தோல்வியை வெற்றியாக்கும் மோடி

மக்களை ஓரணியில் பிரதமர் மோடி திரள வைக்கிறார்; ஏராளமானோர் அவரை ஆழமாக வெறுக்கின்றனர், அதைப் போலவே ஏராளமானோர் அவரை விரும்புகின்றனர் – அதிலும் குறிப்பாக இளைஞர்கள். குஜராத்திலும் கர்நாடகத்திலும் காங்கிரஸுக்குக் கிடைத்துள்ள தோல்விகளைக் கொண்டு, ‘2019 மக்களவை பொதுத் தேர்தல் முடிவும் இப்படித்தான் அமையும்’ என்று கணிப்பது மெத்தனமான நடவடிக்கையாகவே அமையும். கடந்த சில ஆண்டுகளாக தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் மேற்கொண்ட சுற்றுப் பயணங்களிலிருந்து நான் அறிந்துகொண்டது, மக்களிடம் ‘அவருக்கு’ தனிப்பட்ட ஈர்ப்பாற்றல் தொடர்ந்து நிலவுகிறது என்பதுதான். மக்கள் எதற்கெல்லாம் கோபப்படுவார்களோ அதற்கெல்லாம் இந்த ஆட்சியிலும் கோபப்படுகிறார்கள். விலை உயர்வு (குறிப்பாக பெட்ரோல் – டீசல்), விவசாயிகளின் துயரங்கள், வேலைவாய்ப்பு இன்மை, தொழில் வளர்ச்சி குன்றுவது, பணமதிப்பு நீக்கம், பொது சரக்கு – சேவை வரி என்று எல்லாவற்றுக்கும் மக்கள் நிச்சயமாகவே கோபப்படுகிறார்கள். அந்தக் கோபத்தின் பெரும் பகுதி பாஜக மீதும் அது ஆளும் மாநில அரசுகள், மத்திய அரசு ஆகியவற்றின் மீதும் தான் இருக்கிறது.

இவையெல்லாம் பிரதமருடைய புகழுக்கோ, அவர் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கோ சேதத்தை ஏற்படுத்திவிடவில்லை. இப்போது அவரே விற்பனைக்குரிய தனி சின்னமாகவே மாறவிட்டதாகத் தோன்றுகிறது. அவருடைய ஆட்சி, கட்சி, உண்மைகள் ஆகிய அனைத்துக்கும் அப்பாற்பட்டவராகவே அவரைக் கருதுகின்றனர்.

குஜராத்திலும் பிறகு கர்நாடகத்திலும் பாஜகவுக்கு தோல்வி நிச்சயமாகிவிட்டது – மோடி பிரச்சாரத்துக்கு வரும்வரை! குஜராத்தில் பெரும்பான்மை எண்ணிக்கைக்கு அதிகமாக 8 இடங்கள் கிடைத்தன, கர்நாடகத்தில் அத்தனை இடங்கள் குறைவாகக் கிடைத்தன.

இறுதிக் கட்டத்தில் மோடி வந்து பிரச்சாரம் செய்திருக்காவிட்டால் குஜராத்திலும் கர்நாடகத்திலும் என்ன நடந்திருக்கும் என்று பார்க்க வேண்டும். இரு மாநிலங்களையும் இழக்கும் அளவுக்குக் கட்சி மீது மக்கள் கோபமாக இருந்தார்கள். பிரச்சாரம் செய்து இரு மாநிலங்களிலும் தோல்வியை வெற்றியாக்கும் நிலையில் மோடி மக்களிடையே செல்வாக்குடன் திகழ்கிறார்.

தன்னுடைய கட்சிக்கு இருக்கும் கெட்ட பெயர் தனக்கு பாதகமாக அமையாமல், இப்படி சொந்த செல்வாக்கையே கவசமாக அணிவது ஒரு தலைவருக்கு சாத்தியம்தானா? இந்தக் கேள்விக்கு விடையாக சில உண்மைகள் நம் முன் இருக்கின்றன. மோடியின் தலைமையில் பொருளாதாரம் திணறிக்கொண்டிருக்கிறது, வேலைவாய்ப்பை ஏற்படுத்துவதில் மோசமான தோல்வியே கிடைத்திருக்கிறது, ராணுவரீதியாகவோ நிலைமை மோசமாகிவிட்டது, சமூக ஒற்றுமை ஆபத்தைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது, ஏராளமானோர் ஏதோ ஒரு வகையில் இந்த ஆட்சியில் வலியைத்தான் அனுபவிக்கின்றனர். அவர் நிறுத்தும் தள கர்த்தர்கள் களிமண் பொம்மைகள் என்றாலும் அவருடைய பிரச்சாரத்துக்குப் பிறகு மக்கள் அக் கட்சிக்கு வாக்களிக்கிறார்கள்.

இது எப்படி சாத்தியம்? இதே கேள்விதான் என் பிடறியைப் பிடித்து ஆட்டுகிறது; கதக் மாவட்டத்தின் ஷிராஹட்டி தேர்தல் முடிவை முன்கூட்டியே தெரிவிக்கும் தொகுதி என்ற பெயரைப் பெற்றுள்ளது. அங்கு ஒரு தனியார் பொறியியல் கல்லூரிக்கு வெளியே பேருந்துக்காகக் காத்திருந்த கல்லூரி மாணவிகளிடையே பேசினேன். எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்று எல்லோரிடமும் கேட்டபோது எல்லோரும் சொன்ன ஒரே பதில், ‘பாஜகவுக்குத்தான்’ என்று. ஏன் என்று கேட்டபோது, ‘நரேந்திர மோடிக்காக’ என்றனர். மோடிக்கு ஏன் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டேன். ‘தூய்மை இந்தியா’ திட்டம் அவர் கொண்டு வந்தது, அதற்குப் பிறகு எங்களுடைய கிராமத்தின் 75% தூய்மையாகிவிட்டது என்று ஒருவர் பதில்; “டிஜிட்டல் மயத்தை அவர் விரிவுபடுத்துகிறார்; உலக அரங்கில் இந்தியாவுக்குப் பெருமையைப் பெற்றுத் தந்திருக்கிறார்; ஊழல் ஒழிந்தேவிட்டது” என்று பல பதில்கள். அவர்களிடம் விவாதித்துப் பயன் இல்லை, ஏனென்றால் அவர்கள் இவற்றை உண்மை என்றே நம்புகிறார்கள்.

இப்போதைய அரசியல் களத்தில் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அடுத்த பொதுத் தேர்தலில் புதிதாக 14 கோடி வாக்காளர்கள் வாக்களிக்கப் போகின்றனர். அனைவரும் ஒரே கட்சிக்கோ ஒரே தலைவருக்கோ ஆதரவாக வாக்களித்துவிட மாட்டார்கள். ஆனால் அவர்கள் மோடியிசம் என்ற கருத்துக்கு அதிக எண்ணிக்கையில் ஆட்பட்டிருக்கிறார்கள்.

மோடி எப்படி இவர்களுடைய மனங்களில் இடம் பிடித்தார்? சில நல்ல விஷயங்களை வலியுறுத்தியதன் மூலம் இளைஞர்களுடைய மனங்களில் இடம் பிடிக்க முடிந்திருக்கிறது. சுய சுகாதாரம் – சுற்றுப்புற சுகாதாரம், நேர்மை, கல்வி, தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி வருகிறார் மோடி. எந்த அசம்பாவிதம் நடந்தாலும் பிரதமர் வாய் திறந்து பேசமாட்டார். கதுவா சம்பவம் நடந்த உடனேயே பேசமாட்டார். “நம்முடைய பெண்களைப் பாதுகாக்க வேண்டும், பையன்களைச் சீர்திருத்த வேண்டும்” என்பார். உனாவில் தலித்துகள் தாக்கப்படும்போது ஏதும் பேசமாட்டார், பிறகு, “கொல்ல வேண்டும் என்றால் என்னைக் கொல்லுங்கள் – என் தலித் சகோதரர்களை அல்ல” என்பார்.

எதற்கும் பொறுப்பேற்று பதில் சொல்வதற்குப் பதிலாக, தன்னை ஆராதிப்பவர்களின் கூட்டத்தை உருவாக்கிவிடுகிறார். பணமதிப்பு நீக்க நடவடிக்கை முடிவின்போது கூட மக்களுக்கு அவர் விடுத்த சேதி இதுதான்: “இது உங்களுக்கு மிகுந்த வேதனையைத் தந்துள்ளது என்பது தெரியும்; இந்தியாவை இப்போதிருப்பதைவிட நல்ல நாடாக மாற்ற இந்த வேதனையை உங்களால் பொறுத்துக் கொள்ள முடியாதா?” என்று கேட்டார். இந்தப் பேச்சை எல்லோரும் ரசிக்கவில்லை. ஆனால் கணிசமானவர்கள் சரியென்றே சொன்னார்கள். இளைஞர்கள் இன்னும் படித்து முடித்து வேலைதேட சந்தைக்கு வரவில்லை. அவர்களுக்குத் துயரங்களின் பாதிப்பு நேரடியாகத் தெரியாது. அவர்களை ஓரணியில் திரள வைக்கும் சக்தியாக நம்முடைய ஜனநாயக வரலாற்றில் தனியிடம் வகிக்கிறார் மோடி. அவரை எதிர்ப்பவர்கள் அவரை மிகவும் வெறுக்கிறார்கள். அவர்கள் என்னுடைய இந்த வாதத்தைக்கூட சகிக்க முடியாமல் கொதிப்பார்கள். ஆனால் அரசியல் என்பது யதார்த்தம் என்ன என்று புரிந்துகொண்டு அதற்கு மாற்று வழியைக் காண்பது; அதை விடுத்து சோம்பேறித்தனத்துடன் இருந்துவிட்டு 2019 தேர்தலிலும் குஜராத், கர்நாடக முடிவுகள் ஏற்படட்டும் என்று காத்திருப்பார்களோ?

சேகர் குப்தா,

‘தி பிரின்ட்’ தலைவர், முதன்மை ஆசிரியர்

தமிழில்: சாரி