தவறிய தாளம் – சுரேஸ் பிரேமச்சந்திரன்

(கருணாகரன்)

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்திருந்தபோது சம்மந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு நிகரான அரசியற் பங்களிப்பைக் கொண்டவராக இருந்தார் சுரேஸ். உண்மையில் மாவையையும் விட ஆற்றலும் அறிதிறனும் உள்ளவராகச் சுரேஸே இருந்தார். இது கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் அந்தக் காலத்தில் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது.

ஆனாலும் சுரேஸினால் தன்னுடைய இடத்தை, நிலையை தக்க வைக்கவோ தன்னை வலுப்படுத்தவோ முடியாமல் போய் விட்டது. அதாவது அவருடைய ஆளுமைக் குறைபாடும் அரசியல் விவேகமற்ற தன்மையும் பதற்றங்களும் அவரைத் தனிமைப்படுத்தியது. இன்னொரு வகையில் சொன்னால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் எனலாம்.

சுரேஸ் சரியாகச் செயற்பட்டிருந்தால் கூட்டமைப்பைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கலாம். அல்லது அதில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோவையும் புளொட்டையும் இணைத்துப் புதிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க முடியும். அதற்குரிய அத்தனை சாதகமான வாய்ப்புகளும் சுரேசுக்கிருந்தன.

இதைச் செய்யாமல் அவர் தமிழரசுக் கட்சியையே பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். சுமந்திரனை ஒரு பக்கத்திலும் விக்கினேஸ்வரனை இன்னொரு பக்கத்திலுமாக வளர்த்தெடுத்ததில் சுரேஸின் பலவீனத்துக்குப் பெரும் பங்குண்டு. அதைப்போலச் செல்வம் அடைக்கலநாதனுக்கும் சிவாஜிலிங்கம், சிறிகாந்தாவுக்கும் பின்னாளில் புளொட் சித்தார்த்தனுக்கும் இந்தப் பழி சேரும்.

“மாற்று அரசியல் தலைமையைப் பற்றி உங்கட தீர்மானம் என்ன?” என்று ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரனிடம் கேட்டிருக்கிறார் புலம்பெயர்ந்த நாடொன்றில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த அவருடைய நீண்டநாள் ஆதரவாளர்.

“நாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறம். அவரைத் தவிர்த்து வேறு யாரையும் இப்போதைக்கு யோசிக்க முடியாது” என்று சட்டெனப் பதில் சொல்லியிருக்கிறார் சுரேஸ்.

கேட்டவருக்கு அதிர்ச்சி.

ஒன்று, கொஞ்சமும் யோசிக்காமல் சுரேஸ் சட்டென்று பதில் சொன்ன விதம். அல்லது இதற்கு மேல் அவரால் தற்போது யோசிக்க முடியாமலிருக்கலாம் என்பது.

இரண்டாவது, சுரேஸின் பதில். அதாவது விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேறு தெரிவுகள் இல்லை என்றும் தாங்கள் விக்கினேஸ்வரனையே நம்பியிருக்கிறோம் என்பதும்.

நீண்டகாலமாகச் சுரேஸோடும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வுடனும்  பழகியிருந்தாலும் ஆதரவை வழங்கியிருந்தாலும் நேரிலே சந்தித்து உரையாடும்போது இப்படியான ஒரு பதிலோடு – நம்பிக்கையோடு(?) – சுரேஸ் காத்துக் கொண்டிருப்பது அதிர்ச்சியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருக்கிறது இந்தப் புலம்பெயர் நண்பருக்கு.

இருந்தாலும் வேறு தெரிவுகளைக் குறித்துச் சுரேஸின் அபிப்பிராயம் என்னவாக இருக்கும் என்று அறிய எண்ணி, “ஏன், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் ஏனைய தரப்புகளை எல்லாம் ஒன்றிணைத்து ஒரு அணியை உருவாக்கலாமே. அதோடு வெளியில் நிற்கின்ற நல்ல சக்திகளையும் சேர்த்து, ஒரு புதிய அணியை உருவாக்கலாமே?” என்று கேட்டிருக்கிறார் நண்பர்.

“அதெல்லாம் சாத்தியப்படாது. எந்தக் காரணம் கொண்டும் ஈ.பி.டி.பியோடும் டக்ளஸ் தேவானந்தாவோடும் கூட்டு வைக்க முடியாது. அவர்களுடைய அரசியல் வேற. எங்கட அரசியல் வேற. நாங்கள் விக்கினேஸ்வரனைத் தவிர்த்து வேற யாரைப்பற்றியும் யோசிக்கவே முடியாது” என்றார் சுரேஸ்.

“அப்படியென்றால், ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் வரதர் – சுகு தரப்பு?”

“அவர்களைப் பற்றி இப்ப ஒன்றும் சொல்றமாதிரி இல்லை”

“சந்திரகுமாரோடு?”

“அதையெல்லாம் கால நேரம் வரும்போது பார்த்துக் கொள்ளலாம்”

“எதையும் உருப்படியாகச் செய்யவில்லை என்று விக்கினேஸ்வரன் மீது கடுமையான விமர்சனங்கள் இருக்கே!”

“இருக்கலாம். ஆனால், என்னதானிருந்தாலும் அவரைத் தவிர்த்து வேறு யாரையும் நாங்கள் இப்போதைக்கு யோசிக்க முடியாது”

ஏறக்குறைய நாற்பது ஆண்டுகால அரசியல் அனுபவத்தையும் அரசியல் பங்களிப்பையும் கொண்ட சுரேஸ் பிரேமச்சந்திரன், நான்காண்டுகால “அரசியல் பயில்நிலையாளர்” விக்கினேஸ்வரனையே கதியென்று நம்பியிருப்பதை நண்பரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இந்தக் கவலையை என்னுடன் பகிர்ந்து கொண்டார்.

“பாருங்கள், பிரமுகர் அரசியலினால் பயனில்லை என்றுதானே அந்த நாளில் (1970 களில்) ஆயுதப்போராட்ட – அர்ப்பணிப்புமிக்க செயற்பாட்டைக் கொண்ட – அரசியலில் இயக்கங்கள் ஈடுபட்டன. அப்படி ஒரு மாற்று அரசியல் பண்பாட்டில் வந்த சுரேஸ் ஏன் இப்பிடிப்போய்ப் பிரமுகர் அரசியலில், விக்கினேஸ்வரன் என்ற பிம்பத்துக்குப் பின்னால் நிற்கிறார்” என்று கேட்டார் துக்கத்தோடு.

இதையிட்டு நான் எதையும் பேசாமல், அமைதியாகச் சிரித்தேன்.

பிறகு அவருக்குச்சொன்னேன், “அப்பொழுது சுரேஸ் போராளி. இயக்க உறுப்பினர். இப்பொழுது அவர் பிரமுகர். கட்சித்தலைவர். ஆகவே இன்று அவர் பிரமுகருக்குரிய அரசியல் ஒழுக்கத்தின்பாற்பட்டே சிந்திப்பார். அதிலும் தேர்தல் அரசியல் கணக்குகளையே பார்க்கின்ற ஒருவராக மாறிய பிறகு நீங்கள் அவரிடம் புரட்சிகர அரசியலைப் பற்றியெல்லாம் எதிர்பார்க்க முடியாது. கட்சியின் பெயரில் ”புரட்சிகர விடுதலை முன்னணி” என்று இருந்தாலும் தேர்தலில் அந்தப் பெயரை மறந்தும் அவர் பயன்படுத்துவதில்லை என்பதை அவதானித்திருப்பீர்கள். பதிலாக “தமிழ்த்தேசிய”க் கூட்டமைப்பு என்றோ, “தமிழ்த்தேசிய” விடுதலைக் கூட்டமைப்பு என்றோதான் தேர்தலில் இறங்குகிறார்கள். இந்த நிலையில் அவருடைய தெரிவு விக்கினேஸ்வரனாக இருப்பதில் ஆச்சரியமில்லை. ஆனால், சுரேஸ் அரசியலில் மூத்தவர். விக்கினேஸ்வரனோ தத்தும் குழந்தை. இதை எப்படிச் சமன் செய்வது என்பதே இப்பொழுதுள்ள பிரச்சினை” என்றேன்.

நண்பர் ஆழமாக யோசித்தார்.

மேலும் சொன்னேன் “2009 க்குப் பிறகு (அதற்கு முன்பு வேட்பாளர் பட்டியலைத் தீர்மானிப்பது புலிகளே) ஈ.பி.ஆர்.எல்.எவ் சார்பாக சுரேஸினால் நிறுத்தப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பிரமுகர்கள். உதாரணமாக சிறிதரன், ஐங்கரநேசன், டொக்ரர் சிவமோகன், ரவிகரன் போன்றவர்கள். இதனால் இவர்கள் வெற்றியடைந்த பிறகு சுரேஸின் கட்டுப்பாட்டுக்குள்ளோ ஈ.பி.ஆர்.எல்.எவ்.வின் நடைமுறைகளுக்குள்ளோ நிற்கவில்லை. இதற்குப் பதிலாக ஈ.பி.ஆர்.எல்.எவ்வைச் சேர்ந்தவர்களையோ அல்லது பிற இயக்கங்களில் இருந்த போராளிகளையோ அல்லது நேர்மையான பிற ஆட்களையோ நிறுத்தியிருந்தால் சுரேசும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வும் பலப்பட்டிருக்கும். ஆனால், சுரேஸின் இன்றைய மூளை இதை ஒருபோதுமே ஏற்றுக்கொள்ளாது. இதற்கு இன்னொரு எளிய உதாரணத்தையும் சொல்ல முடியும். விக்கினேஸ்வரனும் ஒரு பிரமுகரே. அதனால்தான் அவர் சம்மந்தன், மாவை போன்ற மூத்தவர்களையும் மீறி நிற்கிறார். அப்படித்தான் சுமந்திரனும். இதற்குப் பிறகும் பிரமுகர்களில் தங்கி நிற்பதே சரியென்றால்….”

1970 களில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர் சுரேஸ் பிரேமச்சந்திரன். ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எவ், தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த்தேசிய விடுதலைக் கூட்டமைப்பு எனத் தொடர்ந்த போராட்ட அரசியலில் கடந்த நாற்பது ஆண்டுகளாகக் களத்தில் நிற்கும் அரசியற் செயற்பாட்டாளர். இந்த நாற்பது ஆண்டுகளில் தொடர்ந்து ஏராளம் நெருக்கடிகள், உயிராபத்துகளைச் சந்தித்தவர். பதிலாக அவரும் உயிராபத்துகளையும் நெருக்கடிகளையும் உண்டாக்கியவர் என்ற குற்றச்சாட்டும் பகிரங்கமாகவே உண்டு.

ஆனாலும் சளைத்து விடாமல், ஒதுங்கிக் கொள்ளாமல் அரசியல் அரங்கில் நின்று பிடித்தவர். ஆயுதப்போராட்ட அரசியல் பிறகு ஜனநாயக அரசியல் ஆகியவற்றில் பொறுப்பான நிலையில் இருந்தவர்.  விடுதலைப்புலிகள், இலங்கை அரசு, இந்திய அரசு ஆகிய வலுச்சக்திகளோடு இடை ஊடாட்ட அரசியலைச் செய்த அனுபவத்தைக் கொண்டவர். தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் இணைத்தலைவர்களில் ஒருவராக இருந்தவர். பத்மநாபாவின் கொலைக்குப் பிறகு ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்குத் தலைமைப் பொறுப்பேற்றவர். பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்.

இப்படி நீண்டதொரு அரசியல் அடையாளத்தைக் கொண்டிருக்கும் சுரேஸ் பிரேமச்சந்திரன், இன்று இப்படித் தடுமாறிக் கொண்டிருப்பது பலருக்கும் கவலையாகவே இருக்கும் என்பது நியாயமே.

தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் ஈ.பி.ஆர்.எல்.எவ் இணைந்திருந்தபோது சம்மந்தன், மாவை சேனாதிராஜாவுக்கு நிகரான அரசியற் பங்களிப்பைக் கொண்டவராக இருந்தார் பிரேமச்சந்திரன். உண்மையில் மாவையையும் விட  ஆற்றலும் அறிதிறனும் உள்ளவராகச் சுரேஸே இருந்தார். இது ஒரு வகையில் கூட்டமைப்பின் பேச்சாளராக சுரேஸ் அந்தக் காலத்தில் செயற்படுவதற்குக் காரணமாக இருந்தது. இதையெல்லாம் இந்தப் பத்தியாளர் முன்னரும் குறிப்பிட்டிருந்ததை இங்கே நினைவூட்டலாம்.

ஆனாலும் பிரேமச்சந்திரனால் தன்னுடைய இடத்தை – நிலையை – த் தக்க வைக்கவோ தன்னை வலுப்படுத்தவோ முடியாமல் போய் விட்டது. அதாவது அவருடைய ஆளுமைக் குறைபாடும் அரசியல் விவேகமற்ற தன்மையும் பதற்றங்களும் அவரைத் தனிமைப்படுத்தியது. இன்னொரு வகையில் சொன்னால், அவர் தன்னைத் தானே தனிமைப்படுத்தினார் எனலாம்.

சுரேஸ் சரியாகச் செயற்பட்டிருந்தால் கூட்டமைப்பைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்திருக்கலாம். அல்லது அதில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய கட்சிகளான ரெலோவையும் புளொட்டையும் இணைத்துப் புதிய கட்டமைப்பொன்றை உருவாக்கியிருக்க முடியும். அதற்குரிய அத்தனை சாதகமான வாய்ப்புகளும் சுரேசுக்கிருந்தன.

பிரேமச்சந்திரன் கூட்டமைப்பில் இருந்த காலத்தில் அவர் கூட்டமைப்பிற்குள் கொண்டு வந்திருந்த பெரும்பாலான வேட்பாளர்கள் (பாராளுமன்றத் தேர்தலிலும் மாகாணசபைத் தேர்தலிலும்) வெற்றிபெற்றிருந்தனர். கூட்டமைப்பில் தன்னை அல்லது தன்னுடைய தரப்பை மேலும் வலுப்படுத்த வேண்டுமாக இருந்திருந்தால் ஈ.பி.ஆர்.எல்.எவ்விலிருந்து மேலும் பலரை உள்ளீர்த்திருக்க முடியும். இதில் புலம்பெயர்ந்திருக்கும் முன்னாள் உறுப்பினர்கள் தொடக்கம், வரதர் – சுகு தரப்பையும் கூடப் பேசி இணைத்து பெரியதொரு அணியாக்கியிருக்க முடியும்.

இதைச் செய்யாமல் அவர் தமிழரசுக் கட்சியையே பலப்படுத்திக் கொண்டிருக்கிறார். சுமந்திரனை ஒரு பக்கத்திலும் விக்கினேஸ்வரனை இன்னொரு பக்கத்திலுமாகவளர்த்தெடுத்ததில் சுரேஸின் பலவீனத்துக்குப் பெரும் பங்குண்டு. அதைப்போலச் செல்வம்அடைக்கலநாதனுக்கும் சிவாஜிலிங்கம், சிறிகாந்தாவுக்கும் பின்னாளில் புளொட்சித்தார்த்தனுக்கும் இந்தப் பழி சேரும்.

கூட்டமைப்புக்கு எதிராக இன்னொரு அணியை உருவாக்குவதிலும் சுரேஸ் தோல்வியையே கண்டிருக்கிறார். கூட்டமைப்பிலிருந்து வெளியேறும் முடிவை அவர் எடுக்கும்போது மறுஅணிக்கான தயார்ப்படுத்தல் சரியாக இருந்திருக்க வேணும். தமிழ் மக்கள் பேரவையையும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தையும் அவருடைய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியையும் விக்கினேஸ்வரனையும் நம்பிக் கொண்டு கூட்டமைப்பிலிருந்து வெளியே வந்தவரை யாருமே முறையாக அங்கீகரிக்கவில்லை.

ஏறக்குறைய எல்லோரும் கைவிட்ட நிலையில் வேறு வழியின்றி கடந்த உள்ளுராட்சித் தேர்தலின்போது ஆனந்தசங்கரியோடு (தமிழர் விடுதலைக் கூட்டணியோடு) கூட்டு வைக்க வேண்டியதாயிற்று. இந்தக் கூட்டு சுரேசுக்குப் பெரிய வெற்றிகள் எதையும் பெற்றுக் கொடுக்கவில்லை. நன்மைகளையும் உருவாக்கவில்லை. புதிய களச் சூழலுக்கும் உதவவில்லை. போதாக்குறைக்கு உள்ளுராட்சித் தேர்தலில் வெற்றியீட்டிய உறுப்பினர்களுக்குரிய இடத்தைப் பெறுவதிலேயே சுரேசினால் சங்கரியோடு சரியாகப் பேச முடியாமல் போனது என்று சுரேசின் அணிக்குள்ளேயே கவலைகள் உண்டு.

இவ்வளவுக்கும் ஒரு கட்சித்தலைவராகவே இப்பொழும் சுரேஸ் இருக்கிறார். அதிலும் ஒரு காலகட்டத்தில் – ஈழப்போராட்டத்தில் – செல்வாக்குச் செலுத்தியிருந்த இயக்களில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் என்ற இயக்கத்தின் தலைவர்.

அப்படியிருந்தும் இப்படிப் படியிறங்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன?

இதுவே சுரேஸை ஆதரிப்போருக்கும் அவர் மீது மதிப்புக் கொண்டிருப்போருக்கும் உள்ள கவலையும் கேள்வியுமாகும்.

இதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று, சுரேஸ் யாருடனும் பொறுப்பான முறையில் உரையாடலை நடத்துவதில்லை. யாருடைய அபிப்பிராயங்களையும் பொருட்படுத்துவதில்லை. இலங்கையின் அரசியற் சூழல், பிராந்திய – சர்வதேச அரசியல் யதார்த்தம் போன்றவற்றை எல்லாம் கணக்கில் எடுப்பதில்லை. தன் மனதறிந்த உண்மையைக் கூட வெளியே சொல்ல விரும்புவதில்லை. குறிப்பாக விடுதலைப்புலிகள் உருவாக்கிய “தீவிர அரசியல் – பிரிவினைக் கோட்பாட்டரசியல்” சட்டகத்திற்குள்ளேயே தானும் நிற்கப்பார்க்கிறார். ஆனால், புலிகள் தமது நிலைப்பாட்டை உறுதியாக்குவதற்கும் வெற்றியடைய வைப்பதற்கும் கடுமையாக உழைத்தனர். அதற்கான வலுமிக்க கட்டமைப்பைக் கொண்டிருந்தனர். உலகமெங்கும் அதற்கான செயற்பாட்டு வலையமைப்பைக் கொண்டிருந்தனர். நடைமுறையில் பல்வேறு வேலைத்திட்டங்களை இதற்கென உருவாக்கியிருந்தன். போரிட்டடனர். அதில் பெரும் தியாயங்களைச் செய்தனர். பல்லாயிரக்கணக்கானோரை இழந்தனர். இழக்கவும் தயாராக இருந்தனர். அப்படியிருந்தும் அவர்களால் அதில் வெற்றியடைய முடியவில்லை.

சுரேஸோ விக்கினேஸ்வரனோ கஜேந்திரன், கஜேந்திரகுமாரோ இதில் ஒன்றைக் கூடச் செய்யத் தயாருமில்லை. இதைப் பற்றிச் சிந்திக்கவும் இல்லை. இதைப்பற்றி, இதன் சாதக பாதக நிலைமையைப்பற்றிப் பரிசீலிக்கவும் தயாரில்லை. முக்கியமாக கேட்கும் புலனை சுரேஸ்  நிராகரித்து விட்டார் என்று பலரும் குறிப்பிடுகிறார்கள். சுரேஸின் நீண்டகாலத் தோழமையோடுள்ளவர்களே இந்தக் குற்றச்சாட்டைக் கவலையோடு முன் வைக்கிறார்கள்.

இதனால்தான், அரச உத்தியோகத்திலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, எதிர்பாராத விதமாக பிரமுகர் அரசியல் கதவின் வழியாக வந்த விக்கினேஸ்வனின் நிழலில் ஒதுங்கும் நிலைக்குச் சுரேஸ் இன்று தள்ளப்பட்டுள்ளார். இது கையறு நிலையன்றி வேறென்ன?

பிரேமச்சந்திரனின் நாற்பதாண்டு கால அரசியல் அனுபவத்துக்கும் பங்களிப்புக்கும் எந்தப் பயனுமில்லாததாகி விட்டது. பதிலாக நான்காண்டுகால – வினைத்திறனற்ற – வெறும் வாய்ப்பல்லக்கு அரசியலைச் செய்யும் விக்கினேஸ்வரனின் தயவுக்காகக் காத்திருக்க வேண்டியிருக்கிறது. இது மோசமான விதியன்றி வேறென்ன?

இவ்வளவுக்கும் விக்கினேஸ்வரனுக்கு ஒரு கட்சியோ, வேலைத்திட்டமோ, உறுதியான முடிவுகளோ கிடையாது. அரசியற் செயற்பாட்டுப் பாரம்பரியமோ பங்களிப்போ இல்லை. இந்த நிலையில் இப்பொழுதுதான் புதிய அரசியல் பிரவேசம் செய்த ஒருவரைப்போல – முதிரா நிலையினரைப்போல – விக்கினேஸ்வரனைப் பற்றிய “பெரும் பிம்பக் கனவில்” சுரேஸ் இருப்பது (மிதப்பது) மிகப் பெரிய தவறு. மட்டுமல்ல, வெட்கக் கேடுமாகும்.

இது சுரேசுடன் கூட நின்றோருக்கும் நிற்போருக்கும் ஈ.பி.ஆர்.எல்.எவ்வின் பயணிகளுக்கும் இழைக்கப்படும் அநீதியே.

இது சுரேசுக்கும் முக்கியத்துவம் மிக்க ஈ.பி.ஆர்.எல்.எவ்வுக்கும் ஏற்பட்டுள்ள பெரும் வீழ்ச்சியன்றி வேறில்லை.

சுரேசுக்கு மட்டுமல்ல, ஒரு வகையில் தமிழ்ச்சமூகத்துக்கும்தான்.