நல்ல கட்டுரை. வெட்டி – சாறு கொடுத்திருக்கிறேன்.

மோடி இனிமேலும் பதில் சொல்லும் காங்கிரஸ்காரராக ராகுல்தான் இருக்கப்போகிறார். இதுவும் உறுதி.

ஏனென்றால், நேருவின் கொள்ளுப்பேரனாக அல்ல; இந்திராவின் பேரனாக அல்ல; ராஜீவின் மகனாக அல்ல… தனியாகவே ராகுல் சிறந்த அரசியல்வாதியாக உருமாறியிருக்கிறார்.

’கல்வியை மாநிலப் பட்டியலுக்குத் திரும்ப அளிப்பேன்’ எனும் முடிவை, ஒரு சிறந்த அரசியல்வாதியாலேயே எடுக்க முடியும்.

அடிப்படையிலேயே, ராகுல் பதவிக்கு ஆசைப்படாதவர். அவர் நினைத்திருந்தால் 2009-ம் ஆண்டே பிரதமர் ஆகியிருக்க முடியும். அவரை எதிர்ப்பதற்கு அப்போது கட்சியிலும் யாருமில்லை, கட்சிக்கு வெளியிலும் யாருமில்லை. மோடியும் அமித் ஷாவும் அப்போது காட்சியிலேயே இல்லை என்பதும் முக்கியம்.

ராகுலின் தந்தை ராஜீவ்கூட அரசியலில் குதித்தபோதே பிரதமராகத்தான் குதித்தார். ஆனால், ராகுல் கற்றுக்கொள்ளத் தீர்மானித்தார். காத்திருக்கத் தயாராக இருந்தார். இது மட்டுமே ராகுலை மற்ற காங்கிரஸ் அரசியல்வாதிகளிடம் இருந்து வேறுபடுத்தி காட்டுகிறது.

அப்புறம், பா.ஜ.கவை அதன் சித்தாந்தத்தோடு சேர்ந்து எதிர்க்கக் கூடியவராகவும் அவர் மாறியிருக்கிறார். மோடியின் சென்ற ஆட்சிக்காலத்திலேயே, அவர் ஆர்.எஸ்.எஸ்ஸைக் கட்டம் கட்டினார். அதற்காக, அவர்மீது அவதூறு வழக்கும் தொடுக்கப்பட்டது. ஆனால், ’எது வந்தாலும் எதிர்ப்பதை விடேன்’ என்று கன்னத்தில் குழிவிழச் சொல்லிவிட்டு நகர்ந்தார், அவர்.

ராகுலிடம் மோடியின் சிம்மத் துணிச்சலை எதிர்பார்க்க முடியாது. அமித் ஷாவின் வேங்கைவியூகத்தையும் கூட எதிர்பார்க்க முடியாது. ஆனால், மறைந்திருக்கும் ஒற்றை யானையின் மனதிடத்தை, அவரிடம் எதிர்பார்க்கலாம்.

ராகுலுக்கு முன்னே இருப்பது ஒரேயொரு வழிதான். அது காந்தி வகுத்துத் தந்த வழி. உண்மையில், காந்தி எத்தனை ஆண்டுகள் காங்கிரஸின் தலைவராக இருந்தார் தெரியுமா? வெறும் ஓர் ஆண்டு. ஆம், ஒரேயோர் ஆண்டு! 1923 – 1924 வரை என்று நினைவு. ஆனால், காங்கிரஸ் இயக்கத்தின் அச்சாணியாக அவரே இருந்தார். அதற்கு அவருக்கு ‘தலைவர்’ பதவியெல்லாம் அவசியப்படவில்லை. என்றுமே, ’காங்கிரஸின் தலைவர்’ என்பதற்காக காந்தியின் பின்னால் மக்கள் அணி திரண்டதில்லை. அவர் ’காந்தி’ என்பதால் திரண்டார்கள்.

காண்டவத்தை எரித்த கர்வத்தோடு களம் வந்து நின்றிருக்கிறார்கள், கிருஷ்ணனும் அர்ஜுனனும். காந்தியின் கருத்தியலை அழித்து, இந்தியாவை மாற்றும் முயற்சியில் ஜெயித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏற்கெனவே காங்கிரஸின் கை நரம்பை அவர்கள் அறுத்துவிட்டார்கள். அடுத்த குறி, கழுத்து நரம்புதான்!

இதிலிருந்து தப்பிக்க வேண்டுமானால், காந்தி எனும் நாகாஸ்திரத்தைத் தட்டியெழுப்புவதைத் தவிர, வேறு வழியில்லை.

மதவாதமும் சர்வாதிகாரமும் அந்த வட்டக் கண்ணாடியின் முன்னால் இறக்கை கிழிந்த வல்லூறெனச் சரிந்து விழுந்ததற்கு, வரலாற்றில் வலுவான சான்றுகள் இருக்கின்றன.

(சக்திவேல்)