தியாகிகள் தின மாதத்தில் அணைந்த தியாக தீபம்! [5]

நாபா, தேவா இருவர் மீதும் அதீத நம்பிக்கை கொண்டவராக இருந்த ஸ்டாலின் அண்ணா, இடைப்பட்டகாலத்தில் ஏற்ப்பட்ட தடுமாற்றங்கள் பற்றிய மன உளைச்சலில் இருந்தார். அவரை பொறுத்தவரை நாபா, தேவா இருவரையும் தன் இரு கண்களாகவே கருதினார். நாபாவின் அரசியல் அணுகுமுறை, தேவாவின் களைப்பற்ற கடின உழைப்பு, அண்ணாவின் மனதில் இருவருக்கும் சம ஸ்தானத்தையே கொடுத்திருந்தது. தாயகத்தில் ஏற்ப்பட்ட சலசலப்பை கலந்து பேசித் தீர்க்கலாம் என அண்ணா நம்பினார். அதற்க்கான ஏற்பாடுகளை செய்யும் வேளையில், இடையில் இருந்தவர் செயலால் அது தடைபட்டு கொண்டே சென்றது. அண்ணாவின் தலைமையில் அந்த முன்னெடுப்பு நடந்திருந்தால் நிலைமை வேறுவிதமாக அமைந்திருக்கும். ஆனால் இடைசெருகல்களின் செயலால் சுமுகமாக தீர்க்க வேண்டிய விடயம், சிண்டு முடியப்பட்டு பெரும் சிக்கலாக மாறியது.

நிலைமைகளை சீராக்க நாபா தாயகம் சென்றார். அந்த நேரத்தில் கொழும்பு வந்த இப்ராகிம் [சிவகரன்] கூறிய விடயங்கள், என்னை சென்னை சென்று நாபாவை சந்திக்கும் அவசர பயணத்துக்கு தூண்டியது. கும்பகோணம் சென்ற வேளை, அதற்கு முன்தினம் தான் நாபா தாயகம் சென்ற விடயத்தை ஸ்டாலின் அண்ணா கூறினார். நாட்டு நடப்புகள் பற்றி கேட்டறிந்த அண்ணா சற்று கலக்கம் அடைந்து, என்னை உடன் வேதாரணியம் கரைக்கு அனுப்பி, தாயகம் சென்று நாபாவிடம் விடயங்களை கூறச்சொன்னார். நாபா, தேவா புரிதலில், இடைசெருகல்களின் செயல் பற்றி அண்ணா கவலைப்பட்டதால் தான், உண்மை நிலை என்ன என்பதை நாபாவுக்கு சொல்ல, என்னை அவர் வேதாரணியம் அனுப்பினார். அங்கு கரைக்கு பொறுப்பாக இருந்த ஈஸ்வரன் [பெருமாள் கோவிலடி] என்னை பனாகொடை மகேஸ்வரன் வண்டியில் தாயகம் அனுப்பிவைத்தார்.

புலிகள், டெலோ மீது நடத்திய தாக்குதல், நாபாவை மீண்டும் கும்பகோணம் திரும்பவைத்தது. பேசித்தீர்க்காமலே பிரச்சனை தொடர்ந்தது. பின் தேவாவின் இந்திய பயணப்படகு கவிழ்ந்து இமாம், செண்பகம் [அகிலன்] போன்ற பல தோழர்கள் பலியாகினர். பின்பு தேவா சென்னை வந்ததும், அண்ணாவுக்கு ஒரு நம்பிக்கை வந்தது. இனி இருந்து பேசி முரண்களை களையலாம் என அவர் முனைப்பு காட்டும் வேளையில், சூளைமேட்டு சூட்டு சம்பவம், சகல முயற்சிகளுக்கும் சாவுமணி அடித்தது. இறந்தது திருனாவுக்கரசு எனும் பொதுமகன். எம் ஜி ஆர் அரசுக்கு இந்த சம்பவம் நெருக்கடியாக, அவரின் சினம் இயக்கத்தின் மீது திரும்பியது. இயக்கம் தன்னை தக்கவைக்க தேவாவை இயக்கத்தை விட்டு விலக்கியதாக அறிவித்தது. உண்மையில் இந்த சம்பவத்துக்கும் தேவாவுக்கும் நேரடி தொடர்பு இல்லை என்பதை அண்ணா அறிவார். இன்றுவரை அந்த சம்பவம் பற்றிய வழக்கு தொடர்கிறது [காணொளி மூலம்].

நடந்த சம்பவம் பற்றி ஸ்டாலின் அண்ணா மிகவும் கவலைப்பட்டார். தன்னால் முடிந்த முயற்சிகளை அண்ணா முன்னெடுத்தார். பிரபல வக்கீல் வானமாமலை தேவாவுக்காக வாதாடினார். ஸ்டாலின் அண்ணாவை பொறுத்தவரை அனைத்து தோழர்களையும் அரவணைக்கும் ஒருவராகவே செயல்ப்பட்டார். தன்னை நம்பிவந்த போராளிகளின் லட்சியம் ஈடேற வேண்டும் என்ற நோக்கில், தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் ஸ்டாலின் அண்ணா. எமது போராட்ட வெற்றிக்காக அண்ணா இழந்தவை ஏராளம். தன் குடும்பம் மகன்கள், உறவுகளுக்கு மேலாக எமது நலன்களே, அவருக்கு மேலோங்கி நின்றது. புலிகள் எம்மீது தாக்குதல் நடத்திய பின்பும் எம் மீளுருவாக்கம் பற்றிய சிந்தனை. செயலை விடாது முன்னெடுத்தவர் ஸ்டாலின் அண்ணா.

இலங்கை இந்திய ஒப்பந்தத்தின் பின்னர் மிகுந்த இழப்புகளுடன் நாம் அமைத்த இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபைக்கு மானசீக ஆசீர்வாதம் தந்தவர் ஸ்டாலின் அண்ணா. எமது வெற்றியை கொண்டாட கும்பகோணத்தில் மிகப்பெரிய வரவேற்ப்பு கூட்டம் நடத்தி, எம்மவரை கௌரவபடுத்தியவர் ஸ்டாலின் அண்ணா. எம்மிடம் எந்த பிரதியுபகாரமும் எதிர்பாராது தான் கொண்ட கொள்கை, கோட்பாட்டின் அடிப்படையில் தன்னை, தன் சொத்து சுகங்களை எங்கள் உயர்ச்சிக்காக அர்ப்பணித்தவர் ஸ்டாலின் அண்ணா. எம் ஜி ஆர் என்கின்ற இமயம் புலிகளையும், தி மு க தலைவர் கலைஞர் டெலோ இயக்கத்தையும் ஆதரித்த வேளை ஈ பி ஆர் எல் எப் ஐ அவயத்து முந்தியிருக்க செய்த சாமானியன் எங்கள் கும்பககோணத்து திராவிட தமிழர் ஸ்டாலின் அண்ணா BA BL.

இயக்கத்தில் பிளவு, நாபாவின் மறைவு என, ஸ்டாலின் அண்ணாவின் மனதில் பெரும் தாக்கத்தை ஏற்ப்படுத்திய சம்பவங்களால், அவர் நிலைகுலைந்து போனாலும் ஈழமக்கள் மேல் அவர் கொண்ட பற்று மாறவில்லை. கால ஓட்டத்தில் ஸ்டாலின் அண்ணா வைகோ வின் ம தி மு க வை, கும்பகோணத்தில் கோலோச்ச வைத்த வேளையில் தான், யாழ்ப்பாணத்தை ராணுவம் கைப்பற்றியதும், புலிகள் மக்களை பலவந்தமாக வெளியேற்றியதுமான நிகழ்வுகள் நடந்தது. அப்போது ஸ்டாலின் அண்ணாவுடன் தங்கியிருந்த ஈபி ஆர் எல் எப் தோழர் கண்ணன் [யசீரின் உறவினர்] என்னை தொடர்புகொண்டு, அண்ணா பேசவிரும்புவதாக கூறினார்.

நான் கொழும்பில் இருந்து அண்ணாவை தொடர்புகொண்டபோது, அண்ணா யாழில் நடப்பவை பற்றி நேரில் சென்று பார்த்து தகவல் கூறமுடியுமா என கேட்டார். நான் வவுனியாவரை போகமுடியும் அதற்கு அப்பால் செல்வது கடினம் என்றபோதும், அப்போது டெலோ வவனியா பொறுப்பாளராக இருந்த குகன் மற்றும் புளட் லிங்கநாதனை தொடர்புகொண்டபோது, அவர்கள் அது சாத்தியம் இல்லை என்றனர். விடயத்தை அண்ணாவுக்கு கூற அவர், வைகோ ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக மிகப்பெரிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளதாகவும், அதற்கு மண்ணில் நடக்கும் அவலங்கள் பற்றிய தகவல் கிடைத்தால் உறுதிப்படுத்தலாம் என கூறினார்.

2000 த்தில் நான் கும்பகோணம் சென்ற வேளையில், அண்ணா வீட்டில் தங்கிய அதே அறையைத்தான், அண்ணா தன் கடைசிகாலத்தில் பாவித்துள்ளார். அண்ணாவுக்கு அஞ்சலி செலுத்த சென்ற நானும், அதே அறையில், அண்ணா சயனித்த கட்டிலில் ஒரு பகல் பொழுதை செலவிட்டு, அண்ணாவின் துணைவியார் இந்திரா அக்கா, மகன்கள் அருண், விஜய், மருமகள்கள் சிவகாமி, மகாலச்சுமி, பேரப்பிள்ளைகள் நிலா, இனியன், முகிலன், ஸ்ரீநிதி, மற்றும் அண்ணாவின் சகோதரர் அமரர் முத்து அவர்களின் துணைவியார் சுந்தரி அம்மையார், அண்ணாவின் பால்ய நண்பன் கண்ணன் ஆகியோரிடம் விடைபெற்று, கனத்த இதயத்துடன் எனது ஐரோப்பிய கூடு திரும்பினேன்.

கடந்த 20ம் திகதி திராவிட கழக தலைவர் கி வீரமணி அண்ணாவின் படத்திறப்பு விழாவுக்கு வந்தது, ஈபி ஆர் எல் எப் சுரேஸ், ஆனந்தன் குகன், மற்றும் பத்மநாபா அணி சுகு, ஞானசக்தி, அமரர் வள்ளிநாயகத்தின் துணைவியார் ஓவியா, குண்சி[குணசேகரம்] என பலரும் கலந்து அஞ்சலி செலுத்தியதாக தாஸ் [பல்லவன் போக்குவரத்து கழகம்] கூறினார். பெரியாரின் வழியை பின்பற்றியதால் பதவி விரும்பாத, பணத்தாசை கொள்ளாத அண்ணாவிடம் உதவி பெற்றவர்கள், இன்று இருக்கும்நிலை எப்படி என்பதை கும்பகோணம், சென்னை, கொழும்பு, யாழ் மண் அறியும்.

அண்ணா எதற்கும் விலைபோகவில்லை என்பதால் தான், அவரின் இறுதி ஊர்வலம் அதுவரை கும்பகோணம் கண்டிராத பூப்பந்தல் ஊர்தியில், மலர்ப்படுக்கையில், பெரும்திரளான மக்கள் அணிவகிக்க, மழைமேகம் திடீரென கருக்கூட்டி, பெருமழையாக பொழிந்து, கொட்டும் மழையிலும் விட்டுவிலகாத  விசுவாசிகள், அண்ணனை வழியனுப்பி வைத்தனர். வாழ்வாங்கு வாழ்ந்த அந்த மனித நேயனை, எம் வாழ்நாள் முழுவதும் மனதில் கொள்வோம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தோழர்கள் [இன்று அவர்கள் வெவ்வேறு ஸ்தாபனங்களில் இருந்தாலும்] அனைவரின் மனதிலும், இறுதிவரை நிலைத்து நீடித்து நிற்கும் அழியாப் புகழுக்கு உரியவர், கும்பகோணத்து திராவிட தமிழர், எங்கள் ஸ்டாலின் அண்ணா BA BL. இன்று அண்ணா உடலால் எம்மை விட்டு பிரிந்த போதும், எப்போது நாம் இந்தியா சென்றாலும் கும்பகோணம் சென்று, அண்ணன் வீட்டில் சற்று நேரமாவது அமர்ந்து, அவர் எமக்கு செய்தவைகளை இதயசுத்தியுடன் நினைவு கூருவதே நாம் அவருக்கு செய்யும் அஞ்சலி ஆகும். அந்த ஆலமரத்தின் நிழலில் தான், நாம் எம் விடுதலை ஸ்தாபனத்தை  வடிவமைத்தோம் என்பது, எம் மனதில் என்றும் நிலைத்திருக்க வேண்டும். தியாகிகள் தின மாத முதல் திகதியில் [ஜூன் 1] எம்மை விட்டு பிரிந்த, எங்கள் ஸ்டாலின் அண்ணா என்ற தியாக தீபம், அணையா ஒளியாக எம் இதயத்தில் ஒளிரட்டும்.
– ராம் –