தமிழ்ச் சிறார் இலக்கியம்: நாவில் தங்காத தித்திப்பு!

(ஆதி வள்ளியப்பன்)

‘தமிழ்ச் சிறார் இலக்கியம் மீண்டும் புத்துயிர் பெற்றுவிட்டது!’, ‘சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மீண்டும் கொண்டாடப்படுகிறார்கள்!’, ‘பாடப்புத்தகங்களைத் தாண்டிய வாசிப்பின் மூலம் சிறார் உற்சாகமடைந்து மொழிவளத்தை இயல்பாக வளர்த்தெடுத்துக்கொள்கிறார்கள்’

இப்படியெல்லாம் சொல்வதைக் கேட்பதற்கு நிச்சயம் மகிழ்ச்சியாகத்தான் இருக்கும். ஆனால், இவையெல்லாம் நிஜமாகாமல் இருக்கும்போது எப்படி மகிழ்ச்சியடைவது?

மேற்கண்ட வாசகங்கள் சமூக வலைதளங்களில் அவ்வப்போது ஆர்ப்பாட்டமாக உலாவருவதைப் பார்க்கலாம். அப்படியானால் சிறார் இலக்கியப் புத்தகங்களிலோ, சிறார் வாசிப்பிலோ மிகப் பெரிய திருப்புமுனை நிகழ்ந்திருக்க வேண்டுமே? அது ஏன் நிகழவில்லை என்ற கேள்வி பலரிடமும் எழாததுதான் துரதிருஷ்டம்.

நிதர்சனத்தில் தமிழகத்தின் எத்தனைக் குழந்தைகளை இன்றைய சிறார் இலக்கியங்கள் உண்மையிலேயே சென்றடைந்திருக்கின்றன? அவற்றில் எத்தனை புத்தகங்கள் சிறார் படிக்கும் தகுதியுடன், அவர்களது கற்பனைக்குச் சிறகு தரும் வகையில், அவர்களுடைய மொழிவளத்தை மேம்படுத்தும் முறையில், உற்சாகமூட்டும் வகையில் வந்திருக்கின்றன?சிறார் இலக்கியம்தான் என்றில்லை, இன்றைக்குப் பிரபலமாக உள்ள சிறார் இதழ்கள், நாளிதழ் இணைப்பிதழ்களில் வரும் கதைகள் தொடங்கி பலவற்றின் நிலைமையும் பரிதாபமாகவே இருக்கிறது. சிறார் புத்தகங்கள், இதழ்களைக் கதையம்சமோ, புதுமையோ, சுவாரசியமோ இல்லாத வறட்சியான கதைகளே அதிகம் வருகின்றன.

அதிகரிக்கும் சிக்கல்கள்

பிரபலமாக உள்ள வெளிநாட்டுக் கதைகளைப் போலச்செய்த கதைகள், பிரபலத் திரைப்படங்களின் நகல்கள், குழந்தைகளைத் தூங்கவைக்கும் கணத்தில் பெற்றோர் மனதில் தோன்றக்கூடிய கதைகள் போன்றவைதான் இன்றைய சிறார் இலக்கிய உலகை ஆக்கிரமித்துள்ளன. இவை புத்தகங்களாக வெளியிடப்பட்டு, சமூக வலைதளத்தில் பிரபலப்படுத்தப்பட்டு, பரிசுகளையும்கூட வாங்கிவிடுகின்றன.

அந்தக் காலம்போல கதை படிக்கும் குழந்தைகளே, நேரடியாக இதழையோ புத்தகத்தையோ வாங்கும் சூழல் இன்று இல்லை. இதனால், இன்றைய சிறார் படைப்பாளிகளும் பதிப்பகங்களும் பெற்றோரைக் குறிவைத்தே களத்தில் இறங்குகின்றனர். விளைவாக, பெற்றோர் நல்லதென நம்பும் படைப்புக் குவியலுக்குள் குழந்தைகள் மூச்சுத் திணறிக்கொண்டுள்ளனர்.

எழுத்துப் பிழைகள், வாக்கியப் பிழைகள், தவறான மொழிபெயர்ப்புச் சொற்கள் போன்றவை மட்டுமில்லாமல், சுவாரசியம் என்ற பெயரில் தவறான சமூக, அரசியல் கருத்துகள், அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் போன்றவை தற்காலத் தமிழ்ச் சிறார் இலக்கியத்தில் நிறைந்து காணப்படும் பிரச்சினைகளாக இருக்கின்றன. விலங்குகளைப் பேசவைக்கும் ‘ஈசாப் கதை கால’ உத்தி தொடங்கி, சூழலியலுக்கு எதிரான கருத்துகளும் பரவலாக உள்ளன. தமிழ்த் தொலைக்காட்சிகளில் நாள் முழுக்க ஓடிக்கொண்டிருக்கும் கார்ட்டூன் தொடர்களில் கதாபாத்திரங்கள் பேசும் அபத்த வசனங்களுக்கும் சிறார் இலக்கியப் படைப்புகளுக்கும் இடையே பெரிய வித்தியாசங்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

தகவல் சேகரிப்பு, கருத்துப்பிழை நீக்கம், அறிவியல், வரலாற்றுத் தகவல்களைச் சரிபார்த்தல் போன்ற நடைமுறைகள் பெரும்பாலும் பின்பற்றப்படுவதில்லை. இந்தப் பின்னணியுடன் வரும் புத்தகங்களை வாசிக்க நேரும் ஒரு குழந்தை, நிரந்தரமாகத் தாய்மொழி வாசிப்பைவிட்டு விலகிச் சென்றுவிடுகிறது.

பிரபலமும் அங்கீகாரமும்

சமூக வலைத்தளத்தில் பிரபலமடைவதற்கு ஒரு வழியாக, சிறார் இலக்கியம் படைப்பதும் மாறிவருகிறது. சமூக வலைத்தளத்தில் யார் அதிகம் பேசப்படுகிறார்களோ அவர்களே சிறார் இலக்கியக் காவலர்களாக அறியப்படுவதும் தொடர்ச்சியாகக் குழுவாதமும் தலைதூக்குகின்றன. இதன் அடுத்தகட்டமாக சிறார் படிக்காத, அவர்களைக் கட்டிப்போடாத புத்தகங்களைப் பெரியவர்களே படித்துப் பாராட்டி, விருதுகளும் வழங்கப்பட்டுவிடுகின்றன. முற்போக்கு இலக்கிய அமைப்புகள் வழங்கும் விருதுகளும் பெரும்பாலான நேரம் இதற்கு விதிவிலக்காக அமையவில்லை.

மற்றொருபுறம் அரசு அளிக்கும் முக்கிய அங்கீகாரங்களும் சிறார் இலக்கிய எழுத்தாளர்களுக்கு சிறப்பு சேர்ப்பதாக இல்லை. ‘பால சாகித்ய புரஸ்கார்’ விருது வழங்கும் நடைமுறையை சாகித்ய அகாடமி தொடங்கியது பாராட்டுக்குரிய அம்சம். ஆனால், தற்காலக் குழந்தைகளோடு நேரடிப் பரிச்சயமில்லாத எழுத்தாளர்கள், எழுதும் காலம் முடிந்துவிட்ட எழுத்தாளர்களுக்கு விருது வழங்குவதையே சாகித்ய அகாடமி ஒரு நிரந்தர விதிபோலக் கடைப்பிடித்துவருகிறது.

இலக்கிய மேதைகள்

வங்கத்துக்கு ஒரு சத்யஜித் ராய், மலையாளத்துக்கு ஒரு சிவதாஸ்போல தமிழில் முன்பு வாண்டுமாமா, அழ.வள்ளியப்பா போன்ற படைப்பாளர்கள் குழந்தைகளைக் கட்டிப்போட்டிருந்தார்கள். தங்கள் படைப்புகள் மூலமாக மொழி வளத்தையும் கற்பனை வளத்தையும் அவர்கள் பெருக்கிய காலம் ஒன்று இருந்தது. அந்தப் புத்தகங்கள் அவர்களின் காலத்தைத் தாண்டி இன்றைக்கும் வாசிக்கப்பட்டுக்கொண்டிருப்பதே அவற்றின் அழியாத்தன்மைக்குச் சான்று.

அந்தக் காலச் சிறார் எழுத்தாளர்களில் பலர், புகழ்பெற்ற அயல்நாட்டுக் கதைகள், புத்தகங்களைத் தழுவித்தான் தமிழில் எழுதினார்கள். அதேநேரம் அவர்களும் கற்பனைவளம் நிரம்பியவர்களாகத் திகழ்ந்தார்கள். கதைகளை அட்டை காப்பி அடிக்கவில்லை. நமது சமூக நிலை, குழந்தைளுக்கு ஏற்ற வகையில் மாற்றி எழுதினார்கள், சொந்தமாகவும் நிறைய எழுதினார்கள். குறிப்பாகக் கதைசொல்லும் முறையையும் குழந்தைகளிடையே மொழிவளத்தையும் மிகப் பெரிய அளவில் அவர்கள் வளர்த்தெடுத்தார்கள்.

அது ஒரு பொற்காலம்

அன்றைக்கு கல்கண்டு (ஆரம்ப காலம்), ரத்னபாலா, முத்து காமிக்ஸ், கோகுலம், பூந்தளிர் போன்ற இதழ்கள் லட்சக்கணக்கான குழந்தைகளால் வாசிக்கப்பட்டன. அதற்கு அடிப்படைக் காரணம், அந்த இதழ்கள் குழந்தைகளுக்குத் தந்த உற்சாகமும் புத்துணர்வும்தான். எடுத்துக்காட்டுக்கு, ‘ஆலிஸின் அற்புத உலகம்’ நூலுக்கு எஸ்.ராமகிருஷ்ணனின் மொழிபெயர்ப்பு வருவதற்கு பல பத்தாண்டுகளுக்கு முன்னரே, மூலக்கதையின் சாரத்துடன் அதன் தழுவல், மலிவான விலையில் தமிழில் வெளியாகிவிட்டது. அந்த அளவுக்கு அனைத்துத் தளங்களிலும் சிறார் இலக்கியம் பரவியும் விரவியும் இருந்தது.

80-90களில் அமர்சித்திரக் கதை நிறுவனம் சார்பில் வெளியான பல வகை சித்திரக்கதைப் புத்தகங்கள் பெருமளவில் வாசிக்கப்பட்டன. அந்நிறுவனத்தின் கதைத் தொகுதிகள், ஆங்கில மாத இதழ் ‘டிவிங்கிள்’, அதன் தமிழ் வடிவம்போல வந்துகொண்டிருந்த ‘பூந்தளிர்’ ஆகியவற்றில் சமூக, வரலாறு, உயிரினங்கள், பொது அறிவு சார்ந்த பல்வேறு சித்திரக்கதைகள் வந்துகொண்டிருந்தன. காக்கா காளி, கபிஷ், வேட்டைக்கார வேம்பு, சுப்பாண்டி உள்ளிட்ட பல கதாபாத்திரங்கள் புதிது புதிதாகவும் சுவாரசியமாகவும் கதைகளைச் சொல்லிக்கொண்டிருந்தன. இப்படியாக 1950-களில் தொடங்கி, 1970-80-களில் உச்சத்துக்குச் சென்ற தமிழ்ச் சிறார் இலக்கியம் – சிறார் இதழ்கள் 1990-களுக்குப் பிறகு சரிவைச் சந்திக்க ஆரம்பித்தன. கடந்துபோன அந்தக் காலம், தமிழ்ச் சிறார் இலக்கியத்தின் பொற்காலம் எனலாம். அதைப் பற்றி விதந்தோதிக்கொண்டிருப்பதைவிட, அதை மீட்டெடுப்பதே தற்போது முக்கியம்.

மதிக்கப்படும் எழுத்தாளர்கள்!

இன்றைய சூழ்நிலையில் மற்ற மொழி சிறார் இலக்கியத்தையும் ஒப்பிட்டுப்பார்க்க வேண்டிய அவசியம் உள்ளது. மலையாளம், வங்கம் போன்ற மொழிகளில் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் குறைவாகக் கருதப்படுவதில்லை. அத்துடன் பெரியவர்களுக்கு எழுதும் முன்னணி எழுத்தாளர்களும் சிறார் இலக்கியத்துக்கு அவ்வப்போது பங்களிக்கிறார்கள். தமிழில் நவீன இலக்கியம் படைப்பவர்களைத் தாண்டி, மற்ற இலக்கிய வகைமையில் ஈடுபடுபவர்களுக்குப் பெரிய மதிப்பில்லை. இதன் தொடர்ச்சியாக சிறார் இலக்கிய எழுத்தாளர்களும் மதிக்கப்படுவதில்லை. முன்னணி எழுத்தாளர்களும் சிறார் இலக்கிய வகைமையை அதற்குரிய முக்கியத்துவத்தோடு அணுகுவதில்லை.

மலையாளம், ஆங்கிலம் வழியாக வரும் மொழிபெயர்ப்புகளே தமிழ்ச் சிறார் இலக்கியத்தைச் சற்றேனும் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. முன்பு ‘நேஷனல் புக் டிரஸ்ட்’ (என்.பி.டி.) சிறார் இலக்கியத்துக்கு முக்கியத்துவம் அளித்து நூல்களைப் பதிப்பித்துவந்தது. தற்போது அப்பணி தொய்வடைந்திருக்கிறது.

பெங்களூருவைச் சேர்ந்த ‘பிரதம்’ நிறுவனத்தின் ஆங்கிலப் புத்தகங்கள் சிறார் இலக்கியத்துக்கு உரிய நவீன, புதுமைத் தன்மைகளைக் கொண்டிருக்கின்றன. இருந்தாலும், அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்புகள் சற்று சிக்கலுடன் உள்ளன. ‘துலிகா’ நிறுவனத்தின் சில புத்தகங்கள், ‘தாரா’ நிறுவனத்தின் புத்தகங்கள் எண்ணிக்கையில் குறைவு என்றபோதும் குறிப்பிடத்தக்கவையாக உள்ளன.

உறுதியில்லா எதிர்காலம்

வாசிப்பு வேகமாகக் குறைந்துகொண்டிருப்பது இன்றைய நிஜம். அதிலும் குறிப்பாகக் குழந்தைகளும் பதின் பருவத்தினரும் தாய்மொழியில் வாசிப்பது பெருமளவு சரிவைச் சந்தித்திருக்கிறது. அவர்களது அறிவுத்திறனையும் மொழிவளத்தையும் இயல்பாக வளர்த்தெடுப்பதில் சிறார் இலக்கியத்தின் பங்கு மிகப் பெரியது. மாநில மொழிகளும் வாசிப்பும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருக்கும் இந்தக் காலத்தில், தமிழ்ச் சிறார் இலக்கியத்தை அதற்குரிய முக்கியத்துவத்தோடு அணுகாவிட்டால், தமிழ் வாசிப்பை அடுத்த தலைமுறைக்குக் கடத்துவது பெரும் சிக்கலிலேயே சென்று முடியும்.

இலுப்பைப்பூ, ஆலை வெல்லம் என இரண்டு வாய்ப்புகள் இன்றைக்கு நம் கைகளில் இருக்கின்றன. இலுப்பைப்பூவின் இனிப்பே போதும் என்று நாம் திருப்தி அடைந்துவிட்டால், எக்காலத்திலும் கரும்பு வெல்லத்தின் ருசியை அறியவே முடியாது!

தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in