நல்லூரானும் பொற்கூரையும்

(Gopikrishna Kanagalingam)

நல்லூர்க் கந்தன் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, வெகுவிமரிசையாக இடம்பெற்று வருகிறது. முக்கியமான திருவிழாக்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. சாரை சாரையாக, பல்வேறு பகுதிகளிலிருந்தும், அத்திருவிழாக்களில் பொதுமக்கள் கலந்துகொண்டிருக்கிறார்கள். இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர்க் கந்தன் ஆலயத்தில் அண்மையில் திறந்துவைக்கப்பட்ட பொற்கூரை, சமூக ஊடக வலையமைப்புகளில் முக்கியமான பேசுபொருளாக அமைந்திருக்கிறது. பொற்கூரையை விமர்சிப்போர் தொடர்ந்தும் விமர்சித்துக் கொண்டிருக்க, அதை நியாயப்படுத்துவோர், அதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டிருக்கிறார்கள்.

வடக்கின் அரசியல் நிலைமை, அண்மைக்காலமாகவே ஸ்திரமற்ற ஒரு நிலைமையில் காணப்படுவது போன்ற சூழலில், வடக்கில் அபிவிருத்திகள் எவையும் முன்னெடுக்கப்படுவதில்லை என்ற விமர்சனமும், அண்மைக்காலத்தில் அதிகமாக எழுந்திருக்கிறது. அதிலும், விலைவாசி தொடர்ந்தும் அதிகரித்த வண்ணமிருக்கிறது என்ற பார்வையுள்ள நிலையில், ஒருவித விரக்தி மனப்பாங்குடன் மக்கள் காணப்படுவதைப் பார்க்க முடிகிறது.

மறுபக்கமாக, மிக அதிகமான எதிர்பார்ப்புகளுடன் ஆட்சிக்கு வந்த இவ்வரசாங்கம், அந்த எதிர்பார்ப்புகளின் பாரத்தைச் சந்தித்துக் கொண்டிருப்பதையும் நாம் காண்கிறோம். அதிலும் குறிப்பாக, நுண்கடன் பிரச்சினைகள் காரணமாகவும், மாதாந்தக் கட்டணங்களில் கொள்வனவு செய்யப்பட்ட பொருட்களுக்கான முதலைத் திரும்பக் கொடுக்க முடியாமை காரணமாகவும், அவதியுறும் ஏராளமான குடும்பங்களை, வடக்கில் காணக்கூடியதாக இருக்கிறது. நாட்டின் பொருளாதார வீழ்ச்சி அல்லது ஸ்திரமற்ற நிலை என்பது, நாடு முழுவதையும் பாதித்திருந்தாலும், ஏற்கெனவே போரால் இடிந்துபோயுள்ள வடக்கை, இந்நிலை அதிகமாகவே பாதித்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கிறது.

இவற்றுக்கு மத்தியில் தான், நல்லூர் ஆலயத்துக்குப் பொற்கூரை என்ற செய்தி வெளியாகியிருந்தது. அவ்வாறான கூரை உருவாக்கப்பட்ட, இலங்கையிலுள்ள முதல் ஆலயம், நல்லூரே என்று, ஊடகங்கள் அனைத்தும் பெருமையாகச் செய்தி வெளியிட்டிருந்தன. இச்செய்தி வெளியான பின்னர் தான், கடுமையான விமர்சனங்கள் எழ ஆரம்பித்தன.

சமூக ஊடகத் தளங்களைப் பொறுத்தவரை, ஒரு குறிப்பிட்ட நேரத்தில், குறிப்பிட்ட விடயங்கள் தொடர்பான உச்சக்கட்ட விமர்சனம் எழுவதும், அதன் பின்னர் சில நாட்களில், அவ்விடயம் தொடர்பான பேச்சுகள் அடங்கிப் போவதொன்றும் புதிதான விடயம் கிடையாது. ஆகவே, நல்லூர் தொடர்பாக இப்போது எழுந்திருக்கும் சர்ச்சைகளும், சில நாட்களில் மறக்கப்பட்டுவிடும் என்பதில் எச்சந்தேகமும் இல்லை. ஆனாலும் கூட, சமூக ஊடக வலையமைப்புகளில் எழும் இவ்வாறான விமர்சனங்கள், உண்மையான பிரச்சினைகளை முக்கியத்துவப்படுத்த உதவியிருக்கின்றன என்பதையும் மறந்துவிட முடியாது.

அதேபோன்று தான், வடக்கில் காணப்படும் வறுமைக்கு மத்தியில், இப்படியான ஆடம்பரம் தேவையா என்ற விமர்சனத்தில், “இப்படியான ஆடம்பரம் தேவையா?” என்ற பகுதியைத் தவிர்த்துப் பார்த்தால், “வடக்கில் காணப்படும் வறுமை” என்கிற விடயம் காணப்படுகிறது. அது தொடர்பான கவனம் எழுந்திருக்கிறது. இலங்கையில் இறுதியாக வெளியான, வறுமை பற்றிய தரவுகளின் அடிப்படையில், வறுமை பற்றிய சுட்டியில், மோசமான நிலையில், அதாவது இறுதி நிலையில், வடக்கு மாகாணம் இருக்கிறது. இலங்கையில் மிக மோசமான வறுமையைக் கொண்ட மாவட்டங்களில் முதலிரு இடங்களிலும், கிளிநொச்சியும் முல்லைத்தீவும் இருக்கின்றன.

இப்படியான வறுமை இருக்கின்ற சூழ்நிலையில், நுண்கடன் பிரச்சினைகள் எவ்வாறு எழாது விடும்?
நல்லூர் தொடர்பான விமர்சனம் எழுப்பப்பட்டதும், “நல்லூர் என்பது தனிப்பட்ட கோவில். அது, அரச நிறுவனம் இல்லை” என்ற பதில் வழங்கப்பட்டமையைப் பார்க்க முடிந்திருந்தது. நல்லூர் என்பது, அரச நிறுவனம் இல்லை என்பது உண்மையானது தான். அதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால், சில நிறுவனங்களும் அமைப்புகளும், ஒரு கட்டத்துக்கு மேல், மக்களின் சொத்துகளாகக் கணிக்கப்படுகின்றன என்பதுவும் உண்மையானது.

நல்லூர் ஆலயத் திருவிழா ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நல்லூர்ப் பகுதி முழுவதிலும், சாதாரண போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டு, முழு யாழ்ப்பாணமுமே ஒரு வகையான பக்தியும் கொண்டாட்டமும் கலந்த நிலைமைக்குச் செல்வதென்பது, “தனிப்பட்ட கோவில்” ஒன்றுக்காக அல்ல. மாறாக, “நல்லூர் என்கின்ற எனது கோவில், எமது கோவில்” என்ற உணர்வு, பொதுமக்களுக்கு இருப்பதால் தான். எனவே, அக்கோவிலுக்கென பொதுவான மக்கள் பார்வையொன்று இருப்பது அவசியமானதென எண்ணுவதில் தவறொன்றும் கிடையாது.

இதில், முக்கியமான ஒரு விடயத்தைக் குறிப்பிட வேண்டியிருக்கிறது. நல்லூர் ஆலயம் மீதான விமர்சனமோ அல்லது அது சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய விமர்சனமோ, நல்லூரில் வழிபடச் செல்லும் பக்தர்கள் மீதான விமர்சனமாக அமையாது. இப்பத்தியாளர் அண்மையில் எழுதிய பத்தியொன்றில், “இயேசு நாதர் மீது பிரச்சினைகள் இல்லை; அவரைப் பின்பற்றுவோருடன் தான் பிரச்சினை இருக்கிறது” என்ற, சமூக ஊடக வலையமைப்புகளில் காணப்படும் பிரபல்யமான கூற்றுக் குறிப்பிடப்பட்டிருந்தது.

அதேபோன்று தான், தமிழ்க் கடவுள் என்று அழைக்கப்படுகின்ற முருகன் மீதோ, அல்லது முருகனை வழிபடச் செல்லும் பல இலட்சக்கணக்கான பக்தர்கள் மீதோ, இந்த விமர்சனம் முன்வைக்கப்படவில்லை. மாறாக, எந்தப் பிரதேசத்தில் அவ்வாலயம் இருக்கிறதோ, அப்பகுதியிலேயே ஏராளமான பிரச்சினைகள் இருக்கும் போது, இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டமையின் நியாயப்பாட்டைத் தான் கேள்வியெழுப்ப வேண்டியிருக்கிறது.

இதில், இன்னொரு கேள்வியும் எழுப்பப்படலாம். நல்லூர்க் கந்தன் என்றாலேயே, “அலங்காரக் கந்தன்” என்று தான் பெயர். ஈழத்திலிருக்கின்ற ஏனைய முருகன் ஆலயங்களை விட, ஆடம்பரத் தன்மை அதிகமான ஆலயமாக, நல்லூர் தான் இருந்து வருகிறது. எனவே, “அளவுக்கதிகமான ஆடம்பரம்” என்று, எவ்வகையில் வரையறுப்பது என்ற கேள்வி முன்னெடுக்கப்படலாம்.

வாழ்க்கையில் அநேகமான விடயங்களை, கறுப்பு – வெள்ளை என வரையறுப்பது கடினம். சில விடயங்கள், சாம்பலாக இருப்பதை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும். ஆனால், வடக்கின் தற்போதைய நிலைமையை வைத்துப் பார்க்கும் போது, பொற்கூரையென்பது, நிச்சயமாகவே சாம்பல் நிலைமைக்கும் இல்லை என்பதைத் தெளிவாகப் பார்க்க முடிகிறது.

இதில், இந்து/சைவ சமயம் தொடர்பான இன்னொரு விமர்சனமும் இருக்கிறது. இலங்கையிலும் சரி, ஏனைய கீழைத்தேய நாடுகளிலும் சரி, இந்து/சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள், வேறு மதத்தவர்களால் மதமாற்றம் செய்யப்படுகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு இருக்கிறது. பல நேரங்களில், நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டாகவும் அது இருக்கிறது. பல்வேறு சலுகைகளை வழங்குவதன் மூலமாகத் தான், இம்மதமாற்றங்கள் இடம்பெறுகின்றன என்பதை, இந்து/சைவ சமய அமைப்புகள், ஆதாரங்களுடன் நிரூபித்திருக்கின்றன.

ஆனால், அதில் இருக்கின்ற இன்னொரு விடயம் என்னவென்றால், இந்து/சைவ சமயத்தைச் சேர்ந்தவர்கள், அற்ப சலுகைகளுக்காக மதமாறும் அளவுக்கு, அச்சமய அமைப்புகள் சிறப்பாகப் பணியாற்றவில்லை என்ற உண்மை அங்கு காணப்படுகிறது. சமயத் தலங்களுக்கென ஆடம்பரச் செலவுகள் இருக்கின்றன; பல தேவாலயங்களும் மசூதிகளும் விகாரைகளும், ஆடம்பரமாகக் காணப்படுகின்றன என்பது உண்மையானது. ஆனால், சதவீத அடிப்படையில் பார்க்கும் போது, கோவில்களிலேயே அதிகபட்ச ஆடம்பரத் தன்மை காணப்படுகிறது என்ற உண்மையை உணர்ந்துகொள்ள முடியும்.

எனவே, கோவில்களை அழகுபடுத்துவது ஒருபக்கமாகவிருக்க, சமூக ரீதியான விடயங்களிலும், கோவில்கள் ஈடுபடுவது, சமய அடிப்படையில், போட்டித்தன்மை வாய்ந்த “வியாபாரமாக” மாறியிருக்கின்ற சமயத் தலங்களில், கோவில்களுக்கும் அதிக வாய்ப்புகளை வழங்கும். உலகில் அதிக கண் தானம் செய்யப்படுகின்ற நாடுகளுள் ஒன்றாக இருப்பதற்கு, விகாரைகளில், அதற்காக வழங்கப்படும் ஊக்குவிப்பு முக்கியமானது. அதேபோன்றதொரு பணியை, கோவில்களால் ஏன் செய்ய முடியாது என்ற கேள்வி எழுகிறதல்லவா?

ஏற்கெனவே கூறியதன்படி, இவ்வாறான பணிகளில் கோவில்கள் ஈடுபட்டால், இந்து/சைவ சமயத்திலிருந்து மக்கள் வெளியேறுவதைக் குறைக்கலாம் என்றொரு விடயம் இருக்கிறது. அது, அச்சமயத்தின் தனிப்பட்ட நன்மைக்கானது. மறுபக்கமாக, சமய சம்பந்தமான நபர்களால் கூறப்படும் விடயங்களை, வேத வாக்காகக் கருதிச் செயற்படுகின்ற ஒரு பிரிவினர், நல்ல விடயங்களைச் செய்யத் தொடங்குவர். ஒட்டுமொத்த சமூகத்துக்கும் நன்மையை ஏற்படுத்துகின்ற ஒரு விடயமாக அது அமையும். வணக்கத்தலங்கள் மீதான விமர்சனங்கள் என்பன, எப்போதும் தொடர்ச்சியாகவே இருந்துகொண்டிருக்கும். அதில், எவ்வித மாற்றுக் கருத்துகளும் இல்லை.

ஆனால், சில விமர்சனங்கள், அம்மதத்தைப் பின்பற்றுவோரிடமிருந்தும் எழும் போது தான், அவ்விமர்சனங்களின் நியாயத்தன்மையை அனைவரும் இலகுவாகப் புரிந்துகொள்ளக் கூடியதாக அமையும். நல்லூர் தொடர்பாக எழுந்த விமர்சனத்தில், அதைக் காண முடிந்திருந்தது. இது, இனிவரும் காலங்களில், ஏனைய மதத்தலங்களுக்கான ஒரு படிப்பினையாக இருக்கும் என்பதில், எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லையென்பதை, உறுதியாகக் கூற முடியும்.