தம்பலகாமம்

“கரிய குவளை மலர் மேய்ந்து
கடவாய் குதட்டி தேனொழுக
எருமை கிடந்து மூச்செறியும்
எழிலார் தம்பை வள நாட்டின்…”

என திருக்கோணாசல புராணம் தம்பலகாமத்தின் வளத்தை அதன் அழகை பாடுகிறது.ஈழத் தமிழரின் மிகப் புராதனமான கிராமங்களில் தம்பலகாமம் தனித்துவமான வரலாற்றையும் கலாசார மரபுகளையும் கொண்ட கிராமம்.

ஒரு கிராமத்தின் தோற்றமே அதன் பழைமையயை உணர்த்தி நிற்கும்.தன் தோற்றத்திலேயே மிகத் தொன்மையான மரபுகளை வெளிப்படுத்தும் அழகு தம்பலகாமத்துக்கு உண்டு.

தம்பலகாமம் திருகோணமலைக்கு தெற்கே பதினைந்து மைல் தொலைவிலமைந்த வருடம் தோறும் வயல் விளை நிலங்கள் சூழ் மருத மணம் கமழும் தொல்குடிகள் வாழும் அழகிய கிராமம்.ஆற்றுப் படுக்கைகளின் வழி நீர் நிறைந்து வாய்க்கால் வழியே வட்டமிடும் வயல் நிலங்கள் சூழ திட்டுத் திட்டாய் கடல் நடுவே தெரியும் தீவுக் கூட்டங்கள் போல புராதன குடியிருப்புகள்.

திருமலை கண்டி வீதியில்13ம் கட்டடையில் தம்பலகாமச் சந்தி வரும் அதிலிருந்து உள் நுளைய முதலில் வருவது புதுக்குடியிருப்பு.தொடரந்து நாம் பயணிக்க வீதி இரண்டாக பிரியும.

இடது புறம் செல்லும் வீதி ஊரின் ஒரு பகுதி திட்டுக்களை நோக்கி நகர ,வலப்புறமாய் திரும்பும் வீதி கோயில் குடியிருப்பு நோக்கி செல்லும்.

இடம்புற வழியால் செல்லும் போது பட்டிமேடு,கூட்டாம் புளி,கள்ளிமேடு,முன்மாரித் திடல்,சிப்பித்திடல்,வர்ணமேடு,முள்ளியடி வரை நீண்டு ஆலங்கேணி செல்லும் பாதையயை சந்திக்கும்.
மற்றய வீதி கோயில்குடியிருப்பு வரை நீண்டு,குஞ்சடப்பன் திடல்,நாயன்மார் திடல்,நடுப்பிரப்பம் திடல் வழியே முள்ளியடி சேரும்.
இவற்றை விட ஐயனார் திடல்,பொக்குறுணி,சம்மாந்துறை என்பனவும்

இந்த ஊரின் ஒவ்வொரு திடலும் மா பலா வாழை கமுகு தென்னை என விரிந்திருக்கும் தென்றல் தாலாட்டும் தீங்கனிச் சோலைகள்.

இந்த நிலப்பரப்பையும் இதை அண்டியுள்ள பகுதிகளும் ஒரு இராஜதானியாய் இருந்த அடையாளங்களும் தொல்லியல் சான்றுகளும் உள்ளன.தம்பன் எனும் மன்னன் ஆண்ட காரணத்தால் அவன் பெரையடியொற்றி தம்பபை நகர் எனவும் பின்னாளில் தம்பலகாமம் எனவும் அழைக்கப் பட்டதாக நம்பப் படுகிறது.அத்தோடு திருக்கோணாசல புராணம் தனிப் படலத்தின் மூலம் இப் பிரதேசத்திற்கு சிறப்பு சேர்க்கிறது.தம்பை நகர் படலம் என பல பாடல்களில் விளக்குவதை காணலாம்.திருத் தம்பலேஸ்வரம் எனவும் அழைக்கப் பட்டதாக செய்திகள் உள்ளன.
தம்பை நகர் என்ற சொல்லாட்சி சரசோதி மாலையில் இப்படி குறிப்பிடப்படுகிறது.
“உரைத்த சக வருடமுறும் ஆயிரத் திருநூற்றொரு
நாலெட்டினிலிகுவ சந்தந் தன்னிற்
தரித்திடு வைகாசி புதன் பனையினாரிற்
தம்பை வளர் பராக்கிரம பாகு”

கோணேசர் கல்வெட்டு
“சத்த வாரி திகழ் தம்பை மாநகரில்
அற்புதமுடனே முப்பதவணம்
நெற்பயிர் விளையும் நிலமுமளித்து”
என குறிப்பிடுவதும் தம்பை நகர் என்பதை மேலும் உறுதிப் படுத்துகின்றன.

தமிழ் சொல்லியல் இலக்கண அடிப்படையிலும் தம்பலம் எனும் சொல் இப் பிரதேசத்தின் இயற்கை வளத்தோடு பொருந்தி வருவதை காணலாம்.
தம்பலடித்தல் என்ற சொல்லுக்கு உழவு பயிரிடுதல் என விரிகிறது.தொழில் அடிப்படையிலும் இப் பெயர் உருவாகியிருக்கலாம்.

தம்பலாடல் என்ற சொல்லுக்கு அகராதி தரும் விளக்கம் சேறாடல் அல்லது சேறடித்தல்.வயல் நிலங்கள் கிடா மாடுகளைக் கொண்டு சேறடித்து பயிரிடும் மரபு இன்று வரை காணப் படுவது பெயரோடு பொருந்தி வருகின்றமை இங்கு குறிப்பிடத் தக்கது.

தம்பலி என்ற சொல் மருத மரத்தை குறிக்கிறது தம்பலகாமத்தின் அடையாளங்களில் ஒன்று மருத மரங்கள் அந்த அடிப்படையிலும் நாம் பொருள் காணலாம்.

தம்பலகாமத்தின் வரலாறு

மிக தொன்மையான காலத்திலிருந்து ஒரு வரலாற்று தொடர்ச்சியை காணமுடியும்.

(Balasingam Sugumar)