தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 15)

(Thiruchchelvam Kathiravelippillai)
தமிழ் பேசும் மக்களிடையேயான விரிசல் ஏற்பட்டுக்கொண்டிருந்த எண்பதுகளில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழுகின்ற பகுதிகளில் அவர்களிடையேயான உறவுகள் கட்டியெழுப்பப்படுவதன் அவசியத்தினை வலியுறுத்தி தீவிரமான பரப்புரைகளில் ஈழப் புரட்சி அமைப்பு(ஈரோஸ்) ஈடுபட்டது. தமிழ் விடுதலை இயக்கங்களில் இஸ்லாமிய மக்களுடன் அதிகளவான நெருங்கிய தொடர்பினைப் பேணியதும் அதிகளவான இஸ்லாமிய உறுப்பினர்களைக் கொண்டதுமான அமைப்பு ஈழப்புரட்சி அமைப்பு (ஈரோஸ்) ஆகும்.
“மதத்தால் இந்துவானாலும் மாண்பில் முஸ்லிம் என்றாலும் வேதம் பயிலும் கிறிஸ்தவனும் தீரச்சைவன் என்றாலும் ஈழத்தமிழர் ஈழவரே அவர் எங்கிருந்தாலும் நம்மவரே ” என்ற ஈரோசின் கருத்துக்கள் தமிழ் பேசும் புரட்சிகர சிந்தனையுள்ளவர்களால் ஈர்க்கப்பட்டது. இக்கருத்துகளின் அடிப்படையில் முஸ்லிம் மக்கள் ஈரோஸ் அமைப்புடன் அதிகளவில் இணைந்தார்கள்.

“ஈழவர் எனப்படுவோர் இலங்கையிலே வசிக்கின்ற தமிழ் பேசும் மக்களாவர்.ஈழவர் எனக் குறிப்பிடப்படுவோர் ஈழ நாட்டைத் தாயகமாகக் கொண்டவரையேயாகும். மொழிவாரி அடிப்படையில் ஓர் இனம் அதுவும் தமிழினம் முக்கியமாக ஈழந்தன்னை தம் தாயகமாகக் கொண்ட மக்கள் தம்மை ஈழவர் என அழைப்பதில் தவறெதுவுமில்லை. இவர்கள் பேசும் மொழி தமிழ் மொழி, தமிழைப் பேசுவோரெல்லாம் தமிழர்கள். தமிழ் பேசும் மக்கள் உலகில் பல நாடுகளில் வாழ்கின்றனர். முக்கியமாக இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், பீஜி, மொரீசியஸ் ஏன் ஆபிரிக்காவில் கூட வாழுகிறார்கள் , இவர்கள் எல்லோரும் தமிழைத் தம் தாய் மொழியாகவும் பேசும் மொழியாகவும் கொண்டிருந்தாலும் இவர்கள் எல்லோரும் ஈழவர் அல்ல. ஈழத்தை மட்டும் பிறப்பாலும். சுவீகாரத்தாலும் தாயகமாகக் கொண்டவர்களே ஈழவர்கள்“என ஈரோசின் தாபகரான அமரர் இ.இரத்தினசபாபதி அவர்களினால் எழுதப்பட்டு ஈழ ஆய்வு நிறுவனத்தினால் 1984 செப்ரம்பரில் பதிப்புச் செய்யப்பட்ட நூலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாலஸ்தீன மக்களின் மொழி அரபு. அவர்கள் “அரபு பாலஸ்தீனம்“கோரவில்லை. சவுதி அரேபிய மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு சவூதி அரேபியா“ இல்லை. சிரியா மக்கள் அராபியர். அவர்கள் பேசும் மொழி அரபு. அங்கு “அரபு சிரியா்“ இல்லை. ஈராக் மக்களின் மொழி அரபு. அங்கு “அரபு ஈராக் இல்லை“
தேசிய அந்தஸ்து கோரும் போது –மக்கள்- மொழி அடிப்படையில் இணைந்து நாடு கோருகிறார்கள். இதனாலேயே நாமும்
”நாம் ஈழவர்
நமது மொழி தமிழ்
நமது நாடு ஈழம் ” எனப் பகருகிறோம் என்ற ஈரோசின் கருத்துக்கள் முஸ்லிம் மக்களையும் தமிழ் மக்களையும் ஒன்றிணைக்க வழிகோலியதோடு மட்டுமல்லாது இரு சமூகங்களையும் ஒன்றாக ஈழக் கோரிக்கையை முன்னிறுத்திய முற்போக்கான புரட்சிகரமான போராட்டத்தினை நோக்கிச் செல்வதற்கு வழிகோலியது.
ஈரோஸ் அமைப்பில் சேர்ந்த இஸ்லாமிய நண்பர்கள் அமைப்பு கலைக்கப்படும் வரை அமைப்புடன் சேர்ந்து இயங்கினார்கள்.
ஒரு சில இஸ்லாமிய இளைஞர்கள் படையினரின் திட்டமிட்ட செயற்பாடகளினால் உட்புகுத்தப்பட்டாலும் அவர்கள் இனங்காணப்பட்டு மீண்டும் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்கள். ஆனால் அவ்வாறு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டவர்கள் தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் பின்னாட்களில் ஈடுபட்டார்கள். அவ்வாறு செயற்பட்டவர்கள் விடுதலைப் புலிகளால் சுட்டுக்கொல்லப்பட்டார்கள் அல்லது பிற இடங்களிற்குச் சென்று வாழ்ந்து பின்னர் மீண்டும் வந்து தங்களது குடும்பங்களுடன் வாழ்கின்றார்கள்.
ஈரோஸ் அமைப்பின் செயற்பாடுகள் தமிழ் பேசும் அனைத்து மக்களாலும் பாராட்டப்பட்டது. எதுவித துன்புறுத்தல்களிலும் ஈடுபடாது பொதுமக்களின் மீது அக்கறையுடன் அவர்களது நலனிற்காக செயற்படுகின்ற அமைப்பு என்ற நற்பெயரை தமிழ் மக்கள் மத்தியில் மாத்திரமல்ல முஸ்லிம் மக்களும் வழங்கியிருந்தார்கள். அதன் பிரதிபலிப்பாகவே 1989 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் 13 நாடாளுமன்ற உறுப்பினர்களை ஈரோஸ் அமைப்பு சுயேட்சையாகப் போட்டியிட்டு பெற்றுக்கொண்டது. தேர்தலில் விருப்பு வாக்கு நடைமுறை இருந்தாலும் வெளிச்சவீட்டுச் சின்னத்திற்கு மாத்திரமே புள்ளடியிடுமாறு ஈரோஸ் மக்களைக் கோரியிருந்தது.
அத்தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி உட்பட அனைத்து தமிழ் விடுதலை இயக்கங்களும் இணைந்து (விடுதலைப் புலிகள் தவிர்ந்த) போட்டியிட்டார்கள். TULFஇலிருந்து ஒரு உறுப்பினரைக்கூட நேரடியாக வடக்குக் கிழக்கில் பெற முடியாமல் போனது. தேசியப் பட்டியல் மூலமாக ஒரு உறுப்பினராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் பொதுச் செயலாளர் அமரர் அ. அமிர்தலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
ஈரோசில் இரண்டு முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்றம் சென்றார்கள். மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த ஜனாஃப் பசீர் சேகுதாவூத் ஒருவர். திருக்கோணமலை மாவட்டத்ததைச் சேரந்த திருக்கோணமலை இந்தக் கல்லூரி ஆசிரியர் ஜனாஃப் பசீர் மற்றையவர்.
ஈரோசின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக மலையகத்தைச் சேர்ந்த திரு.மலையப்பன் இராமலிங்கம் நாடாளுமன்றம் சென்றார்.
இத்தேர்தலில் திருக்கோணமலை மாவட்டத்தில் தற்போதைய இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவரான திரு. இரா சம்பந்தனும் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.
திருக்கோணமலை மாவட்ட தமிழ்பேசும் மக்கள் ஈரோஸ் சுயேட்சைக்குழு மூலமாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை திருக்கோணமலை மாவட்டத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களாக அனுப்பி வைத்தார்கள். கிண்ணியா, மூதூர், தோப்பூர், தம்பலகமம் குறிப்பாக புல்மோட்டை ஆகிய இடங்களில் முஸ்லிம் மக்கள் கணிசமான வாக்குகளை ஈரோஸ் அமைப்பிற்கு வழங்கியிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருக்கோணமலை மாவட்டத்தில் ஒரு தமிழ்க் கட்சி முதன்முறையாக இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்றுக்கொண்டது இத்தேர்தலிலேயாகும்.