தியுள்ளது.

வெறுமனே, ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் மேடைகளாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலைப் பார்க்கும் தமிழ்த் தலைமைகள், யுத்தத்தின் தாக்கத்தில் இருந்து, மக்கள் மீள்வதற்கான வழிவகைகளை எவ்வாறு எடுத்துச்செல்ல முடியும் என்ற கருத்தியலை முன்வைக்கவில்லை.

வெறுமனே அரசியல் தீர்வுக்காக மாத்திரமே தமிழர்கள் காத்திருப்பதான எண்ணப்பாட்டுடன் தமது அரசியல் பயணத்தை எடுத்துச்செல்வதானது மீள் எழுச்சிக்காக காத்திருக்கும் மக்களுக்கு ஏமாற்றம் நிறைந்ததாகவே உள்ளது.

குறிப்பாக, தமிழ் அரசியல் தலைமைகள் மக்களின் அடிப்படை வேலைத்திட்டங்களை இனம் கண்டு அதனை தீர்ப்பதற்கான திட்டங்களை முன்வைக்காமையும் தமிழ்த் தேசிய அரசியல் நீரோட்டத்தில் பிரிந்து நிற்பதும் தேசியக் கட்சிகளின் இருப்புக்கான களத்தையே ஏற்படுத்தியுள்ளது.

வடக்கில் கடந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் அதிகளாவான சபைகளின் ஆட்சியைக் கைப்பற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதைச் சாதித்து விட்டது என்ற கேள்வி நிறைந்தே உள்ளது. இவ்வாறான சூழ்நிலையிலேயே இத்தேர்தலையும் தமிழ்க் கட்சிகள் எதிர்கொள்ளவேண்டிய நிலையில், தேசிய கட்சிகள், மத்திய அரசினூடான பயணத்தில், நிதி மூலங்கைளைப் பெற்று, மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை நிறைவுகாணும் தன்மைக்கு இட்டுச்செல்ல முடியும் என்ற கருத்தியலை எடுத்துச்செல்கின்றனர்.

இந்நிலையில் வடக்கில் அனைத்து இடங்கிளிலும் செல்வாக்குச் செலுத்த ஆரம்பித்துள்ள தேசியக் கட்சிகள், தமது கட்சிகளினூடாக வேட்பாளர்களை நிறுத்துவதற்கு எள்ளளவேனும் கஷ்டங்களை எதிர்கொண்டதாக இல்லை. எனினும் தமிழ்த் தேசியத்தின் பால் நகரும் கட்சிகள், வேட்பாளர்கள் தெரிவில் ஏற்பட்ட கஷ்ட நிலை காரணமாக, வேட்பாளர்கள் கையொப்பமிட்டால் மாத்திரம் போதுமானது என்ற நிலைக்குச் சென்று கையொப்பத்தை மாத்திரம் வைக்குமாறு கோரிய சம்பவங்களும் உண்டு.

இவ்வாறான நிலை ஏன் தமிழ்த் தேசியத்தின் பால நகரும் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராயப்படவேண்டும்.

மக்களின் மத்தியில் உள்ள வெறுப்புணர்வா, இக் கட்சிகளின் ஊடாக எவ்வித அபிவிருத்தியையும் செய்து விட முடியாது என்ற எண்ணப்பாடா, இல்லையேல் தமிழ் அரசியல் தலைமைகளின் பிறழ்வு ஏற்படுத்தியுள்ள விசனமா என்பதை இக்கட்சிகளே முனைப்புடன் ஆராய வேண்டிய தேவையுள்ளது.

ஏனெனில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தேசியக் கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றுமாக இருந்தால் வெற்றி பெற்ற குறித்த நபரின் வட்டாரம் பாரிய அபிவிருத்திகளை அடைவதற்கான செய்ற்பாட்டை அவர்கள் முன்னெடுப்பர். இதன் தாக்கம் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இன்னும் ஒரு வருடத்தில் நடக்கவிருக்கும் மாகாணசபைத் தேர்தலில் தெரியவரும்.  மாகாண சபையில், அதிகளவான தேசியக் கட்சிப் பிரதிநிதிகள் வருவார்களேயானால் அவர்கள் பிரதிநிதிப்படுத்தும் பிரதேசங்கள் அபிவிருத்தியை மத்திய அரசாங்கத்தின் நிதியுடன் செய்து முடிக்கத் தலைப்படுவர்.

எனவே இவ்வாறான ஓர் அரசியல் செயற்பாட்டைத் தேசியக் கட்சிகள் எடுக்கும்போது, நாடாளுமன்றத் தேர்தலில் கூட அதன் தாக்கம் காணப்படும் வாய்ப்புள்ளது.

இன்றைய காலச்சூழலில், வடக்கு கிழக்கு பகுதிகளில் மக்கள் தொகை குைறவின் காரணமாக, நாடாளுமன்றப் பிரதிநிதித்துவத்தின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ள நிலையில், தேசிய கட்சிகளின் ஆதிக்கம் மேலோங்குமாக இருந்தால் அது தமிழர்களின் உரிமைக்கான அழுத்தங்களைப் பிரயோகிப்பதில் எதிர்மறையான தாக்கத்தையே செலுத்தும்

குறிப்பாக, சர்வதேசத்தினூடாகத் தமிழர்களுக்குத் தீர்வைப் பெற முயல்வதாகத் தெரிவித்து வரும் தலைமைகள் வடக்கு, கிழக்கில் தேசியக் கட்சிகளின் அங்கத்துவம் அதிகரிக்கும் பட்சத்தில் அதைச் சாத்தியமற்றதொன்றாகவே பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்.

இவ்வாறான நிலையிலேயே உள்ளூராட்சி மன்றத்தேர்தல் சூடுபிடிக்கத்தொடங்கியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழர் விடுதலைக் கூட்டணி, அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் என்ற தமிழ்த் தேசியத்தின் பால், ஆழமாகப் பயணிக்கின்ற கட்சிகளின் மும்முனைப்போட்டியானது ஒருமித்துப் பயண்த்திருக்குமேயானால் தமிழர்களின் அரசியல் பலம் என்பது வைரம் நிறைந்ததாக இருந்திருக்கும்.
ஆனால் கொள்கை ரீதியாவும்  ஆசனப்பங்கீடு தொடர்பாகவும் ஏற்பட்ட உள்ளக முரண்பாடுகளும் அதனூடான விட்டுக்கொடுப்பின்மைகளும் யார் தலைமையை ஏற்பது என்ற போட்டிகளும் இன்று தமிழர் அரசியல் தளத்தைக் கேள்விக்குள்ளாக்கியுள்ளன.

வெறுமனே தொடர்ச்சியாக அரசாங்கத்துக்கு அனுசரணை வழங்கிப்போவதால் தீர்வைப்பெற்றுவிட முடியும் என்ற எண்ணப்பாட்டில் இருந்து தம்மை மீள் பரிசோதனைக்குட்படுத்த வேண்டியதாக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளநிலையிலேயே தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம், யாழ்ப்பாணத்தில் நடந்து முடிந்திருக்கின்றது.

இதன்போது, கருத்து வெளியிட்ட வட மகாண முதலமைச்சரும் பேரவையின் இணைத்தலைவருமான சி.வி. விக்னேஸ்வரன், “சர்வதேசச் சட்டத்தின் கீழ் ஐக்கிய நாடுகள் நிலைமாற்று நீதிமுறைகள் என்று எதிர்பார்க்கும் அதிகாரப் பரவலும் போர்க்குற்ற விசாரணையும் எமக்கு முக்கியமாகியுள்ளன. இரண்டையும் தட்டிக்கழிக்கவே இலங்கை அரசாங்கம் முற்பட்டுள்ளது. அதிகாரப் பரவலில் நாம் எதிர்பார்க்கும் சுதந்திரம் எமக்கு மறுக்கப்படவிருக்கின்றது. மத்தியின் மையத்தினுள் மாகாணத்தைத் தொடர்ந்து வைத்திருக்கவே அரசாங்கம் மும்முரம் காட்டுகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

எனினும் இதற்கு மாறுபட்ட கருத்தையே தமிழர்களின் ஏக பிரதிநிதிகளாக, யுத்த நிறைவின் பின்னர் பலராலும் அறியப்பட்ட கூட்டமைப்பினர் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஆகவே, ஓர் கருத்தியல் மாற்றம் அல்லது மக்களுக்கு தெளிவுறுத்தப்படாத கருத்து என்பது, தொடர்ச்சியான மயக்கத்தைதயே  மக்களுக்கு வழங்கும். இந்நிலை ஸ்திரமான அரசியல் தன்மைக்கு உகந்ததல்ல.

எனவே ஆரோக்கியமான அரசியல் வழிநடத்தலை எதிர்பார்த்த தமிழர் தரப்புக்கு ஆக்கபூர்வமற்ற ஒரு தளத்தைத் தமிழ் அரசியலாளர்கள் ஏற்படுத்தியுள்ளமை ஏற்புடையதல்ல.

இதையுணர்ந்த தமிழ் அரசியலாளர்கள் கடந்து செல்லப்போகும் நாட்களில் மக்களை தெளிவுபடுத்துவதாக எண்ணி, மீண்டும் மீண்டும் குழப்பத்தை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, தேசியக்கட்சிகளின் ஆதிகத்தினால் ஏற்படப்போகும் வடக்கின் மாறுதல்களையும் புரிந்து ஒற்றுமையான பயணத்தை முன்னெடுப்பதே சாலச்சிறந்ததும் காலத்தின் கட்டாயமுமாகும்.