தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 12)

(Thiruchchelvam Kathiravelippillai)
கிழக்கு மாகாணத்தில் தமிழ்பேசும் மக்கள் உறவு விரிசலடைவதற்கான நடவடிக்கைகள் ஆட்சியாளர்களினால் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் போது தமிழ் விடுதலை இயக்கங்களின் சில நடவடிக்கைகளும் அதற்குத் துணை செய்தன.
விடுதலை இயக்கங்கள் தமது நாளாந்த செலவுகளிற்கான நிதியினை மக்களிடமிருந்தே பெற்றனர். தமிழ் மக்கள் முஸ்லிம் மக்கள் என்ற பேதமின்றி ஆரம்பத்தில் செல்வந்தர்களை அழைத்து அவர்களிடம் பண்பாகப் பேசி நிதியினைப் பெற்றனர். தொடர்ச்சியாக கொடுக்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட போது அச்சுறுத்தல் விடுத்தல், குடும்ப உறுப்பினர்களைக் கடத்துதல் போன்ற நடவடிக்கைகள் மூலம் நிதியினைப் பெற்றனர். தமிழ் மக்களிடத்தில் இந்நடவடிக்கை விசனத்தை ஏற்படுத்தினாலும் நமது பிள்ளைகள் என்ற எண்ணம் மேலோங்கியிருந்ததனால் அது பெரிதான விடயமாகப் பேசப்படவில்லை. ஆனால் முஸ்லிம் மக்களிடம் இந்நடவடிக்கை தமிழ் மக்கள் மீது வெறுப்பினை ஏற்படுத்துகின்ற நடவடிக்கையாக மாறியது. இந்திய அமைதி காக்கும் படை இலங்கைக்கு வரும் வரையில் தமிழ் இயக்கங்களின் நிதியீட்ட நடவடிக்கை கப்பம் வாங்குகின்ற செயற்பாடாக முஸ்லிம் மக்களால் பார்க்கப்பட்டது.

அச்சத்தின் காரணமாக கோரப்படும் நிதியினை வழங்காவிட்டாலும் தம்மால் இயன்ற நிதியினை வழங்கினார்கள். இச்செயற்பாடுகள் முஸ்லிம்கள் மக்கள் மத்தியில் விடுதலை இயக்கங்களை தூர விலக்குவதற்கு துணை செய்தன. ஆட்சியாளர்களும் அதனைப் பயன்படுத்தி தமது செயற்பாடுகளை எளிதாக்கினார்கள்.
அதேவேளை 1982 ஆம் ஆண்டு கிண்ணியா மக்கள் வங்கி ஈ.பீ.ஆர்.எல்.எஃப் இயக்கத்தினால் பெரும்தொகைப் பணம், நகை என்பன கொள்ளையிடப்பட்டன. இந்நடவடிக்கைக்கு ஈரோசிலிருந்து பிரிந்துசென்று ஈ.பீ.ஆர.எல்.எஃப் உடன் இணைந்து கொண்ட கந்தளாயைச் சேர்ந்த சின்னவன் தலைமை தாங்கினார். இந்நடவடிக்கைகக்கு ஈ.பீ.ஆர்.எல்.எப். இன் பின்னர் முக்கிய நபராக விளங்கிய சுபத்திரனும் பங்கேற்றார். சின்னவன் காரைநகர் கடற்படைத்தளத் தாக்குதலில் இன்னுயிரை ஈர்ந்தவர்.
1983 இல் இக்கொள்ளையில் சம்பந்தப்பட்ட ஒருவரை மதுபோதையில் காவல்துறை கைது செய்தது. கைதுசெய்யப்பட்ட காரணம் அறியாது தானாகவே கிண்ணியா வங்கிக்கொள்ளைச் சம்பவம் பற்றி மதுபோதையில் உளறியதனால் வங்கிக் கொள்ளையுடன் தொடர்புடைய, ஒத்துழைப்பினை நேரடியாகவும் மறைமுகமாகவும் வழங்கிய பலர் காவல்துறையினரால் 1983 இல் கைது செய்யப்பட்டு தண்ணடனை அநுபவித்து 1988 காலப்பகுதியில் விடுவிக்கப்பட்டனர். இக்கொள்ளையில் முஸ்லிம் மக்கள் எவரும் தொடர்புபட்டிருக்கவில்லை.
ஆனாலும் முஸ்லிம் மக்கள் விடுதலை இயக்கங்களுக்கு உதவிகள் செய்த வண்ணமும் இருந்தனர். காடுகளில் முகாமிட்டிருக்கும் போராளிகளுக்கு உணவு, உடை என்பற்றைக் கொண்டு கொடுக்கும் பெரும்பணியினை முஸ்லிம்கள் செய்தனர். தமிழர்கள் கொண்டு செல்லும் போது ஐயம் காரணமாக படையினரால் கைதுசெய்யப்பட வாய்ப்புகளிருந்ததனால் முஸ்லிம் மக்கள் இவ்வாறான செயற்பாடுகளில் அதிகளிவில் உதவினார்கள். விறகு வெட்டச்செல்லுதல், வயல்களுக்குச் செல்லுதல், மீன், நண்டு பிடிக்கச் செல்லுதல் என்ற போர்வையில் பொருட்கள் கைமாறப்பட்டன.
கிண்ணியா கண்டலடியூற்றிலிருந்து உப்பாற்றில் முகாமிட்டிருந்த விடுதலைப் புலிகளுக்கு பொருட்கள் கொண்டு செல்லப்படுவது வழக்கம். மீன் , நண்டு பிடிப்பதற்காக செல்வது என்ற போர்வையில் சென்று பொருட்களை ஒப்படைத்து வருவார்கள்.இதனை அறிந்த படையினர் உப்பாறு துறையடியில் அதிகாலையிலேயே சென்று நிலையெடுத்துக் காத்திருந்தனர். இதனை அறியாது கண்டலடியூற்றைச் சேர்ந்த ஆறு பேர் பொருட்களுடன் வள்ளத்துக்கு அருகில் சென்றவுடன் இராணுவத்தினரை கண்டதும் பிடிபட்டால் கையும் மெய்யுமாக பிடிபடுவோம் என்பதை உணர்ந்து ஓடத்தொடங்கினர். நிற்குமாறு படையினர் விடுத்த கட்டளையை அவர்கள் செவிசாய்க்கவில்லை. துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது. ஆறு பேரில் “அப்துள் லத்தீப் கலீம்“ என்பவர் குண்டு பட்டு சாவடைந்தார். ஏனைய ஐவரும் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அநுமதிக்கப்பட்டு பின்னர் கைதுசெய்யப்பட்டு தண்டனையின் பின்னர் விடுவிக்கப்பட்டனர். இவ்வாறு பல சம்பவங்கள் கிழக்கு மாகாணம் முழுவதும் நடைபெற்றன.
கண்டலடியூற்றைச் சேர்ந்த ராப்டீன், முஸ்தபா ஆகியோர் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களை இரகசியமாகக் கொண்டு சேர்ப்பவர்கள். அவர்கள் இராணுவ கெடுபிடி காரணமாக சில நாட்கள் செல்லவில்லை. அதனையறியாத விடுதலைப் புலிகள் அவர்கள் இருவரையும் தேடி வந்து சுட்டக்கொன்றனர். இந்நடவடிக்கை கண்டலடியூற்று மக்களை விடுதலைப் புலிகள் மீது வெறுப்பினை ஏற்படுத்திய சம்பவமாக பதிவானதுடன் விடுதலைப்புலிகளுக்கு பொருட்களை கொண்டு சென்று கொடுப்பதற்கும் தயங்கியதுடன் யாரும் அவ்வாறு செயற்பட முன்வரவில்லை.