தமிழ் மக்களுக்கு ‘போக்கிமொன்’ சொல்லும் செய்தி என்ன?

(ப. தெய்வீகன்)

உலகம், கடந்த இரண்டு மாதங்களாக பயங்கரவாதத்தின் கொடும்பிடியில் சிக்கி பல உயிர்களை இழந்திருக்கிறது. அதற்குச் சற்றும் குறைவில்லாமல், அரசியலிலும் பல அதிரடி நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் மத்தியில், கடந்த ஜூலை 11ஆம் திகதி உலக சனத்தொகையில் பல இலட்சக்கணக்கானவர்களை தன் பக்கம் திரும்ப வைத்த ஒரு சம்பவம் நடைபெற்றிருக்கிறது. அது வேறொன்றுமில்லை. ‘போக்கிமொன்’ எனப்படும் ஒரு விளையாட்டின் அறிமுகம்தான்.

இந்த விளையாட்டு, கடந்த ஜூலை மாதம் 11ஆம் திகதி திறன்பேசி அப்பிளிக்கேசன்களிலும் வெளியாகியிருக்கிறது. அதனைத் தொடர்ந்து, தற்போது தங்களது திறன்பேசிகளில் அந்த விளையாட்டை தரவிறக்கி விளையாடுபவர்களின் எண்ணிக்கை இலட்சக்கணக்கில் பெருகியுள்ளது. அமெரிக்காவில் மாத்திரம் தினமும் ஒரு கோடி மக்கள் இந்த விளையாட்டை விளையாடுவதாக தரவுகள் தெரிவிக்கின்றன. அப்படி என்னதான் இந்த விளையாட்டில் இருக்கிறது என்று கேட்டால் – இதில் ஒன்றுமே புதிதாக இல்லைƒ நாங்கள் ஒரு காலத்தில் ஊரில் ஆடிய தும்பி பிடித்து விளையாடும் விளையாட்டுத்தான்ƒ மரத்திலிருந்து வெடித்த தும்பிகள் காற்றில் மிதந்துகொண்டு வருகின்றபோது, அதனைத் துரத்தித் துரத்திப் பிடிக்கும் பால்ய கால விளையாட்டு இன்று வித்தியாசமான வடிவத்தில் உலகை ஆட்கொள்ள வந்திருக்கிறது. இது தொழில்நுட்ப யுகம் என்பதனால் அதனை வித்தியாசமாகக் கையாண்டிருக்கிறார்கள்.

அதாவது, உலகின் வரைபடமே இன்று உள்ளங்கையில் வந்துவிட்டது. ஆகவே, அந்த வரைபடத்தை அடிப்படையாகக்கொண்டு குறிப்பிட்ட இடங்களில் இந்த ‘போக்கிமொன்’ உருவங்களை மிதக்க விட்டுவிடுகிறார்கள். இதற்குரிய அப்ளிக்கேசன்களை தரவிறக்கி அவற்றைத் தேடுபவர்கள், அந்த ‘போக்கிமொன்’ உருவங்களை தேடிச்சென்று பிடிக்கிறார்கள்ƒ அதனை அழிக்கிறார்கள். இவ்வாறு அவர்கள் பிடிக்கும் எண்ணிக்கைகளின் அடிப்படையில் இந்த விளையாட்டின் அடுத்த கட்டங்களுக்கு முன்னேறுகிறார்கள். அதன் மூலம் இந்த விளையாட்டை விளையாடும் ஏனையவர்களுடன் போட்டி போடுகிறார்கள். இந்தப்போட்டி ஒருவித விறுவிறுப்பை ஏற்படுத்தி விடுகிறது. விளைவு, இன்று முழு உலகமும் ‘போக்கிமொன்’ போதையில் மிதக்கிறது. அவ்வளவுதான்‚

தற்போது இந்த விளையாட்டின் விளைவுகள் மிகவும் பாரதூரமாகச் சென்று கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு நாட்டின் பொலிஸும்கூட இந்த விளையாட்டினை விளையாடுபவர்களின் நடவடிக்கைகளை பின்தொடர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளார்கள்.

ஏனெனில், இந்த ‘போக்கிமொன்’கள் பிடிப்பதற்கென வாகனங்களில் செல்பவர்கள், வீதிகளில் மெதுவாக செல்கிறார்கள். வாகனத்தரிப்பிடம் இல்லாத இடங்களில் வாகனங்களை நிறுத்திவிட்டு ஓடிப்போய் ‘போக்கிமொன்’களை பிடித்துவிட்டு ஓடிவந்து வாகனத்தில் மறுபடியும் ஏறிச்செல்கிறார்கள் என்று ஏகப்பட்ட சம்பவங்கள் நடைபெறுவதால் வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

அதேபோல சில இடங்களில் மிக அதிக எண்ணிக்கையிலான ‘போக்கிமொன்’கள் செறிந்து கிடப்பதை அப்ளிக்கேசன்கள் காட்டிவிட்டால், வேறு யாராவது சென்று அவற்றைப் பிடிப்பதற்கு முதல் தாங்கள் முந்திவிடவேண்டும் என்பதற்காக வேகமாக வாகனங்களில் செல்பவர்களால் பாரதூரமான

விபத்துக்கள் ஏற்பட்ட சம்பவங்களும் நடைபெற்றிருக்கின்றன.

இதற்காகவே வீதிச் சட்டங்களை மிகவும் கடுமையாக இறுக்கியுள்ள பொலிஸார், இந்த ‘போக்கிமொன்’ பிடிப்பவர்களை பிடிப்பதற்கு விசேட ரோந்துகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இது இவ்வாறு நடைபெற்றுக் கொண்டிருக்க, இன்னொரு பக்கம், அடுத்தவர் வீடுகளுக்குள் நுழையும் திருடர்கள் சிலர் வீட்டு உரிமையாளர்களிடம் அகப்பட்டவுடன் தாங்கள் அந்த வளவுக்குள் கிடந்த ‘போக்கிமொன்’களை பிடிப்பதற்கு வந்ததாகக் கூறித் தப்பிவிடுவதால், தனிமனித பாதுகாப்புக்களும் இந்த விளையாட்டினால் பாரிய கேள்விக்கு உள்ளாகியுள்ளன.

வயது வேறுபாடின்றி இந்த விளையாட்டுக்கு அடிமையான பலரது சுவாரஸ்யமான சம்பவங்கள் நாளுக்கு நாள் ஊடகங்களில் வெளியாகிய வண்ணமுள்ளன.

ஆனால், கடந்த ஐந்தாண்டு காலமாக போரின் கோரமுகத்தை தினமும் அனுபவித்துவரும் சிரிய நாட்டவர்கள் இந்த ‘போக்கிமொனை’ புதிய வழிமுறையில் கையாள எண்ணினார்கள்.

அதாவது, இந்த ‘போக்கிமொன்’ உருவங்களை பெரிய பதாகைகளில் வரைந்து அவற்றை தாங்கிய சிரியச் சிறுவர்கள் அந்த உருவங்களின் அருகிலேயே ‘நான் சிரியாவிலுள்ள போக்கிமொன். என்னை இந்த போரிலிருந்து காப்பாற்றிச் செல்லுங்கள்’ என்று எழுத்திய அட்டைகளை தாங்கிக்கொண்டு நின்று படம் எடுத்து, அவற்றை சமூக வலைத்தளங்களில் பகிரத்தொடங்கியுள்ளனர்.

இந்த விழிப்புணர்வுப் போராட்டம் ஒரு சில நாட்களிலேயே ‘போக்கிமொன்’ அளவு

வைரஸாக பரவத்தொடங்கியுள்ளது. சிரியாவிலுள்ள சிறுவர்களைப் போரிலிருந்து காப்பாற்றுவதற்கான கடப்பாட்டினை தவறிய அரசாங்கங்களின் மனசாட்சியை தட்டிக்கேட்பது போல அமைந்த இந்தப் போராட்டம், பல்வேறு நாட்டு மக்களின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. இதன் மூலம் சிரியாவில் போரினால் அகப்பட்டிருக்கும் மக்களின் பிரச்சினையின் ஒருபகுதி வித்தியாசமான முறையில் உலகின் அகக்கண்களை திறந்திருக்கிறது.

சுமார் 22 ஆயிரம் தடவைகளுக்கு மேல் பேஸ்புக்கில் மாத்திரம் பகிரப்பட்டுள்ள இந்த ‘போக்கிமொன் – சிறுவர்’ படங்கள் மிகுந்த வீச்சை ஏற்படுத்தியுள்ளன.

சிரியாவில் அகப்பட்டிருக்கும் சிறுவர்கள் மாத்திரமல்லாது படகுகள் மூலம் வேறு நாடுகளுக்கு தஞ்சம்கோரி செல்லுகின்ற அந்நாட்டு மக்களின் அவலத்தையும் – ‘போக்கிமொன், தற்போது தனது உயிரைப் பிடித்துக்கொண்டு படகில் சென்றுகொண்டிருக்கிறது’, ‘போக்கிமொன், தற்போது முள்வேலித் தடுப்பு முகாமில் அகப்பட்டிருக்கிறது’ போன்ற தகவல்களை, சமூகவலைத் தளங்களில் பகிரத்தொடங்கியுள்ளார்கள்.

ஆகமொத்தம், தற்காலத்தின் உலகில் மிகப்பெரிய போதையாகிப்போன விடயத்தை சிரிய மக்கள் பெரு வீச்சுடன் தமக்குச் சார்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இதிலிருந்து தமிழர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய பாடம் என்ன என்பதைத்தான் இந்தக் கட்டுரை பகிர முயற்சி செய்யப்போகிறது.

அதாவது, தமிழர்களது ஆயுதவழிப் போராட்டம் மௌனிக்கப்பட்ட இன்றைய நிலையில், தமிழர்களது அபிலாஷைகள் நிறைந்த சுதந்திர தாகத்தை உலக அளவில் தொடர்ந்தும் உயிர்ப்பு நிலையில் வைத்திருப்பதுதான் தமிழர்கள் மத்தியில் காணப்படும் மிகப்பெரிய தேவை. அதன் நீட்சியில்தான் தமிழர்களுக்கான தீர்வு என்பது சாத்தியத்தை எட்டக்கூடிய நிலை உண்டு.

அதைநோக்கிய பாதையில், தாயகத்திலும் சரி, புலம்பெயர் களத்திலும் சரி இன்று எதுவுமே உருப்படியாக முன்னெடுக்கப்படுவதாகத் தெரியவில்லை.

உயிரிழந்த பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்களின் அழிவுதான் போர் முடிந்து இன்றுவரை தமிழ்மக்களின் பிரசாரத்துக்கு பிரதான மூலப்பொருளாக தொடர்ந்து வருகிறது. அதனை தவிர சர்வதேசம் தமிழர்களை திரும்பிப் பார்க்கும் வகையில் என்ன பிரசார உத்திகளை கையாண்டோம்? திரும்பிப் பார்த்த அவர்களை எவ்வாறு எங்களுக்குள் தக்கவைத்துக் கொண்டோம்?

மென்வலுவின் ஊடாக தமிழர்களின் அரசியல் தீர்வு பற்றிப் பேசுபவர்கள் தனியே அரசியல் ரீதியான முன்னெடுப்புகளில் மாத்திரம் கவனம் செலுத்துகிறார்கள்.

வன்வலுவின் மூலம்தான் இலங்கை அரசாங்கத்தைப் பணியவைக்கலாம் என்ற கருத்தை முன்மொழிபவர்கள் ‘இலங்கை இராணுவத்தைச் சுட்டால்தான் தமிழீழம் காணலாம்’ என்ற மனப்பிராந்தியுடன் தங்கள் முன்மொழிவுகளை பறைசாற்றிய வண்ணமுள்ளார்கள்.

இன்றைய உலகின் போக்கில், அதன் பயணத்தில் கூடவே சென்று, சர்வதேசத்தின் ஆதரவை எமக்கான ஆயுதமாக உருவாக்குவதில் தமிழர்கள் என்ன செய்தார்கள் என்று கேட்டால், அந்த விடயத்தில் தமிழ்மக்கள் பயங்கர வறியவர்களாகவே காணப்படுகிறார்கள் என்பதுதான் உண்மை.

அறிவியல் போர் என்றும் பொருளாதாரப்போர் என்றும் மிகவும் நுணுக்கமான களங்களின் ஊடாக தமது நிகழ்ச்சி நிரல்களை முன்னகர்த்தும் நவீன போராட்ட முறைகளின் முன்பாக தமிழர்கள் தொடர்ந்தும் அரசியலை மாத்திரம் முன்னிறுத்திக் கொண்டு இன்னும் எவ்வளவு காலத்துக்கு சர்வதேசத்தின் காலை சுற்றிச் சுற்றி வரப்போகிறார்கள் என்பது இன்று நிச்சயம் எழுப்பப்படவேண்டிய கேள்வி.

மேற்குறிப்பிட்ட சிரிய மக்களின் ‘போக்கிமொன்’ பிரசாரம் எனப்படுவது மிகச்சிறிய உதாரணம்தான். ஆனால் அதன் தாக்கம் பெரியது.

அதேபோன்று, தமிழர்களது அபிலாசைகள் குறித்த சர்வதேச பரப்புரை கடைசியாக எப்போது செறிவுப்புள்ளியை எட்டியது என்று பார்த்தால், அது சனல் – 4 விடுத்த காணொளியின்போது மாத்திரம்தான். இனி எப்போது அடுத்ததாக அந்தப் புள்ளியை தொடப்போகிறது என்று கேட்டால், அடுத்த தடவை சனல் – 4 தொலைக்காட்சி ஒரு காணொளியை விடுத்தால்தான் உண்டு என்பது மட்டுமே பதிலாக இருக்கமுடியும். இது தமிழ்மக்களின் மிகப்பெரிய வறுமைƒ மிகப்பெரிய பற்றாக்குறைƒ மிகப்பெரிய சோம்பல்.

போராட்டம் என்பது எப்போதும் ஒரேவிதமான ஆயுதங்களை புரட்சிக்காரர்களின் கைகளில் கொடுத்துக்கொண்டிருப்பதில்லை. அதேபோல, ஒரு தடவை ஒரு வகையான ஆயுதங்களால் வெற்றியை பெற்றுவிட்டோம் என்பதற்காக அதையே பல நூறு ஆண்டுகளுக்கும் நம்பிக்கொண்டிருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இந்தத் தெளிவுகளை உணர்ந்து கொள்ளாத தற்போதைய தமிழர்களின் போராட்ட மனநிலை என்பது தமிழர்களின் தலைவிதியை நிரந்தரமான முடிவுப்புள்ளியிடம் மாத்திரமே கொண்டுபோய் நிறுத்தும்.

அதிலிருந்து விலகுவதென்றால், செறிவும் அறிவும் அதிகரித்துச்செல்லும் தமிழர்கள் தங்களது அறிவியல் சார்ந்த சிந்தனைகளை தமிழ்மக்களின் அபிலாஷைகளை பெற்றுக்கொள்வதற்கான போராட்டத்துக்கு எவ்வாறு பயன்படுத்தலாம் என்று திட்டமிடவேண்டும். அதேபோல, பொருளாதார ரீதியான விடயங்களை தமிழர்களின் அபிலாஷைகளுக்குப் பதிலளிக்கும் வகையில் எவ்வாறு முன்னெடுக்கலாம் என்ற திட்டமிடுதல்களையும் ஆழமாக சிந்திக்கவேண்டும். இதில் தாயகத்தின் அரசியல் தலைமைகள் பிளவுபட்டு நிற்குமானால், அவற்றை ஒதுக்கிவிட்டு நேரடியாக மக்களுடன் பேசவும் துணியவேண்டும்.

சிந்தனைகள் தமிழர்களின் போராட்ட வழிமுறைகளில் துளிர்விடாவிட்டால், தமிழர் புரட்சிக் குரலானது ஒப்பாரிக் குரலாக மாத்திரமே இந்த உலகின் ஒவ்வொரு மூலையிலும் எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டிருக்கும்.