தாயோடு கல்வி போயிற்று!

உங்களிடம் ஒரு கேள்வி ஒரு குடும்பத்தில் இன்னின்னார்க்கு இன்னின்ன பொறுப்பு என, வகுக்கத்தலைப்பட்ட நம் மூதாதையர்கள், தாய்க்கும், தந்தைக்கும். என்னென்ன பொறுப்புக்களை வகுத்திருக்கிறார்கள் என்று, உங்களுக்குத் தெரியுமா? ஏன் பிரச்சினை நானே சொல்லிவிடுகிறேன்! அவர்கள் வகுத்த முறையின்படி, பிள்ளைகளை உணவு முதலியவற்றால் காக்கும் பொறுப்பு தாய்க்குரியது. அறிவு தந்து காக்கும் பொறுப்பு தந்தைக்குரியது. இதனைத்தான், ‘தந்தையோடு கல்விபோம். தாயோடு அறுசுவை உண்டி போம்’ என்றும், ‘ஈன்று புறந்தருதல் என் தலைக்கடனே, சான்றோனாக்குதல் தந்தைக்குக் கடனே’ என்றும், நம் தமிழ் இலக்கியங்கள் பேசின. இங்ஙனம் வகுத்தது ஏன் என்கிறீர்களா? சொல்கிறேன்.


பெண்மை உணர்வு சார்ந்தது. ஆண்மை அறிவு சார்ந்தது. இது பெரும்பான்மை பற்றி சொல்லப்படும் உண்மை. விதிவிலக்குகள் இல்லாமலில்லை. பெரும்பான்மை பற்றிய இவ்வடிப்படை கொண்டே, மேற் பொறுப்புக்கள் தந்தைக்கும் தாய்க்கும் வழங்கப்பட்டன. போன தலைமுறை வரையும், நம் சமுதாயம் இங்ஙனமாய்த்தான் வாழ்ந்து வந்தது. இந்த நூற்றாண்டில் இந்த இயல்பு தலைகீழாகியிருக்கிறது. எனக்குத் தெரிந்து எங்களின் ஆச்சி, அம்மா, ஏன் அக்காவரை, அன்னையர்களிடம் காணப்பட்ட சமையல் ஈடுபாடு அபூர்வமானது. புட்டு, பால்புட்டு, கீரைப்புட்டு, உப்புமா
இடியப்பம், தோசை, குண்டுத்தோசை, இட்டலி, அப்பம், பால்அப்பம், முட்டைஅப்பம், றொட்டி, பூரி, பாற்கஞ்சி, பாற்பொங்கல், உழுத்தங்களி, உழுத்தம்மா உருண்டை என, தம் கையாலேயே அவர்கள் பார்த்துப் பார்த்து செய்த, காலை, இரவு ‘மெனுக்கள்’ மிக நீண்டவை.

இவை தவிர, மாலை நேரத்திற்கான ‘டிபன்’களாக, முறுக்கு, கொழுக்கட்டை, மோதகம், சீனிஅரியதரம், பயற்றம்பணியாரம், எள்ளுருண்டை, வாய்ப்பன், உளுந்து வடை, பருப்பு வடை, பால்றொட்டி, பனங்காய்ப் பணியாரம், புழுக்கொடியல்மா, சிப்பி, சீடை, பயற்றம் துவையல் என, அவர்கள் கைவண்ணத்தின் இன்னொரு பட்டியல் நீளும். இதைவிட பச்சை மிளகாய்ச் சம்பல், செத்தல் மிளகாய்ச் சம்பல், உள்ளிச்சம்பல், இஞ்சிச் சம்பல், இடிச்ச சம்பல், அரைச்ச சம்பல், தூதுவளைச் சம்பல் என்பனவாய், சம்பலில் மட்டும் ஒரு பத்துவகை. பாற்சொதி, தக்காளிச்சொதி, அகத்திச்சொதி, புளிச்சொதி, வெந்தயச்சொதி என, சொதியில் ஒரு பத்துவகை. இவை கடந்து மதிய உணவுவகைகளின் விரிவைச் சொன்னால், இந்தக் கட்டுரை அதற்கேயாகிவிடும் என்பதால். அதனைவிட்டு விடுகிறேன்.

இப்படியாய் மாறிமாறி வேறுவேறு விதமாக, உணவுகளை தம் கைவண்ணம்காட்டிப் படைத்து, கணவனுக்கும் பிள்ளைகளுக்கும் அவற்றை, திகட்டத்திகட்ட ஊட்டி மகிழ்வதே, அப்போதைய தாய்மாரின் விருப்பு வேலையாய் இருந்தது. வெளியில் சென்று திரும்பி வரும் கணவனும், பிள்ளைகளும், இன்றைக்கு அம்மா புதிதாய் என்ன செய்து வைத்திருப்பார்? எனும் ஆர்வத்தில்,
வாயூற வீட்டிற்கு வரும் காலம் முடிந்தே போய்விட்டது. இன்று பெரும்பாலும் எல்லா வீடுகளிலும் காலைச் சாப்பாடு பாண் என்றாகிவிட்டது. சம்பல், சொதி வகைகளின் பத்து வகையாவது மிஞ்சியதா? என்றால், எந்த நாசமும் கிடையாது! ‘பிறிட்ஜூ’களுக்குள் ‘பட்டரும், ஜாமும்’ இருக்கவே இருக்கின்றன. அள்ளிப் பூசி அப்பி அனுப்பி விடவேண்டியது தான். கொஞ்சம் வசதியுள்ள வீடென்றால் ‘பிறிட்ஜூ’க்குள் ‘சீஸூ’ம் இருக்கும்.

அதை விட வசதியான வீடுகளில், இப்போதெல்லாம் ஒரு புதுப்பழக்கம் வந்திருக்கிறது. ‘சீரியல்’ அல்லது ‘ஓட்ஸ்’. இதுதான் அவர்களின் நாகரிக உணவாம்! கொஞ்சம் கொதிக்கும் பாலை ஊற்றி, மாட்டுக்குப் புண்ணாக்கு ஊற விடுமாப் போல ஊற விட்டு, ‘பொது பொது’ என்று வந்த பிறகு தின்றுவிட்டுப் போகவேண்டியதுதான். சமிபாடாகாத பல்லில்லாக் கிழடுகளுக்கு, அந்தக் காலத்தில் கொடுத்த புக்கை அல்லது கஞ்சியின் மறுவடிவத்திற்கு, புதுப்பெயர் கொடுத்திருக்கிறார்கள். கல்லும் செமிக்கின்ற வயதுடைய வளருகிற பிள்ளைகளுக்கு. இதுவா உணவு என்றால்? ‘பைபர் ’, ‘கொலஸ்ரோல்’, ‘சுகர் ‘ என்று இன்றைய படித்த அன்னைமார். என்னென்னமோ காலட்சேபம் செய்யத் தொடங்கிவிடுகிறார்கள்.

எங்கள் அம்மாவுக்கும், ஆச்சிக்கும் அடுத்தநாள் சாப்பாடு பற்றிய எண்ணம், முதல் நாளே தொடங்கிவிடும். அடுத்தநாள் காலைக்கான உணவு ஆயத்தங்களை, முதல்நாள் மாலையே முடித்து வைத்துவிடுவார்கள். விடிகாலை எழும்பி பிள்ளைகளுக்கும் கணவருக்கும், தினம் தினம் வேறு வேறு வகை உணவுகளைத் தயாரித்துக் கொடுத்து, அவர்கள் ஆனந்தித்து உண்பதைப் பார்ப்பதில்,
அவர்களுக்கு அப்படி ஒரு மகிழ்ச்சி இருந்தது. இன்றைய அம்மாமாருக்கு நேரமில்லையாம்! இவ்வளவுக்கும் எங்கள் ஆச்சி, அம்மாக்களைப் போல, கிணற்றில் அள்ளிக்குளித்து,
கரிப்பாத்திரங்கள் கழுவி, பித்தளைப் பாத்திரங்கள் மினுக்கி, சிம்மி துடைத்து, மண்ணெண்ணெய் ஊற்றி விளக்கேற்றி, விறகு வைத்து அடுப்பு ஊதி விதம் விதமாய்ச் சமைத்த வேலைகள் ஒன்றும்,
இவர்களுக்கு கிடையவே கிடையாது.

‘சுவிச்’சைத் தட்டி ‘லைற்’ போட்டு, ‘பாத்ரூமில்’ குளித்து ‘சில்வர்’ பாத்திரத்தை ‘காஸ்’ அடுப்பில் வைத்து, தேநீர் ஊற்றுவது மட்டும் தான் இன்றைய அன்னையரின் பெரீரீரீய பொறுப்பு. அதற்கே நேரம் இல்லை என்கிறார்கள். காலையில் கடையில் வாங்கிய பாணை வெட்டுவதும், ‘பிறிட்ஜி’லிருந்த ‘பட்டரை’த் தடவுவதும் தான், அவர்களது கடுமையான வேலையாம். கலி முற்றித்தான் விட்டது போங்கள்! சரி அப்படியானால் இன்றைய அம்மாமார், என்னதான் செய்கிறார்கள்.என்கிறீர்களா? அதைத்தான் சொல்ல வருகிறேன்! இன்றைக்கு பிள்ளைகளின் கல்விப்பொறுப்பை, வீடுகளில் தாங்கள் தான் ஏற்றுக்கொண்டிருக்கிறார்களாம். அதனால் தான் தங்களுக்கு மற்றவேலைகள் செய்ய, நேரமில்லை என்கிறார்கள் நவீன தாய்மார்கள்.

அது உண்மைதான். இன்றைக்கு பெரும்பான்மையான வீடுகளில், பிள்ளைகளின் கல்விப்பொறுப்பு தாய்மார்களின் கைக்கு மாறிவிட்டது. ஆண்கள் கெட்டிக்காரர்கள்தான்! வீட்டிற்கு உழைத்துப் போடுவது, பிள்ளைகளின் கல்விப்பொறுப்பைப் பார்ப்பது என்பதாய், தங்களுக்கிருந்த கடும் பொறுப்புக்களை, ‘பெண்விடுதலை’ என்ற பெயரில் தங்களிடம் தரும்படி, பெண்கள் போராடிக் கேட்க, பெருந்தன்மை போல அத்தனையையும் சந்தோஷமாய்க் கொடுத்துவிட்டு, பாரந்தீர்ந்த நிம்மதியில் அவர்கள் ஆனந்தித்துக் கிடக்கிறார்கள்! சரி தாய்மார்கள் பொறுப்பேற்ற பிறகு, பிள்ளைகளின் கல்வி நிலை என்ன என்கிறீர்களா? அந்த அநியாயத்தை ஏன் கேட்கிறீர்கள்? அவர்களால் பிள்ளைகளும், கல்வியும் படும்பாடு பெரும்பாடு! கல்வியைக் கவனிக்கத் தாய்மார் போய்விட்டபடியால், வகை வகையான உணவிழந்து வயிற்றில் அடிபட்டும், உணர்வு சார்ந்த பெண்களின் பலயீனத்தால், கல்வியின் நோக்கம் சிதைக்கப்பட்டு புத்தியில் அடிபட்டும், இருபக்கம் அடிவாங்கும் மத்தளமாய் இன்றைய பிள்ளைகள் ஏங்கித்தவிக்கிறார்கள்.

எவ்வளவுதான் படித்தாலும், பெண் பெண்ணாகத்தான் இருக்கிறாள். போட்டி, பொறாமை, எரிச்சல் என, உணர்வு சார்ந்த இயல்புகள் அவளை விட்டுப் போனபாடில்லை. முன்பெல்லாம் பாடசாலை, ‘ரியூட்டரி’ வாசல்களில், பிள்ளைகளை அழைத்துச்செல்லவென, தந்தையர்கள் கூட்டமாய்க் காத்திருப்பார்கள். இன்று அங்கெல்லாம் தாயரின் கூட்டம் தான் நிரம்பி வழிகிறது. அங்கு நடக்கும் கூத்துகளுக்கு ஒரு அளவேயில்லை. ஆண்கள் கூட்டமாய் நின்ற காலத்தில், ஒருவரோடு ஒருவர் அதிகம் பேசமாட்டார்கள். ஆனால் உள்ளுக்குள் நட்பாய் இருப்பார்கள். இன்றைய பெண்களோ, ஒருவரோடொருவர் நிறையப்பேசுவார்கள். உயிர்த்தோழிகள் போல் காட்டிக்கொள்வார்கள், ஆனால் உள்ளுக்குள் பொறாமையும், பகையும் நிறைந்திருக்கும். உள்ளொன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு அது.

வருகிற ஒருத்தி என்ன சீலை உடுத்திருக்கிறாள், என்ன நகை போட்டிருக்கிறாள்?, என்ன காரில் வருகிறாள்? என்பதெல்லாம். மற்றத் தாய்மாரால் கவனிக்கப்பட்டு, அதைச் சமன் செய்கிற முயற்சி உடனே வீட்டில் தொடங்கிவிடும். நட்புப் போல ஒவ்வொருவரும் மற்றவரிடம் சிரித்துச் சிரித்துப் பேசி, மற்றவர் பிள்ளை என்னென்ன படிக்கிறது?, எங்கெங்கு படிக்கிறது? என்பதை, புலனாய்வு செய்வார்கள். பிறகு அந்தந்தப் பாடங்களை அங்கங்கு படிக்க, தங்கள் பிள்ளைகளையும் கடன் பட்டாவது அனுப்பி வைப்பார்கள். இல்லாவிட்டால் அவர்களுக்குத் தூக்கம் வராது.
இவர்களின் போட்டிக்காக, ‘எலக்கியூசன்’, ‘மியூசிக்’, ‘டான்ஸ்’, ‘சுவிமிங்’, ‘கராட்டி’, ‘கரம்’, ‘செஸ்’, ‘பட்மிண்ரன்’, ‘யோகா’, பேச்சுப்போட்டி, நாடகப்போட்டி, தேவாரப்போட்டி, கவிதைப்போட்டி என்பனவாய்,
இன்று பிள்ளைகளின் மேல் ஏற்றப்படும் சுமைகளுக்கு ஒரு அளவேயில்லை. இதுகூடப் பரவாயில்லை. இந்தத் தாய்மாரின் போட்டியின் எல்லை, பிள்ளைகளுக்குள் பகை விதைப்பதில் போய் முடிந்து விடுகிறது. அதனால் பாடசாலைக் குழந்தைகளின் முகத்தில் கூட, இன்றைக்கு குழந்தைத்தனத்தைக் காண முடியவில்லை.
தாய்மாரின் எரிச்சல் பொறாமைகள் எல்லாவற்றையும் உள்வாங்கி வக்கிரம் நிறைந்து, ஒரு குழந்தையின் முன் இன்னொரு குழந்தை நாகமாய்ப் படமெடுத்து நிற்கிறது. ‘கூடி விளையாடு பாப்பா’ என்ற கொள்கைக்குச் சமாதிகட்டி விட்டார்கள். பரீட்சை முடிவு, போட்டி முடிவு என எந்த முடிவு வந்தாலும். அந்த இடத்தில் தாய்மார்கள் எல்லாம் அழுதுகொண்டு நிற்கிறார்கள். அதைக்காண எரிச்சலாய் இருக்கிறது. அவர்களைப் பார்த்து என்ன செய்வது என்று தெரியாமல், பிள்ளைகளும் அழவேண்டியதாயிருக்கிறது. சுருக்கமாய் என்ன சொல்ல வருகிறாய்? என்று கேட்கிறீர்களா வேறொன்றும் இல்லை. தந்தையின் பொறுப்பாய் இருந்த கல்வி தாயின் பொறுப்பிற்குப் போனதால், பிள்ளைகளுக்கு நல்ல உணவும், முறையான படிப்பும் இல்லாமல் போயிற்று. அதைத்தான் சொல்ல வந்தேன். இப்படியே போட்டியும், பகையுமாய் பிள்ளைகள் வளர்ந்தால், உருப்பட்ட மாதிரித்தான்.

ஐயா! படிப்பாளிகளே! யாராவது இதை உடன் மாற்ற முன் வர மாட்டீர்களா ?

(கம்பவாருதி ஜெயராஜ்)