துமிந்தவுக்காக மனோ சறுக்கிய இடம்

அதனால்தான், தன்னுடைய சொந்தக் கட்சியினராலும் சக வேட்பாளர்களாலும் உறவுகளாலும், தேர்தல் அரசியலில் கைவிடப்பட்ட சந்தர்ப்பங்களில் எல்லாம், தமிழ் பேசும் மக்கள் அவரைக் காப்பாற்றிக் கரை சேர்த்திருக்கிறார்கள். ஆனால், இன்றைக்கு, சேரக்கூடாத இடத்தில் சேர்ந்து, வஞ்சத்தில் வீழ்த்திருக்கிறார்.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்படுவதற்கு முன்னராக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தலைமையில், ஆளுங்கட்சி எம். பிக்களில் கூட்டம் நடைபெற்றபோது, மரண தண்டனைக் கைதியான முன்னாள் எம்.பி துமிந்த சில்வாவுக்கு, பொதுமன்னிப்பு அளிக்க ஜனாதிபதியிடம் கோரும் மகஜரொன்று விநியோகிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களின் கையொப்பம் பெறப்பட்டது.
எனினும், கெஹலிய ரம்புக்வெல, மஹிந்த அமரவீர, விமல் வீரவங்ச, சுரேன் ராகவன் உள்ளிட்ட ஆளுங்கட்சி உறுப்பினர்கள் சிலர், மகஜரில் கையெழுத்திடவில்லை. ஆனால், எதிரணி எம்.பிக்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம் உள்ளிட்ட தமிழ் முற்போக்குக் கூட்டணியின் ஐந்து எம்.பிக்களும் கையெழுத்திட்டு இருக்கிறார்கள்.

துமிந்த சில்வாவுக்குப் பொதுமன்னிப்பு அளிக்கக் கோரிய, 150க்கும் மேற்பட்ட எம்.பிக்களின் கையெழுத்துடனான மகஜர் விவகாரம், ஊடகங்களில் வெளியானதும், மனோ கணேசன் தன்னுடைய நிலைப்பாட்டை அறிவிக்கும் ஊடக அறிக்கையொன்றை திங்கட்கிழமை (26) வெளியிட்டார்.

அந்த அறிக்கையின் பிரதி, அவரது ‘பேஸ்புக்’ பக்கத்திலும் வெளியிடப்பட்டது. ஆனாலும், அந்த அறிக்கைக்கான எதிர்வினை, தமிழ்ச் சூழலில் பெரியளவில் எழுந்ததை அடுத்து, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கிவிட்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திர உள்ளிட்டவர்கள் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், துமிந்த சில்வா என்கிற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், பிரதான குற்றவாளியாகத் தீர்ப்பளிக்கப்பட்டு, கடந்த ஐந்து ஆண்டுகளாக, மரண தண்டனைக் கைதியாகச் சிறையில் இருக்கிறார்.

துமிந்த சில்வா என்பவர், ராஜபக்‌ஷர்களின் முதல் ஆட்சிக் காலத்தில், அவர்களின் அம்பாகச் செயற்பட்டிருந்ததுடன் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடுபவராகத் தொடர்ச்சியாக குற்றஞ்சாட்டப்பட்டு வந்தார். ஊடக பின்புலம், ஆட்சியாளரின் அனுசரணை உள்ளிட்ட விடயங்களால், குறுகிய காலத்தில் அரசியலிலும் மேலெழுந்தவர்.

பிரேமசந்திர கொலை தொடர்பில், அரசியல் மற்றும் சட்டவிரோதமான வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பிலான போட்டி (முன் விரோதம்) காரணம் என்கிற குற்றச்சாட்டுகள் இன்னமும் உண்டு. அப்படிப்பட்ட ஒருவருக்கு, பொதுமன்னிப்பு அளிக்கப்பட வேண்டும் என்றுதான், மனோ கணேசனும் அவரது அணியினரும் கையெழுத்து வைத்திருக்கிறார்கள்.

ராஜபக்‌ஷர்கள், மீண்டும் ஆட்சிக்கு வந்தால், ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் கீழ், துமிந்த சில்வா விடுதலையாவார் என்பது, நீதிமன்றம் தண்டனை விதித்த காலத்திலேயே, அரசியல் அரங்கில் பேசப்பட்டது. அவரது ஊடகப் பின்புலம், அதற்காகக் கடுமையாக உழைத்தது. குறிப்பாக, கடந்த ஜனாதிபதித் தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்களின் வெற்றி, பிரமாண்டமாக இருக்க வேண்டும் என்கிற இலக்கோடு இயங்கியதையும் கண்டோம். கிட்டத்தட்ட துமிந்த சில்வாவுக்கான பொது மன்னிப்பு என்பது, அவரது ஊடகப் பின்புலத்தினூடாக, ஒருவகையிலான இலஞ்சமாகத் திணிக்கப்பட்டதாகக் கொள்ள முடியும். “ராஜபக்‌ஷர்களினதும் அவரது அணியினரதும் வெற்றிக்காக உழைத்திருக்கிறோம். ஆகவே, துமிந்தவை விடுதலை செய்வது தவிர்க்க முடியாதது” என்று, ராஜபக்‌ஷர்களிடம் வலியுறுத்தப்படுகின்றது.

தேர்தல் அரசியலில், கொடுக்கல்- வாங்கல் என்பது பெரும் சாபக்கேடு. மக்களின் உரிமைகள், அடிப்படைத் தேவைகள் சார்ந்து உரையாடப்படவேண்டிய கட்டங்கள் எல்லாம் தவிர்க்கப்பட்டு, ஆட்சியதிகாரம் என்கிற ஒற்றை இலக்குக்குள் சுருங்கிவிட்ட பின்னர், கொடுக்கல்- வாங்கல் என்பது, ஓர் அத்தியாவசியக் கடமை போன்று மாறிவிட்டது. இந்தக் கொடுக்கல்- வாங்கல் என்பது, சகிக்கவே கூடாத அயோக்கியத்தனமாகும்.

துமிந்த சில்வாவின் விடுதலைக்காகக் கையெழுத்திட்ட ஆளுங்கட்சிக்காரர்கள், இந்தக் கொடுக்கல் -வாங்கல் பின்னணியுடன் இருந்திருக்கலாம். ஆனால், எதிரணியில் இருக்கும் மனோ கணேசன் போன்றவர்கள், இந்தக் கொடுக்கல்- வாங்கல் அரசியலுக்குள் எவ்வாறு உள்வர முடியும்?

ஜனநாயகமும் மனித உரிமைகளும் தனது இரு கண்களாக, நாளாந்தம் முழங்கும் அவர், துமிந்தவின் விடுதலைக்காக எப்படிப் பங்காளியானார்?

துமிந்தவின் விடுதலைக்கு, மனோ கணேசன் பங்காளியான விடயத்தை, “துமிந்த, கொலைக் குற்றத்தைப் புரியும் போது, மது போதையில் இருந்துள்ளார். ஐந்து ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவித்துள்ளார். இளைஞர்கள் திருந்தி வாழ இடமளிக்க வேண்டும். அதன் நோக்கில், அவருக்குப் பொது மன்னிப்பு அளிக்கப்பட வேண்டும்….” என்கிற தோரணையில் நியாயப்படுத்தி இருக்கிறார்.

மனோ கணேசன், கடந்த ஆட்சிக் காலத்தில் தேசிய நல்லிணக்கம், கலந்துரையாடல்கள் அமைச்சராக இருந்தவர். அந்தக் காலப்பகுதியில் அவர், எத்தனை இளைஞர்களின் விடுதலை தொடர்பில், ஜனாதிபதியிடம் பொது மன்னிப்புச் சார்ந்த கோரிக்கைக் கடிதங்களைக் கையளித்திருக்கிறார் என்கிற கேள்வி எழுகிறது?

அதுவும், வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான, அரசியல் பொறிமுறையொன்றை அமைப்பது சார்ந்து, முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன?

விடுதலையை வலியுறுத்தி, உண்ணாவிரதப் போராட்டம் இருக்கும் அரசியல் கைதிகளைச் சந்தித்து, வாக்குறுதிகளை வழங்கி, போராட்டத்தை முடித்து வைத்ததைத் தாண்டி, அவர்களின் விடுதலையைச் சாத்தியப்படுத்திய சந்தர்ப்பங்கள் உண்டா?

வழக்கு விசாரணைகள் ஏதுமின்றி, பல ஆண்டுகளாகச் சிறையில் வாடும் அரசியல் கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை விதிக்கப்பட்ட துமிந்த சில்வாவும் ஒரே நிலையில் உள்ளவர்களா?

மது போதையில் குற்றமிழைத்தவர்கள், திருந்தி வாழச் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என்கிற மனோ கணேசனின் நியாயத்தின் படி நோக்கினால், சிறைச்சாலைகளில் உள்ள அரைவாசிக்கும் மேற்பட்டவர்களை, மன்னித்து ஒரே நாளில் விடுதலை செய்ய வேண்டியிருக்குமே?

படுமோசமான முடிவுகளை என்ன என்னவோ காரணங்களுக்காக எடுத்துவிட்டு, அவற்றை நியாயப்படுத்துவதற்காக அரசியல்வாதிகள் அடிக்கும் கோமாளித்தனங்கள் வழக்கமானவைதான்.

ஆனால், மக்களின் மனங்களை அறிந்த அரசியல்வாதியாக, தைரியசாலியாக, நேர்மையாளனாகத் தன்னைத் தொடர்ச்சியாக முன்னிறுத்தும் மனோ கணேசன், துமிந்த சில்வா விடயத்தில் நடந்து கொண்டிருப்பதை ஏற்றுக்கொள்ளவே முடியாதது. அதுவும், அதை நியாயப்படுத்துவதற்கான காரணங்கள் கோமாளித்தனமானவை.

அரசமைப்பின் 20ஆவது திருத்தச் சட்டமூலத்துக்கு ஆதரவளித்துவிட்டார் என்று, அவரது கூட்டணி எம்.பியான அ. அரவிந்த குமாரை, உடனடியாக நீக்குவதற்கு மனோ கணேசன் உத்தரவிட்டிருக்கிறார். நிறைவேற்று அதிகாரம் என்கிற, ஜனநாயகத்தின் மீதான சம்மட்டி அடிக்கு எதிராக, தன்னையொரு ஜனநாயகப் போராளியாகவே காட்டியிருக்கிறார்.

ஆனால், நிறைவேற்று அதிகாரம் வழங்கும் ஜனாதிபதிக்கான அதிகாரத்தின் வழி வரும், ஜனாதிபதியின் பொது மன்னிப்பு என்கிற விடயத்தை, என்ன காரணத்தின் அடிப்படையில் துமிந்தவுக்காகக் கோருகிறார்? என்று, அவரது முன்னாள் சகாவான எம்.திலகராஜ் கேள்வியெழுப்பி இருக்கிறார்.

துமிந்த சில்வாவின் விடுதலைக்காக கையெழுத்திட்ட விடயமும் அதற்காக வெளியிட்ட அறிக்கையும், மனோ கணேசனின் அரசியல் வாழ்வில், பெருங்கறையாகக் கொள்ள முடியும். அத்தோடு, அந்த அறிக்கையை ‘பேஸ்புக்’கில் இருந்து நீக்கியமையானது, அவரது நேர்மையைக் கேள்விக்குள்ளாக்குகின்றது.

மனோ கணேசன், என்றைக்காவது ஒருநாள் மனம் திறக்க வேண்டும்; துமிந்த சில்வாவுக்காக, எங்கே சறுக்கினேன் என்பது தொடர்பில்!