தவிர்க்க முடியாத பிளவு

(மப்றூக்)

எதிர்பார்க்கப்பட்ட அந்தப் போர் தொடங்கி விட்டது. முஸ்லிம் காங்கிரஸ§க்குள் கொஞ்சக் காலமாக இருந்து வந்த புகைச்சல், இப்போது காட்டுத் தீயாக எரியத் தொடங்கி விட்டது. மு.காங்கிரஸின் ‘தலை’களிடையே போர் ஒன்று நடைபெறுவதற்கான சாத்தியங்கள் குறித்தும், அவை தொடர்பான தகவல்கள் பற்றியும் ‘போருக்கு முன்னரான குறிப்புகள்’ என்கிற தலைப்பில் கடந்த வாரம் எழுதியிருந்தோம். அவற்றில் ஏராளமானவை பலிக்கத் தொடங்கியிருக்கின்றன.

பிரகடனம்

முஸ்லிம் காங்கிரஸின் தேசிய மாநாடு, பாலமுனையில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போது, அந்தக் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், தன்மீதான போரினை எதிர்கொள்வதற்குரிய பிரகடனமொன்றினைச் செய்தார். கட்சியின் செயலாளர் ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோரைத் தனது உரையில் குறிவைத்துத் தாக்கினார். ‘கட்சிக்குள் இருந்து கொண்டு நாடகமாடுவோரின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்’ என்று, ஆயிரக் கணக்கான ஆதரவாளர்கள் முன்னிலையில், ஹக்கீம் உணர்ச்சிவசப்பட்டுக் கூறினார்.

முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலியும், தவிசாளர் பஷீர் சேகுதாவூத்தும் கட்சித் தலைமையுடன் முரண்பட்ட நிலையில் இருந்து வருகின்றனர். மு.காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகள், இவர்களுக்கு வழங்கப்படாமையே இந்த முரண்பாட்டுக்கான காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே, ஹசன் அலி வகித்து வரும் செயலாளர் பதவியின் அதிகாரங்களை ஹக்கீம் பிடுங்கி எடுத்து, வேறொரு கைக்கு மாற்றியமையானது, இந்த முரண்பாடு – போராக மாறுவதற்குக் காரணமாகியது, என்பது பற்றியெல்லாம் கடந்த வாரம் விரிவாக எழுதியிருந்தோம்.

ஊடகப் போரும் சதிகளும்

இவ்வாறானதொரு நிலையில், முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் எம்.ரி. ஹசன் அலி, கடந்த சில வாரங்களாக ஊடகங்கள் மூலம் விடுத்து வரும் அறிக்கைகள், மு.காங்கிரஸின் தலைவரைக் குறிவைத்துத் தாக்கும் வகையிலானவையாக உள்ளன. அந்த அறிக்கைகள் – மு.கா. தலைவரை நிச்சயம் எரிச்சலூட்டியிருக்கும். கட்சியின் தலைவர் ஹக்கீமிடம் நேரடியாகக் கூறக் கூடிய விடயங்களை, ஊடகங்கள் மூலம் செயலாளர் ஹசன் அலி வெளிப்படுத்தி வந்தார்.

இதனை வைத்தே, தலைவருக்கும் செயலாளருக்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. தனக்கும் ஹக்கீமுக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, செயலாளர் ஹசன் அலி அவ்வாறான அறிக்கைகளை வெளியிட்டிருக்கவும் கூடும்.

இது இவ்வாறிருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பிருந்து, மு.காங்கிரஸ் தலைமைக்கு எதிராக கட்சிக்குள் இருக்கும் சிலர், சதித் திட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகக் கூறப்படுகிறது. மு.கா. தலைவருக்கு எதிராக, சில எழுத்து மூல ஆவணங்களைத் தயாரிக்கும் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாகவும் பேசப்படுகிறது. இந்த நடவடிக்கைக்கு கட்சியின் செயலாளர் ஹசன் அலி மற்றும் பஷீர் சேகுதாவூத் ஆகியோர் தலைமை தாங்கி வருவதாக குற்றச்சாட்டுக்களும் உள்ளன. இதுபற்றிய விவரங்களையும் கடந்த வாரம் நாம் பதிவு செய்திருந்தோம்.

மறுப்பு

ஆனால், ஹசன் அலி மற்றும் பஷீர் தரப்பினர் இந்தத் குற்றச்சாட்டினை நிராகரிக்கின்றனர். மு.கா. தலைமைக்கு எதிராக, தாம் எந்தவொரு ஆவணங்களையும் தயாரிக்கவில்லை என்றும் கூறுகின்றனர். ஹசன் அலி வகித்து வரும் செயலாளர் பதவியிலிருந்து பறித்தெடுக்கப்பட்ட அதிகாரங்களை, மீளவும் வழங்குமாறு கோரும் கடிதமொன்றினையே தாங்கள் தயார் செய்துள்ளதாகவும், அந்தக் கடிதத்தில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்களுடைய கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கைகளிலேயே தாம் ஈடுபட்டு வருவதாகவும், ஹசன் அலி தரப்பு கூறுகின்றது. அதுவும், கட்சித் தலைவர் ரவூப் ஹக்கீமிடம் கையளிப்பதற்காகத்தான் அந்தக் கடிதத்தினை தாம் தயார் செய்துள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டுகின்றார்கள்.

இன்னொருபுறம், கடந்த வாரத்துக்கு முன்னர் கொழும்பு டார்லி வீதியிலுள்ள ஓர் இடத்தில் ஒன்று கூடிய சிலர், மு.காங்கிரஸ் தலைவருக்கு எதிரான சதித் திட்டமொன்று தொடர்பில் கலந்துரையாடியதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களில் அதிகமானோர் மு.காங்கிரஸின் உயர்பீட உறுப்பினர்கள் எனவும் கூறப்படுகிறது. ஆயினும், இந்தச் சதித் திட்டம் பற்றி மு.கா. தலைவர் தெரிந்து கொண்டார். அங்கிருந்த ஒருவரே இது தொடர்பான ஆதாரங்களை மு.கா. தலைவருக்கு வழங்கியதாக அறிய முடிகிறது.

மு.கா. தலைவரின் கோபம்

இவை அனைத்தையும் மனதில் போட்டு வைத்திருந்த மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், கட்சியின் தேசிய மாநாட்டு உரையின் போது, செயலாளர் ஹசன் அலி மற்றும் தவிசாளர் பஷீர் சேகுதாவூத் ஆகியோரை மிகக் கடுமையாகப் போட்டுத் தாக்கினார். ‘இந்தக் கட்சிக்குள்ளே ஜனநாயக ரீதியாக கதைப்பதற்கு இருந்த வாய்ப்புக்களைத் தவற விட்டு, பத்திரிகை அறிக்கைகள் மூலமாக, கட்சியின் தலைமையினை விமர்சிக்கின்றார்கள்’ என்று ஹக்கீம் தனது உரையில் குற்றம்சாட்டினார். ஹசன் அலியைக் குறித்தே அவர் அப்படிக் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும், கட்சியின் தவிசாளர் பஷீர் மீதுதான் மு.கா. தலைவர் ஹக்கீம் மிகக் கடுமையான கோபத்துடன் உள்ளார் என்பதை, அவரின் தேசிய மாநாட்டு உரை வெளிப்படுத்தியது. தனக்கு எதிராக கட்சிக்குள் மேற்கொள்ளப்படும் சதித் திட்டத்தில்

பஷீருடைய வகிபாகம் மிகப் பிரதானமானது என்று ஹக்கீம் நம்புகிறார் என்பதை அவரின், தேசிய மாநாட்டு உரை உணர்த்தியது.

மு.காங்கிரஸின் தேசிய மாநாட்டில் அந்தக் கட்சியின் செயலாளர் ஹசன் அலி கலந்து கொள்ளவில்லை. அவர் மாநாட்டுக்கு வரப்போவதில்லை என்பதை ஏற்கெனவே உத்தியோகப்பூர்வமற்ற வகையில் வெளிப்படுத்தியிருந்தார். அதேபோன்று, கட்சியின் செயலாளர் பஷீர் சேகுதாவூத், மாநாட்டுக்கு வருவார் என்பதையும் அவருடைய தரப்பிலிருந்து முன்னதாகவே அறிந்து கொள்ள முடிந்தது.

மு.கா.வின் தேசிய மாநாடு ஆரம்பித்து, ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்டோர் மேடையில் அமர்ந்த பின்னர்தான் பஷீர் வருகை தந்தார். முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினுடைய கொடியின் வர்ணத்தில் அமைந்த, பச்சை மற்றும் மஞ்சள் நிறத்திலான ‘ஷேட்’ ஒன்றினை பஷீர் இதன்போது அணிந்திருந்தார்.

மு.கா.வின் தேசிய மாநாடு, இரண்டு அமர்வுகளாக நடைபெற்றது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் முன்னிலையில் முதல் அமர்வும், அவர்கள் சென்ற பின்னர் இரண்டாவது அமர்வும் நடைபெற்றன. இரண்டு அமர்வுகளிலும் கட்சித் தலைவர் ஹக்கீம் உரையாற்றினார். ஆயினும், இரண்டாவது அமர்வில் அவர் ஆற்றிய உரைதான் ஒரு போரினை எதிர்கொள்வதற்கான பிரகடனம் போல் அமைந்திருந்தது.

‘கட்சி தொடர்பான உள் விமர்சனங்களை, கட்சிக்குள்ளேயே செய்வதற்கு வாய்ப்புகள் இருந்தும், பத்திரிகைகள் ஊடாக கட்சியினை விமர்சனம் செய்தவர்களுக்கு எதிராக, நாம் மிகக் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம். கட்சியைச் சேர்ந்த இருவரை நேற்றிரவு (வெள்ளிக்கிழமை இரவு) கட்சியிலிருந்து இடைநிறுத்தியிருக்கிறேன். இன்னும் ஒரு சிலரை இடைநிறுத்துவதற்கான தீர்மானத்தினை இன்று நள்ளிரவு நான் எடுப்பேன்.

சில குறுநில மன்னர்களின் குள்ளநரித்தனமான அரசியலுக்குச் சோரம் போகாமல், இங்கு வந்து நாடகமாடுவதற்கு மேடைகளில் அமராமல், இந்தக் கட்சியைப் பாதுகாப்பதற்கு முன்வர வேண்டும். பிச்சை வேண்டாம் நாயைப் பிடி என்று, முன்னைய அரசுடன் நாங்கள் ஒட்டிக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினை ஏற்படுத்தியவர்கள், இன்று கட்சியின் நிறத்தில் ‘ஷேட்’டுக்களை உடுத்திக் கொண்டு வந்து, இந்த மேடையில் அமர்ந்திருந்து விட்டுப் போகிற அசிங்கம் நடைபெறுவதையிட்டு நான் மிகவும் வேதனைப்படுகிறேன்’ என்று, மு.கா. தலைவர் இதன்போது உரத்த தொனியில் கூறினார்.

மு.கா. தலைவர் ஹக்கீமுடைய இந்த உரையின் அதிகமான பகுதிகள், பஷீர் சேகுதாவூத்தை இலக்கு வைத்து வீசப்பட்ட கத்திகளாக இருந்தன. ஆனாலும், ஹக்கீம் இந்த உரையினை நிகழ்த்தும் போது, பஷீர் மேடையில் இருக்கவில்லை. முதல் அமர்வு முடிந்த கையோடு, அவர் மாநாட்டு மைதானத்திலிருந்து வெளியேறிச் சென்று விட்டார்.

இடைநிறுத்தம்

இதேவேளை, கட்சியிலிருந்து இருவரை இடைநிறுத்தி உள்ளதாக, மு.கா. தலைவர் தன்னுடைய உரையில் குறிப்பட்ட போதும், அந்த நபர்கள் பற்றிய விவரங்களை அவர் வெளியிடவில்லை. இந்த நிலையில், கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட நபர்கள் யார் என்பது பற்றித் தெரிந்து கொள்ளும் பொருட்டு, முஸ்லிம் காங்கிரஸில் அதிகாரம் மிக்க ஒருவரைத் தொடர்பு கொண்டு விசாரித்தோம்.

சம்மாந்துறையைச் சேர்ந்த கலீல் மௌலவி மற்றும் கண்டியைச் சேர்ந்த இல்லியாஸ் மௌலவி ஆகிய இருவருமே, கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று, நாம் தொடர்பு கொண்ட நபர் கூறினார். மேலும், இவர்களை இடைநிறுத்தியமையினை உத்தியோகபூர்வமாக அறிவிக்கும் கடிதம், கடந்த சனிக்கிழமை காலை பதிவுத் தபாலில் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

மேற்படி நபர்கள் இருவரும், கொழும்பு டார்லி வீதியிலுள்ள இடத்தில் வைத்து, மு.கா. தலைமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சதித்திட்ட கலந்துரையாடலில் பங்கேற்றவர்கள் என அறிய முடிந்தது. இவர்கள் இடைநிறுத்தப்பட்டமைக்கு இதுவே காரணம் எனவும் தெரியவருகிறது.

ஆயினும், மேற்படி இருவருக்கும் உத்தியோகபூர்வமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதங்களில், அவர்களை இடைநிறுத்தியமைக்கு, சட்ட ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய, வேறு காரணங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. உதாரணமாக, கலீல் மௌலவி என்பவர் மு.காங்கிரஸின் கடந்த மூன்று உயர்பீடக் கூட்டங்களுக்குத் தொடர்ச்சியாக வருகை தரவில்லை என்றும், அதன் காரணமாகவே கட்சியிலிருந்து அவர் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் சுவாரசியமான ஒரு விடயமும் உள்ளது. கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள இல்லியாஸ் மௌலவி என்பவர், தான் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ள செய்தியை அறியாமல், கடந்த சனிக்கிழமை பாலமுனையில் நடைபெற்ற கட்சியின் தேசிய மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார். கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட இருவரில் ஒருவர் தான்தான் என்பதை, மாநாடு முடியும் வரை, இஸ்லியாஸ் மௌலவி அறிந்திருக்கவில்லை என்கின்றனர் அவருடன் நெருக்கமானவர்கள்.

வளரும் வன்மம்

எவ்வாறாயினும், முஸ்லிம் காங்கிரஸின் தலைகள், தங்களுடைய அரண்களுக்குள் இருந்தவாறுதான் இதுவரை காலமும் தாக்குதலை நடத்திக் கொண்டிருந்தார்கள். ஆனால், இனி அவ்வாறு முடியாது. வெளியில் வந்து நேரடித் தாக்குதலில் ஈடுபட வேண்டிய நிலைவரமும், சூழ்நிலையும் உருவாகி விட்டன. எனவே, எதிர்வரும் நாட்களில் மு.கா.வின் தலைகள் முட்டிமோதும் ஒரு மரபுத் தாக்குதல் களத்தினை, அரசியல் அரங்கில் நாம் காண முடியும்.

மு.கா.வின் தலைவர் தரப்புக்கும் தவிசாளர் மற்றும் செயலாளர் தரப்புக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இந்தப் பிளவு நீங்கி, அவர்களுக்குள் பழைய ஒட்டும் உறவும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் தேய்வடைந்து கொண்டே செல்கின்றன. பரஸ்பரம் ஒருவர் மீது மற்றவர் அளவுக்கதிகமாகவே சந்தேகங்களை விதைத்துள்ளனர். ஹசன் அலி வகிக்கின்ற செயலாளர் பதவியின் அதிகாரங்களை கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் மோசடியாகவும், தந்திரமாகவும் பிடுங்கி எடுத்துக் கொண்டதாக ஹசன் அலி தரப்பு குற்றம் சாட்டுகின்றது.

ஆனால், கட்சியின் உயர்பீடக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுக்கு அமைவாகவே, செயலாளர் பதவியின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, புதிதாக உருவாக்கப்பட்ட உயர்பீட செயலாளரிடம் அந்த அதிகாரங்கள் ஒப்படைக்கப்பட்டதாக ஹக்கீம் தரப்பு வாதிக்கின்றது. மட்டுமன்றி, குறித்த உயர்பீடக் கூட்டம் நடைபெற்றபோது எடுக்கப்பட்ட ஒளிப்பதிவும் தம்மிடம் உள்ளதாக மு.கா. தலைவர் சார்பில் கூறப்படுகிறது.

ஆக, இந்த விவகாரம் சட்ட நிவாரணத்தினை வேண்டி, நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. அவ்வாறானதொரு நிலைவரம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளன.

அவ்வாறு நடந்தால், இந்தப் பிரச்சினையோடு தொடர்புபட்டவர்களின் நெஞ்சுக்குள், வன்மம் இன்னும் வளரும். அந்த வன்மங்களே, அவர்களுக்கிடையில் இரும்புச் சுவர்களை எழுப்பி விடும். அப்போது, மு.கா.வுக்குள் இன்னொரு பிளவு, தவிர்க்க முடியாமல் நடந்தேறி விடும்.