தோல்வியின் விளிம்பில் ‘எழுக தமிழ்’

ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசியல் களத்தின், இன்றைய பரிதாப நிலையைப் புரிந்து கொள்ள முடியும்.
‘எழுக தமிழ்’ பேரணியின் காரண கர்த்தாக்கள், தமிழ் மக்கள் பேரவையினராக இருந்தாலும், அந்தப் போராட்ட வடிவத்தின் மீதான ஆர்வத்தைக் கட்சிகள், அமைப்புகள் சார்நிலைக்கு அப்பால் நின்று, தமிழ் மக்கள் வாரி வழங்கினார்கள்.

முள்ளிவாய்க்கால் முடிவுக்குப் பின்னரான, மீள் எழுகை பற்றிய தமிழ் மக்களின் கூட்டுணர்வு என்பது, தேர்தல்களிலேயே பிரதிபலிக்க ஆரம்பித்தது. ராஜபக்‌ஷக்களின் அடக்குமுறைக்கு மத்தியில் நடத்தப்பட்ட வடக்கு மாகாண சபைத் தேர்தலிலும், ராஜபக்‌ஷக்களை அகற்றுவதற்கான வாய்ப்பாக அமைந்த ஜனாதிபதித் தேர்தலிலும் அதன் பின்னரான பொதுத் தேர்தலிலும் அது வெகுவாக வெளிப்படுத்தப்பட்டது.

தமிழ் மக்களின் உரிமைப் போராட்டத்துக்கான அர்ப்பணிப்பும் கூட்டுணர்வும் தேர்தல்களுக்குள் வரையறுக்கப்பட்டிருந்த நிலையில், ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பு, அடுத்த கட்டப் பாய்ச்சலுக்கான ஒரு வடிவமாக உணரப்பட்டது.

2015 பொதுத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை, ஏக பிரதிநிதிகள் என்று தோன்றும் அளவுக்கான அங்கிகாரத்தை வழங்கிய மக்கள், கூட்டமைப்பு மீதான விமர்சனங்களை முன்வைத்துக் கொண்டு, களத்துக்கு வந்த பேரவையையும் ‘எழுக தமிழ்’ பேரணியையும் ஒரு வருடத்துக்குள்ளேயே பெருவாரியாக வரவேற்றார்கள். கூட்டமைப்பினர், குறிப்பாக தமிழரசுக் கட்சியினர், இதனால் பதற்றமும் அடைந்தனர்.

ஆனால், மக்களின் கூட்டுணர்வையும் அதன் போக்கிலான திரட்சியையும் சரியாகக் கணிக்காமல், எதிர்பார்ப்புகளைப் புரிந்து கொள்ளாமல், பேரவைக்காரர்கள், யாழ். மய்யவாத அரசியல் சிந்தனைகளாலும், கூட்டமைப்புக்கு எதிரான அரசியல் என்கிற ஒன்றை இலக்காலும் கோட்டை விட்டார்கள்.

அதுவே, பேரவையை இன்றைக்கு மக்கள் மத்தியில் செல்லாக்காசாக்கி விட்டது. பேரவையை ஒரு கட்டம் வரையில், தமக்கான அச்சுறுத்தலாக உணர்ந்த தமிழரசுக் கட்சியினர், பேரவைக்குள் இன்றைக்கு நடக்கும் குத்துவெட்டுகளைக் கண்டு இரசித்துக் கொண்டிருக்கிறார்கள்.

‘மாற்று’ என்ற சொல்லின் அர்த்தத்தை, புலமையாளர்களும் வைத்தியர்களும் முன்னாள் நீதியரசரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேலிப்பொருளாக்கி இருக்கிறார்கள். அந்தக் காட்சிகளை, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான ஆரம்பம் முதல், காணக் கிடைக்கின்றது.

முதலாவது, இரண்டாவது ‘எழுக தமிழ்’ பேரணிகளின் பிரசார நடவடிக்கைகளில் அதிகம் பங்காற்றிய தரப்பினரான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் புளொட் அமைப்பினரும் மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கும் தமக்கும், எந்தச் சம்பந்தமும் இல்லை என்ற நிலையைப் பிரதிபலிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

அதிலும், முன்னணியினரைப் பொறுத்தளவில், தமது பங்களிப்போடு நடைபெற்ற ‘எழுக தமிழ்’ பேரணிகள் அளவுக்கு, இந்த ‘எழுக தமிழ்’ பேரணியை நோக்கி, மக்கள் திரளக்கூடாது என்பதை முன்னிறுத்திக் கொண்டு, எதிர்மறைப் பிரசாரங்களைச் சமூக வலைத்தளங்களில் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள், பௌத்த சிங்களப் பேரினவாதத்தால் தொடர்ச்சியாக நிராகரிக்கப்பட்டு வந்த நிலையில், அஹிம்சைப் போராட்டமோ, ஆயுதப் போராட்டமோ எதுவாக இருந்தாலும் அது, தமிழ் மக்களின் கூட்டுணர்விலேயே கட்டியெழுப்பப்பட்டது.

ஒரு போராட்ட வடிவம் ஏமாற்றம் அளிக்கும் போது, அதை உதறித் தள்ளிவிட்டு, புதிய வடிவங்களுக்கு ஆதரவளித்திருக்கிறார்கள். ஜீ.ஜீ பொன்னம்பலத்தை நிராகரித்துக் கொண்டு, தந்தை செல்வாவை மக்கள் ஏற்றதும், அமிர்தலிங்கத்தைப் புறக்கணித்துக் கொண்டு, ஆயுதப் போராட்ட இயக்கங்களை நோக்கி மக்கள் திரும்பியதும் அப்படித்தான்.

தமிழ்த் தேசியப் போராட்டத்தின் ஏகபிரதிநிதிகள் என்கிற நிலையை, தமிழீழ விடுதலைப் புலிகள் அடைந்துவிட்ட பின்னரும், தமிழ் மக்களின் நம்பிக்கையைத் தக்க வைப்பதற்காக, ஓர் இராணுவ அமைப்பின் நிலைப்பாடுகளைக் கடந்து சிந்திக்கத் தலைப்பட்டார்கள்.

அவர்களால், துரோகிகளாக முத்திரை குத்தப்பட்ட தரப்புகளையெல்லாம் மன்னித்து, ஓர்அரசியல் சக்தியொன்றை உருவாக்கும் தீர்மானத்துக்கும் வந்தார்கள். அதனை, மக்கள் வெகுவாகப் பாராட்டவும் செய்தார்கள்.

இராணுவச் சிந்தனைகளைக் கொண்ட அமைப்பு, தன்னைக் காலத்தின் தேவைகளுக்கு ஏற்பவும், மக்களின் எதிர்பார்ப்புகளின் போக்கிலும் தன்னைப் புதுப்பித்துக் கொள்ள முயன்றது. அதுதான், இன்றைக்குத் ‘தொட்டகுறை விட்டகுறை’யாகவும் கூட்டமைப்பு என்கிற அடையாளம் நிலைபெறுவதற்கும், தேர்தல்களில் வெற்றித்தரப்பாகப் பிரதிபலிப்பதற்கும் காரணமாகும்.

இப்படியான நிலையில், புலிகளுக்குப் பின்னரான கூட்டமைப்பு, குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியல், இரா.சம்பந்தன் தலைமைத்துவத்தின் கீழ் வந்த பின்னர், அதன் போக்கு, திசைமாறிச் செல்கின்றது என்று உணரப்படும் போது, அதைத் தீர்க்கமாக மக்களிடம் எடுத்துச் சொல்வதற்கும், அதை ஓர் அரசியல் சக்தியாகவும் மக்களின் கூட்டுணர்வுகளின் ஒரு பகுதியாக கட்டமைப்பதற்கும் ‘மாற்று’த் தலைமைக் கோரிக்கையாளர்கள் தவறினர்.

கஜேந்திரகுமார் என்கிற ஒற்றை அடையாளத்தை வைத்துக் கொண்டு, கூட்டமைப்புக்கு எதிரான மாற்றுத் தலைமையை உருவாக்கிவிட முடியும் என்று யாழ். மய்யவாதிகளும் அதன் கூறான, சிவில் சமூக மேய்ப்பர் அடையாளத்தைக் கொண்டு சுமக்கும் தரப்பினரும் முயன்று தோற்றனர்.

திடமான தரப்பினரால் கட்டமைக்கப்பட்ட கூட்டமைப்புக்கு எதிரான கட்டமைப்பை, புலம்பெயர்ந்த மக்களின் ஆதரவும் அதன் நிதியும், சிவில் சமூக மேய்ப்பர்களும் ஓரிரு நாள்களுக்குள், உருவாக்கிவிட முடியும் என்று, நம்பியமையைப் புத்தியுள்ள எவரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

அதை, முகத்தில் அறைந்தாற்போல, தமிழ் மக்கள், இந்தத் தரப்புகளுக்குப் பல முறை சொல்லிவிட்ட பின்னரும், அந்த நிலைப்பாட்டிலிருந்து மாறுவதற்கோ, தங்களை மீள்பரிசோதனை செய்வதற்கோ அவர்கள் தயாராக இல்லை.

புலம்பெயர் நாடொன்றில், ஆய்வு மாணவனாக இருக்கும் நண்பர் ஒருவர், கீழ்க்கண்டவாறு கூறினார், “…யாழ். புலமைத்தரப்பும் சிவில் சமூகத் தரப்பில் உள்ளவர்களும் வேறுவேறானவர்கள் அல்ல; அவர்கள், ஒரே தரப்பினரே! விரல்விட்டு எண்ணிவிடக்கூடிய எண்ணிக்கைக்குள் இருப்பவர்கள். அவர்களிடம், மூலோபாயக் கொள்கைகளோ, அதற்கான சிந்தனைகளோ இல்லை. மேடைப் பேச்சுகளிலும், ஊடக வார்த்தை விளையாட்டிலும் நின்று மல்லுக்கட்டுகிறார்கள். அதைத் தாண்டி, அவர்கள் எல்லோருக்கும், தங்களின் ஓய்வுகால அரசியல் பற்றிய சிந்தனையே பிரதானமானது. அது, அவர்களின் 60 வயதுக்குப் பின்னரான, இயங்குநிலை தொடர்பானது. அதனை நோக்கியே, அவர்கள் திட்டமிட்டு இயங்குகிறார்கள். மற்றப்படி, திறந்த மனநிலையுடனான உரையாடலுக்கோ, செயற்பாட்டுக்கோ அவர்கள் தயாராக இல்லை…” என்றார்.

அந்த ஆய்வு மாணவனின் கருத்துகளை ஒத்த கருத்துகளை, இந்தப் பத்தியாளரும் தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறார். பேரவையின் காரண கர்த்தாக்களாகத் தங்களை முன்னிறுத்திய யாழ். மய்யவாத கோஷ்டி, அதாவது புலமைத்தரப்பினரும் தமிழ்ச் சிவில் சமூக மேய்ப்பர்களும் வைத்தியர்களும் அரசியல் கட்டுரையாளர்களும் மக்களை நேரடியாகச் சந்திப்பதற்கும், அவர்களின் எண்ணங்களைப் பிரதிபலிப்பதற்கும், அதன்பால் நின்று தீர்மானங்களை மேற்கொள்வதற்கும் தயங்குவது, இதனால்தான். ஒரு குறுகிய வட்டத்தை வரைந்து, அதற்குள் தங்களை ஜாம்பவான்களாக வரையறுக்கும் மனநிலையின் போக்கிலானது இது.

தோற்கடிக்கப்பட்ட தரப்பாகத் தமிழ் மக்களைத் தொடர்ந்தும் வைத்துக் கொள்ள வேண்டும் என்ற சிந்தனையில், பௌத்த சிங்களப் பேரினவாதம் மூர்க்கமாக இயங்கிக் கொண்டிருக்கும் போது, உண்மையிலேயே, தோல்விகளைக் கடந்து, வெற்றியை நோக்கி நகர்வதற்குத் தமிழ்த் தரப்பு எவ்வளவு அர்ப்பணிப்புகளைச் செய்ய வேண்டும்?

ஆனால், இங்கு நிகழ்ந்து கொண்டிருப்பதோ, தோல்வி மனநிலையை இன்னும் மோசமான நிலைக்குள் தள்ளி, நம்பிக்கையீனங்களை நிரந்தரமான ஒன்றாக வரையறுக்கும் காட்சிகளே ஆகும். அதற்கான பொறுப்பை, அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, அவர்களுக்குச் சமமாக, பேரவைக்காரர்களும் அதன் இணைச் சக்திகளும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

தமிழ் மக்களின் மீள் எழுகையில் முக்கிய பங்காற்றியிருக்க வேண்டிய தரப்புகளில் பெரும்பாலானவை, ஒன்றாக இணைந்து உருவாக்கிய பேரவையை இன்றைக்கு சீண்டுவார் யாருமில்லை. அதுபோலத்தான், ‘எழுக தமிழ்’ பேரணிக்கான அழைப்பும் இன்றைக்கு மாறியிருக்கின்றது. ‘எழுக தமிழை’ நோக்கி, இம்முறை மக்கள் திரள்வதற்கான வாய்ப்புகள் மிகக்குறைவு. இது, விக்னேஸ்வரன் என்கிற ஒன்றை மனிதரின் தோல்வியாகக் கருதப்பட வேண்டியதில்லை. மாறாக, தமிழ் மக்களின் கூட்டுணர்வுகள், கடந்த மூன்று ஆண்டுகளில் எப்படித் தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கான காட்சியாக உணரப்பட வேண்டியது.