துமிந்த சில்வாவிற்கான பொது மன்னிப்பும், அரசியற் கைதிகளின் விடுதலையும்

இந்த விஷயம் வௌியானதும், அதற்கு அவர் கொடுத்த முதல் விளக்கத்தில் “இளைஞன், குடிபோதையில் தவறிழைத்துவிட்டார்” என்று சொன்னார். அதற்கு எதிர்ப்பு வலுக்கவே அதை அப்படியே கைவிட்டுவிட்டு, இரண்டாவது இன்னொரு விளக்கத்தைக் கொடுத்தார்.

இரண்டாவது விளக்கத்தில், “இந்த ஆவணத்தில் நான் கையெழுத்திட்டது, இதன் மூலம் ஏற்படும் பிரச்சாரத்தை பயன்படுத்தி, தசாப்தகாலமாக சிறைவாசம் அனுபவிக்கும் 100 பேருக்கு குறைவில்லா தமிழ் அரசியல் கைதிகளின் நிர்க்கதி நிலைமையை நாட்டின் கவனத்துக்கு கொண்டு வரவே ஆகும். தமிழ் அரசியல் கைதிகளுக்கு கிடைக்க வேண்டிய நீதி, இதுவரைக்கும் நாட்டின் கவனத்துக்கே வரவில்லை. எனது முயற்சி, நாட்டின் தேசிய மட்டத்தின் கவனத்துக்கு இதை கொண்டு வந்து, அவர்களின் விடுதலைக்கு வழி தேடுவதாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

அத்தோடு “துமிந்த சில்வா மனுவில் நான் கையெழுத்திட்ட பின்னர், இலங்கையின் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம், எமது தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வேண்டி மனு ஒன்றை தயாரித்து, ஜனாதிபதியிடம் முன்வைக்கும் யோசனையை முன் வைத்தேன். ஆனால், எனது இந்த கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைக்கவில்லை” என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இங்கு அவர் முன்னணி தமிழ் கட்சியை சேர்ந்த தலைவர்கள் இருவரிடம் என்று குறிப்பிட்டது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன் மற்றும் எம்.ஏ. சுமந்திரன் ஆகியோரையே. மனோ கணேசனின் இந்தக் கூற்றிற்கு பதிலளித்த சுமந்திரன், “தமிழ் அரசியல்வாதிகள் விடுதலை செய்யப்படுவது சரியான விடயம். அது செய்யப்பட வேண்டிய விடயம். துமிந்தசில்வாவை விடுதலை செய்வது தவறான விடயம்.

ஆகையினால், செய்யப்படகூடாத விடயத்தையும், கட்டாயம் செய்யப்பட வேண்டிய விடயத்தையும், ஒன்றாக காட்டுவது, மிக மிகத் தவறான செயற்பாடு” ஆகவேதான் தாம் அதற்கு இணங்கவில்லை என்று தெரிவித்திருந்தார். “அறிவுடையார் ஆவதறிவார்” என்ற வள்ளுவன் வாக்குக்கிணங்க, கற்றறிந்த, இயல்பறிவுள்ள கருத்தை சுமந்திரன் வௌியிட்டிருக்கிறார்.

கடந்த காலத்தில் பொது மன்னிப்பு வழங்கப்பட்ட குற்றவாளிகளான சுனில் ரட்ணாயக்க, ஞானசார தேரர், ஷ்ரமந்த ஜயமஹா ஆகியோர் நீதிமன்றினால் குற்றவாளிகள் என்று தீர்ப்பளிக்கப்பட்டவர்கள். குறிப்பாக சுனில் ரட்ணாயக்கவும், ஷரமந்த ஜயமஹாவும் கொடூரமான கொலைக்குற்றவாளிகள். இவர்கள் மீது வழக்கு விசாரணை நடந்து, நீதிமன்றினால் கொலைக்குற்றவாளிகள் என்று தீர்மானிக்கப்பட்டவர்கள் இவர்கள்.

குறிப்பாக “றோயல் பார்க் படுகொலை” என்று பொதுவாக அறிப்படும் படுகொலைக் குற்றவாளியான ஷ்ரமந்த ஜயமஹா மேன்முறையீட்டு நீதிமன்றத்திலும், பின்னர் உயர் நீதிமன்றத்திலும் மேன்முறையீடு செய்யப்பட்டும் உயர் நீதிமன்றம் மேன்முறையீட்டு நீதிமன்று ஜயமஹாவிற்கு விதித்திருந்த மரணதண்டனையை உறுதிசெய்திருந்தது. இந்தக் குற்றவாளிகளும், அரசியல் கைதிகளும் ஒன்றல்ல என்பது மட்டுமல்லாது, ஒரே தட்டில் வைத்தும் பார்க்கப்பட முடியாதவர்கள்.

அரசியல் கைதிகள் எனப்படுவோர் யார்? “அரசியல் கைதி” என்ற சொற்பதமானது, பொதுவில் அரசாங்கத்தை எதிர்த்தமையினால், அல்லது அரசாங்கத்தை விமர்சித்தமையினால் மறியலில் வைக்கப்பட்டுள்ளவர்களைக் குறிக்கும். இவர்கள் தமது மறியல் தடுப்பின் நியாயத்தன்மையை, வலிதுடைமையை கேள்விக்குட்படுத்துவர்கள்.

இலங்கையில் தமிழ் அரசியல் கைதிகள் எனப்படுவோரில் மிகப்பிரதானமாக இரண்டு வகைியனர் உள்ளார்கள். முதல் தரப்பினர், நீதிமன்றினால் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்டு தண்டனை அனுபவிப்பவர்கள். ஆனால் இரண்டாவது முக்கிய தரப்பினர் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் மிக நீண்டகாலமாக தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளவர்கள். இவர்கள் எந்த நீதிமன்றத்தினாலும் குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்படாதவர்கள்.

அது என்ன நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாகத் தீர்மானிக்கப்படுதல். எம்முடைய குற்றவியல் சட்டத்தின் அடிப்படை சுத்தவாளி எனும் ஊகமாகும் (presumption of innocence). எமது அரசியலமைப்பும் அதனையே உறுதி செய்கிறது. அதாவது ஒருவர் குற்றவாளியென எதுவித சந்தேகத்திற்குமப்பால் நிரூபிக்கப்படும் வரை அவர் சுற்றவாளி யாகவே கருதப்படுவார். ஆகவே குற்றமிழைத்தார் என குற்றம்சாட்டப்பட்ட ஒருவர், ஆரம்பத்தில் சுத்தவாளியாகவே கருதப்படுவார். அவர் மீதான குற்றத்தை நிரூபிக்கும் சுமையானது (பொறுப்பு) குற்றம்சாட்டுபவரின் பாற்பட்டது.

பொதுவாக குற்றங்கள் அரசுக்கு எதிரானவையாகக் கருதப்படுவதால், பெரும்பாலும் அரச தரப்பே குற்றத்தை நிரூபிக்கும் சுமையைக் கொண்டிருக்கும். மேலும் அந்தக் குற்றத்தை சாத்தியப்பாடுகளின் அடிப்படையில் நிரூபித்தல் மட்டும் போதாது, குற்றம்சாட்டப்பட்டவர்தான் அந்தக் குற்றத்தைச் செய்தார் என எதுவித சாதார சந்தேகங்களுக்கும் அப்பால் நிரூபிக்க வேண்டும். குற்றம்சாட்டப்பட்டவர்தான் குற்றத்தை இழைத்தார் என்று எதுவித சந்தேகங்களிற்கும் அப்பால் நிரூபிக்கப்படும் போதுதான் நீதிமன்றம் அவரைக் குற்றவாளியாகக் காணும்.

ஆகவே இங்கே குறிப்பிடத்தக்களவிலான “அரசியல் கைதிகள்” என்று கருதப்படுவோர், நீதிமன்றத்தினால் குற்றவாளிகளாக தீர்ப்பளிக்கப்படாதவர்கள். மாறாக பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் என்ற கொடுஞ்சட்டத்தின் பிடியின் கீழ், தொழில்நுட்ப ரீதியில் மிக நீண்டகாலமாக சந்தேகத்தின் பெயரில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்கள். இவர்களை விடுதலைசெய்ய பொதுமன்னிப்பே தேவையில்லை. ஏனென்றால் இவர்கள் குற்றவாளிகளே அல்லர்.

மறுபுறத்தில் இன்னொரு பிரிவான குற்றவாளிகளாகக் காணப்பட்ட “அரசியல் கைதிகளின்” குற்றங்களானது, யுத்தகாலத்தில், அரசாங்க எதிர்ப்பின் விளைவாக எழுந்த குற்றங்கள். ஒரு ஒப்பீட்டைக் குறிப்பிடுவதானால், மோகன்தாஸ் காந்தி தனது சுதந்திரப் போராட்டத்தின் போது, அன்று நடைமுறையிலிருந்து சட்டங்களை மீறினார். ஆகவே சட்டத்தின் பார்வையில் அவர் குற்றவாளி.

ஆனால் அதனை அவர் ஏன் செய்தார் என்பதைச் சட்டம் பார்க்காது. அவரது நோக்கம் விடுதலை. அதனால்தான், அவர் தொழில்நுட்பரீதியில் குற்றவாளி எனினும், “அரசியல் கைதி” எனப்பட்டார். இதுதான் “அரசியல் கைதி” என்பதன் தாற்பரியம். யுத்தகாலத்தை மறப்போம், மன்னிப்போம் என்பவர்கள் அந்த மன்னிப்பை இவர்களுக்கு வழங்கலாம். அதற்கு உலகளாவிய முன்னுதாரணங்கள் நிறையவே உண்டு. தென்னாபிரிக்கா ஒரு முக்கிய உதாரணம்.

மேற்குறித்த “அரசியல் கைதிகளை” படுபாதகக் கொலைக் குற்றவாளிகளோடு ஒப்பிடுதல் என்பது முறையற்றதும், பொருத்தமற்றதும், தர்க்கரீதியாகத் தவறானதுமாகும்.“றோயல் பார்க் படுகொலைக்” குற்றவாளி, சுயவிருப்படன் தான் எடுத்துக்கொண்ட போதையின் விளைவில், தன்னுடைய காதலியின் தங்கையை அவர்களது சொகுசு தொடர்மாடிக் குடியிருப்பின் படிகளிலேயே கொடூரமாகப் படுகொலைசெய்துவிட்டு, அங்குள்ள நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு, சத்தமேயில்லாமல் சென்றவன்.

சுனில் ரட்ணாயக்க செய்த படுகொலையை எழுதும் போதே கைகள் நடுங்குகிறது. அத்தகைய படுபாதகக் கொலையாளன் சுனில் ரட்ணாயக்க. இவர்களுக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பின் நியாயத்தன்மை உயர்நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தப்பட்டிருக்கிறது.

துமிந்த சில்வா மூன்று நீதிபதிகளைக் கொண்ட மேல் நீதிமன்ற “ட்ரையல் அட் பார்” விசாரணையில் குற்றவாளியாகக் காணப்பட்டவர். அவரது மேன்முறையீடு ஐந்து நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வினால் பரீசீலிக்கப்பட்டு அவருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை உறுதிப்படுத்தப்பட்டது. இத்தகைய குற்றவாளியின் விடுதலையை ஆதரிப்பதன் மூலம், தமிழ் “அரசியல் கைதிகளின்” விடுதலையை சாத்தியப்படுத்தலாம் என்று சொல்வதெல்லாம் மக்களை முட்டாள்கள் என்று நினைக்கும் பேய்க்காட்டல் அரசியல் அல்லாது வேறில்லை. இந்த இரண்டையும் ஒரே தட்டில் வைத்தப் பார்ப்பதே மிகத்தவறான விஷயம். அதனை மிகத்தௌிவாக சுமந்திரன் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

ஒரு இளைஞர், குடிபோதையில் குற்றமிழைத்துவிட்டார் என்று சொல்லி, அதற்கு மனித உரிமைச் சாயம் பூசுவதெல்லாம் அப்பட்டமான சுற்றுமாற்றுத்தனம். சுயவிருப்பிலான குடிபோதை குற்றத்திற்கான நியாயமல்ல என்பது குற்றவியல்சட்டத்தின் பாலபாடங்களில் ஒன்று. மறுபுறத்தில், இலங்கையின் ஆகச் சிறந்த குற்றவியல் வழக்கறிஞர்கள் ஆஜராகிய துமிந்த சில்வா வழக்கில், சட்டத்திலுள்ள அத்தனையையும் அவர்கள் வாதிடாமல் போயிருப்பார்களா, அதனை மேன்முறையீட்டிலும் செய்யாமலா இருந்திருப்பார்கள்.

அது அனைத்தையும் கருத்தில்கொண்டும்தான் ஐந்த நீதியரசர்களைக் கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு துமிந்த சில்வாவின் தண்டனையை உறுதிசெய்திருக்கிறது. இந்த நிலையில், இளைஞன், குடிபோதையில் கொலை செய்துவிட்டான் என்று சொல்லி விடுதலையைக் கோருவதெல்லாம் என்ன நியாயம்?

துமிந்த சில்வாவிற்கு பொது மன்னிப்பை வழங்க ஜனாதிபதி விரும்பினால் அதை அவர் செய்யட்டும். அது பொருத்தப்பாட்டை கேள்வியெழுப்ப நினைப்பவர்கள் அதனை உயர்நீதிமன்றிலே செய்யலாம். ஆனால் தமிழ் “அரசியல் கைதிகளையும்”, துமிந்த சில்வாவையும் ஒரு தட்டிலே வைத்து அரசியல் செய்வதென்பது, பொருத்தமானதோ, முறையானதோ அல்ல.