தோழர் ஐயா அவர்களின் 31வது ஆண்டு நினைவுநாள்……..


தோழர் ஐயா அவர்கள் 70களின் பிற்பகுதியிலிருந்து தமிழ் பேசும் மக்களின் ஈழ விடுதலைக்கான போராட்டத்தில் தன்னை முழுமையாக அற்பணித்து செயற்பட்டவர். தோழர் பத்மநாபாவின் தளச்செயற்பாடுகளுக்கூடாக EROS இல் தனது புரட்சிகரமான அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்.அக்காலகட்டத்தில் வவுனியா மாவட்டத்திலுள்ள கண்ணாட்டி என்னும் கிராமத்தில் இயங்கிவந்த கட்சியியினுடைய பண்ணையின் செயற்பாட்டிலும் பங்களிப்பை நல்கியவர்.தோழர் ஐயா அவர்கள் EPRLF இன் அமைப்பாளர்களில் ஒருவர். 1981 அக்டோபர் 4ம் திகதி முதல் 11 ம் திகதி வரை தமிழ்நாடு கும்பகோணத்தில் நடைபெற்ற கட்சியின் அமைப்பாளர் மகாநாட்டில் பங்குபற்றியவர்.வன்னி மண்ணில் தோழர் நடேசலிங்கம் அவர்களுடன் இனைந்து வறிய கூலிவிசாயிகள் ,மாணவர்கள்,பெண்கள் மற்றும் இடம்பெயர்ந்திருந்த மலையகமக்கள் மத்தியில் அரசியல் வேலைகளை மேற்கொண்டவர்.தோழர் நடேசலிங்கம் 28 -11-1981 அன்று ஸ்ரீ லங்கா இராணுவத்தினரது சுற்றி வளைப்பில் படுகொலை செய்யப்பட்டதை தொடர்ந்து வன்னிமாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளுக்கு தலைமையேற்று செயற்பட்டு EPRLF க்கு அரசியல் தளத்தை உருவாக்கியவர். ஏனைய மாவட்டங்களிலிருந்து கட்சியின் தலைமைத் தோழர்கள் பலர் வந்து தங்கி கூலித்தொளிலாளர்கள், மாணவர்கள், பெண்கள் மத்தியில் அரசியல் பணிகளில் ஈடுபடுவதிற்கான பிரமாண்டமான தளத்தை உருவாக்கிக்கொடுத்தார். 1984ம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் முதலாவது காங்கிரசில் மத்திய குழு உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டார்.தோழர்கள், மக்கள் ஏனைய சகோதர அமைபபுகள் என்று அனைவரிடமும் அன்பாகவும் , தோழமையுடனும் பழகுபவர். அதனால் அவருக்கு அனைவரிடத்திலும் மதிப்பும் மரியாதையும் இருந்தது.அரச மற்றும் புலிகளின் சிறைகளில் சிறை வாழ்க்கையை அனுபவித்தவர். புலிகளினால் சிறைபிடிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த முகாமை ஆகாயப்படையினர் தாக்கியபோது காவலுக்கு நின்ற புலிகள் தப்பி ஓடியபோது மயிரிழையில் உயிர் தப்பிய தோழர்களில் தோழர் ஐயாவும் ஒருவர். தோழர் ஐயா அவர்கள் மலையகத்திலிருந்து இடம்பெயர்ந்த பெண் ஒருவரையே காதலித்து வாழ்க்கைத்துணையாக ஏற்றுக்கொண்டவர்.அவருடைய குடும்பம் வறுமைக்கு முகம் கொடுத்த போதும் மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் உறுதியுடன் செயற்பட்டவர்.அவர் படுகொலை செய்யப்படும்போது அவருடைய பிள்ளைகள் மிகவும் சிறுவர்களாகவே இருந்தனர்.அவர் எப்போதுமே தன்னை முதன்மைப்படுத்தாது எளிமையாக வாழ்ந்து கொள்கைக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் எடுத்துக்காட்டாக விளங்கியவர்.அவருடைய மரணம் கட்சிக்கு மட்டுமல் அடக்கி ஒடுக்கப்படும் மக்கள் அனைவருக்குமே இழப்பாகும்.
தோழர் ஐயாவுடன் படுகொலை செய்யப்பட்ட
தோழர் சாரங்கன் தோழர் தங்கேஸ் போன்றவர்கள் மன்னார் மாவட்டத்தின் முக்கிய செயற்பாட்டாளர்களாக விளங்கியவர்கள்.1980களின் ஆரம்பத்தில் ஈழ மாணவர் பொதுமன்றம்(GUES) என்னும் மாணவர் அமைப்பினூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர்கள்.அவர்கள் படுகொலை செய்யப்படும் வரை பல்வேறு நெருக்கடிகள், துன்ப துயரங்கள் மத்தியல் தமது அரசியல் பணிகளை மனம் தளராது முன்னெடுத்தவர்கள். அவர்கள் அனைவருக்கும்
எமது புரட்சிகர அஞ்சலிகள்.