தமிழ் பேசும் மக்களிடையே உறவும் பிரிவும்(தொடர் – 09)

(Thiruchchelvam Kathiravelippillai)
எண்பதுகளின் இறுதிப்பகுதிகளில் தமிழ்பேசும் மக்களிடையே பிரிவினையை நோக்காகக் கொண்டு மொசாட் வழி நடத்தலில் பல திட்டங்கள் நடைபெற்றன. அம்பாறையில் சிறப்பு அதிரடிப்படையினரின் தலைமையிலும் திருக்கோணமலையில் இராணுவ புலானாய்வாளர்கள் தலைமையிலும் பணிகள் நடைபெற்றன.

அப்போது சிறப்பு அதிரடிப்படைக்குப் பொறுப்பாக இருந்த சிரேஸ்ட காவல்துறை அத்தியட்சகர் திரு போதி லியனகே (Bodhi Liyanage) அவர்களது வழிகாட்டலில் ஊர்காவல்படையினரை முஸ்லிம் இளைஞர்களை உள்வாங்கி அமைத்துக் கொண்டிருந்தார்கள்.
முதலில் திருக்கோணமலை மாவட்டத்தில் நடந்தவற்றைப் பார்ப்போம். தம்பலகமம் 98 ஆம் கொலனியில் 83 அக்டோபரில் ஒரு முஸ்லிம் இளைஞர் வாய்க்கால் அருகில் வைத்து அடித்துக்கொலை செய்யப்பட்டிருந்தார். அவரைக் கொன்றது ஈரோஸ் அமைப்பு என்ற பொய்யான கதையினை படையினர் இரகசியமாகப் பரப்பினர். அக்காலத்தில் ஈரோஸ் அமைப்பே தம்பலகமத்தில் அதிகளவான செயற்பாட்டைக் கொண்டிருந்தது. படையினரின் கருத்துக்கள் மெது மெதுவாகப் பரப்பப்பட்டுக்கொண்டிருந்தன. கொலை நடைபெற்று ஐந்தாம் நாளில் 98 ஆம் கொலனிக்கு அயல் கிராமமான சிவசக்திபுரத்தில் ஒரு தமிழ் இளைஞர் கொல்லப்பட்டார். முஸ்லிம் இளைஞர்களால் கொல்லப்பட்டதாக கதைகள் பரவின. எனினும் அப்போது ஈரோசின் பிராந்தியக்குழு உறுப்பினரான பாஸ்கரன் அவர்கள் நேரடியாக இரு ஊர்களுக்கும் சென்று “தமிழ்பேசும் மக்களின் ஒற்றுமையைக் குலைக்கும் படையினரின் திட்டமிட்ட சதி வேலை“ என்ற உண்மையினை எடுத்துச் சொன்னமையினால் இரு சமூகங்களிடையேயும் முறுகல் தோன்றாமல் தடுக்கப்பட்டது. எனினும் ஊர்காவல் படையினை தடுக்க முடியாமல் போனது. சில முஸ்லிம்இளைஞர்கள் படையினரின் பரப்புரையை நம்பினார்கள். சில இளைஞர்கள் தமது வாழ்வாதரத்திற்காக ஊர்காவல்படையில் இணைந்தார்கள். இதனை வாய்ப்பாகப் பயன்படுத்தி ஈரோசில் பயிற்சி பெற்று மறைவாக ஊர்களிலே இயங்கிக் கொண்டிருந்த முஸ்லிம் இளைஞர் ஒருவரை ஊர்காவல்படைக்கு ஈரோஸ் அனுப்பி வைத்தது. பயிற்சி முடிந்து ஊர்காவல்படை பணியாற்றினாலும் அவர்கள் விடுதலை அமைப்புகள் எதனுடனும் பகையான நடவடிக்கைகளில் ஈடுபடவில்லை. ஈரோஸ் அமைப்பின் உறுப்பினர் ஏனைய ஊர்காவல்படை வீரர்களுக்கு ஈரோசின் கருத்தக்களையும் கொள்கைளையும் தெளிவுபடுத்திக் கொண்டிருந்தார். தமிழ் விடுதலை அமைப்புகளிடம் ஆயுதங்கள் பெரியளவில் இருக்கவில்லை. பாரியளவிலான முகாம்களும் இருக்கவில்லை. பகலில் மக்களது வீடுகளுக்குச் சென்று கருத்துக்களைச் சொல்லி செயலாற்றுவதும் இரவு வேளைகளில் வயல்வெளிகளில் சென்று படுத்து வருவதுமே செயற்பாடாக இருந்தது. தம்மை தற்காத்துக்கொள்ள பேதியளவு ஆயுதங்கள் இல்லாமை குறையாக இருந்தது. ஊர்காவல்படையினரின் ஆயுதங்களை (Shot gun ) பெற்றுக்கொள்வதென தீர்மானிக்கப்பட்டது.
எதுவித மோதல்களும் இன்றி 17 பேர் தமது ஆயுதங்களை ஒப்படைத்தனர். அவர்கள் அனைவரும் தமது வேலைகளை இழந்தனர். சிலர் தற்போது மக்களால் மதிக்கப்படுகின்ற அரசியல்வாதிகளாகவும் உள்ளனர். சிலர் விடுதலை அமைப்புகளுடன் இணைந்தனர்.
கிண்ணியா , மூதூர் நிலைமைகள் வேறு விதமாக இருந்தது. அங்கே ஏற்கனவே பயிற்சியளிக்கப்பட்டவர்கள் துணையுடன் திட்டமிட்ட படுகொலைகள் நடைபெற்றன. அவை ஆரம்பத்தில் சாதாரண பகையினால் ஏற்பட்ட கொலைகள் என்றே எண்ணினர். ஆனால் பிற்காலத்தில் விடுதலை அமைப்புகளால் நடத்தப்படுவதாக இரகசிய பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டன. எனினும் மூதூரில் ஈரோசின் மாவட்ட இராணுவ பொறுப்பாக இருந்த ஜெகன் என்பவரால் பெரியபாலத்தில் ஊர்காவல்படையினர் சுற்றிவளைக்கப்பட்டு அவர்கள் அனைவரினதும் ஆயுதங்கள் பறிக்கப்பட்டன. ஆனால் சில நாட்களிலேயே அது புனரமைக்கப்பட்டு ஆட்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.
கிண்ணியாவில் ஊர்காவல்படை ஆலங்கேணி, ஈச்சந்தீவு, சுங்கான்குழி போன்ற ஊர்களில் வசித்த தமிழ் மக்களுக்கு தொந்தரவுகளைக்கொடுத்த வண்ணமிருந்தனர்.