தீண்டாமை ஒழிப்பு போராட்டம்-மந்துவில்(பகுதி 17)

1965 பொதுத் தேர்தலின் பின் நடைபெற்ற உள்ளூராட்சி தேர்தலில் சன்னியர் செல்லையாவுக்கு எதிராக வெள்ளையன் சின்னதம்பி என்பவர் எமது வட்டாரத்தில் களத்தில் இறக்கப்பட்டார்.இவர் மிகவும் சரச்சைக்குரியவர்.சின்னதுரையின் தங்கையின் கணவர்.நடராசாவின் மைத்துனரின் மாமனார் .இத்தேர்தலில் செல்லையா தோற்கடிக்கப்பட்டார் .அவரால் இயக்கப்பட்ட வெல்ல தொழிற்சாலை செயலிழந்தது.

இதன் பின் நடராசா கொஞ்சம் செல்வாக்கு செலுத்தியவேளை தீண்டாமை ஒழிப்புப் போராட்டம் ஆரம்பமானது.இதில் அவர் இருதலைக்கொள்ளி நிலையில் இருந்தார்.ஒன்று உயிர் பயம்.அதே நேரம் தானும் ஒரு பங்காளி எனக் காட்டவேண்டும்.இதனால் தந்திரமாகவே இயங்கினார்.

இரத்தினம் கொல்லப்பட்ட பின் நடராசா அதிகம் ஆர்வம் உள்ளவர்போல காண்பித்தார்.அவை நம்பும்படியாகவே இருந்தன.அவரின் தம்பி செல்லத்துரை (இவர் மட்டுமே அவரின் குடும்பத்தில் படிக்காதவர்)நேர்மையான செயற்பாட்டாளராக விளங்கினார்

இப்போது எமது ஊர் கவனம் முழுவதும் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டவரகளை எப்படி மீட்பது என்பதே.எமது கிராம்ம் மிக வறிய மக்களை கொண்டது.குற்றம்சாட்டப்பட்டவரகள் வறியவர்கள்.இதில் ஆறுமுகம் ஒரே பிள்ளை.பொருளாதார ரீதியான சிக்கல்களைத் தவிர்க்க நடராசா ஒரு ஏற்பாடு செய்தார்.அவரே தனக்கு வேண்டிய நபர்களை ஒழுங்குபண்ணி மட்டுவில்,சரசாலை,அச்சுவேலி,கோப்பாய் ஆகிய ஊர்களுக்கு நன்கொடை வசூலுக்கு ஏற்பாடு செய்தார்.மட்டுவில் ஆயுள் வேத வைத்தியர் எட்வேட் தனியாக 500ரூபா கொடுத்தார். பிலிப் கொஞ்சம் தயங்கினாலும் அதே அளவு கொடுத்தார்.மட்டுவில் மானாவளையே அதிக நிதி கொடுத்ததாக அறிந்தேன்.அதே போல அச்சுவேலியிலும் கணிசமான பணம் வழங்கப்பட்டது.

இதனிடையே கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஆறுமுகம்,சின்னத்தம்பி செல்லத்துரை ,சிறீ ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உறவாடநடராசா குடும்பத்தோடு கசப்புகள் ஆரம்பமாகின .இதில் அதிர்ச்சி தரும் விசயமாக நடராசாவின் தம்பி தங்கராசாவுக்கு கிளறிக்கல் நியமனம் கிடைத்தது.என்ன காரணம் என்றால் அந்த நியமனம் புள்ளி அடிப்படையில் வழங்கப்படுவது.இவருக்கு அந்தப் புள்ளிகள் இல்லை.பொதுவாக ஏ.எல் படித்து பல்கலைக் கழக அனுமதி தவறியவரகளுக்கே கிடைக்கும்,350 புள்ளிகள் தேவை.ஓ. எல். என்றால் குறைந்தது 6சி,2எஸ் அல்லது அதற்கு சம்மான றிசல்ட் தேவை.தங்கராசா ஓ. எல்.படித்தாலும் ஏ. எல் படிக்க தேவையான ஆறு பாடங்களுடனான திறமைச் சித்திகள் இல்லை.அன்றைய உள்ளூராட்சி அமைச்சர் எம். திருசெல்வத்தின் நேரடி செல்வாக்கால் கிடைத்த பதவி.

சேகரிக்கப்பட்ட பணம் உரியவர்களுக்கு போகவில்லை.ஏழைச் சனங்கள் ஒரு ரூபா இரண்டு ரூபா என வறுமையிலும் சமூக விடுதலைப்போரில் போராளிகளுக்கு உதவக்் கொடுத்த பணம்.அது பற்றி நடராசா எந்தப் பதிலும் சொல்லவில்லை. வழக்கை சந்தித்தவர்கள் ஏமாற்றப்பட்டனர். இதைத், தொடர்ந்து ஊர் இரண்டாகியது. அவரகள் குடும்பங்களும் உறவுகளும் ஒன்று சேர்ந்தனர்.ஆனாலும் ஒருவாறாக வழக்கை சத்தியேந்திரா வென்று கொடுத்தார்.இவரகளை கொழும்பில் சீன சார்பு கம்யூனிஸ்ட் கட்சியினரே வரவேற்று தங்குமிட ஏற்பாடுகளை செய்து கொடுத்தனர்.வழக்கு முடிந்து திரும்பும் வழியில் எதிரகள் கொல்லத் திட்டம் தீட்டினர்.ஆனாலும் முன்னெச்சரிக்கையாக கொடிகாம்ம்,சாவகச்சேரியில் இறங்காமல் நாவற்குழியில் இறக்கி ஊருக்கு பத்திரமாக கொண்டுவரப்பட்டனர் .
இதன்பின்னர் எமது ஊரவர்கள் நடராசாவை அடையாளம் கண்டனர்.எதிர்புகள் கிளம்ப தொடங்கின.

(தொடரும்….)

(விஜய பாஸ்கரன்)