நரேந்திர மோடி மாலைதீவுக்குச் சென்று கொழும்பு வந்ததன் பின்னணி


தெற்காசியக் கடற்பரப்பில் அமெரிக்காவின் பொலிஸ்காரனாக மாறியுள்ள மோடியின் இந்தியா- ஏற்க விரும்பாத இலங்கை

இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னரான சூழலில் நான்கு மணி நேரப் பயணமாகக் கொழும்புக்கு வந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, இஸ்லாமியவாதிகளின் பயங்கரத் தாக்குதல்களை தடுப்பதற்கு இலங்கைக்கு இந்தியா உதவியளிக்கும் என்று பகிரங்கமாகவே உறுதியளித்துள்ளர். பூகோள அரசியலில் சிக்குண்டுள்ள இலங்கையில் இஸ்லாமிய இயக்கம் ஒன்று தற்கொலைத் தாக்குதல் நடத்தியுள்ளமை அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளுக்கே அச்சுறுத்தல் என்ற விமர்சனங்களுக்கு மத்தியில் நரேந்திர மோடியின் கொழும்புக்கான பயணம் அமைந்துள்ளது. இலங்கைக்கு வருவதற்கு முன்னர் மாலைதீவுக்குச் சென்ற நரேந்திர மோடி, மாலைதீவின் புதிய ஜனாதிபதி இப்ராகிம் முகமதுவோடு பாதுகாப்பு, வர்த்தகம் உள்ளிட்ட ஆறு ஒப்பந்தங்கைளச் செய்துமுள்ளார்.