நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரம்

நடிகை ஸ்ரீதேவி மரணம் ஒரு கலாச்சாரத் துயரமாக பாவிக்கப்படுகிறது.  அப்படி பாவிப்பதில் அதற்கான நியாயமும் உள்ளது. காரணம் மயிலாக வந்த ஸ்ரீதேவியாகட்டும் அல்லது எண்பதுகளின் முன்னணி கதாநாயகியாக வலம் வந்த ஸ்ரீதேவியாகட்டும், அந்த தலைமுறையின் காலாச்சார மறு-ஒப்பனையாக (cultural re-fashioning) குறிப்பாக காதலுறுதலுக்கான அழகியல் பிம்பத்தை சமூக நனவிலியில் கட்டமைத்தவர். அந்த தலைமுறை பெண்களும், ஆண்களும் ஒருசேர விரும்பிய ஒரு தமிழ் முகமாக இருந்தவர். கவனிக்க வேண்டிய அம்சம் என்னவெனில், ஸ்ரீதேவி அடித்தட்டு மக்களின் குறிப்பாக விளிம்புநிலையினரின் முகத்தை தனது முக-ஒப்பனைகள் வழியாக ஆள்தள உளவியலிலை வடிவமைத்தவர். ஆனாலும், மேட்டிமையினர் மற்றும் மையத்துவ நடுத்தர வர்க்கத்தினர் ஸ்ரீதேவியால் கவரப்படவில்லை. அவர்கள் அவரை ஒரு மாதிரியாக கொள்ளவில்லை. இது உள்ளார்ந்து நிகழும் ஒரு உளவியல் போராகக் கொள்ளலாம்.

தமிழ் சினிமாவும், அதன் நாயக, நாயகி பிம்பங்களும் தமிழ் பண்பாட்டின் சுயத்தை வடிவமைப்பதாக ஒப்புக்கொண்டால், அதில் ஸ்ரீதேவியின் பாதிப்பு மிக முக்கியமானது எனலாம். குறிப்பாக ”16-வயதினிலே” ஒரு cult-movie அது தமிழ் சினிமாவின் இரண்டு நாயகர்களை மையத்திற்கு கொண்டுவந்தது என்றால், ஸ்ரீதேவி-மயிலாக ஒரு தலைமுறையின் சுயஒப்பனையை (self fashioning) உருவாக்கியவர் எனலாம். அப்படம் தமிழ் சினிமாவை கிராமங்களை நோக்கி அகலித்தது. கிராமங்களிலி்ல் இருந்து சென்னைக்கு சினிமா கனவுடன் பலரை படையெடுக்க வைத்தது. தமிழ் சினிமாவின் அறிதல் புலம், தமிழ் சமூகத்தின் சினிமாட்டிக்-அறிதல் ஆகியவற்றை உடைத்து மாற்றிய ஒரு புள்ளியே 16-வயதினிலே. அதில் மயிலாக வந்த ஸ்ரீதேவியின் முகம் தமிழின் உடல்வேட்கை அடர்ந்த காதலுரு பிம்பமாக சமூகத்திற்குள் உள்வாங்கப்பட்டு, ஒவ்வொரு உடலும் சுய-ஒப்பனை செய்துகொள்வதற்கான பிம்பமாக அமைந்தது.

அவர் இந்தியில் நடிக்கத் துவங்கியவுடன் அவரை தமிழ் சமூகம் நிராகரித்தது என்பதும் சமூகநனவிலியிலிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பே. பொதுமகளிர்மீதான தமிழ் சமூக உடல்கள் கொள்ளும் உறவின் ஆழ்தள இயக்கம் இதில் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று. உடல் வேட்கையின் மைய உற்பத்தி எந்திரமாக இயங்கிய ஓர் முக-எந்திரம் (faciality machine தெலுஸ்-கத்தாரியின் கருத்தாக்கம் மேற்கத்திய சினிமா குறித்த ஆய்வில் இக்கருத்தாக்கம் பற்றி பேசுகிறார்கள்). தனது ஆழ்தளத்தின் மொழிவெளிக்குள் ஒப்பனை செய்யப்பட்டு தனது சுயத்தின் வேட்கையுறு பிம்பமாக பாதுகாக்கப்பட்ட முகம், மாற்று மொழியல், வேற்றுத் தன்மையுடன் வெளிப்பட்டதில் அடையாளப்படுவதில் சுயம் ஏற்க மறுத்ததையும் இதில் காணமுடிகிறது.

விரிவாக சில கோட்பாட்டு கருத்தாக்கங்களுடன் எழுதப்பட வேண்டிய கட்டுரைக்கான புள்ளிகள் இவை. ஸ்ரீதேவிக்கான அஞ்சலிக்குறிப்பாக வெளிப்பட்டுள்ளது. நிழல் இதழில் ”சினிமாட்டிக் மெஷின்ஸ் – காட்சி எந்திரங்களும் காணும் எந்திரங்களும்.” என்ற தலைப்பில் 2012-ல் எழுதப்பட்ட கட்டுரையிலிருந்து ஒரு பத்தி கீழே..

”16-வயதினிலே சப்பாணி, மரபுகளால், குடும்பங்களால், அரசால், கலாச்சாரத்தால், மதத்தால் குறிப்பாக அதிகார நிறுவனங்களால் அடக்கப்பட்ட ஊனமாக்கப்பட்ட தன்னிலையின் குறியீடு. தமிழக கிராமிய இளைஞனின், ஆழ்மனதின் குறியீடு அது. அழகான படித்த நகர்மயப் பெண்களின் மீதான காதலை பெற இந்த ஊனப்பட்ட தன்னிலைகளின் வேட்கையே கொலையின் வன்முறையாக வெளிப்பட்டது அப்படத்தில். அக்கொலையை ஏற்கும் மனநிலையை உருவாக்கியது. மயில் என்கிற பிம்பத்தின் மீதான சப்பாணி என்கிற பிம்பத்தின் வேட்கையே, தமிழில் அடக்கப்பட்ட 80-களின் இளைஞர்களுக்கான வேட்கையை ஓர்மைப்படுத்தியது. அடக்கபட்ட நனவிலி வேட்கை, நனவுமனதிற்கு வந்து செயல்பாடாக மாறுவதே ஓர்மைப்படுத்துதல் (கான்சியஸ்) என்கிற செயல்பாடாகும். கிராமங்களிலிருந்து பட்டணங்களுக்கு பயணிக்க, மயிலின் காதல்வேட்கை ஒரு வாழ்தலின்ப ஆற்றலாக கிராமிய இளைஞர்களுக்கு மாறியது.”

– ஜமாலன்