தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் 2021: திமுகவுக்கு எதிரான அதிமுக விளம்பரங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றுமா? – என். ராம் பேட்டி

இது வாக்காளர்களை ஏமாற்றுமா, அவர்களது முடிவுகளைப் பாதிக்குமா, பத்திரிகைகள் இவ்வாறு செய்வது சரியா என்பதெல்லாம் குறித்து மூத்த பத்திரிகையாளரும் தி ஹிந்து குழுமத்தைச் சேர்ந்தவருமான என். ராம் பிபிசி தமிழிடம்பேசினார் . பேட்டியிலிருந்து:

கே. பிரசாரத்தின் கடைசி நாளான இன்று பல நாளிதழ்களில் அ.தி.மு.க. அளித்திருக்கும் விளம்பரம் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அந்த விளம்பரம், செய்தியைப்போல இடம்பெற்றிருக்கிறது. இது சரியான முறையா?

ப. நிச்சயம் இல்லை. தேர்தல் வரும்போது பல அரசியல் கட்சிகள் விளம்பரங்களை அளிக்கின்றன. ஆங்கில இந்துவிலும் தமிழ் இந்துவிலும் ஏப்ரல் ஒன்றாம் தேதி தி.மு.க. முதல் பக்கத்தில் ஒரு விளம்பரத்தை அளித்தது. “The dreams of the fascist and their slaves” என்று ஆங்கில விளம்பரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. தமிழிலிலும் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டிருந்தது. அதேபோல இன்று அ.தி.மு.க. விளம்பரம் கொடுத்திருக்கிறது.

இன்று விளம்பரங்களை ஏற்றுக்கொள்வதற்கான தரக்கட்டுப்பாடு மிகவும் குறைந்திருக்கிறது. தி ஹிந்துவுக்கும் அது பொருந்தும். கடந்த பத்து, பதினைந்து ஆண்டுகளாகவே, இது விளம்பரம் எனக் குறிப்பிடக்கூடாது என விளம்பரம் கொடுப்பவர்கள் சொல்கிறார்கள். முன்பு, சிறிய எழுத்துகளிலாவது, ‘விளம்பரம்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இப்போது அதுவும் இல்லை. இதை நான் ஏற்கவில்லை. வாசகர்களை ஏமாற்றும்போக்குதான் இது. ஆனால், சில வாசகர்கள் புரிந்துகொள்கிறார்கள்.

கே. ஏப்ரல் 1ஆம் தேதி தி.மு.க. அளித்த விளம்பரம், கார்ட்டூன்களோடு, விளம்பரத்தைப் போலவேதான் இருந்தது. ஆனால், இன்று வெளியாகியிருக்கும் விளம்பரம், செய்தியைப்போல இருக்கிறது…
ப. இரண்டுக்கும் பெரிய வித்தியாசமில்லை என நினைக்கிறேன். இன்றைக்கு ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழில், அ.தி.மு.கவின் விளம்பரம் தமிழில் வெளியாகியிருக்கிறது. ஆகவே அது விளம்பரம் என புரிந்துகொள்வார்கள் என எங்கள் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் சொல்கிறார்கள். இதுபோல ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கம் இருக்கிறது. தி.மு.க. விளம்பரத்தின் இரண்டாம் பக்கம் செய்தியைப் போலத்தான் இருக்கிறது.

கே. இம்மாதிரி விளம்பரங்கள் வரும்போது, அதைப் பற்றி தங்கள் கருத்தைத் தெரிவிக்க ஆசிரியர் தரப்புக்கு வாய்ப்புக் கிடைக்குமா? இன்றைய விளம்பரங்கள் குறித்து உள்ளே பணியாற்றும் பத்திரிகையாளர்களுக்கு தெரியாது என்கிறார்கள்..
ப. அது உண்மைதான். நான் இந்துவில் எடிட்டர் – இன் – சீஃபாக இருந்தபோது என்னிடம் வந்து காட்டுவார்கள். ஆனால், அன்று பத்திரிகைகளின் வருமான நிலை நன்றாக இருந்தது. அப்படியிருக்கும்போது, வாசகர்களை தவறாக வழிநடத்தும் வகையில் விளம்பரங்களை வெளியிடக்கூடாது என எங்கள் கருத்துகளைச் சொல்வோம். அப்போதும்கூட, ஆசிரியர்கள், பத்திரிகையாளர்கள் தரப்புக்கு விளம்பரங்கள் மீது கட்டுப்பாடு கிடையாது. கருத்தைக் கேட்டால் சொல்லலாம். அவ்வளவுதான்.
உண்மையில் என்ன விளம்பரங்கள் வரப்போகின்றன என்பதுகூடத் தெரியாது. விளம்பரங்களுக்கு இத்தனை இடத்தை ஒதுக்க வேண்டும் என்று சொல்வார்கள். மற்றபடி, அது என்ன விளம்பரம், அதில் என்ன இடம்பெற்றிருக்கிறது என்பது ஆசிரியர், பத்திரிகையாளர் தரப்புக்குத் தெரியாது.

கே. தி ஹிந்துவில் விளம்பரங்கள் தொடர்பாக என்ன நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றன?
ப. தி ஹிந்துவிலும் விளம்பரங்கள் தொடர்பான தரம் குறைந்துவிட்டது. நல்லவேளை நான் இப்போது அங்கு பொறுப்பில் இல்லை. இருந்திருந்தால், கருத்து வேறுபாடுகள் வந்திருக்கும். இதை நான் ஏற்கவில்லை. இது இதழியலுக்கு நல்லதில்லை. சில பேருக்கு வேண்டுமானால் புரியலாம்.
பல வாசர்கள் இதனைத் தவறாக புரிந்துகொள்ளக்கூடும். படித்தவர்களே இது தொடர்பாக ஃபோன் செய்து கேட்கிறார்கள். இரு தரப்பிலும் இது போலத்தான் விளம்பரம் செய்கிறார்கள் என்று மட்டும் நான் சொன்னேன். இதுதான் இன்று நிதர்சனம். தரம் குறைந்துவிட்டது என்று அதனால்தான் சொல்கிறேன்.

கே. தி ஹிந்து ஆங்கிலத்தில் இதுபோல தமிழில் வந்தால், விளம்பரம் என புரிந்துகொள்வார்கள். ஆனால், தமிழ் நாளிதழ்களில் செய்திகளைப் போல விளம்பரம் வரும்போது புரிந்துகொள்ளக் கடினமாகிவிடாதா?
ப. ஆம். தமிழ் ஹிந்துவில் தமிழில்தானே வெளியாகியிருக்கிறது. அப்படியானால் செய்தி என்றுதான் நினைப்பார்கள்.

கே. ஒரு விளம்பரம் வரும்போது அதில் உள்ளவற்றின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பொறுப்பு பத்திரிகைகளுக்கு உண்டா?
ப. இந்த இரண்டு விளம்பரங்கள் தொடர்பாகவும் அவதூறு வழக்குகள் தொடரலாம். பத்திரிகைகள் மீதும் அம்மாதிரி வழக்குகளைத் தொடரலாம். ஆனால், அரசியல் கட்சிகள் யாரும் வழக்குத் தொடர்வதில்லை. எல்லோருக்கும் பழகிப்போய்விட்டது. ஆனால், ஒரு ரிஸ்க் இருக்கிறது என்பது உண்மைதான்.
முன்பெல்லாம் ஒரு விளம்பரம் வரும்போது மிகக் கவனமாகப் பார்ப்பார்கள். அவதூறு வழக்கு வரக்கூடுமா, தங்கள் பாரம்பரியத்திற்கு இழுக்கு ஏற்படுமா என்றெல்லாம் பார்ப்பார்கள். அப்போதெல்லாம் அது விற்பவர்களின் சந்தையாக இருந்தது. அதனால் விளம்பரங்களை நிராகரிக்கும் நிலை இருந்தது. இன்று அந்த நிலை இல்லை. அதனால், எதையும் விளம்பரமாக வெளியிடும் போக்கு ஏற்பட்டுவிட்டது.

கே. இதற்கு முந்தைய காலகட்டங்களில் இதுபோல விளம்பரங்கள் வந்திருக்கின்றனவா?
ப. வந்திருக்கின்றன. Advertorial என்ற வார்த்தையே இதற்காகத்தானே உருவாக்கப்பட்டது. கீழே சிறிய எழுத்தில் அதனைக் குறிப்பிடுவார்கள். அனுபவம் மிகுந்த வாசகர்கள் அதனை விளம்பரம் என கண்டுபிடித்துவிடுவார்கள். அந்த காலகட்டத்தில் விளம்பரங்களுக்கும் இதழியல் சார்ந்த கட்டுரைகளுக்கும் இடையில் ஒரு கோடு இருந்தது. இப்போது அந்தக் கோடு அழிந்துவிட்டது.

கே. இந்த மாதிரியான விளம்பரங்கள் வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்துமா?
ப. நிச்சயமாக பெரிய தாக்கம் இருக்காது. இது போன்ற விளம்பரங்களும் கருத்துக் கணிப்புகளும் வாக்காளர்களிடம் மிகக் குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். யாருக்கு வாக்களிப்பது என்பதை பெரும்பாலான மக்கள் ஏற்கனவே முடிவெடுத்துவிட்டார்கள். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எனக்கு ஒரு கணிப்பு இருக்கிறது. தி.மு.க. ஒரு கூட்டணியாக, தனிப்பெரும் கட்சியாக மிகப் பெரிய வெற்றியை நோக்கிச் செல்கிறது என்பதுதான் என் புரிதல். அதெல்லாம் இதனால் மாறப்போவதில்லை. மாறாகப் பத்திரிகைகள் மீதான விமர்சனம் அதிகரிக்கும். அவர்கள் மீதான நம்பகத்தன்மை குறையும்.

கே. விளம்பர வருவாய் குறைந்துவரும் சூழலில், இதழ்கள் இந்த விவகாரத்தை எப்படி எதிர்கொள்ள வேண்டுமென நினைக்கிறீர்கள்?
ப. அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். ஒரு பொதுவான புரிதலுக்கு வரவேண்டும். இம்மாதிரியான விளம்பரங்களை ஏற்கக்கூடாது என எல்லோரும் முடிவுசெய்ய வேண்டும். ஒருவர் மறுத்து, மற்றொருவர் ஏற்றுக்கொண்டால், பத்திரிகைகள் ஒட்டுமொத்தமாகத் தோற்றுத்தான் போய்விடும். முன்பெல்லாம் சில விஷயங்களில் இப்படிப் பொதுவான புரிதல் இருக்கும். குறிப்பாக விலை விஷயத்தில் கவனமாக இருப்பார்கள். ஓரளவுக்கு மேல் விலையைக் குறைக்கக்கூடாது என எல்லோருமே முடிவு செய்திருப்பார்கள். விளம்பரங்களிலும் அதுபோல முடிவெடுத்திருப்பார்கள். ஆனால், எல்லாம் மாறிவிட்டது.

வர்த்தகம்தான் எல்லாவற்றையும் முடிவு செய்கிறது. ஓரளவுக்கு நியாயமான பத்திரிகையாளர்கள் நேர்மையாக இருக்க வேண்டுமெனச் செயல்படுகிறார்கள். ஆனால், அதற்கு எதிராக கடினமான அழுத்தம் வருகிறது. தாக்குதல்கள், மிரட்டல்கள் வருகின்றன.
கருத்துக் கணிப்புகளை வெளியிடக்கூடாது என எனக்குத் தெரிந்தே சில டிவி சேனல்களுக்கு மிரட்டல் வந்திருக்கிறது. தி.மு.க. வெற்றிபெறும் என்ற சூழல் இருக்கும்போது, ஒரு குறிப்பிட்ட சேனலின் கருத்துக் கணிப்பில், “நிறையத் தொகுதிகளில் கடும் போட்டியாக இருக்கிறது” என்று குறிப்பிடப்படுகிறது. ஆகவே பயம் இருக்கிறது. விளம்பரங்களை வைத்தும் பத்திரிகைகளை manipulate செய்கிறார்கள் என்றும் சொல்லலாம்.