தலைவனுக்கொரு மடல்…!

(எஸ். ஹமீத்.)

என்னுடையதும் எனது சமூகத்தினுடையதுமான தலைவனே…!

அஸ்ஸலாமு அலைக்கும்!

விழிகளின் கண்ணீர் வழிந்து விரல்களையும் நனைக்க நனைக்க உனக்கிந்த மடலையெழுதும் துர்ப்பாக்கியம் நேர்ந்ததெண்ணித் துடித்துத்தான் போகிறேன் தலைவா…!
தங்கமென நாம் நினைத்திருந்த தலைவன் ஒரு துருப்பிடித்த தகரமென அறிந்து கொண்டதனால் ஏற்பட்ட அக வலியை ஆற்றுப்படுத்த வழியற்றிந்தக் கடிதத்தையுந்தன் கண்களுக்கும் கல்புக்கும் சமர்ப்பிக்கின்றேன் தலைவா…!

அலை புரளும் ஆழ்கடலிற் துடித்துக் கொண்டிருந்த எமது சமூகப் படகுக்கு மாலுமியாக நானிருப்பேன் என்று நீ வலிய வந்த போதிருந்த நம்பிக்கைகள் எல்லாம் தற்போது கடல் நீருக்குள்ளேயே மூழ்கிப் போய்விட்ட, முங்கிப் போய்விட்ட கொடுந்துயரத்தைக் கொஞ்சமாவது உன்னிடம் எத்திவைக்கலாமெனும் எத்தனத்தில் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன் தலைவா…!

தனது பிடரி முடிகள் சிலிர்த்தெழ எமது சமூகத்துக்காகப் போராடிய சிங்கத்தின் அகால மரணத்தில் முடிசூட்டிக் கொண்ட நீ இற்றைவரை ஒரு வழி கெட்ட நரியாகவே வாழ்ந்திருக்கிறாயென்னும் சங்கதிகள் எல்லாம் சந்தையில் கூவிக் கூவி விற்கப்படும் போதும், உனது தரப்பு நியாயத்தை இந்த இகத்துக்கு எடுத்துச் சொல்லாமல் இருப்பதன் இரகசியம்தான் என்ன தலைவா…?

காபிரான பெண்ணொருத்தியைக் காதலித்தாய்….மதுவருந்திக் கொண்டே மலர் மஞ்சங்களில் அவளை அணுவணுவாக அனுபவித்தாய்… இஸ்லாத்திற்குள் அவளை இழுத்து வந்து உனது இனிய மனைவியாக ஏற்றுக் கொள்வதாக வாக்களித்தாய்… இறுதியில் எரிநெருப்பில் அவளின் உடலும் உயிரும் வெந்து சாம்பலாகும் வரை அந்த இரக்கத்திற்குரிய பெண்ணை நீ திட்டமிட்டு ஏமாற்றினாய்…

தலைவனே…! நீ கொன்றொழித்தது ஓர் அபலையை மட்டுமல்ல, அவளது காதலை மட்டுமல்ல, அவளது நம்பிக்கைகளை மட்டுமல்ல, அவளது எதிர்பார்ப்புகளை மட்டுமல்ல, கூடவே, எமது இனத்தின் மானத்தையும் எமது மார்க்கத்தின் மாட்சியையும் சேர்த்தே நீ கொலை செய்துவிட்டாய்….குழி தோண்டிப் புதைத்து விட்டாய்!

உன் மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுக்கு பதில் சொல்லாமலிருப்பதற்கு நீயொன்றும் தனி மனிதனல்ல தலைவா. நீ எங்களின் தலைவன். நீ எங்களின் பொறுப்புதாரி. எமது மக்கள் உன்னிடம் தந்திருக்கும் அமானிதங்களைச் சுமந்து கொண்டிருப்பவன் நீ. எங்கள் சமூகக் கட்டுமானத்தின் அடித்தளம் நீ. எங்கள் இன விருட்சத்தின் ஆணிவேர் நீ.

உனது தவறான எண்ணங்களும் இயக்கங்களும் உன்னை மட்டும் பாதிப்பதாக இருந்தால் அதுபற்றி எங்களுக்கு எந்த ஆட்சேபனைகளும் இல்லை. ஆனால், உனது எந்தவொரு அசைவும் உனது எந்தவொரு சொல்லும் எங்கள் சமூகத்தைப் பாதிக்குமாயின் அந்த சமூகத்தின் அங்கத்தினர்களைப் பழி கொடுக்க முற்படுமாயின் அதுபற்றிய கேள்விகளை உன்னிடத்தில் எழுப்புவதற்கு எங்கள் எல்லோருக்கும் உரிமையிருக்கின்றதென்பதை நீ புரிந்து கொள்வாயென்று நம்புகிறோம் தலைவா!

தலைவா…சமூக வலைத்தளங்களை உன் விழிகளை விரித்துப் பார். உனக்காக எழுகின்றவர்களையும் உனக்காக எழுதுகின்றவர்களையும் கூர்ந்து பார். எத்தனை ஆதாரங்கள் அடுக்கடுக்காக வந்த போதும் அவற்றையெல்லாம் ஒதுக்கிவிட்டு உனக்காகக் குரல் கொடுக்கும் அந்த உறுதி கொண்ட போராளிகளை ஒரு தரம் உன் உள்ளத்துக்குள்ளே உள்வாங்கிப் பார். அவர்களையெல்லாம் நீ இன்னமும் ஏமாற்றிக் கொண்டிருப்பதாக உனக்கு எண்ணத் தோன்றவில்லையா…? அவர்களையெல்லாம் இன்னுமின்னும் ஏய்த்துக் கொண்டிருக்கும் குறைந்த பட்ச குற்றவுணர்வு கூட உனக்கில்லையா…? போராளிகளின், தொண்டர்களின், நலன் விரும்பிகளின் அந்த நம்பிக்கைக்கு நீ உண்மையிலேயே அருகதையானவன்தானா என்று உன்னையே நீ ஒருமுறை கேட்டுக் கொள்ள விரும்பவில்லையா, தலைவா….?

இரத்தமும் சதையுமான எமது சமூகத்தின் இருதயத்தை அறுத்தெடுத்து அந்நிய தேசங்களிடம் அடகு வைத்து நீ பெற்ற பெரும் பணம் பற்றியும் உனது சகாக்களே இன்று சாட்சி சொல்லிக் கொண்டிருக்கிறார்களே… தலைவா, இதற்கும் நீ ஏதேனும் சால்ஜாப்புச் சொல்லிச் சமாளிக்கத்தான் போகிறாயா…? காமெடி நடிகர்களின் கதைகள் சொல்லி விடயங்களை வேறுபக்கம் திசை திருப்பிவிடத்தான் போகிறாயா…? இன்னுமான உனது பகட்டுக்கும் படாடோபத்திற்கும் இந்த சமூகத்தை முழுவதுமாகப் பழி கொடுத்தே தீர்வதென்ற முடிவில்தான் இருக்கிறாயா, தலைவா…?

அப்பாவி ஆடுகளைக் காட்டி ஓநாய்களிடம் பணம் பெற்ற உனது சாணக்கியத்தைக் கண்டு சந்தி சிரிக்கிறது, தலைவா. பாவப்பட்ட ஒரு சமூகத்தை நீ இஸ்லாத்தின் எதிரிகளிடம் பணயம் வைத்துப் பெற்ற பணத்துக்கு இன்று நியாயம் வேறு கற்பிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதே, இது பெரும் அநியாயமென உனது மர மண்டைக்குத் தெரியாவிட்டாலும், மனசாட்சிக்குமா தெரியவில்லை, தலைவா…?

உனது போக்கிரித்தனத்தை எதிர்த்துக் குரலெழுப்புவோர்க்கெல்லாம் பதவியாசைக்காரர்களெனப் பட்டம் சூட்டிப் புறமொதுக்கி விடுகிறாயே, தலைவா…நீ மட்டும் என்னவாம்…? ‘எனது நப்ஸு தலைமைப் பதவியைக் கேட்கிறது!’ என்று சிறிதும் வெட்கமில்லாமற் சொல்லி சிம்மாசனத்தைப் பறித்தெடுத்தவன்தானே நீ, தலைவா..? உனக்கு மட்டும் நப்ஸு இருக்கலாம்…அவர்களுக்கு அது இருக்கக் கூடாது என்பது என்ன நியாயம் தலைவா…?

உனது கபடத்தனங்கள் பற்றிக் கண்டனம் செய்கின்ற விருட்சத்தின் வேர்களையெல்லாம் விரட்டியடித்துவிட்டு இறுதியில் நீ மட்டும் முளைத்தெழலாமெனக் கனவு காண்கிறாயா தலைவா….? அது வெறும் பகற் கனவு தலைவா…! அறிந்து கொள்…அந்த வேர்கள் எல்லாம் நன்னிலமொன்றில் ஊன்றித் தழைக்கும். நாளையுன் செல்லரித்துப் போன ஆதிக்க வேரினை அவை கண்டிப்பாக அறுத்தெறியும்!

பதினாறு வருட உனது தலைமைத்துவத்தில் உன்னால் எமது சமூகம் பெற்றுக் கொண்ட பதினாறு உரிமைகளை-வேண்டாம்-உருப்படியான ஒரேயொரு உரிமையை உரத்துச் சொல் பார்க்கலாம், தலைவா. சரி, அது கிடக்கட்டும்… உனது முயற்சியால் எமது இனம் அடைந்து கொண்ட குறிப்பிட்ட அபிவிருத்திகளையாவது உன்னாற் கூற முடியுமா, தலைவா…? முடியாது. ஏனெனில் அப்படியேதும் கிடையாது. ஆனால், எம்மைக் காட்டி நீயும் உனது உறவினர்களும் அடைந்து கொண்ட ஆயிரமாயிரம் உயர்வுகளையும் உன்னதங்களையும் எம்மால் ஆதாரங்களோடு முன் வைக்க முடியும், தலைவா!

வேண்டாம் தலைவா….விட்டு விடு. விட்டு விலகிவிடு. இதுவரை காலமும் நீ சேர்த்துக் குவித்த செல்வங்களை நீயே வைத்துக் கொண்டு எங்காவதோரிடத்தில் உனது இறுதிக் காலங்களை நிம்மதியாகக் கழித்து விடு. இதுநாள்வரை நீ செய்த பாவங்களுக்கு இறைவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டும் மறுமைக்கான தேடல்களில் ஈடுபட்டுக் கொண்டும் உனது மிச்சமுள்ள வாழ்க்கையைக் கழித்துவிடு!

இது அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட சமூகம். இந்த சமூகத்தை அல்லாஹ் ஒரு போதும் கைவிட மாட்டான். அவன் ஓர் உயர்ந்த தலைமைத்துவத்தை இந்த சமூகத்திற்கு வழங்குவான். குரல்வளையை அறுத்தாலும் தன் கொள்கையில் உறுதியாகவிருக்கும் ஓர் ஆளுமையுள்ள தலைமைத்துவத்தை அவன் எங்களுக்குத் தருவான். சொத்துக்கள் கோடி தந்தாலும் சோரம் போகாமல், வீரத்தோடு போராடி எமக்கு வெற்றிகளைப் பெற்றுத் தருகின்ற ஒரு சூரம் மிகுந்த தலைமைத்துவத்தை அவன் எங்களுக்குத் தருவான். மதுவுக்கும் மாதுவுக்கும் மண்டியிடாது, மகத்தான இஸ்லாமிய விழுமியங்களை மார்பில் ஏந்திப் பயணிக்கும் ஒரு மகிமைமிக்க தலைமைத்துவத்தை அந்த அல்லாஹ் எங்களுக்கு நிச்சயம் தருவான். …! இன்ஷா அல்லாஹ்!

வஸ்ஸலாம்!