தவறுகளை மறவுங்கள். மீண்டும் கிளறாதீர்கள்!

ஈழத்தமிழர் வரலாற்றில் தவறு செய்யாத தலைமைகள் என்று எவரும் இல்லை. அது மிதவாதம் தீவிரவாதம் பயங்கரவாதம் என எவ்வாறு அழைக்கப்பட்டாலும் அதன் தலைமைகள், “இடக்கன்னத்தில் அடித்தால் வலக்கன்னத்தையும் காட்டு” என்று சொன்ன யேசுபிரான்கள் அல்ல. எதோ வகையில் எதிர்ப்பை, வெறுப்பை விதைத்தவர்கள். அதனால் தான் தமிழ் காங்கிரஸ் பிளவுபட்டு தமிழ் அரசு கட்சி பின்பு அதுவும் பிளவுற்று சுயாட்சி கழகம் என தொடர்ந்தது.

புதிய புலிகள் மட்டுமல்ல, இன்று அரசியல் கட்சிகளாக இருக்கும் அத்தனை முன்னாள் போராளிகள் இயக்கங்களும் பிளவுகளால் உருவானவை. ஒரு தலைமை விட்ட தவறால் தான் புதிய தலைமை தோன்றியது. பின் அந்த தலைமை விட்ட தவறால் இன்னொரு தலைமை தோன்றியது. இப்படித்தான் பிரிவை நியாயப்படுத்தினார்கள். உட்பூசல், தலைமைத்து விருப்பு, என பல உள்குத்துகள் இருந்தாலும் வரித்துக்கொண்ட கொள்கையில் இருந்து விலத்தியதால் தான், பிரிவு ஏற்ப்பட்டது என்பதே விளக்கம்.

தமிழ் மக்களின் நலன் வேண்டித்தான் நாம் மிதவாத அரசியல் செய்கிறோம் என்பவரும், அவர்களை அடக்குமுறையில் இருந்து மீட்கத்தான் ஆயுதம் ஏந்தினோம் என்பவரும் தமக்குள்ள பிளவுபட்டு, இருந்ததையும் அடக்குமுறையாளரிடம் தாமே வலிந்து அடகுவைத்துவிட்டு, இன்று “உன்னால் நான் கெட்டேன் என்னால் நீ கெட்டாய்” என, கடந்த கால தவறுகளுக்கு யார் காரணம் என்ற பழைய அத்தியாயத்தை புரட்டி பார்க்கும் நிலையே, இன்றுவரை தொடர்கிறது.

தவறுகளில் இருந்து புதிய படிப்பினை கிடைத்தால், புதிய பாதையில் பயணிக்கும் எண்ணம் பிறக்கும். ஆனால் பழையதையே தொடந்தும் கிளறினால் விரோதம் தொடரும், முடை நாற்றம் எடுக்கும். யார் தவறை யார் விமர்சிப்பது என்ற அளவுகோல் எவரிடமும் இல்லை. காரணம் அத்தனை பேரும் தவறுகளுக்கு எதோ வகையில் துணை போனவர்கள், அல்லது பங்களிப்பு செய்தவர்கள், அல்லது அவர்களே அந்த தவறை செய்தவர்கள்.

அரசியல்கட்சிகள், இயக்கங்கள், தம்மை புத்தி புத்திஜீவிகள் என்பவர்கள், விமர்சகர்கள், மெத்தப்படித்த கல்விமான்கள், பத்திரிகையாளர், இவர்கள் கூறுவதை ஏற்றுக்கொண்டு அணிபிரிந்து நிற்கும் மக்கள் என அனைவருமே, கடந்த கால தவறுகளுக்கு உடந்தையாக இருந்தவர்கள்தான். இன்றுவரை அந்த நிலை நீடிப்பதால் தான், எமக்கான அரசியல் தீர்வு இன்றுவரை கிடைக்கவில்லை. ஆயுதப்போராட்டம் கூட மௌனித்துப்போனது. 2௦16ல் தீர்வு என்றவரே அடுத்த தீபாவளிக்கு, தீர்வுத் தீபஒளி ஏற்றுவோம் என்கிறார்.

இத்தனைக்கு பின்பும் மக்கள் நலன் பற்றி சமூக நல சிந்தனை கொண்டவர்கள், நடத்த முற்படும் ஒன்றுகூடல் கூட, பழையதை கிளறும் செயலை செய்வது, விசனத்தை தருகின்றது. இன்று அறுபது வயதை கடந்த அனைவருக்கும், தமிழ் காங்கிரஸ் தொடக்கம் இருந்த அரசியல் கட்சிகள் முதல் அத்தனை இயக்கங்களினதும், கடந்த கால தவறுகள் தெரியும். அதை கிளறு, கிளறு என்று கிளறிவிட்டு பின்பு, சமூகநலம் பற்றி பேசும் ஒன்றுகூடலுக்கு வாருங்கள் என்று அழைத்தால் வருவார்களா?

எல்லோர் முதுகிலும் சுமை உண்டு. அதை அடுத்தவர் தலையில் ஏற்றிவிட்டு நலம் விசாரித்தல் சாத்தியமா?. உன்னைத் திருத்து உலகம் திருந்தும் என்பார்கள். முதலில் தம்மைத் தாமே விமர்சிக்கும் பெரும்தன்மை வேண்டும். பின்பு அடுத்தவரை நாகரீகமாக விமர்சிக்கும் பண்புவேண்டும். அதனைவிடுத்து அரசியல் கட்சிகளை விலைபோன தலைமைகள், பொய்யுரைத்த தலைமைகள், எனவும் போராடப் போனவர்களை ஒட்டுக்குழுக்கள், எனவும் கூறிவிட்டு தோழமை கொள்ள முடியுமா?

மக்கள் நலனில் அக்கறை கொள்பவருக்கு முதலில், “மறப்போம் மன்னிப்போம்” என்ற மனநிலை இருக்க வேண்டும். கடந்த கால தவறுகள் முடிந்து போன விடயம். அதற்க்கான அதி உச்ச விலையை நாம் 2009ல் கொடுத்துவிட்டோம். யார் சரி யார் பிழை என்ற, கடந்த கால நிகழ்வுகளை அசைபோடாது, எது சரி? அதை எப்படி சாத்தியமாக்குவது? என்ற நோக்கில் மட்டும் அடுத்தவர்களை விமர்சியுங்கள். அது கூட ஆக்கபூர்வமான, நியாயமான விமர்சனமாக அமைந்தால், அவர்களும் உங்களின் அழைப்பை ஏற்று சமூகநல ஒன்றுகூடல் நிகழ்வில் கலந்து, கருத்துகளை பரிமாறும் நிலை உருவாகும்.

(ராம்)